Friday, October 31, 2008

நான் பியர் குடித்து வளர்ந்த கதை

"சூத்துல கறியே இல்ல. நீயெல்லாம் ஏண்டா பேண்ட்ட இன் பண்றே?" என்பான் ஜோசப் அடிக்கடி. ஆறாம் வகுப்பிலிருந்து என்னுடன் படித்தவன். போலீஸ்காரன் மகன். அப்போதே கருகருவென்ற மீசையுடன் வகுப்பறையில் ரகசிய சிகரெட் பிடிப்பான். நான் அப்போது 'துள்ளுவதோ இளமை' தனுஷின் தம்பி போல் கோடு மாதிரி பரிதாபமாக இருப்பேன். கால்பந்து விளையாட்டில் மிகச்சுலபமாக என்னிடமிருந்து பந்தைப் பறித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே செல்வார்கள். வேறு ஆள் இல்லாத ஒரு அதிர்ஷ்ட தினத்தில் கோல் கீப்பராக நின்றேன். எதிரணியினர் அடித்த, மிகச் சோம்பலாக உருண்டு வந்த பந்தை கேவலமாக தடுக்க முயன்று காலின் நடுவே அனுமதித்து போஸ்டிற்குள் வழியனுப்பி வைத்தேன். எதிரணியினர் குதூகலத்தில் கொண்டாட எங்கள் டீமின் கேப்டன் ராஜகோபால் அடிக்கவே வந்துவிட்டான். த்ரீ பிச் பந்தில் முதுகு காட்டி ஓடும் போது பிருஷ்டத்தை நோக்கி மிகச்சரியாக பந்தை அடிப்பார்கள். மைதானமே 'ஓ'வென்று சிரிக்கும். அழுகையாக வரும். ஆண் என்பவன் அழக்கூடாது என்கிற கற்பிதம் காரணமாக பலவீனமாக சண்டைக்குச் செல்வேன். எப்படியாவது உடம்பை குண்டாக ஆக்குவது என்றொரு வெறி அப்போது ஏற்பட்டது.

இதுதான் நான் பியர் சாப்பிட ஆரம்பிக்க காரணமா என்று கேட்டால் இல்லை. இன்னொரு கிளைக்கதையும் இருக்கிறது. எங்கள் வீடு இருந்த தெருவிலேயே பெண்கள் உயர்நிலைப்பள்ளி இருந்தது. தேடியலைந்து சைட் அடிக்கத் தேவையின்றி பேஷன் டிவி மாதிரி மாணவிகள் ரோஜாக்கூட்டம் போல் வரிசையாக வர நின்ற இடத்திலேயே ஜோலியை முடித்துவிடலாம். நான் ஒல்லியாக இருந்தாலும் பார்க்கச் சுமாராகவே இருப்பேன். எனவே சில மாணவிகளின் ரகசிய பார்வையை சந்திக்க முடிந்தது. அதில் ஒரு மாணவி, பாரதிராஜா படத்தின் பின்னணி இசையோடு எப்போதும் குறுகுறுவென்றே பார்ப்பாள். அன்றைய கனவிலேயே அவளோடு திருமணமாகி குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்குமளவு முன்னேறி விட்டேன்.

இப்படியே பார்வைகள் உரசிக் கொண்டிருந்த போது 'சும்மா இருந்தால் வேலைக்கு ஆகாது' என்று ஒருநாள் முடிவெடுத்தேன். அவள் தனியாக வந்த ஒரு தருணத்தில் நண்பனின் கடையிலிருந்த பைவ்ஸ்டார் சாக்லெட் இருந்த ஜாடியை அப்படியே எடுத்துக் கொண்டு அவளிடம் நீட்டினேன். 'எனக்கு இன்னைக்குப் பிறந்த நாள். சாக்லெட் எடுத்துக்குங்க". ஒரு கணம் தயங்கியவள் சிரித்துக் கொண்டே சற்று விலகி கடந்து சென்றாள். சாக்லெட் எடுத்துக் கொள்ளாவிடினும் என்னை நோக்கிச் சீறாமல் சிரித்தது எனக்குள் பெருத்த நிம்மதியையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது. 'நிச்சயம் இது லவ்வுதான்'.

ஆனால் அது அன்றைய மாலையே தலைகீழாக கவிழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. மாணவிகளை பத்திரமாக வீட்டிற்கு வழியனுப்பி வைக்க வேண்டுமே என்கிற கடமையுணர்ச்சியோடு நான் ஈவினிங் டியூட்டி பார்த்துக் கொண்டிருந்த போது 'குறுகுறு' என்னைக் கடந்து போனாள். அப்போது அவள் கூட இருந்த ஒரு கோணங்கிவல்லி "என்னடி, உங்க அண்ணன் சாப்பிடவே மாட்டாரா. இவ்ளோ ஒல்லியா இருக்காரே. முதல்ல உடம்ப பாத்துக்கச் சொல்லுடி" என்று கிண்டலடித்து விட்டுப் போனாள். என்னை நிராகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு பெண்கள் வழக்கமாக வீசும் ஆயுதமான 'அண்ணா'வை அவள் தன் தோழி மூலம் வீசிவிட்டுப் போனாள் என்பதை உணர்ந்த போது சினிமாப்படங்களில் போல மனதில் கடல் அலை பேரிரைச்சலோடு அலைந்து மோதியது. "ஒருத்தன் ஒல்லியா இருக்கலாம்டி. ஆனா சில்லியாத்தான் இருக்கக்கூடாது" என்று பார்த்திபன்தனமாக அவளை நோக்கி கூவத் தோன்றியது.

Photobucket

சரித்திரத்தில் இடம்பெறத்தவறி விட்ட இந்தச் சம்பவத்தை கருப்பு பீட்டரிடம் சொல்லி அழுத போது அவன் கொடுத்த ஐடியாதான் அது. 'மச்சான். இதுக்குப் போயா பீல் பண்றே. ரெண்டு நாளைக்கு ஒரு தடவை பீர் அடி. அப்புறம் பாரு. உடம்பு சும்மா கும்முன்னு ஏறும். நம்ம செல்வம் கூட இதத்தான் பாலோ பண்ணான். இப்பப் பாத்தியா எப்படி இருக்கான்?" சினையாக இருக்கும் பன்றி போல் பின்பக்கங்களை ஆட்டிச் செல்லும் செல்வத்தின் தோற்றம் மனதில் தோன்றியது. பீரா அல்லது பியரா என்று இன்று வரை குழப்பத்தை ஏற்படுத்தும் அந்த சமாச்சாரத்தைப் பற்றி கேள்விப்பட்டது அப்போதுதான்.

பள்ளி வெளியில் விற்கும் எலந்தைப் பழங்களை வாங்கவே வீட்டிலிருந்து சில்லறை பீறாய்வதற்குள் பாடுபடும் நான் பியர் காசுக்கு எங்கே போவது?. கொண்டைக்கடலையை ஊறவெச்சு காலைல சாப்பிடு. பச்சை முட்டைய உடைச்சு அப்படியே வாய்ல ஊத்திக்கோ, ஐம்பது தடவ தண்டால் எடு. சுண்டக்கஞ்சி சாப்ட்டு நல்லா தூங்கு என்று பல ஆலோசனைகள் வந்தாலும் எனக்கு பியர் அடிப்பதே சிறந்த மற்றும் கிளர்ச்சிகரமான ஆலோசனையாக இருந்தது. எப்படியோ காசு தேற்றி ஒரு சுபமுகூர்த்த தினத்தில் வொயின் ஷாப்பிலிருந்து பியர் பாட்டிலை வாங்கி பள்ளிப்பையினுள் மறைத்து வீட்டுக்கு எடுத்து வந்து விட்டேன். அப்புறம்தான் தெரிந்தது அதை திறப்பதற்கு கவாஸ்கர் வேண்டுமென்று. (ரொம்ப பழைய ஜோக் இது). பல்லால் கடித்து திறக்கும் வன்முறை கலாச்சாரமெல்லாம் அப்போது பழக்கமில்லாததால் கொஞ்சம் திகைப்பாக இருந்தது. நாடார் கடையில் போய்க் கேட்டவுடன் என் முழி சரியில்லாததால் சந்தேகமாக பார்த்தார். "எனக்கு இல்ல அண்ணாச்சி. பக்கத்து வீட்டுக்கு. கூல்டிரிங்க்ஸ் பாட்டில் திறக்கணுமாம்".

பாட்டிலை திறந்து ஏதோ ஸ்டவ்வில் மண்ணெண்ணைய் ஊற்றுவது போல சர்ரென்று ஊற்றியதில் "பொங்கலோ பொங்கல்" என்று குலவை சத்தம் கேட்காத குறையாக பொங்கி வழிந்தது. (இப்போதென்றால் எப்படி நுரை வராமல் ஊற்றுவது என்று பாடமே எடுப்பேன்) கொஞ்சம் சப்பியதில் ஏதோ சர்பத் போலத்தான் இருந்தது. ஆனால் அடுத்தடுத்து கசந்து போய் இந்த கர்மத்தை எப்படி குடிக்கிறார்கள் என்கிற அருவருப்பு மேலோங்க கால்வாசி பாட்டிலை கூட காலி பண்ணாமல் அப்படியே கீழே ஊற்றினேன்.

()

ஆயிற்று. பிறகு கோல்டன் ஈகல், கல்யாணி, மார்க்கோ போலோ, 2000, 5000, ஜிங்காரோ, கொக்கரக்கோ கும்மாங்கோ... என்று எல்லா பிராண்டும் பழக்கமாகி விட்டது. "COLD BEER SOLD HERE" என்கிற விளம்பரப் பலகைகளை பார்க்கும் போது 'அட நம்மாட்கள் எழுதுகிற கவிதையை விட இது சிறப்பாக இருக்கிறதே' என்று தோன்றும். உடம்பு குண்டாக வேண்டும் என்கிற அடிப்படை நோக்கம் போய் சாப்பிட்ட பிறகு ஏற்படும் அந்த ஏகாந்தமான மனநிலைக்கு மனம் ஏங்க ஆரம்பித்து விட்டது. குடித்த பிறகு அர்னால்டு போல உணர்ந்து எதிரே வருபவர்களெல்லாம் துச்சமாக தெரிந்தார்கள். ஆல்ஹலால் வாசனை கண்டு மிரண்டு ஒதுங்குபவர்களைக் கண்டால் கொண்டாட்டமாக இருந்தது. பின்நவீனத்துவ வார்த்தைகளை புழங்குவது எளிதாக இருந்தது. ஏறக்குறைய தினத்திற்கு ஒன்று என்று ஆகிப் போனது. சோறு தின்பதற்கு முன்னால் ஒரு பியர் சாப்பிட்டு விட்டு பிறகும் ஒன்று சாப்பிட்டதில் கேவலமாக சாலையில் வாந்தியெடுத்தேன். .

சென்னையில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பியர் அருந்தியிருக்கிறேன். ஆம்லேட் தின்று வழித்துப் போட்ட இலைகள், கசக்கிப் போட்ட வாட்டர் பாக்கெட்டுகள், சிகரெட், பீடிப்புகை, கெட்ட வார்த்தைகள் என்று சுற்றுப்புறம் சற்று 'கலேஜி'யாக இருக்குமென்றாலும் அங்கு குடிக்க வருபவர்களை கவனிப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. சிலர் ஒரு குவார்ட்டரோ அல்லது கட்டிங்கோ வாங்கி வருவார்கள். தண்ணீரை கலந்து ஏதோ குழந்தைகள் மருந்து சாப்பிடுவது மாதிரி முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு யாரிடமிருந்தாவது ஓசியில் மிக்சர் வாங்கிப் போட்டுக் கொண்டு உடனே வெளியேறி விடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள். சில தொப்பையர்கள் வருவார்கள். அரசுப் பணிகளில் இருப்பவர்கள். பரிவாரங்கள் சூழ ரெண்டு ஹாப், கணிசமாக சைட்டிஷ் என்று ஷாப் பையனிடம் பந்தா பண்ணுவார்கள். அலுவலக அரசியல், சொந்தப் பிரச்சினைகள், சவடால்கள் இவைகளையெல்லாம் அளந்து குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஆகும்.

ஒருமுறை ஒருவர் என்னிடம் அவசரமாக வந்து 'கொஞ்சம் பேனா கொடுங்க" என்றார். ஏதோ முகவரியையோ, தொலைபேசி எண்ணையோ குறித்துக் கொள்ளப் போகிறார் என்று நினைத்து கொடுத்தேன். அப்புறம்தான் தெரிந்தது, விஸ்கியில் சோடாவை ஊற்றிவிட்டு கலக்கிக் கொள்ள கேட்டிருக்கிறார் என்று. கோபம் வந்து திட்டி விட்டேன். "கோச்சுக்காதீங்க, பிரதர்".

()

ஆனால் ஒன்று. அலுவலகம் சார்பாக நட்சத்திர ஹோட்டல் விருந்துகளில் கலந்து கொள்ளும் போதும் சரி, நண்பர்களுடன் அருந்தும் போதும் சரி, பெரும்பான்மையான மற்ற மது வகைகளை வகைக்கொன்றாக சுவைத்துப் பார்த்த போதும் கூட எதுவும் பிடிக்காமல் பியர் அளவிலேயேதான் நிற்கிறேன். 'இது பெண்களும் சிறுவர்களும் அருந்துவது' என்று நண்பர்கள் கிண்லடிப்பதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.

பியர் ராசியோ அல்லது உடல் உழைப்பு குறைந்ததோ அல்லது இயல்பான வளர்ச்சி காரணமோ தெரியவில்லை, உடம்பு கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்தது. என்றாலும் இதை நான் யாருக்கும் நான் பரிந்துரைக்க மாட்டேன். சிறிது சதவீத ஆல்கஹாலாக இருந்தாலும் தொடர்ச்சியாக உட்செலுத்தப்படுவது உடல்நலனுக்கு நல்லதல்ல. 'கள்ளுண்ணாமை' பற்றி பத்தாங்கிளாஸிலேயே படித்திருக்கிறேன் என்றாலும் நான் மதுவருந்துவது (பியரை இதில் சேர்க்கலாமா?) குறித்து எந்நாளும் குற்றவுணர்ச்சி கொள்வதோ, மற்றவர்களிடம் மறைப்பதோ கிடையாது. அதிகமாக அருந்தி நடக்க ஆரம்பிக்கின்ற குழந்தை போல் ஆவது, பிறருக்கு தொந்தரவு தருவது, வம்புச் சண்டைக்கு போவது போன்றவற்றை செய்யக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு மனைவி, குழந்தைகளை எதிர்கொள்ள சங்கடப்பட்டு இப்போது இது குறைந்திருக்கிறதே ஒழிய மாதத்திற்கு ஒரு முறையாவது நிகழத்தான் செய்கிறது. உடம்பை குண்டாக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பழக்கத்தினால் தொப்பை பெருகிப் போய் பெரும்பிரச்சினையாக என் 'முன்னால்' நிற்பதையும் கட்டாயம் சொல்ல வேண்டும்.

குடிப்பழக்கம் குறித்து நாஞ்சில் நாடன் ஒரு அருமையான நெடுங்கட்டுரையை எழுதியிருக்கிறார். 'நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று' என்கிற கட்டுரைத் தொகுதியில் அது இருக்கிறது. ஒரு பியர் சாப்பிட்ட ஏகாந்த மனநிலையோடு நிச்சயம் நீங்கள் அதைப்படிக்க வேண்டும்.

suresh kannan

19 comments:

Anonymous said...

//"ஒருத்தன் ஒல்லியா இருக்கலாம்டி. ஆனா சில்லியாத்தான் இருக்கக்கூடாது"//

கலக்கல் பாஸ்...

- ஒல்லியாய் இருத்தால் பல பிகர்களிடம் அவமான பட்டவன் :(

பரிசல்காரன் said...

அருமை தோழரே!

பல இடங்களில், சிறு மாற்றம் செய்து என் வலையில் போடலாம் போல அத்தனை ஒற்றுமை!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நாஞ்சில் நாடன் கட்டுரையோடு அப்படியே அ.மார்க்ஸின் கட்டுரையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

முரளிகண்ணன் said...

அருமையான வாசிப்பனுபவம்

ரமேஷ் வைத்யா said...

ம‌ண்டா இருக்கலாம். குண்டா இருக்கக்கூடாதுடீ
‍இப்படிக்கு
சுமார் 3500 பீர் குடித்துவிட்டு 39.5 கிலோகிராம் இருப்பவன்

Krishnan said...

Wonderful piece. Can you tell where to find that Nanjilnaadan's article and also A. Marx's ?

பாபு said...

,மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்
அதுவும் சில உவமைகள் சூப்பர்
//தனுஷின் தம்பி போல் கோடு மாதிரி பரிதாபமாக இருப்பேன்//

//சினையாக இருக்கும் பன்றி போல் பின்பக்கங்களை ஆட்டிச் செல்லும் செல்வத்தின் தோற்றம் //

Anonymous said...

குறுநாவலுக்கு உள்ள சரக்கை ஒரு இடுகையில் விரயம் செய்யாதீர்கள்.

கதிர் said...

அந்த கட்டுரையைதான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன். பதிவேத்தினிங்கன்னா கோடி புண்ணியம். இல்லன்னா புத்தகம் கிடைக்கும் வரை காத்திருக்கணும்.

விலெகா said...

அனுபவங்களை இவ்வளவு அழகாக, அலுப்பு தட்டாமல் சொல்கிறீர்கள்.அருமை.

Anonymous said...

அடுத்து நான் கண்டகஞ்சி குடித்து வளர்ந்த கதைன்னு யாராவது எழுதுவாங்க :).
"ஒருத்தன் ஒல்லியா இருக்கலாம்டி. ஆனா சில்லியாத்தான் இருக்கக்கூடாது“
லில்லி டோன்பி சில்லி என்றதை கேள்விப்பட்டதில்லையா:)
‘சுமார் 3500 பீர் குடித்துவிட்டு 39.5 கிலோகிராம் இருப்பவன்'
ஆம் இளஞ்செழியன் அப்படிக் குடித்தால் ஒல்லி கிழஞ்செழியனாக
இருக்க வேண்டியதுதான் :)

Boston Bala said...

கலக்கல்.

----"COLD BEER SOLD HERE" என்கிற விளம்பரப் பலகைகளை பார்க்கும் போது 'அட நம்மாட்கள் எழுதுகிற கவிதையை விட இது சிறப்பாக இருக்கிறதே' ---

Anonymous said...

பதிவு நகைச்சுவையாக இருந்தாலும் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் உடல்நலக்கேடுகளையும் சொல்லியிருக்க வேண்டும்.

ச.சங்கர் said...

நல்ல நகைச்சுவை இழையோடும் பதிவு.

thamizhparavai said...

சூப்பீர்... சாரி.. சூப்பர்..
ஆமா அது பீரா இல்லை பியரா...?

குழலி / Kuzhali said...

//அவள் தனியாக வந்த ஒரு தருணத்தில் நண்பனின் கடையிலிருந்த பைவ்ஸ்டார் சாக்லெட் இருந்த ஜாடியை அப்படியே எடுத்துக் கொண்டு அவளிடம் நீட்டினேன். 'எனக்கு இன்னைக்குப் பிறந்த நாள். சாக்லெட் எடுத்துக்குங்க".
//
அட பாவிகளா காலம், ஊர், வயசு பேதமின்றி இதே டெக்னிக்கை எத்தனை பேருயா பயன்படுத்துவிங்க...

-- இப்படிக்கு அதே டெக்னிக்கை பயன்படுத்தியவன்

சரவணகுமரன் said...

:-))

Kumky said...

வாவ்....சாரி..மியாவ்வ்வ்வ்வ்வ்வ்
ஒயின் என்று ஒரு வஸ்த்து இருக்கிறதே...அதை முற்சித்ததில்லையா நீங்கள்..

ஒவ்வொரு பானமுமே ஒவ்வொரு விதமாகத்தான் போதை கொள்ளும்படி செய்யும்..

ஒரு பதிவு போட்டு விளக்கிவிடலாம் இருங்கள்.

மற்றபடி அனுபவங்கள் மிக யதார்த்தம்.

கண்ணன்.கா said...

அருமை தோழரே, படித்துவிட்டு தனியாக அலுவலகத்தில் சிரித்து விட்டேன். பீரு நீங்க திறந்த போது வரும் சத்தத்தை படித்து(சத்தம் போட்டு). உங்களுடைய எழுத்தை படிக்க படிக்க ஆர்வமாக இருக்கிறது. காலையில் ஆரம்பித்தேன் படிக்க, இன்னும் முடியவில்லை. தொடருங்கள். உங்களுடைய சினிமா விமர்சனம் அருமை. (சிலதை தவிர்த்து)ஒவ்வொன்றுக்கும் படித்ததும் பின்னூட்டம் இட ஆர்வம் இருந்தும், அடுத்து என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தால் முடியவில்லை. நாம் சொல்ல நினைக்கும், பிடித்த பிடிக்காத விசயத்தை அதன் சுவை குன்றாமல், நகைச்சுவையோடும் அதே நேரம் அதன் வீரியம் குறையாமலும், எழுத்தில் கொண்டு வந்துள்ளீர்கள். நானும் எழுதலாம் என்று இருந்தேன் ஆனால் உங்களுடைய சரளமான எழுத்து நடையைப் படித்த பிறகு எனக்கு கொஞ்சம் தயக்கம் வருவது என்னமோ உண்மை. தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள்