இன்னொரு படமான page3 பற்றி நரேன் பதிவில் எழுதியதிலிருந்து ஆவல் அதிகமாகி அதையும் ஸ்டார் சேனலில் ஒரு தடவை பார்க்க நேர்ந்தது. அடுத்த படமான கார்ப்பரேட்டை (பிபாசுவை கோட் போட்டு போர்த்தி எடுத்த படம் இதுவாகத்தானிருக்கும்) இதுவரை பார்க்க நேரவில்லை. இந்த நிலையில் அவரின் Traffic Signal வெளிவருவதற்கு முன்னே எனக்குள் ஆவலை எழுப்பி, DVD-ஐ தேட வைத்தது.
()

விளிம்புநிலை மக்களை பிரதானமாக அமைத்து தமிழ் படைப்புகள் வந்திருக்கிறதா என்று மேம்போக்காக பார்த்தால், நவீன இலக்கியப் பரப்பில், நடுத்தர பிராமணத் தமிழ் பேசிக் கொண்டிருந்த கதாபாத்திரங்களிலிருந்து விலகி செக்ஸ் தொழிலாளிகள், குஷ்டரோகிகள், பிச்சைக்காரர்கள் என்று மற்றவர்கள் ஜாக்கிரதையாக புறக்கணிக்கிற அருவருத்து ஒதுக்குகிற பாத்திரங்களை ஜெயகாந்தன் தம் படைப்புகளில் கொண்டுவந்தார். பின்னர் வந்த ஜி.நாகராஜன், சுயஅனுபவங்கள் வெளிப்படும் வகையில் இன்னும் அருகாமையில் சென்று வந்தார். பின்னர் "தலித் இலக்கியம்" என்று ஒரு வகையறா மலர்வதற்கு பல வருடங்கள் பிடித்தது. திரைப்படங்களிலாவது இம்மக்கள் பிரதானப்படுத்தப் பட்டிருக்கிறார்களா என்று பார்த்தால், பசி, எச்சில் இரவுகள், என்னுயிர்த் தோழன் என்று சில அரைகுறை பிரசவங்களே சட்டென்று நினைவுக்கு வருகின்றன.
Traffic Signal திரைப்படம் பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களை மையமான காட்சிகளாக வகைப்படுத்தலுடன் வெளிப்பட்டிருக்கிறது. ஒரு பிரதான சாலையின் டிராபிக் சிக்னல், அதைச் சுற்றி விரியும் நாம் ஆழமாக அறிந்திராத ஒரு வியாபார உலகம், அதன் மூலம் பிழைக்கும் சிறுவர்கள் முதல் தாதாக்கள் என்று பல கதாபாத்திரங்கள். ..........
ரொட்டிக்கு தொட்டுக் கொள்ளும் ஜாமை பாண்டேஜ் துணியின் மீது தடவிக் கொண்டு ரத்தகாய போலித் தோற்றத்துடன் பிச்சை எடுப்பவர்கள், சிக்னலில் நிற்கும் கார்களில் mid-day தினசரியை கூவி விற்கும், சிவப்பழகு க்ரீமினால் அழகுவரும் என்று நம்பி பிறகு தோற்றுப் போய் விளம்பர பானர் கல்லெறியும் சிறுவன், "குழந்தைக்கு ரொம்ப சாப்பிடக் குடுத்து குண்டாக்கிடாதே. அப்புறம் காசு போடமாட்டாங்க" என்று எச்சரிக்கும் சில்சிலா (இவன்தான் படத்தின் நாயகன். சில்சிலா என்ற இந்திப்பட வெளியீட்டின் போது பிறந்ததால் அதுவே பெயராகிவிட்டது) அவனை காதலிக்கும், பிளாட்பாரத்தில் துணிவிற்கும் குஜராத்காரி, பூ விற்கும் சிறுமியின் கைகளை ரகசியமாய் தடவும் காரில் போகும் கனவான், "சார் நான் ஒரு சாபட்வேர் இன்ஜினியர். இண்டர்வியூவிற்கு வந்தேன். பர்ஸ் தொலைஞ்சிடுச்சி. ஒரு ஹண்டர்ட் ருபிஸ் ப்ளீஸ். உங்க மொபைல் நம்பர் கொடுங்க. திருப்பி கொடுத்துடுவேன்" என்று கெளரவப் பிச்சை எடுக்கும் ஒரு இளைஞன் (ஏற்கெனவே பணம் கொடுத்தவனை மறுபடியும் எதிர்கொள்ள நேர்கிற கணத்தில் இருவரின் முகபாவங்களும்...) ரோட்டில் நிற்கவைக்கப்ட்ட வாகனத்திலியே "தொழில்' செய்ய நேர்கிற விபச்சாரி (கொன்கனா சென்), அவர்களுக்கு தொழில் போட்டியாக வரும் ஒரு gay, ("கொடுமையைப் பாருடி, இவன்க கூடல்லாம் போட்டி போட வேண்டியிருக்கு"), "கார்" லோனுக்காக போனில் தொல்லை கொடுக்கும் இரண்டு விற்பனை ஏஜெண்ட்டுகள், தொல்லை பொறுக்க முடியாமல் நேரில் வரச்சொல்லி அரை நிர்வாணப்படுத்தி அடிக்கும் தாதா (போலீஸ்காரனுங்க கிட்ட கூட நம்ப நம்பர் இல்ல. இவனுங்களுக்கு எப்படிர்ரா கிடைக்குது?"), சுனாமியில் தம் பெற்றோர் இறந்திருப்பார்களா என்று அறிய STD தொலைபேசியில் காசை செலவழிக்கும் பேப்பர் பொறுக்கும் தமிழ்நாட்டு அப்பாவி சிறுவன் (இவனின் பெற்றோர் இறந்து அவர்களின் உறவினர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத் தொகையை அரசியல் கைகள் பிடுங்கித் தின்றிருப்பது பிறகு தெரிகிறது) ஆகஸ்டு 15 இரவில் தெருவில் கசக்கி எறியப்பட்டிருக்கும் தேசியக் கொடிகளை கனமான இதயத்துடன் பொறுக்கும் நல்வாழ்வு மைய பொறுப்பாளர், சிக்னலில் மெதுவாக வண்டியை செலுத்தி அதன் மூலம் சைடில் சம்பாதிக்கும் டிரைவர்கள், (சிவப்பு விழப் போவது தெரிந்தும் மெதுவாக வந்து சிக்னலில் நிற்கும் இவர்கள், பிச்சை கேட்டு வருபவர்களுக்கு தன்னிச்சையாக இரண்டு ரூபாயை அளிப்பார்கள். தாம் உட்கார்ந்திருக்க டிரைவர் பிச்சை போடுவதா என்று ஈகோ கொப்பளிக்கும் முதலாளிகள், டிரைவரை தடுத்து தாம் பத்து ரூபாயை பிச்சையளிப்பார்கள். Psychology!) .......... என்று இத்தனை பேர் பிழைப்பு சிக்னல் இருப்பதினால் ஓடுகிறது.
()
நேரடி காட்சிகள் மூலமே பெரும்பான்மையான காட்சிகள் விரிவதால் படத்தின் நம்பகத்தன்மை பார்வையாளன் மீது தீர்க்கமாக பரவுகிறது. படத்தின் ஆதார மையமாக சிக்னல் அருகே ஒரு மேம்பாலம் கட்டப்படுவதில் அமைகிறது. குறிப்பிட்ட சிக்னல் அருகே, நிறைய ·பிளாட்களை கட்டி வைத்திருக்கும் ஒரு பில்டிங் புரோமோட்டர், பிச்சைக்கார ஏரியாவாக இருப்பதால் அதிக விலைக்கு விற்க முடியாமல் இருக்கிறார். அங்கே ஒரு மேம்பாலத்தை நிறுவி சிக்னலை ஒழித்தால் தீர்வு கிடைக்கும் என்பது அவர் கணக்கு. இதற்காக அவர் ஒரு வலிமையான சுயேட்சை எம்.எல்ஏ.வை நாட, அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியை நெருக்குகிறார். நேர்மையான அந்த அதிகாரி, திட்டத்தில் இல்லாத அந்த இடத்தில், மேம்பாலம் அமைக்க மறுத்து தாதாவால் கொல்லப்படுகிறார். இதன் பின்னணி தெரியாமல் இதில் சம்பந்தப்பட்டிருக்கிற சில்சிலா அப்ருவராகி சம்பந்தப்பட்டிருக்கிற அனைவரும் கைது செய்யப்படுவதற்கு காரணமாக இருக்கிறான். படத்தின் இறுதியில் சிக்னல் தகர்க்கப்பட, பிழைப்பு பறிபோகிற வேதனையில் அனைவரும் கலங்குகிறார்கள். போலீஸ் வேனில் செல்லும் சில்சிலா இன்னொரு சிக்னலை பார்ப்பதும் நம்பிக்கை கீற்றுடனான அவன் புன்னகையுடனும் படம் நிறைகிறது.
()
மதுபண்டார்க்கரின் (நான் பார்த்த) முந்தைய படங்களோடு ஒப்பிடும் போது இந்தப்படம் எனக்கு பொதுவாக நிறைவைத் தரவில்லை. சம்பவங்கள் தனித்தனியாக அழுத்தமாக இருந்தாலும், ஒட்டுமொத்த கதையமைப்பு வலுவாக இல்லாததால் படம் வெறும் வலுவான காட்சிகளின் கோர்வையாக இருக்கிறது. நாடகத்தனமான சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். (சிக்னலில் தேசியக் கொடி விற்கும் சிறுவனிடம், "மூணு பத்து ரூபாய்க்கு தருவியா?" என்று அநியாயமாக பேரம் பேசும் காங்கிரஸ் குல்லா அரசியல்வாதிகளை, "இவன்க நம்பள காப்பாத்தப் போறானுங்களாம். தூ...." என்று இலவசமாகவே கொடிகளை பிடுங்கி தூக்கி எறியும் ஒரு அரவாணி.
குறிப்பிடத்தக்க ஒரு காட்சி: கெளவரப்பிச்சை எடுக்கும் இளைஞன், விபச்சாரி மீது ஒருதலையாக காதல் கொண்டு வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறான். அவளிடம் தன் இழிவான நிலையை அவ்வப்போது சொல்லி புலம்புவான். சாப்பிடுவதற்கு எதாவது வாங்கும் போது காசு கொடுக்க முயலும் அவளை தடுத்து தானே காசு கொடுப்பான். "தேவடியா காசுல சாப்பிடறதுக்கு உனக்கு கூசுது போல இருக்குது?" என்று கேட்கப்படும் போது, தன் தாயும் ஒரு விபச்சாரியாக இருந்தததைக் கூறி "தேவடியா காச நான் நிறைய சாப்பிட்டிருக்கேன்" என்று கூறி அழும் போது நம் மனமும் கலங்கிப் போகிறது. தொடர்ச்சியான போதைப் பழக்கத்தின் காரணமாக அநாதையாக இறந்து போகிறான் அவன்.
()
இந்தப்படம் எனக்கு ஜெயமோகனின் "ஏழாம் உலகம்" என்கிற நாவலை நினைவுப்படுத்தியது. அதில் வரும் பிச்சைக்காரர்களும், அவர்களைச் சுற்றி இயங்கும் குருரமாக வியாபார உலகும் "உருப்படியாக" பார்க்கப்படும் மனித ஜீவன்களும்.... பெரும்பாலானவர்கள் அறியாத இன்னொரு குருரமான உலகின் தீர்க்கமான அறிமுகத்தை படித்து விட்டு அன்று இரவு தூங்கமுடியாமல் அவஸ்தைப்பட்டேன்.