இந்தப் பக்கத்தில் தன்னுடைய ஒரு சினிமா விமர்சனத்தில் குறை கண்டுபிடித்தவர்களின் மீது பாய்ந்து பிடுங்கிவிட்டார் சாருநிவேதிதா. சற்று அதீதம்தான். ஆனால் என்னால் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சினிமாவை எப்படி நாம் உள்வாங்கிக் கொள்கிறோம் அல்லது எப்படி அனுபவிக்கிறோம் என்பதுதான் முக்கியமே ஒழிய அந்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் போது அதில் ஏற்படும் கருத்துப் பிழைகளையோ, எழுத்துப் பிழைகளையோ பொருட்படுத்த தேவையில்லை என்பதுதான் முதிர்ச்சியடைந்த பார்வை.
என்னுடைய பதின்ம வயதுகளில் ரஜினி vs கமல் ரசிகர்களிடையே ஏற்படும் விவாதங்களில் சம்பந்தப்பட்ட நடிகர் எத்தனை படங்களில் நடித்திருக்கிறார், அதில் எத்தனை 100 நாட்கள் ஓடின, வெள்ளிவிழா கண்டன, அப்பாவாக எத்தனை படங்களில் நடித்திருக்கிறார், யார் யார் கதாநாயகிகளாக நடித்தார்கள்... போன்ற 'அதிமுக்கிய' புள்ளிவிபரங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்களும் அதைத் திணறாமல் கடகடவென்று சொல்லத் தெரிந்தவர்கள்தான் 'உண்மையான' ரசிகர்களாக மதிக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். நானும் அந்த அபத்தத்தை முயன்றிருக்கிறேன். பதின்ம வயதுகளில் இவ்வாறான அறியாமையுடன் இருப்பதைக் கூட மன்னித்துவிடலாம். ஆனால் வளர்ந்து ஒரு புரிதலை அடைந்து உலக சினிமாவைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது இவ்வாறான விடலைத் தனத்தை கைவிடுவது நல்லது. 'குறை கண்டுபிடித்து விட்டோம் பாத்தியா' என்று சிறுமைத்தனமாக மகிழ்பவர்களே இவ்வாறான குறைகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பார்கள். '
'The Hurricane' திரைப்படத்தை பற்றிய
என்னுடைய பதிவிலும் ஒரு அனானி நண்பர் 'wikipedia' என்றொரு ஒற்றை வார்த்தை பின்னூட்டத்தில் தன்னுடைய மேதமையைக் காட்டி விட்டுச் சென்றிருந்தார். அதாவது இந்தப் படத்தைப் பற்றிய சில மேல் தகவல்களை நான் விக்கிபீடியாவிலிருந்து அப்படியே எடுத்து எழுதிவிட்டேனாம். என்ன அநியாயம் பாருங்கள். எனக்கு ஒன்று மாத்திரம் புரியவில்லை. அய்யா! இந்த மாதிரியான கலைக்களஞ்சியங்கள் எல்லாம் அப்படியாக தகவலை எடுத்து உபயோகப்படுத்தத்தானே இருக்கிறது. இன்னும் கற்கால வழக்கத்தின் படி நூலகம் நூலகமாக அலைந்து கனமான புத்தகங்களை தூசுதட்டி புட்டிக் கண்ணாடி போட்டு அதிலிருந்து குறிப்புகள் எடுத்து எழுதுபவர்களைத்தான் இவர்கள் அறிவாளிகள் என்று ஒப்புக் கொள்வார்களா என்று தெரியவில்லை. நுட்பம் வளர்ந்துவிட்டது. ஒரு மவுஸ் சொடுக்கில் உலகமெங்கிலும் உள்ள தகவல்கள் கணினி வழியாக வந்து கொட்டுகின்றன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு?. கண்ணதாசன் சம்பந்தப்பட்டதொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அவர் எழுதிய திரைப்பாடலொன்றில் வரும் வரி அல்லது கருத்து, சங்கப்பாடலில் உள்ளதை அப்படியே பிரதிபலிக்கிறதே, யாராவது ஆட்சேபிக்க மாட்டார்களா' என்று அவரின் உதவியாளர் கேட்டதற்கு 'அடப்போய்யா, என்னுடைய தாத்தாவின் பாக்கெட்டில் கைவிடுவதற்கு யாருடைய அனுமதியைக் கேட்க வேண்டும்?' என்று ஒரே கேள்வியைக் கொண்டு அந்த ஆட்சேபத்தை தூக்கி எறிந்தாராம்.
எங்கே தவறு என்றால், இணையத்தில் இருக்கும் ஒரு வேறொரு கட்டுரையை அப்படியே எடுத்துப் போட்டோ அல்லது வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்த்துப் போட்டு 'தகவல்கள் எங்கிருந்து பெறப்பட்டன' என்கிற விஷயத்தை அப்படியே மூடி மறைத்து சம்பந்தப்பட்ட கட்டுரை தன்னால்தான் எழுதப்பட்டது' என்று நிறுவ முயல்வதுதான் அதிபயங்கர குற்றம். 'அறிவுசார் திருட்டு' என்று இதற்குப் பெயர்.
என்னுடைய பதிவில் பின்னூட்டமிட்ட நண்பர் இன்னொரு குற்றச்சாட்டையும் வைக்க முயன்றிருக்கிறார். அதாவது 'இந்தப் படத்தை நான் பார்க்கவேயில்லை அல்லது பார்த்தும் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. விக்கிபீடியாவிலிருந்த தகவல்களை அப்படியே நான் காப்பியடித்திருக்கிறேன்' என்பதுதான் அவர் கூற முயல்வது. சினிமாவை பொழுது போக்காக மட்டும் கருதாமல் அதை உன்னதமானதொரு கலைவடிவமாக வழிபடுபவர்கள், ஒரு மதமாக பின்பற்றுபவர்கள், சுவாசமாக நினைப்பவர்கள்... போன்ற சினிமா ஆர்வலர்களுக்கு இந்த அற்பமான குற்றச்சாட்டு மிக்க எரிச்சலையே ஏற்படுத்தும். இதுவேதான் சாருவிற்கும் ஏற்பட்டு அவரை அதீதமாக எதிர்வினையாற்ற வைத்திருக்கிறது. தகவல்களை தரும் தளங்களிலிருந்து சம்பந்தப்பட்ட சினிமாவைப் பற்றின மேல் விவரங்களை மாத்திரமே பெற முடியும். அனுபவங்களைத் தர முடியாது.
சரி ஒரு வாதத்துக்கே வைத்துக் கொள்வோம். விக்கிபீடியா போன்ற தகவல்களை தரும் தளங்களை வைத்து ஒரு சினிமா விமர்சனத்தை எழுதி விட முடியுமா? என்னுடைய பதில் 'முடியும்'. எழுதுவதில் அடிப்படையான திறமை கொண்டவனால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியும். ஆனால் அது பிளாஸ்டிக் மல்லிகைப்பூ மாதிரி இருக்கும். எழுதினவனின் ஆன்மா அதில் இருக்காது. ஒரு தேர்ந்த, நுட்பமான வாசகனால் இதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். 'அந்த சினிமாவின் இயக்குநனும் நடிகனும் பார்வையாளனும் எங்காவது ஒரே புள்ளியில் இணையும் அந்த உன்னதமான அனுபவம்' செயற்கை விமர்சனங்களில் இருக்காது. சினிமாவை தன்னுடைய உயிர் போல நேசிக்கிறவன் இந்த மாதிரியான அற்பத்தனமான காரியங்களை செய்ய மாட்டான். வணிகப் பத்திரிகைகளில் கூலிக்காக மாரடிக்கும் சினிமா விமர்சனம் எழுதப் பணிக்கப்படுபவர்களே பெரும்பாலும் இவ்வாறு செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கவர் வாங்கிக் கொண்டோ அல்லது தயாரிப்பாளரின் நிர்ப்பந்தத்தாலோ, விளம்பர வருமானத்தை கணக்கிக் கொண்டோ ஒரு குப்பைப்படத்தை 'ஆஹா ஓஹோ'வென்று என்று புகழ்ந்து தள்ளுவது ஒரு முறை. அல்லது சம்பந்தப்பட்ட படத்தைப் பார்க்காமலேயே அதுவரை வந்த விமர்சனங்களையும் ஏற்கெனவே வந்திருக்கும் தகவல்களை வைத்தும் 'கதைவிடுவது' இன்னொரு முறை. அவற்றையெல்லாம் 'விமர்சனம்' என்ற கணக்கிலேயே கொள்ளக்கூடாது.
இணையத்திற்கு வந்த புதிதில் நான் கூட ஏதாவது சினிமாவைப்பற்றி எழுதும் போது 'விமர்சனம்' என்கிற வார்த்தையை அதனுடைய முக்கியத்துவம் அறியாமல் விடலைத்தனமாக பயன்படுத்திக் கொண்டிருந்தேன். எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியம் ஒருமுறை 'விமர்சகனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் எவை?' என்று எழுதின கட்டுரையை படித்த போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. ஒரு விமர்சகனுக்கு சம்பந்தப்பட்ட துறையில் ஆழமான ஞானமும், சமகால நிகழ்வுகளைப் பற்றின அறிவும், நடைமுறை சிரமங்களையும் அனுபவங்களைப் பற்றியும், அதனுடைய எதிர்காலம் பற்றியும் அ முதல் ஃ வரை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று எழுதாமல் தான் எழுதுகிற ஒவ்வொரு வார்த்தையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அந்தக் கட்டுரையைப் படித்ததிலிருந்து 'விமர்சனம்' என்கிற பதத்தை நான் பயன்படுத்துவதில்லை. 'இந்த சினிமாவைப் பற்றிய என் பார்வை' என்கிற மாதிரிதான் மழுப்புகிறேன்.
மேலும் ஒரு நல்ல சினிமாவை ஒரே ஒரு முறை பார்த்துவிட்டு நிச்சயம் உள்வாங்கிக் கொள்ளவே முடியாது. ஒரு அடிப்படை பார்வையாளனாக எல்லா முன்முடிவுகளையும் களைந்துவிட்டு வெற்றான மனநிலையில் அந்தப்படத்தை அணுக வேண்டும். பின்பு இன்னொரு முறை அதிலிருந்து முற்றிலும் விலகி அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பங்கள், கேமரா கோணம் பார்வையாளனுக்கு சொல்ல முயலும் செய்தி, இயக்குநர் பார்வையாளனை மிகவும் நெருங்கி பேசும் அந்த கலாபூர்வமான மொழி ஆகியவற்றை நுட்பமாகவும் கூர்மையாகவும் அவதானிப்பதே ஒரு உண்மையான சினிமா ரசிகனின் அடிப்படையாக இருக்க முடியும். காத்திரமானதொரு சினிமா என்றால் மூன்று,நான்கு முறை பார்த்தால் கூட முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாது.
ஆனால் இன்று இணையத்தில் எந்தவொரு குப்பைப் படத்தையும் முதல் நாளே அடித்துப்பிடித்து பார்த்துவிட்டு அதைப் பற்றி நான்கு பத்திகள் எழுதிவிட்டு 'விமர்சனம்' என்று தலைப்பு போட்டுக் கொள்பவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஆனால் இந்த அபத்தமான பரவசம் ஒருநிலையில் வடிந்து, இந்தப் புள்ளியிலிருந்து முன்னகரும் வாய்ப்பு இருக்கிறது ; அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்' என்கிற எதிர்பார்ப்புதான் இப்போதிருக்கும் ஒரே ஆறுதல்.
உலக சினிமாவை பற்றி குறைந்த அளவே ஞானம் கொண்டிருந்த (சத்யஜித்ரேவின் சில படங்களை அரசுத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்) ஆனால் அதிலிருந்து முன்னகராமல் ஒரு சராசரி மசாலா சினிமா பார்வையாளனாகவே தொடர்ந்த என்னை மாற்றியமைத்தது தமிழ்ச் சிற்றிதழ்களின் அறிமுகம். குறிப்பாக எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி தீராநதியில் வந்து கொண்டிருந்த சினிமா தொடரான 'அயல் சினிமா'-வை சொல்ல வேண்டும். ஒரு சினிமாவை எப்படி அணுகுவது, எப்படி அதை புரிந்து கொள்வது, ஒரு குறிப்பிட்ட இயக்குநரின் அனைத்துப் படங்களையும் பார்த்து எப்படி அவரை மற்ற இயக்குநர்களுடன் வேறுபடுத்திக் காட்டுவது... என்று பல புரிதல்களை ஏற்படுத்தியது அந்தப் புத்தகம். அந்த ஆரம்பப் புள்ளியிலிருந்துதான் இன்னும் தீவிரமானதொரு இடத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை சினிமா பற்றி நான் எழுதும் பதிவுகள் என்னுடைய மேதமையைக் காட்டுவதற்காக அல்ல. என்னுடைய அனுபவத்தை சக மனிதருக்கும் கடத்தி அவரையும் அந்தச் சினிமாவை காணச் செய்ய வேண்டும் என்பதுதான் நான் எழுதுவதின் அடிப்படை நோக்கம். சிலருக்கு 'உலக சினிமா' என்றவுடனே எள்ளலான சில முன்முடிவுகளுடன் அணுகுவதுதான் வழக்கமாக இருக்கிறது. 'உலகத்தரம்' குறித்த கிண்டலான கேள்விகள் வேறு. இதற்கு சர்வதேச தரக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டும் என்கிற கவனத்துடன் உருவாக்கப்படும் ஏற்றுமதிப் பொருட்களை ஒரு அவசர உதாரணமாக கொள்ளலாம். உலகமெங்கிலும் உள்ள மனிதர்களின் சில உணர்வுகள் பொதுவானது. அதற்கு மொழியோ,கலாசார அறிவோ,மிகையான தொழில்நுட்பமோ,நட்சத்திர நடிகர்களோ, கவர்ச்சியோ தேவையில்லை. அந்தப் புள்ளியை நோக்கி தன்னுடைய படத்தை நகர்த்திச் செல்கிறவனின் படங்கள் உலக சினிமா ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
உலக சினிமா என்பது இந்தியாவிற்கு வெளியிலிருந்து தயாரிக்கப்படுவதா என்ற மாதிரியான கேள்விகளையும் எதிர்கொண்டிருக்கிறேன். இங்கும் பல அற்புதமான சினிமா இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள்/இருக்கிறார்கள். தமிழில் என்றால் மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரைய்யா, ஜான் ஆபிரகாம் என்று சில பெயர்களை உடனே நினைவு கூர முடிகிறது. ஆனால் இங்கு காட்சி ஊடகத்தைப் பற்றின அறிவு மிகக் குறைவாக இருக்கிறது. ஒரு காட்சியைப் பயன்படுத்தி சொல்லக்கூடிய இடங்களில் கூட வசனத்தைப் பயன்படுத்துகிறார்கள். ரசிகர்களுக்குப் புரிய வேண்டும் என்பது இவர்களின் மேதாவித்தனமான வாதம். ரசிகர்கள் எப்போதோ முன்னால் வந்துவிட்டார்கள் என்பதை யாராவது இவர்களுக்குச் சொன்னால் நன்றாக இருக்கும்.
தொடர்புடைய பதிவு:
நாங்க பிலிம் காட்றம்ல(மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது, உலகின் மிக முக்கியமான படங்களாக நான் கருதும் 10 படங்களின் வரிசையில் உள்ள சத்யஜித்ரே இயக்கிய 'சாருலதா'வின் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி)suresh kannan