மோகன்தாஸ் காந்தி பற்றிய தலைப்பில் தேடினால் குறுக்கும் நெடுக்குமாக முன்பெல்லாம் பல வகைகளில் புத்தகங்கள் கிடைக்கும். ஆனால் கோட்சேவைப் பற்றி? கஷ்டம். காக்கி அரை நிஜார் போட்டுக் கொண்டு RSS முகாம்களில் தேடினால் ஒருவேளை கிடைக்கலாம். ஆனால் சந்தனக் கடத்தல் வீரப்பனும் புனித பிம்பாகி விட்ட இன்றைய நிலைமை வேறு. எதிர்மறையான ஆளுமைகளைப் பற்றிய புத்தகங்களும் சுலபமாக நிறைய கிடைக்கின்றன. அப்படிப்பட்டதோர் எதிர்மறை ஆளுமையான கொலம்பிய போதைக் கடத்தலின் முன்னோடியாக இருந்த Pablo Emilio Escobar Gaviria (1949 - 1993) என்பவரைப் பற்றின புத்தகம் பா.ராகவன் எழுதிய 'என் பெயர் எஸ்கோபர்'. (தில் திகில் திடுக்கிடல்)
ஒரு நாட்டின் அதிபயங்கர குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறவரே தான் கைது செய்து நடத்தப்படும் விதம் குறித்து அந்த நாட்டு அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தைப் போட்டு அதை நிறைவேற்றிக் கொண்டிருக்க முடியுமா?
கொலம்பியாவில் இது நடந்திருக்கிறது. பெரிய மனது வைத்து 5 வருடங்கள் மாத்திரமே சிறைப்பட 'விரும்பிய' அவருக்கென்றே நவீன வசதிகளுடன் ஒரு சிறையைக் கட்டி அதில் அவரை 'தங்க' வைத்திருக்கிறது கொலம்பிய அரசு. விருப்பப்பட்ட நேரத்தில் அவர் வெளியே போய் தனக்கு பிடித்தமான கால்பந்து விளையாட்டை ரசித்து திரும்பலாம். (ஒரு முன்னாள் முதல்வரின் மீதுள்ள வழக்குகளை பிரத்யேகமாக விசாரிப்பதற்கென்றே தனி நீதிமன்றங்கள் சென்னையில் கட்டப்பட்டதை இச் சமயத்தில் பெருமையுடன் நினைவு கூரலாம்). கொலம்பியாவின் அப்படிப்பட்ட சிறப்பு வி.ஐ.பி. குடிமகனைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகத்தினுள் பயணம் செய்வது அவசியம்.
பல வருடங்கள் காலனியாதிக்கத்தின் சுரண்டலில் அவதிப்பட்ட நாடு கொலம்பியா. பல்வேறு புரட்சி இயக்கங்களின் முயற்சி மூலம் சுதந்திரம் அடைந்தாலும் உள்நாட்டு அரசியல் கலவரங்களாலும் போர்களாலும் மக்களுக்கு நிம்மதியில்லை. இரு வல்லரசுகளின் போட்டியில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஏற்படுத்தும் குழப்பங்கள் வேறு. இயக்கங்களுக்கு ஆயுதம் வாங்கப் பணம் வேண்டும். என்ன வழியென்று யோசித்தில் கோகெய்ன் என்ற போதைப் பொருளை தயாரிக்க உதவும் கோகோ பயிர் தென்படுகிறது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கொலம்பிய சரக்கு என்றால் நிச்சயம் உன்னதமாக இருக்கும் என்றொரு நம்பிக்கை இருந்ததால் பணம் டாலர்களில் கொட்டுகிறது. கொலம்பியாவின் குடிசைத் தொழிலாக இந்த போதைப் பொருள் தயாரிப்பு இருந்ததால் பல்வேறு சிறு குழுக்கள் இந்த சர்வதேச வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
()
சில்லறை கார் திருடராக இருந்த எஸ்கோபர், (அதற்கு முன் கல்லறைகளில் உள்ள நினைவுக்கற்களை திருடி விற்றவர் என்று சொல்லப்படுகிறது) தன்னுடைய பணக்காரக் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பிக்கிறார். சாதுர்யத்தாலும் தைரியத்தாலும் குறுகிய காலத்திலேயே தன்னுடைய தொழிலில் முன்னேறுகிறார். ஒரு முறை காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டு நீதிபதியை மிரட்டியும் பலனளிக்காமல் சிறிது காலம் சிறையில் இருந்த எரிச்சலில் அவருக்கு தோன்றுவதுதான் 'தன்னைப் போன்ற போதை வியாபாரிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு அமைப்பை ஏற்படுத்துவது (மெடேலின் கார்ட்டல்); அதன் மூலம் இந்த தொழிலை ஒழுங்குபடுத்துவது'; அரசியலில் இணைந்து தனக்கொரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வது.
இதற்கு முன்னால் இதை யாரும் யோசிக்கவோ முயற்சிக்கவோ இல்லாமலிருந்ததால் எஸ்கோபர் போட்டுக் கொடுத்த தார் ரோட்டின் மேலே போதைப் பொருள் வியாபாரம் தள்ளாடாமல் சுகமாக பயணித்தது.
சினிமாப்படங்களின் தலைப்புகளின் கீழொரு tag line போடுவது போல எஸ்கோபரின் வியாபாரத்தின் தாரக மந்திரம் 'செய் அல்லது செத்துமடி'. தன்னுடைய போதைப் பொருள் விற்பனைக்கு உதவுகிற அத்தனை அரசு இயந்திர நட்டு போல்டுகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தாராளமாக பணம் தரப்படும்; அதே சமயம் தடையாக நிற்கிற எதுவும் உடனே அப்புறப்படுத்தப்படும். பணத்திற்கு ஆசைப்பட்டு உதவியவர்கள் தவிர உயிருக்கு பயந்து உதவியவர்களும் அதிகம். உதவ மறுத்த அனைவருமே எஸ்கோபரின் ஆட்களால் கொல்லப்படுகின்றனர். எனவே எஸ்கோபரின் போதை வியாபாரம் flag கட்டிப் பறந்தது. 1989-ம் ஆண்டில் உலகின் ஏழாவது பெரிய பணக்காரர் என்று forbes பத்திரிகை எஸ்கோபர் குறித்து எழுதுமளவிற்கு பெரிய flag. இந்தப் பணம் அத்தனையையும் சுவிஸ் பேங்கில் போட்டு பதுக்காமல் தன்னுடைய பாதுகாப்பிற்காக தான் வாழும் மெடேலின் நகரின் அடித்தட்டு மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் பெரும்பான்மையை பூர்த்தி செய்ததில் ராபின் ஹ¥ட் இமேஜூம் கிடைத்தது. ஆனால்....
அந்தப் பயணம் இப்படியே சுகமாய் இருக்கவில்லை.
()
எஸ்கோபருக்கு போட்டியாய் தொடங்கப்பட்ட இன்னொரு அமைப்பான காலி கார்ட்டல், கெடுபிடிகளை தாங்க முடியாமல் கொலம்பிய அரசாங்கத்துக்கு எதிராக எஸ்கோபர் அறிவிக்கிற யுத்தம், சட்ட அமைச்சர் படுகொலை, விமான வெடிப்பு, M-19 என்கிற புரட்சிக்குழுவை உபயோகப்படுத்தி நாட்டின் தலைமை நீதிபதிகளை நீதிமன்றத்திலேயே சுட்டுக் கொன்ற பரபரப்பான சம்பவம், அமெரிக்கா தந்த அழுத்தத்தில் மிகவும் கடுப்படைந்த கொலம்பிய அரசாங்கம் கொலை வெறியுடன் தேடியவுடன் சரணடைவதாக சொல்கிற எஸ்கோபரின் நாடகம், பிறகு...
அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் மேற்சொன்ன புத்தகத்தைப் படிப்பதின் மூலம் அதை சாத்தியப்படுத்திக் கொள்ளலாம்.
()
பா.ராகவன் எஸ்கோபரின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் மிகத் தெளிவாக படம் வரைந்து பாகங்களை குறித்திருக்கிறார். க்ரைம் நாவலின் தொடக்கம் போல ஒரு கடத்தல் சம்பவம், கொலம்பியாவின் வரலாறு குறித்த சுருக் அறிமுகம், கொகேய்னின் சுவை, எஸ்கோபரின் ஆரம்ப சாகசங்கள், மெடேலின் கார்ட்டல் உருவான விதம், அதன் அசுரத்தனமான வளர்ச்சி, அரசாங்கத்துடனான யுத்தம் என்று எஸ்கோபரைப் பற்றின ஒரு சித்திரத்தை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால்..
"இல்ல மச்சான்.. இன்னா மேட்டர்னா"... என்கிற தொனியில் அவரது மொழி வாசகரது தோள் மீது கை போட்டுப் பேசுகிறது. ராணி, குமுதம் படிப்பவர்கள்தான் தன்னுடைய வாசகர்கள் என்பதை பா.ராகவன் முன்னதாக தீர்மானித்துக் கொண்டதைப் போல் எல்லாவற்றையும் மிகவும் எளிமைப்படுத்தி விடுகிறார். இது தவறில்லை என்றாலும் இந்த தொனி அதீதமாகிப் போகும் போது இந்தப் புத்தகம் "பொழுது போக்கு நாவல்' தரத்திற்கு இறங்கிப் போகிற சங்கடம் நேர்கிறது. 'சூப்பர் கில்லாடிய்யா இவன்' என்று எஸ்கோபரின் ஆளுமை மீது வாசகன் பிரமிப்பும் கிளர்ச்சியும் அடைவதோடு இந்தப் புத்தகம் முடிந்து விடுகிறதோ என்று தோன்றுகிறது. சுருங்கக் கூறின் இண்டர்நேஷனல் கொலம்பியா மைதாமாவில் லோக்கல் நாமக்கல் முட்டையை ஊற்றி அடித்து ஒரு காக்கெடயில் பரோட்டாவை தந்திருக்கிறார் ராகவன். உதாரணத்திற்கு சில (பாரா)க்களை பார்ப்போம்.
... எந்த கோயிந்து தன் சொந்தப் பெயரில் ரூம் எடுக்கும்? ஆகவே கொலம்பியப் பெயர்களில் யார் யார் அறை எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தார்கள். ம்ஹ¥ம். ஒருத்தர் கூட இல்லை. எஸ்கோபர் படு ப்ரில்லியண்டாக ஈக்வடாரில் அதிகம் புழக்கத்திலுள்ள பெயர் ஒன்றையே அளித்திருந்தான். அவனது ஆள்களும் ஆவடி மருதன், தூத்துக்குடி சிவசுப்பிரமணியன், மாயவரம் முத்துக்குமார், சத்தியமங்கலம் நவநீத கிருஷ்ணன், அம்பத்தூர் சுஜாதா முத்துராமன் என்று எ·ப்.எம். ரேடியாக்களுக்கு நேயர் விருப்பம் கேட்கிறவர்கள் மாதிரியே பெயரளித்தார்கள்... (பக்கம் 40)
.. அது ஒரு ரகசிய ஆலோசனைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் இடம். வெளியே இருந்து பார்த்தால் தரைக்கடியில் அப்படியொரு ரகசியப் பதுங்குதளம் இருப்பதே தெரியாது. மேலுக்கு ஒரு வேலு மிலிட்டரி ஹோட்டல். அந்த ஹோட்டலும் எஸ்கோபரின் அடியாள் ஒருவனுடையதுதான். அவன் தன்னுடைய சகலபாடியை கல்லாவில் உட்கார வைத்துவிட்டு வாசலில் காவலுக்கு நின்றபடி எப்போதும் முட்டை பரோட்டா தட்டிப் போட்டுக் கொண்டிருப்பான். .. (பக்கம் 101).
என்றாலும் ராகவனின் இந்த மொழிக்குப் பழகி விட்டால் மிகச்சுலபமாக புத்தகத்திற்குள் இறங்கி விட முடிகிறது. சுமார் இரண்டு மணி நேரத்தில் இந்த 220 பக்க நாவலை.. மன்னிக்கவும் புத்தகத்தை படித்து முடித்து விட முடிந்தது. ராகவனின் பிரத்யேகமான நகைச்சுவை கலந்த மொழி நம்மை பல இடங்களில் புன்னகைக்கவும் வாய்விட்டுச் சிரிக்கவும் வைக்கிறது. எஸ்கோபர் அரசாங்கத்தின் முன் வைக்கும் ஒப்பந்தத்திற்கு அரசாங்கம் பதில் சொல்வதாக சித்தரிக்கப்பட்டிருப்பதை 'ராகவன்' மொழியில் கவனியுங்கள்.
.. அன்புடையீர் வணக்கம், வந்தனம். சுஸ்வாகதம். நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறோம். இன்னும் பத்து நிபந்தனைகளைப் பின் இணைப்பாக அனுப்ப மறந்திருப்பீர்களானால் அதையும் காலக்ரமத்தில் அனுப்பி வையுங்கள். சேர்த்துக் கேட்கிறோம். ஆனால் கைதாகச் சம்மதம் என்று ஒரு வார்த்தை சொல்லி வயிற்றில் பீர் வார்த்தீர்களே, அது! அந்த அந்த சொல்லுக்காக உங்களுக்குக் கோயிலே கட்டுகிறோம் என்று விழுந்து சேவித்தார்கள்... (பக்கம் 174).
'போய் விட்டான்! (பக்கம் 55)' என்கிற இரண்டு வார்த்தைகளுக்கு முன்னால் இருக்கிற ஒரு அதிரடியான பத்தியை நிச்சயம் நீங்கள் படிக்க வேண்டும்.
()
பொதுவாக உலக வரலாற்றையும், சரித்திரத்தின் முக்கியமான முந்தைய, சமகால நிகழ்வுகளையும் பிற நாட்டுக் கலாசாரங்களையும், உணவுகளையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் நேரமும் நம்மில் பெரும்பான்மையவர்க்கு இல்லை. பல பேருக்கு தினத்தந்தியில் ஆரம்பிக்கும் நாளின் தொடக்கம் இரவில் 'அரசி' தொலைக்காட்சி சீரியலோடு முடிந்து போய்விடுகிறது.
.. என்செபொலேடோ என்று ஒருவித கடல் பாசியையும் நாலைந்து ரக மீன்களையும் பட்டாணியையும் சேர்த்துப் போட்டு அண்டாவில் சூப் காய்ச்சி நாளெல்லாம் குடிப்பார்கள். ·ப்ரிட்டாடா என்று ஒரு பதார்த்தம் அங்கே இன்னும் ·பேமஸ். வெண்பன்றிக் கறியுடன் புதினாவைச் சேர்த்து அரைத்து சப்பாத்தி மாவு மாதிரி பதத்துக்குக் கொண்டுவந்து, இரண்டு பன்களுக்கு நடுவே வைத்து மூடி மைக்ரோவேவ் அவனில் கொஞ்சம் போல் வேகவைத்து எடுத்து தேனில் தோய்த்துச் சாப்பிடுவார்கள்.
இங்கே இதெல்லாம் என்னத்துக்கு என்று அந்தராத்மா கேள்வி கேட்டால் அடக்கி வைக்கவும். வேறு எந்த ஜென்மத்தில் நாம் ஈக்வடாரையெல்லாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்? .. (பக்கம் 38)
என்று நூலாசிரியரே இதை ஓரிடத்தில் கிண்டலடிக்கிறார்.
பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் எஸ்கோபரின் ஆளுமை ஒரு கதாபாத்திரமாக குறுக்காக நடந்திருக்கிறது. எஸ்போரைப் பற்றின பிரத்யேக முழுத்திரைப்படம் ஒன்று தயாரிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எஸ்கோபரைப் பற்றின பல நூற்கள், வீடியோக்கள் உள்ளன. Mark Bowden-ன் Killing Pablo என்கிற நூல் எஸ்கோபர் கொல்லப்பட்டதை பிரதானமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.
()
..காலி கார்ட்டலின் போதைப் பணத்தை வெளுக்கும் விதம் குறித்த சார்ட் ஒன்று இந்தப் பக்கங்களில் தரப்பட்டிருக்கிறது. பொழுது போகாத நேரத்தில் பூதக் கண்ணாடி வைத்து கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிப் பாருங்கள். கண்டிப்பாக ராத்திரி தூக்கம் வராது! (பக்கம் 85).
வருங்காலத்தில் ஒருவேளை உதவுமோ என்று இந்த சார்ட்டை முழுப் புத்தகத்திலும் நான் தேடிப் பார்த்தேன். காணோம். வாசகர்கள் ராத்திரிகளில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்கிற பதிப்பகத்தினரின் நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன்.
'கொலம்பியாவில் போதை அடிமைகள் கிடையாது' என்று ஒரிடத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கொகேய்ன் அமெரிக்காவிற்குள் கடத்தப்பட்டாலும் போதைப் பொருள் தயாரிப்பின் தாயகத்திலேயே அதற்கு வாடிக்கையாளர்கள் கிடையாது என்பது முரணாக இருக்கிறது. இந்த நூல் எந்த பத்திரிகையிலாவது தொடராக வந்ததா என்பதைப் பற்றின குறிப்பும் புத்தகத்தில் இல்லை. ஒவ்வொரு அத்தியாயமும் ஆர்வமூட்டும் பரபரப்புடன் முடிவதை வைத்து யூகித்துத்தான் இந்தக் கேள்வி எழுகிறது.
()
இந்த நூல் ஜனரஞ்சகமான முறையில் எழுதப்பட்டிருந்தாலும் கொலம்பியாவைப் பற்றியும் அங்குள்ள போதை உலகத்தைப் பற்றியும் ஒரு சுவாரசியமான அறிமுகத்தை தந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் அதன் கலாசாரம் பற்றி மேலும் அறிய ஆர்வம் கொள்கிற வாசகனுக்கு இந்நூல் நிச்சயம் ஒர் ஆரம்பப் புள்ளியாக இருக்கும்.
என் பெயர் எஸ்கோபர் (பா.ராகவன்)
224 பக்கங்கள், விலை ரூ.90/-
கிழக்கு பதிப்பகம், சென்னை-18.
ISBN 978-81-8368-579-5
கிழக்கு பதிப்பகத்தின் சம்பந்தப்பட்ட சுட்டி
suresh kannan
நல்ல அறிமுகம். ஜனரஞ்சகமாக எழுதினால் தப்பா என்ன? புக்கை வாங்க வேண்டிய ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்.
ReplyDeleteபீர் பற்றி நீங்கள் ஒரு புத்தகம் எழுதி, அது கிழக்கு வெளியீடாக வரப் போகிறதாமே, உண்மையா :). அது
ReplyDeleteடாஸ்மாக் பார்களிலும் கிடைக்குமா?:)
இப்பதானே இதைப் பத்தி யாரோ எழுதினாங்க.
ReplyDelete//'கொலம்பியாவில் போதை அடிமைகள் கிடையாது' என்று ஒரிடத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கொகேய்ன் அமெரிக்காவிற்குள் கடத்தப்பட்டாலும் போதைப் பொருள் தயாரிப்பின் தாயகத்திலேயே அதற்கு வாடிக்கையாளர்கள் கிடையாது என்பது முரணாக இருக்கிறது.//
ReplyDeleteஇது உண்மையல்ல. ஆனால் எல்லோரும் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் இருக்கும் போதை அடிமைகளைப் பற்றித்தான் அக்கறைப்படுகின்றனர். கொலன்பியாவில் சாதாரண ஏழை இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமையாக இருந்தாலும் அந்த செய்தி வெளியில் வராது. இருப்பினும் புத்தகத்தில் பல்வேறு தகவல்களை சரியாக கொடுத்திருக்கும் ராகவன், இது போன்ற சிறு பிழைகளை விட்டிருப்பதை மன்னித்து, கண்டு கொள்ளாமல் விடலாம்.
இப்பல்லாம் காந்தியப் பத்தி எவன் படிக்கறான். வீரப்பன பத்தி போட்டாத்தான் பரபரப்பா விக்கும்.
ReplyDeleteநல்ல அறிமுகம் சுரேஷ்.அந்த காமெடிதான் அவரின் தணித்தன்மையோ..?
ReplyDeleteபல சீரியஸ் விஷயங்களை எழுதும் பா.ராகவன் இதை தவிர்த்தால் நலம் அல்லது குறைவாக பிரயோகித்தலும்.
பாராவிற்கு இதுப் போல் எழுதுவது மிக மிக பிடித்த விசயம் போலும். அவரின் நிலமெல்லாம் இரத்தம் ஒரு நல்ல படைப்பு.
ReplyDeleteஉங்கள் அறிமுகத்திற்கு நன்றி
மயிலாடுதுறை சிவா...
Rags to riches ஹீரோக்களின்/வில்லன்களின் கதைகளுக்கு எப்போதுமே கிராக்கி அதிகம்.
ReplyDeleteமெத்தப்படித்தவர்களுக்கு பில் கேட்ஸ், நாராயணமூர்த்தி, அம்பானி கதைகள். படித்தும், படிக்காதவர்களுக்கு ரஜனி, கலைஞர் கதைகள். குறைவாக படித்தவர்களுக்கு வீரப்பன், எஸ்கோபார் கதைகள்.
முதல்வகையினர் "அறிவுத் திறத்தால்" வளர்ந்தவர்களாக இருப்பார்கள். அதனால் மெச்சப்படவேண்டியவர்கள். இரண்டாவது வகையினர் "உழைத்து" முன்னேறியவர்கள். போற்றலுக்கும், தூற்றலுக்கும் உரியவர்கள். மூன்றாமவர்கள் கொலை, கொள்ளை, கடத்தல் என்று குறுக்குவழியில் முன்னேறியவர்கள். சாகசங்களால் வாய்பிளக்க வைத்தாலும், வில்லன்களாக இருப்பதால் இவர்கள் சாகும்வரை காத்திருந்து தான் இவர்களைப் பற்றி கதையெழுதி கடைவிரிக்க முடியும்.
இரண்டு சந்தேகங்கள்:
1. "என் பெயர் எஸ்கோபார்" என்று தன்மைத் தலைப்பிட்டுவிட்டு, 'அவன், 'வந்தான்', 'போனான்' என்று படர்க்கையில் கதைவிட்டிருப்பதன் சூட்சுமம் யாது?
2. இப்புத்தகம் சுட்ட பழமா? சுடாத பழமா?
Good review. I just posted a review of this book in English on my blog - http://musingsmiscellany.blogspot.com/
ReplyDeleteபாரா எழுதியிருப்பது ஒருபுறமிருக்கட்டும். நீங்கள் எழுதியிருப்பதும் அதே போல் அஜால் குஜாலாகத்தானே இருக்கிறது.
ReplyDeleteஸ்வஸ்திக்ஜி -
ReplyDeleteமுழு பதிவும் குகிள் ரீடரில் வர்றமாதிரி செய்யமுடியுமா? இப்ப தலைப்பு மாத்திரம்தான் வருது!
//முழு பதிவும் குகிள் ரீடரில் வர்றமாதிரி செய்யமுடியுமா?//
ReplyDelete.:டைனோஜி:.
அப்படித்தான் ரொம்ப நாளா வெச்சுட்டு இருந்தேன். ஆனா ரீடர்லயே படிச்சிட்டு அப்படியே போயிடறாங்க. பதிவுக்குள்ள வந்தாத்தானே இலக்கியத்தனமான பின்னூட்டங்களையும் படிச்சு ரசிக்க முடியும். அதனாலதான் செட்டிங்கஸ மாத்திட்டேன். :-)
>அப்படியே போயிடறாங்க<
ReplyDeleteஅடப்பாவி. வேணும்ன்னா ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு ட்விட் விமர்சனம் போடறேன், செட்டிங்க மாத்துங்க சாமி!
புரோட்டாவும் நல்லா இருந்தது.
ReplyDeleteஅதுக்கு நீங்க ஊத்துன சால்னாவும் நல்லா இருந்தது.
narcos series also registering escobar's life
ReplyDelete