Wednesday, December 05, 2012

எஸ்.ராமகிருஷ்ணன் எனும் டிராகுலா



எந்தவொரு உலக சினிமாவைப் பற்றியும் யாராவது பரிந்துரைத்தால் உடனேயே கவனமாக குறித்துக் கொள்வேன். அதிலும் ஒத்த அலைவரிசையுள்ளவர்களின் பரிந்துரை என்றால் பொக்கிஷம்தான். ஏனெனில் ஒருவர் சராசரியாக ஐந்தாறு திரைப்படங்களைப் பார்த்து விட்டுதான் அதில் சிறந்ததொன்றாக கருதுவதை மற்றவருக்கு பரிந்துரைப்பார். எனில் நாம் நேரடியாக அந்த சிறந்தததை தேர்வு செய்து மற்ற படங்களை தவிர்ப்பதின் மூலம் நம் உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்தானே?. அந்த வகையில் எஸ்.ரா தனது கட்டுரைகளில் குறிப்பிடும் ஒவ்வொரு திரைப்படத்தையும் எப்படியாவது பார்த்துவிட முயல்வேன். பெரும்பாலும் அவரின் பரிந்துரைகள் என்னை ஏமாற்றியதில்லை. சுஜாதாவால் தூண்டப்பட்டு பின்பு ஒரு கட்டத்தில் எனக்குள் அணைந்து போயிருந்த உலகசினிமா பற்றின ஆர்வம்  மறுபடி ஏற்படுவதற்கு பிரதான காரணம் எஸ்.ரா. அவரின் கலை சார்ந்த தேடலும் அதற்கான உழைப்பும் வெளிப்பாடும் எப்போதும் நான் பிரமிக்கும் விஷயம்.

அப்படியானவர் உலக சினிமாவின் மகத்தான ஆளுமைகள் பற்றி ஆற்றப்போகும் உரைகளை நிச்சயம் தவறவிடக்கூடாதென முடிவு செய்தேன். ஏனெனில் அந்த ஆளுமை குறித்து தனது வாழ்நாள் முழுதும் தேடியடைந்த அனுபவங்களை தொகுத்து சாரமாக தரவிருக்கும் முக்கியமான தருணத்தை இழக்க விரும்பவில்லை. சினிமாவைப் பற்றின ஆங்கில நூற்களிலும் இணையத்திலும் இவ்விவரங்கள் கிடைக்கும்தான் என்றாலும் ஒரு தீவிர சினிமா ஆர்வலரின், விமர்சகரின் தனிமனித அனுபவத்தோடு இணைந்து கிடைப்பது முக்கியமானது. ஓர் உலக சினிமாவை தனியறையில் அமர்ந்து பார்ப்பதற்கும் அதே ரசனையுள்ளவர்கள் உள்ள அரங்கத்தில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசமிது.

முதலில் பாலுமகேந்திரா பேசினார். 'சினிமா ரசனையை' பள்ளிக் கல்வித்திட்டத்தில் சோக்க வேண்டும் என்கிற அவரது வழக்கமான முறையீட்டை இங்கும் வெளிப்படுத்தினார். இது குறித்து சினிமாத் துறையிலிருந்து தொடர்ந்து ஒலிக்கிற ஒரே குரல் பாலுமகேந்திராவுடையது மாத்திரமே. தமிழ்ச் சமூகத்தில் சினிமா எத்தனை வலிமையான ஊடகம் என்ற முறையில் அவரது முறையீடு மிக முக்கியமானது. அரசியல்வாதிகள் யாரும் அவரது முறையீட்டை தீவிரமாக பரிசீலிக்கவில்லை என்கிற அவரது ஆதங்கம் நியாயமானது. உலக சினிமா குறுந்தகடுகளின் மூலம் நம்மை ரொம்பவும் நெருங்கி வந்து விட்டது என்பதை உணர்த்த ஷாப்பிங் மாலில் அவர் வாங்கியதை விளக்கிய 'கால் கிலோ தக்காளி, நூறு கிராம் பச்சை மிளகாய்' ஒரு Citizen Kane  டிவிடி' என்கிற படிமம் சுவாரசியமாக இருந்தது. எஸ்.ரா, சமகால உலக சினிமா இயக்குநர்களைப் பற்றியும் பேச வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக வைத்தார்.

பின்பு பேசிய யூடிவி தனஞ்செயன், சினிமா,இலக்கியம், விழா,பயணம்.. என்று பல்வேறு துறைகளில் ஈடுபடுகிற எஸ்.ராவிற்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று வியந்தார். இது குறித்து எனக்கும் பிரமிப்பு உண்டு. புத்தகக் காட்சியில் ஒரு முறை எஸ்.ராவை சந்தித்த போது இது குறித்து கேட்டேன். ஒரு நாளை, ஒரு மாதத்தை, ஓர் ஆண்டை எப்படி அவர் திட்டமிடுகிறார் என்று கேட்க ஆச்சரியமாக இருந்தது. (இடையில் ஷட்டில் காக்கும் விளையாடுகிறாராம்).

தனஞ்செயன் அத்தோடு மேடை இறங்கியிருந்தால் நல்லதாகப் போயிருக்கும். அரங்கின் வெளியில் உலக சினிமாக்களின் டிவிடிகள் ரூ.50·-விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. "உயிர்மை நடத்தும் விழாவில் எப்படி இவ்வாறு Pirated டிவிடிக்களை அனுமதிக்கலாம்?..உயிர்மை பதிப்பக நூற்களை எவரேனும் நகல் செய்து விற்றால் எப்படியிருக்கும்?" என்று பொறிந்து தள்ளி விட்டார். அவர் மேடையிறங்கின பிறகு மனுஷ்யபுத்திரன் இதற்கு அமைதியாக ஆனால் சரியான பதிலடி தந்தார். "தமிழ்த் திரை இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் படங்கள் எந்தெந்த உலக சினிமாக்களிலிருந்து நகல் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை தெரிவித்தால் நன்றாக இருக்கும். கோடிகளில் இயங்கும் தமிழ்த் திரை இந்த அறத்தை காப்பாற்றுவது முக்கியமானது." என்கிற ரீதியில் பேச அரங்கில் ஓரே ஆரவாரம்.

எஸ்.ராவும் தனது உரையில் இந்த விஷயத்தை தொட்டுச் சென்றார். "நானும் அப்படியாக குறைந்தவிலையில் டிவிடி பார்த்தவன்தான். துரதிர்ஷ்டவசமாக இங்கு உலக சினிமாவை அரங்கில் அனுமதிச் சீட்டு பெற்று பார்க்கும் சூழலே இல்லை. அதற்கான அரங்குகளும் இல்லை. உலக சினிமா குறுந்தகடுகளும் நியாயமான விலையில் கிடைக்கும்படியாகவும் இல்லை. இவையெல்லாம் முறைப்படுத்தப்பட்டால் கள்ள நகல்களின் அவசியமிருக்காது. அது தவறுதான், நியாயப்படுத்த முயலவில்லை."
.
மேலேயுள்ள படத்தில் என்னை சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு ரஷோமான் டிவிடி அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும்.
எனக்கும் இவ்வாறான குறுந்தகடுகளை பயன்படுத்துவதில் ஓர் உறுத்தல் உண்டுதான் என்றாலும் வேறு வழியில்லை. ரேவின் படங்களின் மீது பைத்தியமாக அலைந்த காலத்தில் நான் நீண்ட ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்த 'மகாநகரை' ஒரு வணிக அரங்கில் கண்டேன். விலை ரூ.600·- எனக்கு அப்போதைய மாதச் சம்பளமே ரூ.500/-தான். ஒரு கணம் அதை திருடி விடலாமா என்று கூட தோன்றியது. தைரியமில்லாத காரணத்தினால் வெளியே வந்து விட்டேன். எந்தவொரு உண்மையான கலைஞனும் வணிகக் காரணங்களைத் தாண்டி தமமுடைய படைப்புகள் உலகெங்கிலும் பரவலாக சென்று சேர வேண்டும் என்றுதான் விரும்புவான். ஹீப்ரு மொழியில் வெளியாகும் ஒரு திரைப்படத்தை அந்த இயக்குநர் கேள்வியே பட்டிராத வட சென்னையில் உள்ள நான் பார்ப்பது அறிந்தால் நிச்சயம் மகிழ்ச்சியும் ஆச்சரியமும்தான் கொள்வார். கள்ள நகல்களின் மூலமாகவாவது நம் சமூகத்தின் சினிமா ரசனை சிறிதாவது மாறினால் அது நம் சூழலுக்கு நல்லதே. அதிலுள்ள வணிக இழப்பு நிச்சயம் அதை விட குறைவே.

()

சுமார் இரண்டு மணி நேரம் எவ்வித தடங்கலும் இடையூறுகளுமின்றி எஸ்.ரா பேசினார். நூற்றுக்கணக்கான சிறந்த இயக்குநர்கள் இருந்தாலும் தான் பேச தேர்ந்தெடுத்தி்ருக்கும் ஏழு சினிமா கலை ஆளுமைகள் குறித்தான காரணத்துடன் துவக்கினார். இந்திய சினிமா நூறு ஆண்டுகளை கொண்டாடப் போகும் இந்தக்க கட்டத்தில், காலத்தை கடந்து நிற்கும், எப்போதும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை பதிவு செய்திருக்கும் சினிமா பேராசான்களை தன்னுடைய ரசனை அடிப்படையில் தேர்ந்தெடுத்ததைப் பற்றி விளக்கினார்.

பின்பு ஆரம்பித்தது அகிராவுடனான பயணம்.

பூஞ்சையான சிறுவனான அகிராவின் இளமைப்பருவம், ஓவிய ஆர்வம், ஜப்பானிய சினிமாவின் தோற்றம், அகிரா சினிமாவில் நுழையும் போது இருந்த பிரபல ஜப்பானிய இயக்குநர்கள்..Yasujirō Ozu, Kenji Mizoguchi, அகிராவின் குருநாதர் Kajirō Yamamoto, தொடர்ந்து 17 படங்களுக்கு இவரிடம் உதவியாளராக இருந்து கற்ற பயணம், அகிரா சினிமா உத்திகள், படமெடுக்கும் விதம், முக்கியமான ஷாட்கள், அகிராவின் படங்களில் உள்ள தத்துவம், ரஷோமான், செவன் சாமுராய், மதோதயா போன்ற திரைப்படங்களில் உள்ள அடிப்படையான விஷயங்கள், அகிராவின் தோல்வி, தற்கொலை முயற்சி, ஹாலிவுட் இயக்குநர்களின் வரவேற்பில் மீண்டு வந்த கதை, அவர் எழுதிய சுயசரிதம் (இதைப் பற்றி இங்கு எழுதியிருக்கிறேன்) போன்றவற்றைப் பற்றி எஸ்.ரா ஆற்றிய உரை உன்னதமானது. அதைக் கேட்டுதான் அதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.

ஜப்பானிய சினிமாக்களும் அகிராவின் படங்களைப் பார்த்த நினைவுகளும் என் மூளையில் நிரம்பி வழிந்தன. எஸ்.ரா என்னும் டிராகுலா என்னைக் கடித்து வைத்ததின் பயன் உடனே தெரிந்தது. சுரம் வந்தவன் போல் திரும்பி வந்தேன். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில் அகிரா படங்களின் சில காட்சிகளை தேர்ந்தெடுத்து பார்ப்பதின் மூலம்தான் ஒரளவிற்காவது அந்த சுரத்திலிருந்து வெளிவர முடியும். 
imagecourtesy: 
https://www.facebook.com/media/set/?set=a.562891600403422.147573.100000477613498&type=1

suresh kannan

18 comments:

  1. After reading this, I'm pushed to watch Akira's movies again :)

    ReplyDelete
  2. மிக சிறப்பான எழுத்துநடை.

    ReplyDelete
  3. //கள்ள நகல்களின் மூலமாகவாவது நம் சமூகத்தின் சினிமா ரசனை சிறிதாவது மாறினால் அது நம் சூழலுக்கு நல்லதே. அதிலுள்ள வணிக இழப்பு நிச்சயம் அதை விட குறைவே. // உண்மை..

    http://screencast.com/t/7AMbzUAmc - எனது கணிப்பு சரியா?

    ReplyDelete
  4. டிராகுலா தலைப்பைப் பார்த்து என்னவோ நினைத்தேன். ஆனால் படித்ததும் தான் அர்த்தம் புரிந்தது.

    நன்றி. பாராட்டுகள். வாழ்த்துகள்

    ReplyDelete
  5. //எந்தவொரு உண்மையான கலைஞனும் வணிகக் காரணங்களைத் தாண்டி தமமுடைய படைப்புகள் உலகெங்கிலும் பரவலாக சென்று சேர வேண்டும் என்றுதான் விரும்புவான்//

    தெரிஞ்சு சொன்னிங்களோ தெரியாம சொன்னிங்களோ ஆனா நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.

    https://www.youtube.com/watch?v=gXw07PgDdgA

    இங்க இவர் சொல்றதும் அதுதான். லிங்க் ல சப்டைட்டில் வரல். ஆனா அவர் சொன்னது இதுதான் why i seed this movie. எல்லாரும் இதை டவுன்லோட் பண்ணியாச்சும் பாக்கணும். மற்றவங்களுக்கும் பரிந்துரைக்கனும்னு படத்தை எடுத்த இயக்குனரே சொல்றார். எவ்வளவோ நல்ல கதை சொல்லியாக இருந்தாலும் சுதந்திரமா படம் எடுக்க முடியாத சூழல் அங்க. இங்க முழு சுதந்திரம் இருந்தும் நல்ல படம் எடுக்க முடியாத சூழல்.

    பவா வீட்ல வெச்சி இயக்குனர் ஜன நாதனும் இதைத்தான் சொன்னார். சார் உங்க படத்தை தியேட்டர் ல பாக்கல வீட்ல டிவிடி லதான் பாத்தேன்னு ஒருத்தர் சொன்னார். அவர் அதுக்கு சிரிச்சிகிட்டே பாத்ததுக்கு நன்றி சொன்னார். இன்னும் நாலு பேருக்காச்சும் போட்டு காட்டுங்கன்னு,

    ReplyDelete
  6. அருமையான தொகுப்பு!

    ReplyDelete
  7. குமார்December 05, 2012

    நன்றிங்க...

    எஸ்.ராவின் சிறுகதைகளும் கட்டுரைகளும் விரும்பி படித்ததுண்டு.. மிக பயனுள்ளதக இருக்கும்.

    உலக படங்கள், பழைய படங்கள் குறித்தும் நிறைய எழுதவும்/பேசவும் செய்கிறார். ஆனால் தற்காலிக தமிழ் சினிமாவை குறித்து அவர் ஏன் எழுதுவதில்லை என்ற கேள்வி இருக்கிறது.

    ReplyDelete
  8. மூன்றாவது வரிசையில் இடமிருந்து மூன்றாவது நபர் ! சரியா?---காஸ்யபன்.

    ReplyDelete
  9. சென்னைக்கு வெளியே வசிக்கும் என்னை போன்றோருக்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளது.
    தொடர்ந்து ஏழு நாட்களில் எஸ் ரா நடத்தும் உரையின் சுருக்கத்தை எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  10. Dear suresh kannan
    nice write-up. good flow of language. regularly following your blog especially for world cinemas.
    where was the meeting held and when. i do not know. somehow i missed it ( in reality ) but your write up salvages at least to a certain level. Thanks.
    will try to see you in the upcoming chennai international film festival.(last year i missed you) you can write an artcile on that too. (dec 13 to dec 20) regn open for Rs.500 + 1 photo (for all films) more details on www.chennaifilmfest.com

    anbudan
    sundar g rasanai chennai

    ReplyDelete
  11. சினிமா ரசனையை பள்ளிக் கல்வித்திட்டத்தில் சேர்த்தல் என்ன படங்கள் இடம் பிடிக்கும்?

    அம்மா ஆட்சியில்:
    1. ஆயிரத்தில் ஒருவன்
    2. அடிமைப்பெண்

    அய்யா ஆட்சியில்:
    1. பராசக்தி
    2. இளைஞன்
    3. பொன்னர் சங்கர்

    இதெல்லாம் தேவையா?

    ReplyDelete

  12. இப்பவும் கேட்கிறேன்... வார்த்தைகளை எங்கிருந்து பிடிக்கிறீர்கள்? :)

    அந்த புகைப்படத்தில் இருக்கிறீர்களா எனத் தெரியவில்லை ஆனால் எங்கள் இதயத்தில் இருக்கிறீர்கள் சுரேஷ்ஜீ :)

    ReplyDelete
  13. superb view. Title is nice.S.Ramakrishnan has a very deep knowledge about Ilakiyam, payana katturai and movies. Juz read "malaikal saptamiduvathu ellai" his book is too good.

    ReplyDelete
  14. எனக்கென்னவோ அவர் பேசியதை விட நீங்கள் எழுதியது பெட்டர்.:)

    ReplyDelete
  15. இரண்டு கேமிரா ஸ்டேன்டு ஏற்படுத்தும் முக்கோணத்திற்கு நடுவில் சற்று தலையைக் குனிந்தவாறு உள்ளீர்கள் ;)

    ReplyDelete
  16. ஒலி/ஒளிப்பதிவு செய்த இணைப்பு ஏதேனும் இருந்தால் குறிப்பிடவும்.

    ReplyDelete
  17. ஒலி/ஒளிப்பதிவு செய்த இணைப்பு ஏதேனும் இருந்தால் குறிப்பிடவும். சமீபத்தில் இட்லிவடையில் ஞானியின் பெட்டி போல ஒரு ஒளிப்பதிவு கிடைத்தால் என்னைப்போல தொலைதூர வாசகர்களுக்கு நன்றாக இருக்கும்.

    ReplyDelete