Tuesday, April 26, 2011

இயக்குநர் பாலாவும் பழுப்பு டை கிளிஷேவும்

 "ஏம்ப்பா இந்தாளை கூட்டினு போயி லேசா முடி இருக்கற மாதிரி செரச்சி்ட்டு பழுப்பு கலர் டை அடிச்சிடு.. அப்படியே அங்க ஆறு மாசமா தோய்க்காம வெச்சிருக்கறம்ல.. அந்த டிரஸ்ஸை போட்டு விட்டுடு...ரெண்டு மூணு மாசத்துக்கு குளிக்காதப்பா...என்ன...பல்லெல்லாம் கறை படிஞ்சிருக்கணும். கண்ணு ஒன்றரையா இருந்தா நல்லது. சுத்தமா தெரியலைன்னா இன்னும் நல்லது. எப்பவும் முரட்டுத்தனமா உர்- ருன்னு இருக்க பழகிக்க. ஆறு மாசத்துக்கு தலைகீழா நின்னு பழகு. யாருட்டயும் பேசாதே.. என்ன..

யாரும்மா ஹீரோயினா... ஏம்மா.. பாண்ட்ஸ் பவுடர் போட்டிருக்கே... மொதல்ல அழி. வெத்தலை பாக்கு போட்டுப் பழகிக்க, தலைமுடியெல்லாம் கலைஞ்சு கந்தர் கோலமா இருக்கணும். கால்மேல கால் போட்டு இங்கிலீஷ்ல இண்டர்வியூல்லாம் கொடுத்தா பிச்சுடுவேன். அவார்டு வாங்கணும்னு ஆசையிருக்கா இல்லையா? கதையைப் பத்தி மூச்சு விடக்கூடாது? யாருப்பா அங்க, ஒரு நூறு பேரு கை,கால் சரியில்லாதவங்க, பிச்சைக்காரங்கல்லாம் வேணும்னு கேட்டனே, என்னய்யா செஞ்சிட்டு இருக்கீங்க?... &*(^%$&


()

மேற்கண்ட உரையாடல் ஒரு நகைச்சுவையான கற்பனைதான் என்றாலும் இயக்குநர் பாலாவின் கதைகளும் மாந்தர்களும் தொடர்ந்து ஏன் ஒரே மாதிரியான வார்ப்பில் இருக்கிறார்கள் என்று யோசிக்கிறேன். தமிழ் சினிமாவில் யதார்த்தமான சித்தரிப்பு என்பதே அபூர்வமானது என்பதும் மாறாக எல்லாமே அதிலிருந்து விலகி போலித்தனமான அழகியல்தன்மையைப் தொடர்ந்து போற்றிப் பார்ப்பது தமிழ் சினிமாவிற்கு உரித்தான அபத்தங்களில் ஒன்று என்பதும் நமக்கு நன்றாகத் தெரியும். செத்து பிணமாய்க் கிடக்கும் காட்சியிலும் மருத்துவமனையில் ஆறு மாதமாய் படுத்துக் கிடக்கும் காட்சியிலும் தூங்கி எழுந்த காலை கொட்டாவியிலும் கூட பிளாஸ்டிக் 'ஒப்பனை'யை கை விடாத விநோத உலகம். ரிக்ஷாக்காரனாய், பிச்சைக்காரனாய் இருந்தாலும் ரீபோக் ஷூ போட்டிருக்கும் அதிசயம் அங்குதான் நடக்கும்.

செட்டுக்களிலிருந்து வெளிவந்து அசல் கிராமத்தை காண்பித்தவர் என்று பாரதிராஜாவின் மீது பொதுவான சிலாகிப்பு உண்டு. ஆனால் அவர் கூட அசலான கிராமத்தைக் காண்பிக்க வில்லையோ என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது. பச்சை பசேலென்றே வயல்களில் வண்ணத்துப்பூச்சிகள் படபடக்க, தாமரை நீர்க்குளங்களில், வேறு வேலை வெட்டியில்லாத காதலர்கள் 'தம்தனதம்தன' என்று தொடர்ந்து காதல் செய்துக் கொண்டிருப்பதும் அவர்களை தீவெட்டிகளை தூக்கி துரத்தி வரும் கிராமத்துக் காட்டான்களும். என்பதைத் தவிர பாரதி என்ன யதார்த்தமாக கிராமத்தை சித்தரித்து விட்டார் என்ற கேள்வி எழுகிறது? நகரத்தில் பிற்ந்த சத்யஜித்ரேவின் 'பதேர் பாஞ்சாலி'க்கு நிகரான ஒரு காட்சியைக் கூட கிராமத்தில் பிறந்த பாரதியின் திரைப்படங்களில் காணக் கிடைக்கவில்லை.

இந்த மிகையான அழகியல் சூழலில் பாலா முன்வைத்த அசலான மனநோயாளி தோற்றமுடைய 'சேதுவும்" 'முரட்டு இளைஞனான 'நந்தாவும்" பிதாமகன் சித்தனும்  (தோற்றத்தில் மாத்திரம். - பாத்திர சித்தரிப்பில் ஒப்புதல் இல்லை) ஒரளவிற்கு ஆறுதலளித்தனர் என்பதை மறுக்க முடியாது. "இப்ப வர்ற ஹீரோங்கள்லாம் ஏன் அழுக்கா இருக்காங்க. குளிச்சுட்டு வர்றச் சொல்லுங்க'" என்றார் சுஹாசினி, ஓரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில். 'கோபுரங்கள் சாய்வதி்ல்லை' படம் பூராவும் இது போன்ற தோற்றத்தில் நடித்தவரும் உலக சினிமா பார்வையாளருமான சுஹாசினி, இத்தனை அரைகுறைப் புரிதலுடன் பேசியது எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் எப்போதுமே அவர் அப்படித்தான் பேசுவார் என்பது அவர் நடத்தும் சினிமா விமர்சன நிகழ்ச்சியை பார்த்த பின்பு புரிந்தது. அவர் அவ்வாறு பேசியது அவரது மேட்டுக்குடி மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது என்று எழுந்த விமர்சனத்தில் சிறிது உண்மை இருக்கலாம்.

விளிம்புநிலை மனிதர்களை பிரேமின் ஓரத்தில் சில நொடிகளுக்கு மேல் காட்டாத, பொதுப்புத்தியில் படிந்துள்ள அதே சிந்தனைகளுக்குத் தப்பாமல் திரையிலும் சித்தரிக்கிற (வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டாண்டா) தமிழ் சினிமாவின் மத்தியில் பாலா செய்து வரும் இந்த நுட்பமான புரட்சி ஒருவகையான ஆறுதலைத் தந்தது நிஜம்தான்.

ஆனால் ஏன் அவர் இதையே தனது டெம்ப்ளேட்டாக ஆக்கிக் கொண்டு தொடர்ந்து தனது திரைப்படங்களின் கதையையும் மாந்தர்களையும் ஒரே மாதிரியாக படைத்துக் கொண்டிருக்கிறார் என்கிற சலிப்பு 'அவன் இவன்' புகைப்படங்களை பார்க்கும் போது இயல்பாக ஏற்படுகிறது. இந்த கிம்மிக்ஸில் பாலாவை மாட்டிக் கொள்ளச் செய்தது எதுவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். 'வித்தியாசமான இயக்குநர்' என்று வந்து விட்ட பெருமையா, 'நான் பாலா படங்களின் ரசிகன்' என்று மணிரத்னமே புகழ்வதில் ஏற்பட்ட கிறுகிறுப்பா, வழக்கமான இயந்திர வாழ்க்கையில் சலிப்புற்றிருக்கும் நடுத்தர வர்க்க பார்வையாளர்களுக்கு பாம்பு - கீரிச் சண்டை மாதிரி அவர்களின் வாழ்க்கையில் அபூர்வமாக சந்திக்கிற அல்லது சந்தித்தே இருக்காத அல்லது சந்திக்க விரும்பாத சூழலை, மனிதர்களைக் காட்டி மிரட்சியை ஏற்படுத்துவதா?

இயக்குநர் கே.பாலச்சந்தர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்திருந்தாலும் 'நடுத்தர வர்க்க' மனிதர்களையே தொடர்ந்து தேர்ந்தெடுத்து அதையொட்டியே காட்சிகளை அமைத்து ஒருவகையான கிளிஷேவில் மாட்டி பின்பு நீர்த்துப் போனார். 'கிராமத்தை அசலாக காட்டினவர்' என்று சிலாகிக்கப்பட்ட பாரதிராஜாவே சடக்கென்று மாறி அதே 'சப்பாணியை' 'நகரப் பின்னணயில்' சிகப்பு ரோஜாக்களாக, சைக்காலிஜிக்கல் திரில்லர் படங்களுக்கே உரிய படிமங்களுடன் எடுத்து ஆச்சரியப்படுத்தினார். இன்றும் நான் வியக்கும் விஷயம் அது. வெவ்வேறு வகையான சூழலை, மனிதர்களை, நிகழ்வுகளை வெவ்வேறு பின்னணியில் அசலாக சித்தரிக்க பாவனை செய்வதே ஒரு திரைஇயக்குனனின் முன்னுள்ள சவால். 'ஆர்ட் பிலிம்' என்றழைக்கப்படும் படங்களே ஒரே மாதிரியாக போராத்தாகத்தான் இருக்கும் என்று பொதுப் பார்வையார்களிடம் படிந்து போயிருக்கின்ற எண்ணங்களிடமிருந்து சத்யஜித்ரே படங்களும் தப்ப முடியவில்லை. ரேவின் படங்களை பார்த்திருக்காதவர்கள்தான் இந்த குற்ற்ச்சாட்டை சொல்ல முடியும். அகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான படங்கள், திரில்லர் படங்கள், குழந்தைகள் படங்கள், சமூகப் பிரச்சினையை ஆராயும் படங்கள் என்று பல்வேறு வகைமைகளில் அவர் முயற்சி செய்திருக்கிறார் என்பது அவரது படங்களை பார்த்திருந்தவர்களுக்கு தெரியும். இயக்குநர் என்பதைத் தாண்டி, ஓவியர், பத்திரிகையாளர், எழுத்தாளர் என்று பன்முகப்பட்ட ஆளுமை கொண்டவர் என்பதால் இது சாத்தியமாகியிருக்கலாம்.

தனது குருகுலத்திலிருந்து வெளிவந்தவர்கள், பெரும்பாலும் தனது குரு இயக்குநர்கள் எடுத்த அதே பாணியிலேயே தங்களின் படங்களையும் உருவாக்குவது பொதுவான வழக்கம், தமிழில் பாரதிராஜா பள்ளி, பாலச்சந்தர் பள்ளி என்று முன்உதாரணங்கள் பல உண்டு. ஷங்கர் வித்தியாசமான இயக்குநர் என்று பொதுவாக அறியப்பட்டாலும் தனது குருவான எஸ்.ஏ. சந்திரசேகர் எடுத்திருந்த 'ராபின்ஹூட்' வகைப்படங்களையே இன்னும் பிரம்மாண்ட மசாலாவாக, பல்வேறு சுவாரசிய மாய்மாலங்களுடன் எடுப்பவர் என்பதை சற்று உன்னிப்பாக கவனித்தாலே புரிந்து கொள்ள முடியும். (பாய்ஸ் விதிவிலக்கு). ஹாலிவுட் ஷங்கரான ஸ்பீல்பெர்க்கால் கூட தி கலர் பர்ப்புல், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் போன்ற ஆப்-பீட் படங்களை எடுக்க முடிந்தது. ஆனால் இன்னமும் ஷங்கரால் தனது முதல் எளிய முயற்சியான 'மயிலை' திரையில் கொண்டு வர முடியாதபடியான வணிக கிளிஷே வட்டத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் பாலுமகேந்திரா பள்ளியிலிருந்து வெளிவந்திருந்தாலும் பாலாவால் தன்னுடைய குருவின் பாணியிலிருந்து எளிதில் வெளிவந்து தனக்கென பிரத்யேகமான ஒரு பாணியை உருவாக்க முடிந்தது. ஆனால், வித்தியாச மேக்கப்பில்தான் செய்தால் கமல்படம் என்று கமல் ஒருவகையான கிளிஷேவில் மாட்டிக் கொண்டிருப்பது போல, அழுக்கான, கோரமான மனிதர்களை மையமாக வைத்து எடுப்பதுதான் பாலாவின் பாணி என்கிற வட்டத்தில் பாலாவும் மாட்டிக் கொண்டு விட்டாரோ என்று தோன்றுகிறது.

அவரின் சமீபத்திய படமான 'அவன் இவன்' திரைப்பட ஸ்டில்களை பார்க்கும் போது இவ்வாறான எண்ணம் எழுவதைத் தடுக்க முடியவில்லை. படம் வெளிவரும் முன்னரே அதைப் பற்றிய விமர்சனமா?... என்று சிலர் முணுமுணுக்கலாம். ஆனால் கவனியுங்கள். நான் படத்தின் கதையைப் பற்றி எதுவும் பேசவில்லை. 'நகைச்சுவைப் படம்' என்பதைத் தாண்டி அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவ்வாறான படத்தையும் தன்னுடைய முந்தைய படங்களின் சாயல்களில் உள்ள மனிதர்களை வைத்து உருவாக்கி, தன் பாணி படம் என்கிற கிளிஷேவில் பாலாவும் மாட்டிக் கொள்ள வேண்டுமா என்பதே எனக்குத் தோன்றும் சங்கடமான கேள்வி. பாலாவின் படங்களின் மீது சில பல விமர்சனங்கள் இருந்தாலும், நுண்ணுணர்வுமிக்க நுட்பமான காட்சிகளை உருவாக்கி இயக்குநரின் இருப்பை வலுவாக நிலைநாட்டும் கூறுகள் அவர் படத்தில் உண்டு. எனவேதான் பிரத்யேகமாக பாலாவைக் குறித்து இவ்வாறு கவலைப்படுகிறேன்.

என் கவலை தேவையற்றது என்கிற சாத்தியத்தை 'அவன் இவன்' திரைப்படத்தின் உள்ளடக்கம் ஏற்படுத்துகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 suresh kannan

21 comments:

  1. வழக்கமா எல்லா இயக்குனர்களும் ஒரே மாதிரி நடிகர்களை காண்பிக்கும் பொழுது ஏன் உங்களுக்கு இந்த கேள்வி வரலை...

    உங்களுக்குள்ளும் ஒரு சுகாசினி இருக்காங்க..என்ன அவங்களோட பொறுமை எல்லாம் திரை சுகாசினியயை விட கொஞ்சம் மிகுதியாக இருக்கிறது :-)))

    ReplyDelete
  2. @TBCD

    ராமநாராயணன் விலங்குகளை வைத்தே படம் எடுக்கும்போது ஏன் உங்களுக்கு இந்த கேள்வி வரைலைன்னு தயவு செய்து கேட்டுடாதீங்க...

    ReplyDelete
  3. மயில் -- அழகிய குயிலே

    "பாட்டு எழுதியே புகழ் பெறுவார் பலர். சிலர் .................."

    ReplyDelete
  4. நல்ல கேள்வி சுரேஷ். பாலாவின் கதாபாத்திரங்களின் மூர்க்கத்துக்கு சரியான பின்னணி எதுவும் அவர் சொன்னதில்லை. பிதாமகன் உட்பட. சுடுகாட்டிலேயே வாழும் சித்தனுக்கு மொட்டை அடிப்பது ஷேவிங் பண்ணுவது தெரியாதா என்ன? ஒரு பாடல் காட்சியில் முடிதிருத்தும் கலைஞர் கத்தியை காட்டியதும் தள்ளிவிட்டு ஓடுவது என்ன லாஜிக்கோ? அதே போல் தனது எல்லா படங்களிலும் இயல்புக்கு மீறிய 'இயல்பையே' பாலா முன்னிறுத்துவது விமர்சனத்துக்குரியதே. இந்த படம் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் படத்தின் ஸ்டில் பார்க்கும்போது எனக்கு தோன்றிய அதே கேள்வி தான் நீங்களும் கேட்டிருக்கிறீர்கள். (அங்கெ சுத்தி இங்கெ சுத்தி பாலாவையே அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா ன்னு மக்கள் கேக்கப்போறாங்க..!)

    ReplyDelete
  5. சுரேஷ்,

    உங்கள் தமிழே வித்தியாசமாக இருக்கிறது. இதை இவ்வளவு இறுக்கமான தமிழில் எழுத வேண்டுமா என்ன?
    சாதாரண தமிழ் உங்களுக்கு வருமா? வராதா?

    ReplyDelete
  6. unakku periya medhaavinu ninaippu.padathai parkkamaleye vimarsanam panradham!!!

    ReplyDelete
  7. ஹாலிவுட் சங்கர் = ஸ்டீபன் ஸ்பில்பர்க்....! என்னக் கொடும சுரேஷ் கண்ணன் ! ஹிட்டு வாங்க எதையாவது எழுதுவதா...? படம் வந்தப்பிறகு பிரிச்சி மேஞ்சாப் பரவாஇல்லை. சாருவின் சிஷியனா நீங்க? நல்லத கெட்டதுன்னு சொல்லுறது.... கெட்டத நல்லதுன்னு சொல்லுறது!

    ReplyDelete
  8. நல்ல பதிவு நன்றி :)

    ReplyDelete
  9. //டம் வெளிவரும் முன்னரே அதைப் பற்றிய விமர்சனமா?... என்று சிலர் முணுமுணுக்கலாம்.//

    அந்த சிலரில் நானும் ஒருவன் :) அழுக்கான மனிதர்களின் கொண்ட க்ளிஷேக்களில் மாட்டிக்கொள்கிறார் என்பது சரியான கருத்துதான் என்றாலும் கதைக்களம்,திரைக்கதை என்பவை வித்தியாசப்படுகிறது.
    காதல், தாலி, தங்கச்சி, அம்மா என்ற கருவை வைத்து லட்சப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
    அதுபோல அழுக்கான மனிதர்களை வைத்தும் லட்சப்பபடஙகள் கொடுக்கமுடியும். அதை கொடுக்கப்படுவிதம்தான் முக்கியமானது. பாலா அதில் ஏமாற்றமாட்டார் என் நம்புகிறேன்.

    காட்பாதர் படத்தின் தாக்கத்தில் நாயகன் என்ற வெற்றிப்படமும் வந்தது, அமரன் என்ற அட்டர்பிளாப் படமும் வந்தது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்திதுகிறேன்...அவுட்புட் மட்டுமே முக்கியம் சுரேஷ் ஜி...

    ReplyDelete
  10. Please do not criticize Director Bala as he is trying to show realism. Thanks.Ben

    ReplyDelete
  11. இல்ல தெரியாம தான் கேக்குறேன் நீ என்ன அவ்வளோ பெரிய அப்பாடக்கரா!!!

    ReplyDelete
  12. இரண்டு அப்ஜெக்‌ஷன்....மதுரைக்காரரான பாலாவை மெட்ராஸ் பாஷை பேச வைத்திருப்பது அடுத்தது ஹாலிவுட் சங்கர் கொடுமை!

    ஸ்பீல்பெர்க்கின் ஸேவிங் த பிரைவேட் ரயான், ம்யூனிக், அமிஸ்டாட், காச் மி இப் யு கான்...ஏன் இ.டி, ரைடர்ஸ் ஆப் த லாஸ்ட் ஆர்க் இன்ன பிற படங்களும்...

    நகைச்சுவைக்கும் ஒரு அளவு உண்டு!

    ReplyDelete
  13. உங்களை மாதிரி ஒரு பதிவாவது நான் எழுதிட்டா போதும்!

    ReplyDelete
  14. இரண்டு வரியிலே சொல்ல வேண்டியதை இரண்டாயிரம் வார்த்தைகள் உபயோகித்து நீங்கள் சொல்வதில்லையா, அதே போல பாலாவுக்கு ஒரு பாணி இருந்துட்டு போகட்டுமே ,உங்களுக்கு என்ன நஷ்டம்?

    கதிர்

    ReplyDelete
  15. ஏம்ப்பா இந்தாளை கூட்டினு போயி லேசா முடி இருக்கற மாதிரி செரச்சி்ட்டு பழுப்பு கலர் டை அடிச்சிடு.. அப்படியே அங்க ஆறு மாசமா தோய்க்காம வெச்சிருக்கறம்ல.. அந்த டிரஸ்ஸை போட்டு விட்டுடு...ரெண்டு மூணு மாசத்துக்கு குளிக்காதப்பா...என்ன...பல்லெல்லாம் கறை படிஞ்சிருக்கணும். கண்ணு ஒன்றரையா இருந்தா நல்லது. சுத்தமா தெரியலைன்னா இன்னும் நல்லது. எப்பவும் முரட்டுத்தனமா உர்- ருன்னு இருக்க பழகிக்க. ஆறு மாசத்துக்கு தலைகீழா நின்னு பழகு. யாருட்டயும் பேசாதே.. என்ன..////


    ஹா ஹா ஹா முடியல செம

    ReplyDelete
  16. இதனையும் தவிர்த்து.. இவருடைய ஹீரோக்கள் யாரையும் தூக்கிபோட்டு மிதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.. அதுதான் மிகவும் கவலையளிக்கறது...

    சுஹாசினி போன்றவர்கள் தான் நமக்கு சகிப்புதன்மையை போற்றி வளர்க்கிறார்கள்.. :)
    (இல்லன்னா இருக்கவே இருக்குது ரிமோட்டு)

    Chandramohan..அவதானிப்பும் :)

    ReplyDelete
  17. ஒரு ஸ்டீரியோடைப்புக்குள் சிக்காமல் மாறுபட்ட கதைக்களன்களையும் கதாபாத்திரங்களையும் கையாள்வதில் கில்லியான இரு சமகால இந்திய இயக்குனர்கள் அனுராக் கஷ்யப் மற்றும் விஷால் பரத்வாஜ்..

    ReplyDelete
  18. seetha cookemane gopalakrishnaMay 03, 2011

    நான் ஒரு மன நல மருத்துவர். எனக்கு தமிழ் படங்களில் மன நலம் பிறழ்ந்தவர்களை காட்ட்ட்வது எதுவும் இயல்பாக இலை.பிதாமகன் படத்த்தை தற்ச்செயலாக பார்த்தேன். எதர்க்கு இப்படம் இவ்வளவு பேசப்பட்டது என்றே தோன்ரியது.என்னால் எம்.ஜி.ஆர் படங்களை ரசிக்க முடிந்த அளவு கே.பாலச்சந்தர் ,பாலா, மணிரத்தனம் போன்றோரின் pretentious படங்களைபார்க்கும் பொறுமை இல்லை. ஜனரஞகமான மலையாள படங்கள் கூட இன்றைகு ஆண் பெண் உறவை ஓரளவு நன்றாகவே கைய்யாளுகிரார்கள்.உதாரணம்:Ivar Vivahitharayal .எல்லாவிதமான சினிம்மாத்தனங்கள் இருந்தாலும் ஆண் -பெண் ஈகோ மற்றும் பெண்களின் தேவைகளை ரசிக்குமாறு சொல்லியவிதம் பிடித்திருந்தது.

    திரு .சந்ற்ற மோகன் கூறுவது ரொம்பவும் உண்மை.

    விக்ரமின், தெய்வ திருமக்னைப்பற்றி கேட்ட்கும்போதே எனக்கு அலர்ஜியாக உள்ளது.

    ReplyDelete
  19. கவிதைக்குப் பொய்யழகு!

    கலையுலகில் ஒரு கலைஞன் தான் படைக்கும் பாத்திரங்கள் மிகை அழகாகவோ, மிகை அழுக்காகவோ இருக்குமாறு பார்த்துக்கொள்வதில் விமர்சிக்க ஒன்றுமில்லை.

    இது ரசனை சார்ந்த விஷயம். உங்களுக்கு இது பிடிக்கவில்லை என எடுத்துக்கொள்ளலாம். எல்லோருக்கும் இது பிடிக்காமல் போகவேண்டும் என எதிர்பார்ப்பது தவறு.

    இதுவும் உங்களுக்குச் சொல்லவில்லை. பொதுவாக சொல்கிறேன்.

    ReplyDelete
  20. என்ன இருந்தாலும் வெறும்போஸ்ட்டரை பார்த்தே கதை சொல்லும் உங்கள் விமர்சன உத்தி அநியாயம் - போனமாத கமண்ட்.

    சுனா கானா சொன்னது சரியாப்போச்சே - இந்த மாதம் .

    ReplyDelete