Wednesday, September 09, 2009

பெரியார் திரைப்படத்திற்கு விருதா?.. அநியாயம்


2007 திரைப்படங்களுக்கான 55வது தேசியவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுப்பட்டியலின் கூடவே சர்ச்சைகளும் இருப்பது இயல்பான மரபு. தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான போட்டியில் ஷாரூக்கான் (chakde), அமீர்கான் (Taare zameen par), பிரகாஷ்ராஜ் (Kanchivaram) ஆகியோர் இறுதிக் கட்டத் தேர்வில் இருந்தார்கள் என்று கேள்விப்பட்டேன். இதில் ஷாரூக்கானுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் இடையில் போட்டி கடுமையாக இருந்ததாக தெரிகிறது. பிரகாஷ் சிறந்த நடிகர் விருதிற்கு முழுமையான தகுதியுடையவர் என்பதில் யாருக்கும் குறிப்பாக தென்னியந்தியர்கள் பெரும்பான்மையோருக்கு மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்திவாலாக்கள் இந்த முடிவு குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று அறிய விரும்புகிறேன். இந்த முறை அதிர்ஷ்டக்காற்று பெரும்பான்மையான தென்னிந்தியப் படங்களின் மீது வீசிற்று.

ஆனால் சிறந்த நடிகருக்கான தேர்வை வாக்களிக்கும் சந்தர்ப்பம் எனக்கு அளிக்கப்பட்டிருந்தால் (அடங்குடா!) மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு நான் நிச்சயம் ஷாருக்கையே தேர்ந்தெடுத்திருப்பேன். ஏனெனில் 'சக்தே'வில் அவருடைய நடிப்பு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. என்னைப் பொருத்த வரை இயல்பான நடிப்பு என்பது தம்முடைய வயதிற்கு,உடலிற்கு மாறாக ஒப்பனையை அணிந்து குலுங்கி குலுங்கி அழுவதல்ல. பாத்திரத்திற்கு ஏற்ப எந்த கோணங்கித்தனமுமில்லாத இயல்பான ஒப்பனையுடன் யதார்த்தமாக எதிர்வினையாற்றுவது. அது வங்கி அதிகாரியோ அல்லது சாராயம் காய்ச்சுபவனோ, அந்தப் பாத்திரம் ஏற்றிருந்தால் பார்வையாளன் அவரின் பாத்திரத்தை நிஜமென்று நம்புமளவிற்கு அவரின் உடல்மொழியும் நடிப்பும் இருக்க வேண்டும். ரிக்ஷாக்காரன் பாத்திரத்திற்கு கான்வாஸ் ஷ¥ போட்டு நடிப்பதல்ல. அவ்வாறு இயல்பாக நடிப்பவர்களில் உதாரணம் சொல்ல யோசிக்கும் போது சட்டென்று ஒருவர் நினைவுக்கு வருகிறார். மம்முட்டி. தன்னுடைய மதம் காரணமாக மக்களால் புறக்கணிக்கப்பட்ட வலியும் அதைக் கடந்துவர வேண்டுமென்கிற முயற்சிகளின் வெறியும் ஷாரூக்கானின் யதார்த்தமான தோற்றத்தில், நடிப்பில் (சக்தே) மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். எனவேதான் பிரகாஷ்ராஜை விட சில சொற்ப புள்ளிகளில் ஷாரூக் வெல்கிறார் என்பது என் தனிப்பட்ட அனுமானம். ஆனால் சக்தே சிறந்த பொழுதுபோக்குப் பட பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. கொடுமை. சிறந்த திரைப்படமாக 'காஞ்சிவரம்' தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிதது எனக்கு மகிழ்ச்சியே.

அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு (நாலு பெண்கள்) சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது குறித்து அறிய மகிழ்ச்சி. படம் வந்த சமயத்தில் இணையத்தில் வெளிவந்த ஆரோக்கியமான பதிவுகள் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டின. ஆனால் இதை இன்னும் பார்க்கவில்லை என்பதால் இந்தத் தேர்வு குறித்து தீர்மானமாக எதையும் சொல்ல இயலில்லை. சிறந்த நடிகை விருது பெற்ற உமாஸ்ரீயின் 'குலாபி டாக்கிஸ¥ம்' (கன்னடம்) அவ்வாறே. சிறந்த பெண் துணை நடிகருக்கான விருது shefali shah-க்கு (The last lear) கிடைத்திருப்பது மிகப் பொருத்தமே. நடிகரான தன் கணவனுக்கு பணிவிடை செய்ய வேண்டிய சலிப்பும் கணவரின் கூட நடிக்கும் நடிகையான ப்ரீத்தி ஜிந்தாவிடம் தம்முடைய கோபத்தை வெளிப்படுத்த இயலாமல் பணிப்பெண்ணிடம் காண்பிக்கும் இயல்பானதொரு இந்திய குடும்பத் தலைவியாக நன்றாக நடித்திருந்தார். (இவர் கஸ்தூரிபாயாக Gandhi my father-படத்திலும் நடித்திருந்தார்).

சிறந்த திரைக்கதை விருது, சிறப்பு நடுவர் விருது, சிறந்த துணை நடிகர் விருது போன்றவைகளைக் குவித்த Gandhi my father-ம் முக்கியமான திரைப்படம். பெரும்பாலும் அறியப்படாத ஹரிலால் காந்தியின் வாழ்க்கையை சிறப்பாக வெளிக்கொணர்ந்தது அந்தத் திரைப்படம். இதில் காந்தியாக சிறப்பாக நடித்த darshan zariwala-க்கு சிறந்த துணை நடிகர் கிடைத்தும் பொருத்தமே.
()

மாநில மொழிப் பிரிவில் சிறந்த படமாக 'பெரியார்' தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் அரசியற் காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என்று அறியேன். ஏனெனில் தமிழ் மக்களிடையே மட்டுமல்லாது இந்தியா முழுக்க திரைப்படத்தின் மூலமாக சிறப்பாக அறிமுகப்படுத்தியிருக்க வேண்டிய பெரியார் என்னும் முக்கியமான ஆளுமையை மோசமானதொரு திரைப்பட உருவாக்கத்தின் மூலம் அதன் அடிப்படை நோக்கத்தை பாழ்படுத்தியதுதான் இந்தப் படத்தின் சாதனை. ஞானராஜசேகரனின் முதல் படமான 'மோகமுள்' (தி.ஜாவின் நாவல்) ஒரு சுமாரான முயற்சி. நாசர் நடிப்பில் அடுத்த படமான 'முகம்' சிறப்பானதாக இல்லை. 'பாரதி' மட்டுமே சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. அது போலவே 'பெரியாரும்' ஒரு திறமையான புதுமுகத்தையோ அல்லது தமிழர்களுக்கு அறிமுகமில்லாத சிறந்த நடிகரையோ வைத்து உருவாக்கப்பட்டிருந்தால் சிறப்பாக வந்திருக்கும் என நினைக்கிறேன். சத்யராஜ் என்னும் போது சற்று நம்பிக்கையாகத்தான் இருந்தது. ஆனால் கூடவே குஷ்பு போன்றோரெல்லாம் நடிக்கிறார் என்று செய்திவரும் போது அதுவும் அடிபட்டுப் போனது. நினைத்தது போலவே மிக மோசமான திரைக்கதையுடன் நர்சரி ஸ்கூலின் பேன்சி டிரஸ் போட்டி போல் ஆகிப் போனது அந்தப் படம். திரைப்படம் என்கிற வகையில் வரிவிலக்கெல்லாம் அளித்தும் கூட்டம் சேராத இந்த மோசமான உருவாக்கத்திற்கு 'சிறந்த திரைப்படவிருது' அளித்திருப்பது மோசமான முன்னுதாரணம். பதிலாக 'கற்றது தமிழ்' போன்ற சமகால சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசின உண்மையிலேயே தரமான படத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். இடையில் "ஒன்பது ரூபாய் நோட்டு' படத்திற்காக சத்யராஜிற்குத்தான் சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்க வேண்டும் என்று காமெடி செய்திருக்கிறார் தங்கர் பச்சான்.


சிறந்த மலையாள திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 'ஒரே கடல்' மிகச் சிறப்பானதொரு தேர்வு. சில மாதங்களுக்கு முன் லோக் சபா சானலில் இதைப் பார்க்க நேர்ந்த போது திகைத்துப் போய் அமர்ந்திருந்தேன். இப்படியான matured ஆன திரைப்படங்கள் தமிழில் வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்குமோ?

தொடர்புடைய பதிவு:

காஞ்சிவரம்: உருப்படியாக ஒரு தமிழ் சினிமா

suresh kannan

20 comments:

  1. நல்ல வேளை குஷ்பூவிற்கு மணியம்மை வேடத்திற்கு சிறந்த நடிகை விருது கிடைக்க வில்லை (மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சிக்கான கைம்மாறு).

    காஞ்சீவரம் படத்திற்கு விருது கிடைத்தது ஒரு பொருத்தமான நிகழ்ச்சி, அண்ணாவின் நூறாண்டு . ஆனால் அந்த சினிமாவில் அண்ணா பற்றிய செய்திகள் உண்டா என்று தெரிய வில்லை.

    ReplyDelete
  2. தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

    முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

    வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

    ReplyDelete
  3. உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது.

    11 பெண்களுக்கு பயிற்சியாளன் (சக்தேவில் ஷாரூக்) கதாபாத்திரம் உசத்தியா , கஷ்டப்படும் நேச தொழிலாளி (காஞ்சிவரத்தில் பிரகாஷ் ராஜ்) வாழ்க்கை உசத்தியா என்று யோசித்து பாருங்கள்.

    தேசிய விருது தேர்வில் பெரும்பாலும் கலைப்படத்துக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும்.

    சில சமயம் 'பூகார்' (அனில் கப்பூர்) போன்ற படத்திற்கு கிடைக்கும். இது எல்லாம் வியாபார படம். விருதுக்காக எடுக்கப்பட்ட படமல்ல...

    அன்புடன்,
    குகன்
    http://guhankatturai.blogspot.com

    ReplyDelete
  4. Sharukh did an amazing job in Chak de India. He should have won the award as well. He was amazing. He acted well in Swades & Veer Zaara as well. I wish he got the award for Veer Zaara. He acted well as an old man. I am not a great fan of Sharukh. But, I do appreciate ppl;s good job. I rarely watch movies. Am a cartoon freak. So no comments abt Prakash Raj

    ReplyDelete
  5. Mr.குகன் ஒரு நடிகர் எந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் என்பது அல்ல.அந்த கதாபாத்திரத்தில் எவ்வாறு நடிக்கிறார் என்பதே சிறந்த நடிப்பிற்கான அளவுகோள்.நிங்கள் சொல்வது போல் கொண்டோமேயானால் ஏழை மக்களை காக்கும், ஏழை மக்களில் ஒருவராகவே M.G.R நடித்தார்.அதற்க்காக அது சிறந்த நடிப்பு என்று ஆகிவிடாது.
    மற்றபடி சுரேஷ் உங்களுடைய பதிவு மிக அருமை.நான் காஞ்சிவரம் படத்தை இன்னும் பார்க்கவில்லை.ஆனால் ஷாருக் மிக சிறந்த நடிப்பை சக்தேவில் வெளிப்படுத்தி இருப்பார்.சாதிக்க வேண்டும் என்ற கோபம் உடலில் மட்டும் அல்லாது முகத்திலும் படம் முழுக்க வெளிப்படுத்தி இருப்பார்.

    ReplyDelete
  6. உங்கள் பதிவுடன் பெரும்பான்மையுடன் ஒத்துப் போகிறேன். பெரியார் திரைப்படம் இன்னும் நன்றாக உருவாகியிருக்க வேண்டும். ஆனால் பிரகாஷ்ராஜிற்கு கிடைத்த விருது நியாயமானது.

    ReplyDelete
  7. //நிங்கள் சொல்வது போல் கொண்டோமேயானால் ஏழை மக்களை காக்கும், ஏழை மக்களில் ஒருவராகவே M.G.R நடித்தார்.அதற்க்காக அது சிறந்த நடிப்பு என்று ஆகிவிடாது.//

    ரிக் ஷா காரன் படதிற்காக எம்.ஜி.ஆருக்கு தேசிய விருது கொடுத்தது உங்களுக்கு தெரியாது போல :)))

    ReplyDelete
  8. /// //நிங்கள் சொல்வது போல் கொண்டோமேயானால் ஏழை மக்களை காக்கும், ஏழை மக்களில் ஒருவராகவே M.G.R நடித்தார்.அதற்க்காக அது சிறந்த நடிப்பு என்று ஆகிவிடாது.//

    ரிக் ஷா காரன் படதிற்காக எம்.ஜி.ஆருக்கு தேசிய விருது கொடுத்தது உங்களுக்கு தெரியாது போல :)))///



    உண்மையாகவே அவருடைய சிறந்த நடிப்பிற்க்காகவா அல்லது?....

    ReplyDelete
  9. சக்தேயில் ஷாருக்கான் நடிப்பு பற்றி நான் எழுதியது....

    "ஷாருக் கான் படம் முழுக்க மடித்து விட்ட கைகளுடன் கூடிய வெள்ளை நிற முழுக்கை சட்டையில் படம் முழுவதும் வருவது.

    நம்மவர்களுக்கு எரிச்சலூட்டும் அவரது வழக்கமான ஏதோ குளிரில் நடுங்குவன் போல பேசும் பாணியை கைவிட்டு சாதாரணமாக பேசியிருப்பது.

    உணர்ச்சியில் பொங்கி, ஓவர் ஆக்டிங் செய்யக்கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்தும் அவ்வாறு செய்யாமல் அமைதியாகவும், ஆழமாகவும் நடித்திருப்பது. இத்தாலி உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் பெக்கென்பர் (beckenbauer) இருந்த அளவிற்கு இறுக்கமாக இல்லையெனினும், தேவைப்படும் அளவிற்கே உணர்ச்சி காட்டியிருப்பது".


    http://marchoflaw.blogspot.com/2008/01/blog-post_16.html

    பரவாயில்லை, நமக்கும் ஓரளவிற்கு ரசனையிருக்கிறது என்ற திருப்தி!

    ReplyDelete
  10. I object your comment on Periyar tamil film making. Because Mr.Gnanasekaran takes maximum effort to give periyar life in 180 minutues.

    ReplyDelete
  11. //உண்மையாகவே அவருடைய சிறந்த நடிப்பிற்க்காகவா அல்லது?...//

    நான் விருது கமிட்டியில் இல்லை :))

    இதே கேள்வியை தேசிய விருதி வாங்கிய அனைவருக்கும் கேட்கலாமே.

    ஆசிய ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது ,பிரான்சின் செவாலியே விருது வாங்கிய ஒரு நடிகருக்கு ஒரு தடவை கூட இந்த விருது கிடைக்காததும் ,இங்கே தேசிய விருது வாங்கிய ஒருவருக்கும் தேசம் தாண்டி இத்தகைய விருதுகள் கிடைக்காததும் எதைக் காட்டுகிறது..

    உடனே கிளம்பி வந்துடாதீங்கையா ..ஓவர் ஆக்டிங் ,அண்டர் ஆக்டிங் -ன்னு .

    ReplyDelete
  12. KAthapathirathai Vaithu yarukkum Viruthu alla,...

    Pragash Raj Naduppu Unmayalume Miga Piramathanm
    Iethu Yennudaya Karuthu...

    ReplyDelete
  13. //ஆனால் கூடவே குஷ்பு போன்றோரெல்லாம் நடிக்கிறார் என்று செய்திவரும் போது அதுவும் அடிபட்டுப் போனது.//

    இது புரியவில்லை. குஷ்புவைப் பற்றி குறைவாக எண்ண வேண்டிய காரணங்கள் என்ன?

    பெரியார் படமும் சரி பாரதி படமும் சரி அவர்களைப் பற்றிய பதிவுகளைச் (recorded facts) சார்ந்து எடுக்கப்பட்ட ஆவணப் பட முறையில்தான் எடுக்கப்பட்டது. அதன் ஒவ்வொரு காட்சிகளும் வசனமும் ஏதாவது புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும். சர்ச்சை ஆகிவிடக்கூடாதில்லையா?

    பொதுவாக வாழ்க்கை வரலாறுகளை நேரடியாகப் படமாக எடுக்காமல், ஏதாவது ஒரு சம்பவத்தை ஒட்டி, முன்னும் பின்னுமாக கொடுப்பதுதான் சுவை. இருவர் போல். ஆனால் அது தமிழ்நாட்டில் பெரும் தோல்வியுற்றதினால் பாதுகாப்பாக செய்துவிட்டார்கள் போலும் :)

    காஞ்சீவரம் பார்க்கவில்லை. சக் தே-யில் ஷாருக் அமைதியாக நடித்திருந்தார். மற்றபடி அது கனமான பாத்திரமாக பரிமளிக்கவில்லை என்பது எனது எண்ணம்.

    ReplyDelete
  14. ப்ரியதர்ஷனுக்கு காஞ்சீவரம் தந்துள்ள அங்கீகாரம் குறித்து மகிழ்ச்சியே. நகைச்சுவைப் படங்களில் தொடர்ந்து 25 வருடத்திற்கும் மேலாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் சிறந்த படைபாளி அவர். இப்படிப்பட்ட அங்கீகாரம் அவரை மேலும் ஆர்வமாக இயங்க வைக்கும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. ///உடனே கிளம்பி வந்துடாதீங்கையா ..ஓவர் ஆக்டிங் ,அண்டர் ஆக்டிங் -ன்னு///


    ஹா..ஹா..ஹா ..சுத்தி சுத்தி வந்து கடைசில உங்க சிவாஜி பாசத்தை காமிச்சிட்டேங்க:)))

    ReplyDelete
  16. "பெரியார் திரைப்படத்திற்கு விருதா?.. அநியாயம்"//

    திரிக்கப்படும் கயிறு வலுவாகும் என்பது தெரிந்தும் இப்படி ஒரு விமர்சனமா?

    :)

    ReplyDelete
  17. //ஹா..ஹா..ஹா ..சுத்தி சுத்தி வந்து கடைசில உங்க சிவாஜி பாசத்தை காமிச்சிட்டேங்க:))//

    சிவாஜி பாசத்தை எதுக்கு சுத்தி வந்து காமிக்கணும் .எப்பவும் நேரடியா தான் காமிச்சிட்டிருக்கேன்.

    ReplyDelete
  18. நான் தமிழ் சினிமா பார்க்க தொடங்கிய போது, சிவாஜி அவர்கள் தாத்தாவாக நடித்துக் கொண்டிருந்தார். அதனாலேயே எனக்கு அவரைப் பார்க்கும் போது தாத்தா உணர்வு தான் வரும். அதனால் என்னவோ அவர் மேல் கொஞ்சம் பாசம் கூட இருக்கும். அவருக்கு தேசிய விருது கிடைக்காதது வேதனைக்குரியதே..

    பை த பை, நல்ல பஞ்சு குடுக்கிறீங்க ஜோண்ணா... சிரிப்பை அடக்க முடியேல்ல..

    We have similar preferences :D

    ReplyDelete
  19. ஜோ சொல்றது கரிக்டு தான். மக்கள் தல தெர்றிச்சு ஓடுற கமலஹாசனுக்கே விருது கொடுத்திருக்கிறார்களே?

    ReplyDelete
  20. இயல்பான நடிப்புக்கு ஏனோ விருதுகள் வழங்கப்படுவதில்லை . விருது பெரும் நடிகரின் கதாபாத்திரம் சோகமானதாக கண்டிப்பாக இருக்கும். "அன்பே சிவம் " மாதவனின் சிறந்த நடிப்புக்கு எந்த அடிப்படையில் விருது வழங்குவார்கள்? "முதல் மரியாதை" படத்தில் ராதா வை விட வடிவுக்கரசி கதாபாத்திரம் நடிப்பதற்கு கஷ்டமான ஒன்று ... ஆனால் "நெகடிவ்" கதாபாத்திரம் ஏற்று நடிப்பவர்களுக்கு விருதுகள் கிடைப்பதில்லை ...

    ReplyDelete