Wednesday, April 15, 2009

பிரியாணியும் பிரியாமணியும்

(எச்சரிக்கை: இது ஒரு பிரியாணி கலந்த மொக்கை பதிவு)

மிகவும் பிடித்தமானவைகளின் பட்டியல் ஒன்றை யாராவது என்னிடம் சொல்லச் சொன்னால் அதில் தவறாமல் நான் குறிப்பிடும் விஷயம் இதுவாகத்தான் இருக்கும். 'பிரியாணி'.

'ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கிய பிரயாணிகள்..' என்கிற பத்திரிகை வாசகம் எனக்கு 'பிரியாணிகள்' என்று கண்ணில்படும் அளவிற்கு பிடித்தமான சமாச்சாரம் அது. எப்போது முதல் 'பிரியாமணியை.. சட்...'பிரியாணியைச்' சுவைத்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் நினைவு தெரிந்தது முதல் பயங்கரமான பசி என்றால் எனக்கு உடனே சாப்பிட நினைப்பது பிரியாணிதான். அசைவ பிரியாணி என்றால் கூடுதல் பிரியம் என்றாலும் அதுதான் வேண்டுமென்று இல்லை. 'அடியார்க்கு அடியார்' போல பிரியாணி எந்த வடிவில்/வகையில் இருந்தாலும் பிடித்தமானதுதான்.. இந்த உணவு வடிவத்தை முகலாயர்கள்தான் தமிழகத்திற்கு கொண்டு வந்தனர் என்பது பரவலான நம்பிக்கை. 'உலகில் தோன்றிய முதல் குரங்கு தமிழக் குரங்காகத்தான் இருக்கும்' என்று புதுமைப்பித்தன் தமிழ் ஆய்வாளர்களை கிண்டலடித்தாலும் நம்மாட்கள் விடுவதில்லை. பிரியாணி என்கிற வடிவம் முகலாயர்களின் வருகைக்கு முன்பே தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் இருந்தது என்றும் அதற்கு "ஊன்சோறு" என்று பெயர் என்றும் நாளிதழின் குறிப்பொன்று சொல்கிறது.

ஊன்சோறு அல்லது புலவு பண்டைக் காலத்தில் ஒருவிதமாக இருந்து, முகம்மதியர் வருகையால் சற்று மாறுதல் அடைந்தது. ஏபுலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த மலரா மாலைப் பந்து கண்டன்ன ஊன்சோற்று அமலைஏ என்பதால் புலால் கறியும், சோறும் சேர்ந்து பிரியாணி சமைக்கப்பெற்றது தெளிவு.
என்கிறார் நா.கணேசன். [முழுக்கட்டுரையையும் படிக்க]

()

பிரியாணியின் மேலுள்ள காதலுக்காக இந்திய ஜனநாயக அமைப்பிற்கே ஒரு முறை நான் துரோகம் செய்திருக்கிறேன்.

வேட்பாளர்கள், வாக்காளர்களையும் தொண்டர்களையும் கவர்வதற்காக பிரியாணி போடுவது நெடுங்கால மரபு. இதிலிருந்தே பிரியாணிக்கு உள்ள செல்வாக்கை புரிந்து கொள்ளலாம். என்னுடைய பதின்மங்களில் நிகழ்ந்தது இது. தேர்தல் நேரம். ஆனால் வாக்கிடுவதற்கான வயது எனக்கில்லை. வீட்டில் தண்ணி தெளிக்கப்பட்டு 'வெட்டியாக' சுற்றிக் கொண்டிருந்தேன். வகுப்பு நண்பனொருவன் இருந்தான். என்னுடைய நண்பன் என்று சொன்ன பிறகு அவன் என்ன மாவட்ட ஆட்சியராகவா இருப்பான். மாநிலக் கட்சிக்காக தேர்தல் பணியில் நிழலான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். என்னை திடுக்கிட வைத்த யோசனையை அவன்தான் என்னிடம் முன்வைத்தான். அதாவது வேறு ஒரு நபரின் வாக்குச் சீட்டை பயன்படுத்தி நண்பன் சார்ந்திருக்கும் கட்சியின் சின்னத்திற்கு ஒட்டளிப்பது. நேர்மையான வார்த்தைகளில் சொன்னால் 'கள்ள ஓட்டு போடுவது'.

ஏதோ மாணவிகளை கிண்டலடிப்பது, மாவா போடுவது போன்ற சில்லறை குற்றங்களில் மாத்திரம் ஈடுபட்டிருந்த எனக்கு இது மலையேறும் சவாலாகத் தோன்றியது. மேலும் அப்போதுதான் டி.என்.சேஷன், தேர்தல் ஆணையாளர் என்கிற பதவியை உருப்படியாக தடாலடியாக பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்று ஞாபகம். கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளை பற்றி அரசல் புரசலாக அறிந்திருந்ததால் பயந்த என்னை கீதை கிருஷ்ணன் ரேஞ்சுக்கு ஆற்றுப்படுத்தினான் நண்பன். புகைப்பட அடையாள அட்டை போன்ற கசுமால தொந்தரவுகள் அப்போது இல்லாததால் இதில் ஒன்றும் பிரச்சினையில்லை என்றான். சட்டத்தை மீறுவதில் உள்ள 'த்ரில்' பிடித்திருந்தாலும் பின்விளைவுகளை நினைத்து அவசரமாக மறுத்த என்னை அவன் சொன்ன ஒற்றை வாக்கியம் நிதானப்படுத்தியது. "இந்த மாதிரி ஓட்டு போடறவங்க எல்லாருக்கும் மத்தியானம் பிரியாணி விருந்து உண்டுடா". அது போதாதா? சேஷனை அல்சேஷனாக ஒதுக்கி விட்டு, தகுதிக்கு முன்னதாகவே ஜனநாயக கடமையை ஆற்றிய பெருமையை திகிலுடன் முடித்தேன். பிரியாணியின் மீது எனக்குள்ள பிரேமையை உங்களுக்கு உணர்த்தவே இந்த ராமாயணம்.

()

வலைப்பதிவராக உள்ள ஒரு இசுலாமிய நண்பர் ஒருவர் அவர் வீட்டிற்கு இ·ப்தார் விருந்துக்காக அழைத்திருந்தார். (அவர் பெயரை வெளியிடலாமா என்று தெரியவில்லை.). பொதுவாக 'பாய்' வீட்டு பிரியாணி என்றாலே அதற்கு தனிச்சுவை உண்டு. திராவிட பிரியாணியை விட ஆரிய பிரியாணி மீதுதான் எனக்கு மோகம் அதிகம். பொதுவாக தமிழர்கள் தயாரிக்கும் பிரியாணியில் காரச்சுவை அதிகமிருக்கும். அசைவம் என்றாலே அது காரசாரமாக இருக்க வேண்டும் என்பது நம்மவர்களின் நம்பிக்கை. மேலும் பிரியாணி வேகும் போது ஆவியாகும் நீர், மறுபடியும் சாதத்திற்குள்ளேயே இறங்குவதால் சற்று கொழகொழவென்று இருக்கும் பிரியாணியின் சுவை சற்று மட்டுத்தான். மூடியிருக்கும் தட்டின் மீது நெருப்புத் துண்டங்களை வைத்து அந்த நீராவியை உறிஞ்சிக் கொள்ளும் முறையில் இசுலாமியர் பிரியாணி தயாரிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். இதுபற்றி அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்க வேண்டும்.

சரி நண்பர் வீட்டு விருந்திற்கு வருகிறேன். ஏற்கெனவே சொன்னது போல் 'பாய்' வீட்டு பிரியாணி என்பதால் தூரத்தைக் கூட பார்க்காமல் சென்ற எனக்கு பெரியதொரு அதிர்ச்சியை தந்திருந்தார் அவர். தயாரிக்கப்பட்டிருந்தது வெஜிடபிள் பிரியாணி. முன்பே சொன்னது போல் பிரியாணி எந்த வகையில் இருந்தாலும் பிடிக்கும் என்றாலும் 'பாய்' வீடு என்பதால் நான் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டு போனது அசைவ பிரியாணியை. அவர் மீது எந்தவொரு குற்றமுமில்லை. அவர் அழைத்திருந்த நண்பர்கள் பலர் பாழாய்ப் போன சைவ பழக்கமுடையவர்கள் [:-)] என்பதால் இந்த ஏற்பாடு. என்றாலும் முழு மோசம் செய்யாமல் கூடுதலாக சிக்கன் வறுவல் ஏற்பாடு செய்திருந்ததினால் சற்று மனச்சாந்தி உண்டாயிற்று. நான் ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு அவரிடம் சொன்னேன். "கலி முத்திடுச்சுன்றது உண்மைதான். பாய் வீட்ல போய் வெஜிடபிள் பிரியாணின்னா அடுக்குமா இது?".

(இப்படியாக இதை எழுதிவிட்டதால் இனிமேல் அழைப்பாரா என்று தெரியவில்லை). :-)

Photobucket

மெனு விஷயத்தில் 'Known devil is better than unknown angel' என்பதுதான் என் பாலிசி. எந்த நான்-வெஜ் ஓட்டலுக்கு போனாலும் மெயின் உணவாக, 'சிக்கன் பிரியாணி- லெக் பீஸ்' என்று சொல்லிவிடுவேன். விவேக் சொல்வது போல் 'லெக்-பீஸ்' இல்லையெனில் சற்று டென்ஷனாகி விடுவேன். வேறு உணவு வகைகளை முயற்சித்துப் பார்க்க எனக்கு தைரியம் போதாது. நல்ல பசி வேளையில் அது பிடிக்காமற் போய்விட்டால் ஏற்படும் வெறுப்பு நீண்ட நேரத்திற்கு அகலாது. அது வரை சாதா பிரியாணி வகைகளையே சாப்பிட்டுக் கொண்டு கிணற்றுத் தவளையாக இருந்த எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு புதியதொரு உலகத்தை அறிமுகப்படுத்தியவர் 'சர்வர்' ஒருவர்.

உணவகங்களில் உணவு பரிமாறுபவர்களில் இரண்டு வகைகளை பார்த்திருக்கிறேன். பெரும்பான்மையினர் மிகவும் சலிப்பான முகத்துடன் முயக்கத்தின் இடையில் எழுப்பப்பட்டவர்கள் போன்ற முகபாவத்துடன் வந்து "என்ன சாப்படறீங்க" என்பர். அவர் கேட்பதிலேயே நம் பசி போய்விடும். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நாள் முழுக்க ஒரே மாதிரியான பணியை திரும்பத் திரும்ப செய்கிறவர்களின் உளவியல் ரீதியான கோபம் அது. நம்மிடமும் குற்றமிருக்கிறது. எல்லா உணவு வகைகளும் நமக்கு சிறுவயதிலிருந்தே அறிமுகமானவைதான். மேலும் பொதுவாக எல்லா உணவகங்களிலும் அறிவிப்பு பலகையில் அன்றைய ஸ்பெஷல் உட்பட எல்லாமே பட்டியலிடப்பட்டிருக்கும். இருந்தாலும் சர்வர் வாயினால் கேட்டால்தான் நமக்கொரு திருப்தி.

இன்னொரு வகையினர் புன்சிரிப்புடன் வழக்கமான உணவு வகைகளை சொல்வதைத் தவிர "சார்... இன்னிக்கு ஸ்பெஷல் காலி·பளவர்ல பஜ்ஜி. டிரை பண்ணிப் பாக்கறீங்களா?" என்று கேட்பார்கள். அவர்கள் சொல்லும் முறையே அதை மறுக்கத் தோன்றாது. அப்படியான ஒரு நண்பர் எனக்கு அறிமுகப்படுத்தியதுதான் 'சிக்கன் மொஹல் பிரியாணி'. வழக்கமான பிரியாணி போல் தூக்கலான காரம் அல்லாமல் முந்திரி, திராட்சைகளுடன் முட்டை தூளாக்கப்பட்டு மேலே தூவப்பட்டு உயர்ந்த ரக பாசுமதி அரிசியுடன் சாப்பிடுவதற்கே தேவார்மிர்தமாக இருந்தது. தலைப்பாகட்டு, பொன்னுச்சாமி, வேலு,அஞ்சப்பர் என்று எந்தவொரு பிராண்டாக இருந்தாலும், ஹைதராபாத், காஷ்மீரி, ஆந்திரா என்று மாநில வாரியான பிரியாணி வகைகளை சுவைத்திருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது சிக்கன் மொஹல் பிரியாணி.

இப்போது கூட மிகுந்த பசியென்றால் ரயில்வே நிலையத்திற்கு எதிரேயிருக்கும் அந்த நான்-வெஜ் ஹோட்டலுக்கு நான் நுழைந்தவுடன் சமயங்களில் என்னைக் கேட்காமலேயே கூட அவர்களாக ஆர்டர் செய்துவிடுவது இந்த அயிட்டமாகப் போய்விட்ட அளவிற்கு இதற்கு அடிமையாகிவிட்டேன். இது ஒருவேளை மரபு சார்ந்த கோளாறா என்று தெரியவில்லை. ஒரு முறை என் தந்தையை மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது கிடைத்த இடைவெளியில் பக்கத்து படுக்கையில் இருந்த இசுலாமிய குடும்பத்தினரிடம் என் அம்மா உரையாடிக் கொண்டிருந்தது "நீங்க பிரியாணி செய்யற பக்குவம் எப்படி?".

()

தமிழகத்தைப் பொறுத்தவரை பிரியாணியின் மெக்கா என்று 'ஆம்பூரைச்' சொல்கிறார்கள். இதற்காகவாவது வேலூருக்கு ஒரு நடை போய் வர வேண்டும். ஆனால் இப்படி பிரியாணியாக சாப்பிட்டு சாப்பிட்டு அதிகம் மிஞ்சியிருக்கும் கலோரிகளை எரிக்கத் தெரியாமல் விழியும் தொப்பையும் பிதுங்கிக் கொண்டிருந்தாலும் ஆசை தீரவில்லை. 'அமாவாசை' 'வெள்ளிக்கிழமை' போன்ற எந்தவொரு தடையும் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை.

பதிவை முடிக்கும் முன்பு இதையும் சொல்லி விடுகிறேன். பிரியாணி ஆசை காட்டி என்னை 'கள்ள ஓட்டு' போட வைத்த நண்பர் அவர் தந்த வாக்குறுதியின் படி எனக்கு பிரியாணி விருந்து தரவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் பின்பற்றுவதில்லை என்பதின் காரணமாக இப்போது அவர் நிச்சயம் பெரிய அரசியல்வாதியாக மாறியிருப்பார் என்று நம்புகிறேன். என்னுடைய சாபமோ என்னமோ தெரியவில்லை, அந்த முறை நான் வாக்களித்திருந்த கட்சி தோற்று விட்டது.

image courtesy: http://varshaspaceblog.blogspot.com/

இன்னொரு பிரியாணி பிரியரின் அனுபவத்தை வாசிக்க

நண்பரொருவரின் பிரியாணி அனுபவம்

suresh kannan

25 comments:

  1. //திராவிட பிரியாணியை விட ஆரிய பிரியாணி மீதுதான் எனக்கு மோகம் அதிகம். //

    :)

    வாசனையான பதிவு !

    பிராணிகள் முதன்மை பங்கு வகிப்பதால் பிரியாணி என்ற பெயர் வந்திருக்குமோ. மீன் பிரியாணிகள் கூட சிங்கையில் கிடைக்கிறது. எனக்கு அதன் சுவையெல்லாம் தெரியாது

    ReplyDelete
  2. naavil neer oorudhu!!!!!!!!!

    ReplyDelete
  3. //ஊன்சோறு//

    சுவையான தகவல்.

    மதிய நேரத்தில் இப்படி பசியை கிளப்பி விட்டு விட்டீர்களே?!

    ReplyDelete
  4. //
    மூடியிருக்கும் தட்டின் மீது நெருப்புத் துண்டங்களை வைத்து அந்த நீராவியை உறிஞ்சிக் கொள்ளும் முறையில் இசுலாமியர் பிரியாணி தயாரிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். இதுபற்றி அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்க வேண்டும்.
    //
    இந்த முறையை எனக்கு தெரிந்த சிலர் (இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள்) கூட பயன்படுத்துகிறார்கள்.

    ReplyDelete
  5. எனக்கும் பிடித்த உணவுதான். பொன்னுச்சாமியும், தலப்பாகட்டும்............

    நினைத்தாலே எச்சில் ஊருகிறது. ஆசையை தூண்டிவிட்டீங்களே நீங்க நல்லயிருப்பீங்களா.

    ReplyDelete
  6. எல்லாம் சரி!
    பிரியாமணி இங்க ஏன் வந்தவா??அவவுக்கு சூட்டிங் இல்லையா?

    ReplyDelete
  7. Naan pattuku edo urupadiya news parka net-la meincha.. priyamani pudichi izhuthu inda blog-ku kondu vanda..padicha.. biriyani..tension akkaringappa..

    anyhow jokes apart.. nice posting..

    srini
    sharjah

    ReplyDelete
  8. நான்பாட்டுக்கு பதிவுகளை மேஞ்சுகிட்டிருந்தேன்.பிரியாணியக் காண்பிச்சு பசிய கெளப்பி உட்டிட்டீங்களே:)நான் போறேன் சாப்பிடறதுக்கு.

    ReplyDelete
  9. பிரியாணி டெக்னிக்கெல்லாம் பின்னூட்டத்துல தெரியுது.திரும்ப வருவேன் என்ன

    ReplyDelete
  10. ஒரே ஒருதடவை உம்ம எங்க ஊரு மல்லு பிரியாணி சாப்பிட வச்சிட்டா அப்புறம் உமக்கு பிரியாமணி மேல இருக்குற இந்த ஜொள்ளு சுத்தமா வறண்டு போயிடும். பிரியாணிக்கு ஊறுகாய் தொட்டு சாப்பிடுற கொடுமை இங்க மட்டும்தான்

    ஆமா. நீர் எங்க வீட்டு கல்யாணத்துக்கு வரலையா? அதான் பிரியாணி மீந்து போச்ச்சா? :-)

    ReplyDelete
  11. அண்ணா!சுரேஷ் கண்ணா!எங்கேயெல்லாம் பிரியாணிய தேடறது?சூடா போய் குந்திகிட்டீங்களாக்கும்:)

    ReplyDelete
  12. நானும் ஒரு பிரியாணிப்பிரியன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்

    ReplyDelete
  13. நண்பரே, உங்க பதிவுக்கு வோட்டும் போட்டாச்சு

    நானும் இரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,

    படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)

    தென் சென்னை இளைஞர் எம்பி 29 வயது சரத்பாபுவுக்கு வாக்களிங்கள்.

    http://sureshstories.blogspot.com/2009/04/29.html

    காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு

    http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html

    ReplyDelete
  14. how dare you? who told you muslims are ariyas!atleast after swallowing their biriyani you should rethink of it.i register my strong condemns.pragaspathy.

    ReplyDelete
  15. ஒரு புல் பிளைட் பிரியாணி சாப்ட எபெக்ட் .. :)

    ReplyDelete
  16. // எச்சரிக்கை: இது ஒரு ... மொக்கை // இத தனியா வேற சொல்லணுமாக்கும்...

    எந்த நான்-வெஜ் ஓட்டலுக்கு போனாலும் மெயின் உணவாக, சிக்கன் பிரியாணி - நானும் இந்த கட்சிதான், ஆனால் முந்திரி திராட்சைகள் போன்ற பாயாச பதார்த்தங்களை பிரியாணியில் பார்த்தால் கடுப்பாக வரும்.

    ReplyDelete
  17. Thanks for adding the image courtesy..!

    ReplyDelete
  18. அன்புள்ள பிரியாணி பிரியரே,
    தங்களை ஆம்பூர் அன்புடன் அழைக்கிறது.
    - ஆம்புரான்.

    ReplyDelete
  19. "எந்த நான்-வெஜ் ஓட்டலுக்கு போனாலும் மெயின் உணவாக, சிக்கன் பிரியாணி - நானும் இந்த கட்சிதான், ஆனால் முந்திரி திராட்சைகள் போன்ற பாயாச பதார்த்தங்களை பிரியாணியில் பார்த்தால் கடுப்பாக வரும்."


    ஆமாம். அது என்னோவோ பிரியாணிஇல் பாயாசத்தை கலந்தது போல. எங்கள் ஊரில் அந்த கலப்படம் எல்லாம் கிடையாது.
    - ஆம்புரான்.

    ReplyDelete
  20. ஆசையை தூண்டிவிட்டீங்களே !!!

    ReplyDelete
  21. நீங்களும் ஒரு பிரியாணி பிரியர்ங்கரதால சொல்லுறேன்.ராமனாதபுரம்,மார்த்தாண்டம்,
    கேரளாவின் பெரும் பகுதி இங்க எங்கையும் வாயில வெக்கமுடியாது.
    மத்தபடி சேலம்,ஈரோடு கோவை மற்றும்
    திருப்பூர் கொஞ்சம் நல்லாவே இருக்கும்.

    மத்தபடி பாய் வீட்டு பிரியாணிக்கு வாய்ப்பே இல்ல போங்க.அவங்க நம்ம வீட்டுல வந்து செய்து குடுத்தாங்கன்னாளும் அதே டேஸ்ட்தாங்க.எல்லாம் கைமணம்ங்க.

    ReplyDelete
  22. //என்னுடைய நண்பன் என்று சொன்ன பிறகு அவன் என்ன மாவட்ட ஆட்சியராகவா இருப்பான்//

    Aiyo.. Ha ha

    //"கலி முத்திடுச்சுன்றது உண்மைதான். பாய் வீட்ல போய் வெஜிடபிள் பிரியாணின்னா அடுக்குமா இது?". //

    Nice Punch line :D

    //நல்ல பசி வேளையில் அது பிடிக்காமற் போய்விட்டால் ஏற்படும் வெறுப்பு நீண்ட நேரத்திற்கு அகலாது//

    Join the group... எனக்கு ஒரு கிழமைக்கு (வாரத்துக்கு) அப்படி இருக்கும்...

    எங்களுக்கு ஒரு சின்ன ரெஸ்டொரன்ட் மாதிரி ஒரு கவே யூனிவர்சிட்டியில் இருக்கு.... அங்க மட்டும் தான் நான் புதுசா ஒடர் செய்வன்.. அந்த ஓனருக்கு நான் ஒரு வில்லங்கம் பிடிச்சவனு தெரியும்.. ஹி ஹி

    //முந்திரி திராட்சைகள் போன்ற பாயாச பதார்த்தங்களை பிரியாணியில் பார்த்தால் கடுப்பாக வரும்."//
    I like cashewnuts... But i hate those raisins.. GRRRRRRRR........

    //எங்கள் ஊரில் அந்த கலப்படம் எல்லாம் கிடையாது.
    - ஆம்புரான்.//
    யோ..... ஆம்பூரான்.. என்னப்பா வயிற்றெரிச்சலைக் கிளப்புறியள்.. நான் ஆம்பூர் பிரியாணி பான் ஆக்கும்.. அம்மா சொல்லுவாங்க, 7 / 8 வயசிலேயே ஒரு பார்சலை தனிய ஒரு கட்டு கட்டுவனு... ஆனாலும் எல்லாரும் கண் வச்சு வச்சு எனக்கு ஒரு கரண்டி சதை (தசை) கூட வைக்குதில்லை...

    இதுக்காகவே தமிழ் நாடு போகணும்

    // எச்சரிக்கை: இது ஒரு ... மொக்கை // இத தனியா வேற சொல்லணுமாக்கும்...

    he he

    //ஆசையை தூண்டிவிட்டீங்களே நீங்க நல்லயிருப்பீங்களா.//
    Argh......
    அது நடக்குமா.. நோ வே...

    நன்னாயிருக்கு உங்க எழுத்து... வாழ்த்துக்கள்.. அப்ப அப்ப மொக்கை பதிவு போடுங்கோ (Put).. இன்றைக்கு ஒரே சிரிக்க வேணும் என்டு எனக்கு எழுதியிருக்கு போல.. வெட்டிண்ணாவேட பேய் ஆர்டிக்கலைப் பாருங்கோ... வயிறு வலிக்கும்.. பிறகு (அப்புறம்) தமிழ்மாங்கனினு (my thoughts da machi.... name of the blog)ஒரு பெண் "டாடி மம்மி வீட்டில இல்ல" என்று ஒரு ஆட்டிக்கல் வேற.. ஒரே சிரிப்பு...

    P.S:- யாருமே சிரிக்கிற மாதிரி எழுதலனு கோவத்தில நான் ஒரு மொக்க பதிவு நேற்று எழுதினேன்.. நானே சிரித்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது.. :-(

    ReplyDelete
  23. அடங்கொன்னியா...!! பிரியாணி பொட்டலம் மடுச்ச பேப்பருல பிரியாமணியின் கெம்பீர
    " "கவர்""ருசி" " படம்... அருமையான பிரியாமணி கலவை.... அட.. ச்ச ... பிரியாணி கலவை .....!!


    கலக்கல் ....!! வாழ்த்துக்கள்....!!!

    ReplyDelete
  24. கோவை அங்கண்ணன் பிரியாணி மிகவும் புகழ்பெற்றது ஒரு முறை முயற்சி செய்யவும்.

    ReplyDelete
  25. "இப்போது கூட மிகுந்த பசியென்றால் ரயில்வே நிலையத்திற்கு எதிரேயிருக்கும் அந்த நான்-வெஜ் ஹோட்டலுக்கு"

    அண்ணா,நம்மூரு எதுங்கண்ணா?
    ரயில்வே நிலையப் பேரனாச்சி சொல்லுங்ண்ணா.

    ReplyDelete