Monday, September 22, 2008

பாலுறவு பொம்மையும் ஒரு கூச்ச சுபாவியும்

டிவிட்டரில் சந்தோஷ்குரு இந்தப்படத்தைப் பற்றி குறிப்பிடும் போது அவரை அணுகி டோரண்ட் பைலைப் பெற்றேன். படத்தை தரவிறக்கி நீண்ட நாட்கள் வைத்திருந்து நேற்றிரவு சுமார் 11.30 மணிக்கு பார்க்க ஆரம்பித்தவன், மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டிய பதட்டத்துடன் தூக்கம் கண்ணைச் சுற்றியும் பாதியில் தொலைக்காட்சியை அணைக்க முடியாமல் முழுப்படத்தையும் பார்த்துவிட்டுத்தான் உறங்கப் போனேன்.

"வெள்ளைக்காரன் படம் எடுத்தாதாண்டா உங்களுக்கெல்லாம் ஒஸ்தி" என்று நண்பர்களிடம் வெளிநாட்டுப்படங்களை சிலாகித்து உரையாடும் போது கேட்கப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த மாதிரியான (இதே அல்ல) plot-ஐ வைத்து நம்மூரில் படம் எடுக்கத்துணியும் ஆண்பிள்ளை யாரென்று அறிய விரும்புகிறேன். "Lars and the Real Girl" ஒரு மனிதனின் தனிமையையும் அன்பிற்கு ஏங்குவதையும், சமூகம் தன்னை புறக்கணிக்கிறது என்று அவன் நம்பினால் அதனால் அவனுக்கு ஏற்படும் அகச்சிக்கலை மெலிதான நகைச்சுவையுடனும் நேர்மையான திரைக்கதையுடனும் அணுகுகிறது.

Photobucket

லார்ஸ் (Lars) மிகுந்த கூச்ச சுபாவமும், மற்ற மனிதர்களிடமிருந்து விலகி பெரும்பாலும் தனிமையில் இருக்கிறவனாகவும் ஒரு விசித்திர மனநிலையில் இருக்கிறான். சிறுவயதிலேயே தாயை இழந்தவன். அவனின் மூத்த சகோதரனும் சிறுவயதிலேயே அவனை விட்டு விலகி விடுவதால் தன்னைப் போலவே குணமுடைய தந்தையின் பராமரிப்பில் மிகுந்த தனிமையில் வளர்கிறான். (இவ்வளவும் சொற்ப வசனங்களினால் பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுகிறது). பிற்பாடு சகோதரன் வந்து இணைந்த பிறகு வீட்டின் கேரேஜில் தனிமையில் வசிக்கிறான். சகோதரனின் மனைவி அவனை வீட்டுக்குள் வரவழைக்க எடுக்கும் பிரயத்தனங்கள் மிக அபூர்வமாக சாத்தியமடைகிறது. ஒரு அனாதை போல அவன் இருப்பதைக் கண்டு அவளின் தாய்மை உணர்வு பரிதவிக்கிறது. அலுவகத்திலும், ஊராரிடமும், தன்னைக் காதலிக்க முயலும் பெண் உட்பட யாரிடமும் நெருங்காமல் விலகியே இருக்கிறான் லார்ஸ்.

திடீரென்று ஒரு நாள் லார்ஸ் சகோதரனின் வீட்டுக்குள் வந்து தன்னுடைய பெண் நண்பர் வந்திருப்பதாகவும் இங்கு அவளை தங்க வைக்க முடியுமா என்று கேட்டவுடன் சகோவுக்கும் அவனது மனைவிக்கும் ஆனந்த அதிர்ச்சி. சமூகத்துடன் சுமூகமாக அவன் பழக ஆரம்பித்திருப்பதின் ஆரம்பப்புள்ளி என்று மகிழந்து போய் அதற்கு ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மனித உருவத்தைப் போலவே தயாரிக்கப்பட்ட ஒரு பெண் பொம்மையை அறிமுகப்படுத்துகிறான் லார்ஸ். ஆண் தனியர்களுக்கான பாலுறவு இச்சையைத் தணிக்க adult store-லிருந்து இணையம் மூலம் ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்ட பொம்மை அது. அந்த பொம்மையை (binaca) தன்னுடைய மனைவி என்று ஒரு தீவிரத்தனத்துடன் அறிமுகப்படுத்தும் லார்ஸ், அவளின் குடும்ப பின்னணிகளையெல்லாம் சகோ. குடும்பத்திடம் கூறுகிறான். முதலில் அதிர்ச்சியடையும் அவர்கள், அவனுடைய மனச்சிக்கலை போக்க அவன் வழியிலேயே சென்று பொம்மையை ஒரு நபர் போலவே நடத்துகின்றனர். அவர்களின் குடும்ப டாக்டர் (உளவியல் நிபுணரும் கூட) binaca-வின் ரத்த அழுத்தத்தை சோதிக்க வேண்டும் என்று சொல்லி ஒவ்வொரு வாரமும் அவளை (?) கூட்டி வர வேண்டும் என்று லார்ஸிடம் மிகுந்த நம்பகத்தன்மையுடன் சொல்கிறார். அதன் மூலம் அவனின் நடவடிக்கைகளை ஆராய்வது அவளின் திட்டம். லார்ஸின் அலுவலக நண்பர்கள், உறவினர்கள், சர்ச் பாதர் என்று எல்லோருமே லார்ஸின் மீதுள்ள அன்பினால் binaca-வை மனிதப்பிறவி போலவே நடத்துகின்றனர்.

இவ்வாறான சென்று கொண்டிருக்கும் லா¡ஸின் வாழ்க்கையில் binaca ஒரு நாள் பிரிந்து போகிறாள். binacaவிற்கு என்ன ஆனது, லார்ஸ் அதற்கு எவ்வாறு எதிர்வினை புரிகிறான் என்பதை அறிய படத்தைப் பாருங்கள்.

()

லார்ஸாக Ryan Gosling மிக அற்புதமாக நடித்திருக்கிறார். ‘மீண்டும் கோகிலாவில்’ கமல் செய்வது மாதிரி அடிக்கடி கண்களை சிமிட்டும் மேனரிஸத்துடன் வரும் இவர் தன்னுடைய தனிமை உணர்வையும் binaca-வை தன்னுடைய மனைவியாக தீவிரமாக நம்புவதின் மூலம் பார்வையாளனையும் அந்த மயக்கத்திற்கு சில கணங்களில் உட்படுத்துகிறார். பொம்மை என்றவுடன் அது கேலிச்சித்திரமாக ஆகி விடாமல் படத்தின் முக்கிய பாத்திரமாக ஆகியிருப்பதற்கு இயக்குநரின் திறமையும் ரியானின் நடிப்பும் காரணமாகியிருக்கிறது. மூத்த சகோதரராக வரும் Paul Schneider-ன் நடிப்பு மிக பிரமாதமாக இருக்கிறது. தன்னுடைய சகோதரன் ஒரு பொம்மையைக் கொண்டு வந்து மனைவி என்றவுடன் வரும் கோபத்தையும் அதனை ஒரு நபராக கருதி இயங்க வேண்டிய கட்டாயத்தையும் சகோதரனை சிறுவயதில் தனிமையில் விட்ட குற்ற உணர்ச்சியையும் சிறப்பான முகபாவங்களால் வெளிப்படுத்தியிருக்கிறார். binca-வையும் சகோதரனின் பைத்தியக்காரத்தனத்தையும் கண்டு இவர் நெளியும் போதெல்லாம் நமக்கு சிரிப்பு வருகிறது. இவரின் மனைவியாக வரும் Emily Mortimer-ம் சிறப்பாக நடித்திருக்கிறார்.

Nancy Oliver-ன் அற்புதமான திரைக்கதையை எந்தவித அதிகப்பிரசங்கத்தனமுமில்லாமல் தெளிந்த நீரோடை போல் இயக்கியிருக்கிறார் Craig Gillespie. 2007-ல் வெளியான இந்த அமெரிக்கத்திரைப்படம் ஆஸ்கர் உட்பட பல திரைப்பட விழாக்களில் போட்டிக்கு தேர்வாகியும் சில விழாக்களில் வெற்றியும் பெற்றிருக்கிறது. Ryan Gosling சிறந்த நடிகருக்கான பரிந்துரையை பல போட்டிகளில் பெற்றிருக்கிறார்.

இந்தப்படத்தின் மிக உருக்கமான முடிவை என்னால் யூகிக்கவே இயலவில்லை. படத்தின் மிக மென்மையான பின்னணி இசையும் ரம்மியமான லொக்கேஷன்களும் பல இடங்களில் பரவத்தை ஏற்படுத்துகிறது.

அவசியம் பாருங்கள்.


suresh kannan

14 comments:

  1. பரிந்துரைக்கு நன்றி.தரவிறக்கம் தொடங்கியாகி விட்டது. பார்த்துவிட்டு பின்னூட்டுகிறேன்.

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம். படம் பார்க்கும் ஆவலை தூண்டியது. இந்த வாரமே நூலகத்திலிருந்து எடுத்து பார்த்து விடுகிறேன்... நன்றி...

    ReplyDelete
  3. Did you watch 'No Country for Old Men'?

    ReplyDelete
  4. //அணுகி டோரண்ட் பைலைப் பெற்றேன். //

    டோரண்ட் மூலம் படங்கள் தரவிறக்கிப் பார்ப்பது காபிரைட் இன்ப்ரின்ஜ்மெண்ட் என்பது கூடவா உங்களுக்குத் தெரியாது? திருட்டு டிவிடியில் படத்தைப் பார்த்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது போலத்தான் இதுவும். அடக் கொடுமையே!

    ReplyDelete
  5. சுரேஷ்,
    எங்கேயிருந்து தரவிறக்கணும் ? லிங்க் கொடுங்க (மின்மடலில்). படத்தில் sub-titles உள்ளதா ? விமர்சனத்திற்கு நன்றி.
    எ.அ.பாலா

    ReplyDelete
  6. சுரேஷ்,
    எங்கேயிருந்து தரவிறக்கணும் ? லிங்க் கொடுங்க (மின்மடலில்). படத்தில் sub-titles உள்ளதா ? விமர்சனத்திற்கு நன்றி.
    எ.அ.பாலா

    ReplyDelete
  7. நானும் நிச்சயம் பார்க்கிறேன் சுரேஷ் ஸார்..

    விமர்சனத்தின் மூலம் வெளிப்படுத்தியமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  8. பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி.

    //Did you watch 'No Country for Old Men'?//

    yest i watched.



    //எங்கேயிருந்து தரவிறக்கணும் ? //

    http://www.mininova.org/

    படத்தின் பெயரை இட்டு இங்கு தேடினால் கிடைக்கும். பெரும்பாலான படங்கள் அதற்குண்டான சப்-டைட்டிலோடே கிடைக்கிறது. இல்லையென்றால் சப்-டைட்டில் தரும் இம்மாதிரி தளங்களில் (http://www.all4divx.com/) பெறலாம்.

    ReplyDelete
  9. //காபிரைட் இன்ப்ரின்ஜ்மெண்ட்//

    Sridar Narayanan,

    இப்படி 'அந்நியன்' மாதிரி கேள்வி கேட்டால் என்ன செய்வது? :-)

    நீங்கள் கேட்டிருப்பது குறித்து எவ்வகையிலும் என் தரப்பை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. இது நிச்சயம் தவறுதான். என்ன செய்வது? சில படங்களை கடைகளில் தேடினாலும் கிடைக்காது.

    அப்படியே நான் காசு கொடுத்து வாங்கும் படங்களும் பர்மா பஜாரின் pirated version-தான். இவ்விஷயத்தில் (பல விஷயத்திலும்) நிச்சயம் நான் யோக்கியனில்லை. :-)

    ReplyDelete
  10. ஸ்ரீதர் நாராயணன்,
    நீங்க எந்த வகையிலாவது காந்தி ஐயாவுக்கு உறவா ? :)

    ReplyDelete
  11. try isohunt.com
    yes, it has subtitles.

    ReplyDelete
  12. ////Did you watch 'No Country for Old Men'?//

    yest i watched. //

    Well, how about a review?

    ReplyDelete
  13. நிச்சயம் பார்த்து விடுகிறேன்.

    நல்ல படத்திற்கும், விமர்சனத்திற்கும் நன்றி!

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  14. சுரேஷ் / பாலா,

    பர்மா பஜாரில் கிடைக்கிறதெல்லாம் சரிதான். ஆனால் ரெய்ட் நடந்தால் சுவடே இல்லாமல் கடையை காலிசெய்து வேறு இடத்திற்கு போய்விடுவார்கள். நிழலான காரியங்களுக்கு உங்கள் பதிவுகளில் தொடுப்புகளை தவிர்ப்பது நலம். Napster பிரச்சினை வந்தபோது பலரும் தங்கள் footprints-ஐ அழிக்க மிகவும் கஷ்டபட்டார்கள். அதைத்தான் சொன்னேன்.

    மேலும் விவரங்களுக்கு இங்கே பாருங்கள்

    ReplyDelete