கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அண்ணாசாலை, தேவநேயப் பாவாணர் நூல்நிலைய கட்டிடடத்திற்குள் நுழையும் போது வியப்பும் அச்சமும் ஏற்பட்டது. நான் வழக்கமாகச் செல்லும் நூல்நிலைய கட்டிடம் என்றாலும் ஜெயலலிதாவின் பிரம்மாண்ட புகைப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனரை பார்த்தவுடனே 'எது செய்தாலும் கருணாநிதிக்கு போட்டியாக செயல்படுகிற ஜெயலலிதா, ஒருவேளை தமிழிலக்கியத்திற்குள்ளும் குதித்து சு.ரா. கூட்டத்திற்கு தலைமை தாங்கப் புறப்பட்டு விட்டாரோ, என்னடா இது இலக்கியத்திற்கு வந்த சோதனை. இப்படியே கிளம்பி விடலாமா' என்றெல்லாம் தோன்றியது. நல்ல வேளையாக அப்படியெல்லாம் இல்லை. வேறு ஏதோ கூட்டத்திற்குண்டான பேனர்களை இங்கே வைத்திருந்தனர்.
நான் படியில் ஏறிக் கொண்டிருக்கும் போது சாருநிவேதிதா இறங்கி வந்துக் கொண்டிருந்தார். அறிமுகப்படுத்திக் கொண்டு பேசலாமா என்றெழுந்த எண்ணத்தை ஏனோ மாற்றிக் கொண்டு மேலே சென்றேன். ஏற்கெனவே கணிசமான அளவில் பார்வையாளர் வந்திருந்தார்கள். நான் அமரும் போது மனுஷ்யபுத்திரன் தன் வழக்கப்படி, எழுதி எடுத்து வந்திருந்த உரையை வாசித்து முடித்திருந்தார். சில பேச்சாளர்கள் பேசும் போது செய்யும் கோணங்கித்தனங்களும் நாடக காட்சிகளும் இதனால் தவிர்க்கப்படும் என்பதால் அவர்களுக்கு இந்த முறையை கட்டாயப்படுத்தலாம் என்று தோன்றியது. (இந்த இடத்தில் மனுஷ்யபுத்திரனின் எழுத்து நடையை குறிப்பிட வேண்டும். அவரின் கவிதைகளை விட உரைநடையையே நான் பெரிதும் விரும்புவேன். சொற்களின் லாகவமான கவித்துவமான கட்டமைப்பும் உள்ளடக்கத்தை சிதறாமல் கோர்வையாக தெரிவிக்கும் பாணியும் எப்போதும் என்னை பொறாமை கொள்ள வைக்கும்.)
பின்னர் ஜெயமோகன் எழுதிய 'நினைவின் நதியில்' என்கிற சுராவைப் பற்றின நூலை ஜெயகாந்தன் வெளியிட பாலுமகேந்திரா பெற்றுக் கொண்டார். (பேச்சாளர்கள் பேசியவற்றில் என் நினைவில் தங்கிய பகுதிகளை மட்டும் இங்கே தருகிறேன். இதில் ஏதேனும் கருத்துப் பிழையோ, தகவல் பிழையோ நேருமாயின் அது என் குற்றமாகும். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே செல்வதை தவிர்க்கும் நான், மிகவும் விரும்பி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன் என்றாலும் அப்போது நான் ஏனோ உற்சாகமான மனநிலையில் இல்லை. சுரமும், ஜலதோஷமும் என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தனாலும் இது ஏற்பட்டிருக்கலாம்.)
முதலில் பேசிய பாலுமகேந்திரா, தாம் சு.ராவின் தீவிர ரசிகன் என்றும், ஒரு தொலைக்காட்சிக்காக பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை படமாக்கின போது அந்த சிறுகதை எழுதப்பட்ட முறையை விட தாம் சிறந்த முறையில் அதை படமாக்கினது குறித்து உள்ளூர கர்வப்பட்டதாகவும், ஆனால் சு.ராவின் சிறுகதையை படமாக்கின போது அவ்வாறு திருப்தியடைய முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டார்.
பின்பு மலையாளத்தில் பேசிய 'கல்பற்றா நாராயணனின்' உரையை ஜெயமோகன் மொழிபெயர்த்து வாசித்தார். (இந்த நேரத்தில் நான் வெளியே அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கடைகளில் சிற்றிதழ்களை வாங்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்). அதன் பிறகு 'கூத்துப் பட்டறை' ந.முத்துசாமி சுராவுடனான அவருடைய அனுபவங்களை பார்வையாளர்களை சோர்வடைய வைக்கும் வகையில் சுவாரசியமின்றி பேசிக் கொண்டே போனார்.
கவிஞரும் சிறுகதை மற்றும் நாவலாசிரியருமான யுவன் சந்திரசேகர், தாம் முன்பு அவ்வப்போது கவிதைளை எழுதி நண்பர்களிடம் படிக்கத் தருவதாகவும், ஆனால் சு.ராவை சந்திக்கச் செல்லும் போது தன் கவிதையை அவரிடம் காட்ட தைரியமில்லாமல் செல்வதாகவும் கூறினார். ஒரு கவிதையின் முடிவில் தபால் விலாசம் வருமாறு எழுதினதை சுராவிடம் தயக்கத்தோடு 'இது சரியா' என அபிப்ராயம் கேட்க 'ஓ பேஷா செய்யலாமே. இதுவரைக்கும் தபால் விலாசத்தோடு கவிதை எழுதலாம்-னு எனக்குத் தோணலை. இனிமே இந்த மாதிரி இதுவரைக்கும் வராத விஷயங்களோடு எழுதலாம்னு தோணியிருக்கே' என்று பதில் வந்ததாம்.
நாஞ்சில் நாடனின் பேச்சு இயல்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. 'எவனொருவரிடம் நீ செல்வதற்கு மரியாதையுடன் கூடிய அச்சமும் தயக்கமும் கொள்கிறாயோ அவரே உனக்கு குருவாக இருக்க லாயக்கானவர்' என்கிற ஜக்கி வாசுதேவின் கூற்றுப்படி தாம் அவ்வாறு உணர்கிற இரண்டு எழுத்தாளர்களாக சு.ரா.வையும் ஜெயகாந்தனையும் குறிப்பிட்டார்.
பிரபஞ்சன் பேச ஆரம்பித்ததும் கூட்டம் இறுக்கம் தளர்ந்து கலகலப்பானது. அவருடைய தோழமையான பேச்சை எப்போதுமே நான் ரசிப்பேன். மெலிதான குரலில் 'நண்பர்களே' என்று ஆரம்பித்து கூட்டத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கச் செய்வதில் வல்லவர். எழுத்தில் மட்டுமல்ல பேச்சிலும் சிறந்த கதை சொல்லி. சு.ராவின் 'பிரசாதம்' என்கிற கதையை சிரிக்கச் சிரிக்கச் சொன்னார். ஆனால் எப்போதோ படிக்கும் போது பிடித்த கதை, இப்போதைய வாசிப்பில் தன்னை கவரவில்லை என்றார். 'சு.ரா இறந்து போனாலும் அவரின் எழுத்துக்கள் நம்மோடு இருக்கும்' என்றும் 'கூர்மையான எழுத்தின் மூலம் அவரை கடந்து செல்வதே நாம் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்' என்றார்.
"சு.ரா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடனேயே ஜெயமோகன் பேனாவை எடுத்து விட்டார் போலிருக்கிறது" என்று அதிரடியான நகைச்சுவையுடன் ஆரம்பித்த ஜெயகாந்தன், அவர் சு.ராவைப் பற்றி இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என்றும் சு.ராவின் இடத்தை நிரப்ப வேண்டும் என்றும் கூறினார். பின்பு இளமைக்காலங்களில் சு.ராவோடு அளவளாவின சுவாரசியமான சம்பவங்களையும் இருவரும் எழுத்தாளர் மாநாட்டுக்கு நண்பர்களோடு சென்றதையும், நாகர்கோவிலில் சு.ராவின் இல்லத்திற்கு சென்ற போது அவரின் வசதியான வாழ்க்கையை பார்த்ததும் ஜெயகாந்தனுக்கு தோன்றியது இதுதான். 'இவர் ஏன் எழுதறார்?'
அவர் மேலும் பேசும் போது "சு.ரா காலமாகி விட்டதாக சொல்கிறார்கள். காலம் என்றால் என்ன? எப்போதும் இருப்பது. சு.ரா எப்போதும் இருப்பார் என்று சொல்லி முடித்துக் கொண்டார்.
ஜெயமோகன், தாம் எழுதின நூலைப் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு கூட்டம் நிறைவு பெற்றது.
()
துக்கம் ஊதுவத்திப் புகையை போல சுழன்று கொண்டிருக்குமோ அல்லது யாராவது கைக்குட்டையால் கண்களை துடைத்துக் கொள்வார்களோ அல்லது ஏதாவதொரு பாசாங்கான நாடகத்தை சகித்துக் கொள்ள வேண்டியிருக்குமோ என்றெல்லாம் பயந்து கொண்டிருந்த எனக்கு அவ்வாறெல்லாம் இல்லாமல் கூட்டம் இயல்பாக முடிந்ததில் திருப்தியே. எந்தவொரு நூல் வெளியீட்டிலும் சம்பந்தப்பட்ட நூலை வாங்கிப் பழக்கப்பட்டிராத நான் ஜெயமோகன் எழுதிய 'நினைவின் நதியில்' என்கிற நூலை வாங்கி இரண்டே அமர்வில் படித்து முடித்தேன். (இந்த நூலைப் பற்றி பின்வரும் நாட்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)
நான் உயிர்மை கட்டுரையைப் படித்தேன். எனக்குப் பிடிக்கவில்லை.
ReplyDelete'காற்றில் கலந்த பெருங்காயம்' என்று தன் புத்தகத்துக்கு ஜெயமோகன் பெயரிட்டிருக்கலாம்.
சுந்தர ராமசாமி மீது நல்லதாக இரண்டு, உள்ளூர விஷமம் உள்ளதாக இரண்டு என்று மாற்றி மாற்றி எழுதியது போலத்தான் தெரிகிறது.
பல இடங்களில் தேவைக்கு அதிகமான ஹீரோ வொர்ஷிப். ஆளைப் பார்த்து "அழகன்யா" என்று சொல்வதெல்லாம் இதில்தான் சேர்த்தி...
சாரு நிவேதிதா சொன்னதைப் போலத்தான் எனக்கும் தோன்றியது.
"சுந்தர ராமசாமியின் மரணத்தினால் பதற்றமுறாத நான், தமிழ் எழுத்தாளர்கள் அவரது மரணத்தை எதிர்கொண்ட விதத்தைக் கண்டு மிகுந்த பதற்றமடைந்தேன். ஒரு அரசியல் தலைவர் அல்லது சினிமா நடிகரின் மறைவையே அது எனக்கு ஞாபகப்படுத்தியது."
கூட்டத்தை நன்றாகப் பதிவு செய்துள்ளீர்கள். நூலைப் பற்றி உங்கள் விமரிசனம் அறிய ஆவலாயிருக்கிறேன்
ReplyDeleteகவிஞரும் சிறுகதை மற்றும் நாவலாசிரியருமான யுவன் சந்திரசேகர், தாம் முன்பு அவ்வப்போது கவிதைளை எழுதி நண்பர்களிடம் படிக்கத் தருவதாகவும், ஆனால் சு.ராவை சந்திக்கச் செல்லும் போது தன் கவிதையை அவரிடம் காட்ட தைரியமில்லாமல் செல்வதாகவும் கூறினார். ஒரு கவிதையின் முடிவில் தபால் விலாசம் வருமாறு எழுதினதை சுராவிடம் தயக்கத்தோடு 'இது சரியா' என அபிப்ராயம் கேட்க 'ஓ பேஷா செய்யலாமே. இதுவரைக்கும் தபால் விலாசத்தோடு கவிதை எழுதலாம்-னு எனக்குத் தோணலை. இனிமே இந்த மாதிரி இதுவரைக்கும் வராத விஷயங்களோடு எழுதலாம்னு தோணியிருக்கே' என்று பதில் வந்ததாம்.
ReplyDeleteReally funny.Yuvan it is a pen name . Perhaps he could have
hired a P.O.Box and put the
address with P.O.box.Or give
a contact fax no. These
days an email address would
do.
'காற்றில் கலந்த பெருங்காயம்'
ReplyDeletevengayam :)
Thanks for the Report.
ReplyDeleteM.K.
தீராநதியில் லக்ஷ்மி மணிவண்ணனின் எதிர்வினை படியுங்கள். என் முடிவும் அதே அதே.
ReplyDeleteஅன்பின் சுரேஷ் கண்ணன்,
ReplyDeleteபகிர்தலுக்கு நன்றி.
>
> நான் படியில் ஏறிக் கொண்டிருக்கும் போது சாருநிவேதிதா இறங்கி வந்துக் கொண்டிருந்தார்.
> அறிமுகப்படுத்திக் கொண்டு பேசலாமா என்றெழுந்த எண்ணத்தை ஏனோ மாற்றிக் கொண்டு மேலே சென்றேன்.
அதானே... ஏனோ?
> 'எவனொருவரிடம் நீ செல்வதற்கு மரியாதையுடன் கூடிய அச்சமும் தயக்கமும் கொள்கிறாயோ அவரே உனக்கு
> குருவாக இருக்க லாயக்கானவர்' என்கிற ஜக்கி வாசுதேவின் கூற்றுப்படி
முதன்முதலாக இதை அறிந்து கொள்கிறேன். நன்றி.
> காலம் என்றால் என்ன? எப்போதும் இருப்பது.
தூள்.
கோணல் பக்கங்களில் சாரு நிவேதிதா "எம்ஜியாரும் சுந்தர ராமசாமியும்" என்று ஒரு கட்டுரை
எழுதியிருக்கிறார். சுட்டி இதோ: http://www.charuonline.com/kp172.html
உண்மையைச் சொல்லவேண்டுமானால், அவர் எழுதியவற்றில் வெகுசில கருத்துகளைத் தவிர வேறு எதையும் மறுத்து
நினைக்க முடியவில்லை. குறிப்பாக சு.ரா.வின் வாரிசாக அறியப்படுகிற ஜெயமோகனைப் பற்றியும் அவர்
எப்படி முன்னிறுத்தப்படுகிறார் என்பதைப் பற்றியும் சாரு குறிப்பிட்டிருப்பது கட்டுரையின் குறிப்பிடத் தகுந்த
பகுதி. என்னுள் சிந்தனையைத் தூண்டிய பகுதி. உண்மை சுடும் என்று படித்திருக்கிறோம். இக்கட்டுரையைப்
படித்தபோது சுட்டது. நான் கண்ட ஒரே குறை "யாரும் முழுமையில்லை. எல்லாரிடமும் குறைகள் இருக்கின்றன.
நல்ல உறவுகளுக்கு அடிப்படை Accept the people as they are" என்பதைச் சாரு
புரிந்துகொள்ளாமலேயே சில விஷயங்களை எதிர்கொள்கிறாரோ என்பதே. அவர் புரிந்து கொண்டிருக்கலாம் -
ஆனால் அதை மீறிய அவரது கோபம் அவரது புரிந்துகொள்ளலை அமுக்கி வெளிப்படாமல் செய்கிறது என்பது
எனது ஆதங்கம்.
நன்றி.
அன்புடன்
சுந்தர்.
சுரேஷ் நல்ல பதிவு ..புத்தகத்தை பற்றிய உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.
ReplyDeleteநன்றாக பதிந்து உள்ளீர்கள்.
ReplyDeleteநானும் உங்கள் விமர்சனத்தை படிக்க காத்து இருக்கிறேன்.
மிக்க நன்றி
மயிலாடுதுறை சிவா...
நன்றி சுரேஷ். வாசக அனுபவம் தயார் ஆயிடுச்சா?
ReplyDeleteNice Post. Expecting your view about Jayamohan's book.
ReplyDelete- Balaji
இணையத்தில் எங்கேயாவது யாராவது ஜெயமோகனை விமர்சிக்கிறார்களா? அங்கே போய் நாமும் சேர்ந்து கொண்டு திட்டுவோம் என்று மோப்பம் பிடித்தபடி அலையும் அன்பர் ரவி சீனிவாசன், இங்கு சு.ரா.வை "காற்றில் கலந்த வெங்காயம்" என்.கிறார்....இதிலிருந்து அவருக்கு சு.ரா. மேல் நல்ல அபிப்ராயம் இல்லை என்பது தெரிகிறது..இதே கசப்புணர்வு ஜெயமோகனுக்கும் உள்ளது என அறிகிறேன்..அது சு.ரா. தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் நடந்து கொண்ட விதத்தினால் இருக்கலாம்.இதே உணர்வை வேறு பல எழுத்தாளர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ReplyDeleteஆனால் எனக்குத்தெரிந்து ஜெ.மோ. தன் எழுத்தாற்றலை மற்றவர் மேல் கசப்பைக் கொட்ட உபயோகித்ததில்லை.சு.ரா. பற்றி அவர் எழுதி உள்ள கட்டுரை ஆத்மார்த்தமானது என்றே எனக்குப் புரிகிறது..சுரா-வின் அருகில் இருந்து அவரை உணர்ந்தறியாத வாசகர் மனதில் அவரைப் பற்றிய ஒரு அந்தரங்கமான சித்திரத்தை அது நிச்சயம் எழுப்பும்..சுரா-வின் குறைகளையும், பிரச்னைகளையும் ஜெமோ சேர்த்து எழுதி இருந்தாலும் அக்கட்டுரையை படித்து முடித்ததும் சுரா ஒரு மிகப்பெரிய ஆளுமை என்பதாகத்தான் நான் உணர்ந்தேன்..
மறைந்த ஒரு மனிதனின் நிறை, குறைகளை அந்தரங்க சுத்தியோடு படிப்பவர் மனம் நெகிழும் வகையில் எழுத்தில் கொணர்வது ஒன்றும் சாரு நிவேதிதா, ரவி சீனிவாசனைப் போல் குரூரமாக நகைச்சுவை செய்வதைக் காட்டிலும் மோசமானதல்ல என்றே நான் நம்புகிறேன்.
சுரா-வை தமிழிலக்கிய எழுத்தாளன்/வாசகன் ஏன் உணர்ந்தறிய வேண்டும்? ஏன் இவ்வளவு துக்கம் கொண்டாட வேண்டும்? துக்கம் கொண்டாட நாட்டில் வேறு சாவுகளே இல்லையா என சாரு கேட்கிறார்...இவ்வாறு கேட்கும் அவரிடம் "சாரு, நீ ஏன் குடிக்கிறாய்?" என்று கேட்டால் எப்படி பல நாட்டு கலாச்சாரங்களையும், இலக்கியங்களையும் துணக்கழைத்து திட்டித் தீர்ப்பாரோ, அதே உரிமை அவர் கேள்வி கேட்பவர்களுக்கும் உண்டு..சுரா-வை நெருக்கமாக உணர்பவர்கள் அவர் சாவுக்கு உணர்ச்சி வசப்படுகிறார்கள்..துக்கிக்கிறார்கள்..அழுகிறார்கள்..இதில் என்ன அசிங்கம்? ஆபாசம் கண்டார்?சுரா மேல் மிகுந்த கசப்புணர்வு கொண்டவர்களில் ஒருவரான மனுஷ்யப்புத்திரன் இவ்வாறு எழுதுகிறார், "எங்களுக்குள் இருந்த பூசல்களைத் தீர்த்துக்கொள்ள சுரா எனக்கு ஒரு சந்தர்ப்பம் அளிப்பார் என் எண்ணியிருந்தேன்..ஆனால் தன் சாவின் மூலம் எல்லா வாசல்களையும் கறாராக மூடிவிட்டுப் போய் விட்டார் சுரா..அவர் சடலம் முன் அமர்ந்து "சாரி சார்..சாரி சார்" என்று கூறியவாறிருந்தேன்...ஒரு மகன், தந்தைக்கு ஆற்றவேண்டிய கடமைகள் என்றுமே பூர்த்தி செய்ய இயலாதவை"..
இந்த எழுத்தில் உள்ள உணர்வுகள் நேசம் போன்றவை சாரு போன்ற "வெறுப்பை உண்டு வாழும் புழுக்களுக்கு" என்றாவது ஒரு நாள் புரிய நேருமா?
சாருவின் பிரச்னை அக்கப்போர்களின் மூலம் தன்னை நிலைநிறுத்துவது...அதற்கு அவர் எந்த நாட்டு இலக்கியத்தின் மொழிபெயர்ப்பை துணைக்கழைத்தாலும் உதவாது..இலக்கியப் படைப்பின் அடிப்படையே அறியாத ஒரு முட்டாள் அவர் என்பது என் தாழ்மையான கருத்து..வெறுமே தன்னை நிலைநிறுத்த ஏன் "cynic" போன்ற கடினமான, மன உளைச்சல் தரும் முகமூடிகளை அவர் அணிய வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை..நல்ல சுவாரசியமாக எழுதும் திறமை உள்ள அவர் விகடன்,குமுதம்,சினிக்கூத்து போன்ற பத்திரிக்கைகளில் தன் எழுத்தைத் தொடங்கி இருந்தால் இன்னொரு ஞாநி போல் வந்திருப்பார்...
ரவி சீனிவாசன் அவர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன்...முன்பு ஜெமோ-வே உங்களுக்குத் திண்ணை-யில் தெரிவித்தது போல முடிந்தால் உங்கள் அறிவை ஆக்கபூர்வ சிந்தனை, செயல்களில் திசைதிருப்பி உருப்படியாக ஏதெனும் எழுத முயலவும்..அதுவே நிலைக்கும்..அக்கப்போர்கள் அடுத்த நாளே மறக்கப்படும்..அதுவன்றி தமிழிலக்கியப் பரப்பில் ஆவி போல அவ்வப்போது ஆங்காங்கே புகுந்து புறப்படுவதுதான் உங்கள் நோக்கம் என்றால்,
வாழ்த்துக்கள்...
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteI removed some of the irrelevant comments in this post.
ReplyDelete- Suresh Kannan
'காற்றில் கலந்த பெருங்காயம்' என்று தன் புத்தகத்துக்கு ஜெயமோகன் பெயரிட்டிருக்கலாம்
ReplyDeleteThese are words of Badri.
'காற்றில் கலந்த பெருங்காயம்'
ReplyDeletevengayam :)
This is by ravi srinivas.
"நினைவில் நதியில்" புத்தகத்தை படித்து முடித்த போது சுராவின் மேல் மரியாதையே தோன்றியது. அவர் விஷயங்களை அலசும் பாணியின் அலாதித்தன்மை குதூகலமூட்டுவதாய் இருந்தது. மேலும் அவரது நகைச்சுவை உணர்வும்.
ReplyDelete