Monday, December 29, 2014

கத்தி - போலி ஆயுதத்தின் வெற்று இரைச்சல்



உலகமயமாக்க காலகட்டத்திற்குப் பிறகு இங்கு சந்தைப் படுத்துதலின் தந்திரங்களும் நுட்பங்களும் இன்னமும் கூர்மை பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களை தாழ்வுணர்வில் அமிழ்த்தியும் பொறாமைப்பட வைத்தும் நெகிழ வைத்தும் உணர்ச்சிவசப்பட வைத்தும் ஆசையை காட்டியும் வணிக வெற்றியைப் பெறும் நுகர்வுக் கலாச்சார உத்திகள் அதன் உச்சத்தை அடைந்துள்ளன. அடித்தட்டு மக்களின் வாழ்வியல் பிரச்சினைகள், முதலாளித்துவமும் அதிகார வர்க்கமும் ஆதாய அரசியலும் அச்சமூகத்தின் மீது நிகழ்த்தும் கூட்டு வன்கலவிகள், சாதியக் கொடுமைகள், உழைப்புச் சுரண்டல்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளைப் பற்றி உரையாடுவதற்கும் கூட சந்தை மதிப்பும் வணிக ஆதாயமும் உள்ளன. தமிழ் சினிமா இந்த கச்சாப் பொருளை நுட்பமாக கைப்பற்றியே பல ஆண்டுகள் ஆகி விட்டது.

சந்தைப்படுத்துவதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் ஒரு முக்கியமான விஷயம், ஒரு வர்த்தக்குறியின் படிமத்தை வலுவானதாகவும் நிலையானதாகவும் நம்பகத்தன்மையுடையவதாகவும நிறுவுவதும் பரப்புவதும். அறிந்தோ அறியாமலோ இந்த விஷயத்தை தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் அவரது பயணத்தின் துவக்கத்திலிருந்தே மிகத் திறமையாக செயல்படுத்தினார். தன்னை ஏழைகளின் அவதார புருஷராகவும் பெண்களின் பாதுகாவலராகவும் எவ்வித குணக்கேடுகளும் அல்லாத கனவானாகவும் திரையில் சித்தரித்துக் கொண்டதை உண்மை என்றே மக்கள் நம்பினார்கள். இதன் மூலம் அதிகாரத்தையும் கைப்பற்றி தன்னுடைய பிம்பத்தை பெரும்பாலும் எவ்வித சேதங்களும் அல்லாமல் கடைசி வரையிலும் பாதுகாத்துக் கொள்ள அவரால் முடிந்தது. சினிமாவிற்கும் அரசியலுக்குமான இந்தப் பாலத்தில் வெற்றிகரமான பயணத்தை நிகழ்த்தின அவரின் உதாரணத்தை குறுகிய கால பகற்கனவுகளுடன் பின்பற்ற விரும்பிய பல நடிகர்கள் பாலத்தில் தடுக்கி படுகுழியில் விழுந்த உதாரணங்களையும் பார்க்கிறோம்.

இச்சமூகத்தின் பெரும்பான்மையான சதவீதம் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களைக் கொண்டிருப்பதால் தங்களின் வாடிக்கையாளர்களின் சராசரி மனநிலையை  திருப்திப்படுத்தவும் சுகமாக சொறிந்து தருவதற்கு ஏற்றபடிதான்  பெரும்பாலான தமிழ் சினிமாக்களின் கதையுருவாக்கங்களும் காட்சிகளும் அமைந்துள்ளன. சாலையில் நொண்டிக் கொண்டே வரும் ஒரு ஏழைப் பெண்ணை காரில் வரும் பணக்கார இளைஞன் அகம்பாவத்தோடு இடித்து தள்ளி விட்டு திமிராகப் பேசுவதையும் அங்கு வரும் நாயகன் பணக்கார இளைஞனை தண்டித்து ஏழைப் பெண்ணைக் காப்பாற்றும் காட்சிகளை பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். பணக்காரர்கள் என்றாலே கெட்டவர்கள், திமிர் பிடித்தவர்கள், சமூகக் கேடர்கள் எனும் பொதுமனநிலையின் பிம்பத்தை தமிழ் சினிமாவும் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எல்லா சமூகத்திலும் எல்லா குணாதிசயங்களுடன் கூடிய கலவையில்தான் மனிதர்கள் இருப்பார்கள் என்கிற யதார்த்த உண்மையை மறைக்கிறது. ஏழைகள் நல்லவர்கள், பணக்காரர்கள் கெட்டவர்கள் என்கிற எளிமையான சூத்திரத்தை தொடர்ந்து நிறுவுகிறது. ஆனால் வர்க்க ரீதியாக கீழே இருப்பவர்கள் ஒரு புறம் பணக்காரர்களை பொறாமையுடன் திட்டிக் கொண்டே ஆனால் அடைய விரும்பும் இடம் எதுவென்று பார்த்தால் அது பணக்காரர்களின் இடமாகத்தான் இருக்கிறது. புரிந்து கொள்ளக்கூடிய மிக இயல்பான முரண்தான் இது.

அடித்தட்டு சமூகத்தை சேர்ந்த நாயகன் எதிர்ப்பதற்கு உயர்தட்டு சமூகத்தை சேர்ந்த ஒரு வில்லன் வேண்டும். திமிர்பிடித்த பண்ணையார்களை எதிர்க்கும்  விவசாயி எம்.ஜி.ஆர் காலம் தொட்டே இந்த வடிவம் மாறவில்லை. இந்த 'வில்லன்' வடிவம் 'கார்ப்பரேட் கம்பெனி அதிபர்' என்கிற ஒற்றைத்தன்மை கொண்டதாக இருப்பதின் மூலம் தமிழ் சினிமாவின் வழக்கமான கதையாடலில் இருந்து இம்மியும் பிசகாமல் பயணிக்கிறது, கத்தி திரைப்படம்.

வெகுஜன கதையாடலில் 'சமூகப் பிரச்சினைகளை' பற்றி உரையாடுவதாக பாவனை செய்யும்  இந்த வடிவத்தில் மிகுபுனைவுத் தன்மையைக் கூட்டி நவீன பார்வையாளர்களுக்கு தன்னுடைய திரைப்படத்தை ஒரு கவர்ச்சிகரமான பொட்டலமாக தரும் பாணியை உருவாக்கி அதை வணிகரீதியாக வெற்றிகரமாக்கினவர் ஷங்கர். ஒரு வழக்கமான வெகுஜன திரைப்படத்தின் வார்ப்புருவை விட்டு விலகாமல் ஆனால் சமூகத்தின் முக்கியமான பிரச்சினை ஒன்றை தீவிரமான தொனியில் விவாதிப்பதாக பாவனை செய்யும் திரைப்படங்கள் இவை. முருகதாஸும் ஷங்கரின் நீட்சியாகத்தான் திகழ்கிறார் என்பதை அவரின் பெரும்பாலான திரைப்படங்கள் உணர்த்துகின்றன.  உண்மையில் கீழ்தரமான மசாலா திரைப்படங்களை விட 'சமூகப் பிரச்சினையை உரையாடுவதான' மாயையை ஏற்படுத்தும் இந்த அதிநவீன மசாலாக்கள் ஆபத்தானவை.

ஒரு சமூகத்தின் பொதுமனம் சமகாலத்தில் நிகழும் ஊழல்களையும்  சமூகப் பிரச்சினைகளின் ஊற்றுக் கண்களையும் மெல்ல அவதானித்தபடியே இருக்கிறது. இதன் காரணங்கள் அச்சமூகத்தின் ஆழ்மனங்களில் மெல்ல மெல்ல படிந்த படியே இருக்கின்றன. அதிகாரத்தை எதிர்த்து உரையாட முடியாத இயலாமையின் காரணமாக இந்த அழுத்தங்கள் அடுக்கடுக்காக உள்ளுற உறைந்தபடியே இருக்கின்றன. ஏதாவது ஒரு வலுவான புரட்சிப்புயலின் ஒலியால் கச்சிதமாக தூண்டப்பட்டால் தொகுக்கப்பட்ட இந்த அழுத்தங்கள் இணைந்து ஒரே கணத்தில் வெடித்து விடும் நிலை ஏற்படலாம். அதிகாரத்தை தூக்கியெறிந்த மக்கள் புரட்சியெல்லாம் அப்படித்தான் உருவானதை சர்வதேச வரலாற்று முன்னுதாரணங்களோடு அறிய முடியும். ஆனால் துரதிர்ஷ்டமாக நம் சூழலில் அவ்வாறான முன்னுதாரணங்கள் பெரிதாக இல்லையென்பதால் தேர்தல் காலங்களில் மாத்திரமே ஒரு மெளன கோபமாக இந்த அழுத்தங்கள் வெளிப்படுகின்றன . 'என்ன அநியாயம் சார்?' என்று பேருந்துப் பயணங்களின் போது நிகழும் அன்றாட உரையாடல்களில் மெல்ல மெல்ல கசிகின்றன.

சமூகப்பிரச்சினைகளைப் பற்றி உரையாடுவதாக பாவனை செய்யும் இது போன்ற திரைப்படங்களும் அந்த அழுத்தங்களை விடுவிக்கும் பணியைத்தான் செய்கின்றன. கொதிநிலையில் இருக்கும் ஒரு குக்கரின் மூடியைத் திறந்து விடுவது போல. தம்முடைய மனதின் கோபங்களுக்கான வடிகால்களை திரையில் சந்திக்கும் பார்வையாளன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதன் மூலம் இந்த அழுத்தங்களிலிருந்து சற்று விடுபடுகிறான். பிரச்சினையின் குவிமையத்தை நோக்கி அவன் கவனம் நகர்வதை தடுத்து போதைப் பொருளிலிருந்து கிடைக்கும் தற்காலிக நிவாரணம் போன்றதொரு நிலையை இம்மாதிரியான திரைப்படங்கள் தருகின்றன. ஒரு சமூகத்தில் இம்மாதிரியான போதை விஷயங்கள்தான் மக்களை புரட்சியைச் சிந்திக்காத மந்தநிலையை ஏற்படுத்தி அதிகார சக்திகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவாக இயங்குகின்றன.

()

விஜய் திரைப்படங்களின் வழக்கமான வார்ப்புருவோடுதான் இயங்குகிறது கத்தி. ஆனால் கூடுதலாக விவசாயிகளின் பிரச்சினையைப் பற்றி உரையாடுவதான பாவனையைக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொள்வது பற்றியும் அவர்களின் கடன்சுமைகள் பற்றியும் நாயகன் ஐந்து நிமிடம் ஆவேசமாக உரையாற்றுவதோடு இந்தக் காட்சி நகர்ந்து விடுகிறது. மீதமெல்லாம் அவனின் சாகசங்களும் கும்மாளங்களும்தான்.  விவசாயிகளின் இந்தப் பிரச்சினைக்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் அதிபரை வில்லனாக்குவதன் மூலம்தான் படம் இயங்குகிறது. இதற்குக் காரணம் பன்னாட்டு நிறுவனங்கள் மாத்திரம்தானா?

தேசிய குற்ற ஆவண காப்பகம்  (National Crime Records Bureau) 2013ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரத்தி்ன்படி 1995 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் சுமார் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தொன்னூறுகளில் திடீரென்று அதிகரிப்பதற்கு துவக்கப்புள்ளியாய் அமைந்தது விதர்பாவின் பருத்தி விவசாயிகளின் தற்கொலைகள்.  அரசின் தாராளமயமாக்க பொருளாதாரக் கொள்கையின் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் அப்போது உள்ளே நுழைந்தன. மரபணு மாற்ற விதைகள் மூலம் அதிக உற்பத்தி பெறலாம் என்று ஆசை காட்டி பாரம்பரிய நிலங்களின் வளத்தை அழித்து காப்புரிமை பெற்ற விதைகளை வாங்க வேண்டியதின் மூலம் விவசாயிகள் மேலும் கடன் வாங்கி பொருளாதார நிலையில் நசிந்து நெருக்கடியும் கடன்சுமையும் தாங்காமல் அவர்களை தற்கொலை செய்து கொள்ள வைத்தன. இன்னொருபுறம் அவர்களின் விளைநிலங்களை ஆசைகாட்டியும் மிரட்டியும் கைப்பற்றி தங்களின் தொழிற்சாலைகளுக்காக பயன்படுத்திக் கொண்டன. நாட்டின் இயற்கை வளங்களை திட்டமிட்டு சுரண்டின. இதை முறைப்படுத்தி தடுக்க வேண்டிய அரசும் அதிகார வர்க்கமும் காவல்துறையும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளாக நின்றதில் நிர்க்கதியான நிலையை விவசாயிகள் அடைந்தனர். விவசாயக் கடன்களுக்காக செய்யப்பட்ட தள்ளுபடிகளும் உண்மையான பயனாளிகளைச் சென்றடையாமல் இடைத்தரகர்களுக்கும் முதலாளிகளுக்குமே சென்றது. தங்களின் உற்பத்திப் பொருட்களுக்கான நியாயமான முறையிலான லாபத்தைப் பெற முடியாமல் இடையில் நிற்கும் வணிகர்கள் கொள்ளையடித்தனர். வறுமை தாங்காமல் நிலங்களை விற்று விவசாயிகள் என்கிற நிலையிலிருந்து விவசாயத் தொழிலாளிகளாக மாறினார்கள். இன்னும் பலர் விவசாயத்தைக் கைவிட்டு  நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து கூலித் தொழிலாளிகளாக ஆனார்கள். ஆக.. அரசின் தவறான விவசாயக் கொள்கைகள், கட்டுப்படுத்த முடியாத இடைத்தரகர்களின் கொள்ளை லாபம், அதை முறைப்படுத்த தவறிய அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகளின் ஊழல்களும் அலட்சியமும், இதற்குப் பின்னணியில் நிழலாக இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகிவற்றின் கூட்டுக்கலவிக்குப் பலியானதுதான் விவசாயிகளின் வீழ்ச்சி.

பன்முக பரிமாணங்கள் கொண்ட இந்த விவசாயிகள் பிரச்சினையை ஒரு கார்ப்பரேட் வில்லனிடம் சண்டையிட்டு ஜெயிப்பதின் மூலம் தீர்த்துவிட முடியும் என்கிற எளிய தீர்வின் மூலம் இதை மலினப்படுத்தியுள்ளது கத்தி திரைப்படம். வெகுஜன கதையாடலின் மூலம் ஒரு சமூகப் பிரச்சினையை அணுகுவது தவறா, வெறுமனே மசாலா திரைப்படத்தை விட அதன் இடையே ஒரு சமூகப்பிரச்சினையை உரையாடுவது மேலானதுதானே என்கிற கேள்வி எழலாம். ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஒரு வழமையான வணிகதிரைப்படத்தை விட சமூகப் பிரச்சினையை தீவிரமாக உரையாடுவதாக செய்யும் பாவனை மூலம் அதை நீர்த்துப் போகவும் திசை திருப்பவும் செய்யும் இம்மாதிரியான திரைப்படங்கள் தவறானவை. மேலும் இந்த இயக்குநர்களுக்கு சமூகப் பிரச்சனை என்பது அவர்களது கதையாடலுக்கான ஒரு கச்சாப் பொருள், அவ்வளவே. விவசாயிகளின் பிரச்சினையைப் பேசுகிறேன் பேர்வழி என்று இடையில் 'உம்மா' பாடலை சொருகுவது என்பது அப்பட்டமான வணிகத்தனம். மேலும் கத்தி திரைப்படத்தின் தயாரிப்பிற்கு பின் நிற்பது பன்னாட்டு நிறுவனங்கள்தான் என்பதும் ஒரு சுவாரசியமான முரண்நகை. இவைகளிலிருந்தே இம்மாதிரியான திரைப்படங்கள் உருவாக்கப்படும் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

சில வருடங்களுக்கு முன்பு கோக் விளம்பரத்தில் நடித்து பொருளீட்டிய விஜய், இதில் தமிழகத்தின் நீர்வளத்தை கொள்ளையடிக்கும் அதே குளிர்பான நிறுவனத்தைப் பற்றி ஆவேசமாக வசனம் பேசும் இரட்டை நிலையைக் கண்டித்து சில விமர்சன குரல்கள் எழுவது நியாயமே. எல்லாமே தொழில்சார்ந்த நடிப்புதானே என்று இதை எளிதில் கடந்து போக முடியாது. சமூகத்தில் ஒரு கருத்தை பிரபலப்படுத்துவதிலும் அதன் மூலம் மக்களிடம் செல்வாக்கை ஏற்படுத்துவதிலும் நடிகர்களின் குரல்களுக்கு பிரத்யேகமான மதிப்புண்டு. அவர்கள் செயல்படுத்தும் தவறான பிரதிநிதித்துவம் சமூகத்தில் பலவகையான பாதிப்புகளை உருவாக்கலாம். இதை உணரும் தார்மீக பொறுப்பும் பிரக்ஞையும் ஒவ்வொரு பிரதான நடிகருக்கும் இருக்க வேண்டும். கமல், ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் எந்தவொரு வணிகப் பொருளிற்காகவும் விளம்பரங்களில் தோன்றாமலிருப்பதின் மூலம் அதற்க பொதுவில் ஆதரவளிக்காமலும் அதன் அடையாளங்களாக மாறாமல் இருக்கும் காரணத்திற்காகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

2010-ல் Peepli Live என்கிற  இந்தி நகைச்சுவை திரைப்படம் வந்தது. முக்ய பிரதேஷ் எனும் கற்பனையான பிரதேசத்தின் 'பீப்லி' கிராமத்தைச்  சேர்ந்த வறுமையில் வாடும் விவசாய சகோதரர்கள் நத்தா, புதியா. வங்கிக் கடனை அடைக்க முடியாமல் தங்களின் விவசாய நிலம் பறிபோகும் சூழ்நிலையில் உள்ளூர் அரசியல்வாதியிடம் உதவி கேட்டுச் செல்ல, அவனுடைய உதவியாளன் அவர்களைத் தவிர்க்கும் பொருட்டு "தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறது' என்ற பொய் செய்தியை போகிற போக்கில் சொலகிறான்.உடனே அப்பாவியான தம்பி  நத்தா 'தற்கொலை செய்வதென முடிவு எடுக்கிறான். இதை யதேச்சையாக கேள்விப்படும் செய்தி நிறுவனங்கள் அந்தக் கிராமத்தை புயலென சூழ்ந்துகொள்ள தேசம் முழுக்க அந்த தற்கொலை செய்தி பரவுகிறது. விவசாயிகளின் தற்கொலை செய்து கொள்வதற்கான பின்புலத்தை அங்கத நகைச்சுவையாக அணுகினாலும் எங்கும் விலகாமல் அதை மையப்படுத்தியே இத்திரைப்படம் அமைந்திருந்தது. நடிகர் அமீர்கான் இதை தயாரித்திருந்தார். இந்த நகைச்சுவைப் படைப்பு முன்னெடுத்திருந்த தீவிரத் தொனியைக் கூட கத்தி திரைப்படம் கொண்டிருக்கவில்லை என்பதுதான் சோகம். ஆனால் இவை போன்றவைதான் நம் சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களாக இங்கு அறியப்படுவதுதான் மிகப் பெரிய அவல நகைச்சுவை.

suresh kannan

1 comment:

Dwarak R said...

Suresh,
very great and deep writing.

உண்மையா மனசார சொல்கிறேன். உங்கள் கட்டுரைகள் முலம், ஒரு விஷயத்தை எப்படி உற்று, ஆழமாய் சிந்திக்க வேண்டும் என்று நீங்க நிறைய கற்று தந்ததுக்கு மிக்க மிக்க நன்றி. இன்னும் கத்துக்குறேன், நிறைய எழுதுங்க.