Saturday, June 18, 2011

ஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா


பொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினிமாவின் மீதான பிரேமையினால்தான் என்பதை என் பதிவுகளை சரியான தொனியில் வாசிப்பவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். வழக்கமான தமிழ் சினிமாவிலுள்ள அபத்தங்கள் குறித்து  ஆவேசமாக உரையாடியிருக்கிறேன்;  வருத்தப்பட்டிருக்கிறேன் ; அதன் மூலம் ஆபாச வசவுகளை பெற்றிருக்கிறேன். இப்படி எழுதுவது குறித்து சமயங்களில் என் மேலேயே எனக்கு எரிச்சல் உண்டு.

ஆனால் இவைகளிலிருந்து பெரியதொரு விடுதலையை பெற்றுத் தந்திருக்கிறார் ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் இயக்குநரான தியாகராஜன் குமாரராஜா. தமிழ் சினிமாவின் முன்னோடிகள் என்று இதுவரை சொல்லப்பட்டிருப்பவர்கள் அனைவரையும் ஓர் அசுரப் பாய்ச்சலில் தாண்டிச் சென்றிருக்கிறார் இந்த இயக்குநர். சம்பிரதாயமான சொற்களில் அல்லாமல் உண்மையாகவே ஓர் உலக சினிமாவின் இலக்கணங்களுடன் உருவாகியிருக்கிறது ஆரண்ய காண்டம். ஆம். தமிழ் சினிமா சற்று முதிர்ச்சியடைந்து தனது மஞ்சள் நீராட்டு விழாவை கொண்டாடுவதன் மூலம் 'வயதுக்கு வந்ததன்' அடையாளத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. அதை சாத்தியப்படுத்திய தியாகராஜன் குமாரராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

உலக சினிமா என்றாலே, ரத்தம், வன்முறை, ஆபாசம், கெட்ட வார்த்தைகள் போன்றவைகளைக் கொண்டவை என்கிற முன்முடிவுகளோடும் தவறான புரிதல்களோடும் அணுகுகிறவர்கள் உண்டு. ஒரு துளி ரத்தத்தை கூட காண்பிக்காமல் வன்முறையின் உக்கிரத்தையும்  அழகியலையும், ஒரு முத்தம் கூட இல்லாமல் காதலின் அவஸ்தையையும் சித்தரித்திருக்கிற பல உலக சினிமா உதாரணங்களைச் சுட்ட முடியும். ஆரண்ய காண்டம், தான் பயணிக்கிற காட்சிக் கோர்வைகளுக்கு பொருத்தமான தொனியையும் நிறத்தையும் இருண்மையையும் மிகக் கச்சிதமான திரைமொழியையும் கொண்டிருக்கிற காரணத்தினாலேயே இதை சந்தேகமின்றி உலக சினிமா என்று குறிப்பிட முடிகிறது.

இயக்குநர் மகேந்திரன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டதைப் போல தமிழ் சினிமாவில் இருக்குமளவிற்கான நகைச்சுவை நடிகர்கள் வேறெந்த பிரதேச சினிமாவிலும் இருப்பார்களா என்று எனக்கும் தோன்றுவதுண்டு. ஆனால் தமிழில் இதுவரை அசட்டுத்தனமாக அல்லாமல் உருப்படியாக நகைச்சுவைக்கென்றே பிரத்யேக தமிழ் சினிமா ஏதும் வந்திருக்கிறதா என்றால் பாலுமகேந்திராவின் 'சதி லீலாவதி' , பாலச்சந்தரின் பாமா விஜயம், தில்லுமுல்லு போனற ஒரு சில திரைப்படங்களே தோராயமாக நினைவுக்கு வருகின்றன. தமிழில் கிளாசிக் காமெடி என்றால் பலரும் சட்டென்று குறிப்பிடுவது ' காதலிக்க நேரமில்லை'. ஆனால் இதை சில காட்சிகள் தவிர்த்து, முழுமையான திரைப்படமாக எத்தனை முயன்றும் என்னால்  ரசிக்கவே முடியவிலலை.

ஆனால்  'இருண்மை நகைச்சுவை' என்கிற வகைமையில் ஒரு தமிழ்த் திரைப்படம் கூட இது வரை வெளிவரவில்லை என்று சொல்லலாம். ஆரண்ய காண்டம் அந்த அவலத்தை துடைத்தெறிந்திருக்கிறது. ஒருவனின் புட்டத்தில் இன்னொருவன் எட்டி உதைப்பது என்பதையே தமிழ் சினிமாவின் நகைச்சுவையாக பெரும்பாலும் இதுவரை பார்த்து வந்திருக்கிறொம். 'கருப்பு நகைச்சுவை' என்பது தீவிரமான தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் படத்தில் அடியாழமாக ஒரு இழை நகைச்சுவையுடன் ஓடிக் கொண்டிருக்கும். மிகத் தீவிரமாக துவங்கும் காட்சி எதிர்பாராத ஒரு தருணத்தில் நகைச்சுவையாக முடிவது, நகைச்சுவையாக துவங்கும் காட்சி தீவிரத் தன்மையுடன் முடிவது போன்றவை கருப்பு நகைச்சுவையின் சில இயல்புத்தன்மைகள். . Quentin Tarantino, Coen brothers, Guy Ritchie போன்ற இயக்குநர்கள் இதில் விற்பன்னர்கள். இந்த வரிசையில் தமிழிலும் ஓர் இயக்குநர் உண்டு என்பதை பெருமையுடன் குறிப்பிடக்கூடிய ஒரு சாத்தியத்தை தியாகராஜன் குமாரராஜா ஏற்படுத்தியிருக்கிறார்.

முன்னரே குறிப்பிட்டிருந்த படி திரை மொழியை மிகக் கச்சிதமாக கையாண்டிருப்பதின் மூலம் உலக சினிமாவின் அந்தஸ்தை ஆ.கா. எட்டியிருக்கிறது. பெரும்பாலும் கிளிஷேக்களை கைவிட்டிருக்கிற சம்பிராதயமற்ற நான்-லீனியர் திரைக்கதை, நிகழ்வுகளுக்கு பொருத்தமாக, சற்று வெளிச்சமும் பெரும்பாலும் இருளுமான பின்னணியில் இயங்கும் ஒளிப்பதிவு, அட்டகாசமான பின்னணி இசை,  விளிம்பு நிலை சமூகத்தின் பாசாங்கற்ற வசனங்கள்,  டைம் லைனை பெரும்பாலும் கைவிடாத துல்லியமான எடிட்டிங், பொருத்தமான காஸ்டிங்,  பிரக்ஞைபூர்வமாக நிகழ்த்தப்பட்ட இயக்கம்... என்று அனைத்தும் சேர்ந்து வறண்ட பாலைவனத்தின் மழை போல இந்தத் திரைப்படத்தைக் கொண்டாட வைக்கின்றன.

அதற்கும் முன்பாக நாம் பாராட்ட வேண்டியது, இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரை. இங்கு பல தயாரிப்பாளர்களுக்கு சினிமா குறித்த ஆர்வமோ, அறிவோ, கனவுகளோ இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு கோடியைப் போட்டு ஐந்து கோடியை அள்ளி விடும் திட்டத்துடன் எவ்வித சமரசத்தையும் அதற்காக செய்யும் நிலையில் வணிகர்களே இங்கு இருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளர், கதை சொல்ல வந்த புது இயக்குநரிடம் 'உன் ஜாதகத்தை கொண்டு வா, அது என் ஜாதகத்துடன் பொருந்தினால்தான் படம் தயாரிக்க ஒப்புக் கொள்வேன்' என்று கூறிய செய்தியை கேள்விப்பட்ட போது எனக்கு பெரிதாக ஆச்சரியமொன்றும் ஏற்படவில்லை. இதை விட கேனத்தனமான மூடநம்பிக்கைகள் எல்லாம் திரையுலகில் உலவுகின்றன. ஆனால் எஸ்பிபி சரண், சென்னை-28-ன் வெற்றிக்குப் பிறகு இந்த ஸ்கரிப்ட்டை தயாரிக்க முன் வந்தது மாத்திரமன்றி, பட வெளியீட்டின் தாமதத்தைப் பறறி கவலைப்படாமல் அசட்டுத்தனமான சென்சார் விதிகளிடம் போராடி படத்தை அதிக சேதமின்றி மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார். இவருக்குப் பாராட்டுக்கள்.

இந்தப் படத்தின் மிக முக்கியமான விஷயம் நடிகர் தேர்வு. ஒவ்வொரு பாத்திரமும் அதற்கெனவுள்ள பிரத்யேக குணாதியசங்களுடன் கச்சிதமாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்குப் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பது முக்கியமானதாக இருக்கிறது. தமிழின் பல மூத்த நடிகர்கள் நடிக்க மறுத்த வேடத்தை (சிங்கப்பெருமாள்) இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அட்டகாசமாக நடித்திருக்கிறார் ஜாக்கி ஷெராஃப். எந்தவொரு  இடத்திலும் வேற்று பிரதேச நடிகர் என்கிற உணர்வு பார்வையாளனுக்கு வராமலிருப்பதே இந்தப் பாத்திரத்தின் வெற்றி எனலாம். 'சப்பை' என்கிற அசட்டுத்தனமான கோழை இளைஞன் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ரவிகிருஷ்ணா. பசுபதி, கஜேந்திரன், கஜபதி, சிறுவன் கொடுக்காப்புளி, சுப்பு, மயில்வாகனம். என்று ஒவ்வொரு பாத்திரமும் அதனதன் வார்ப்பில் கச்சிதமாக இயங்கி பிரமிப்பை ஏற்படுத்துகிறது.


நான் பிரத்யேகமாக குறிப்பிட்டு அழுத்தமாகச் சொல்ல விரும்புவது வாழ்ந்து கெட்ட ஜமீன் காளையனாக நடித்திருக்கும் சோமசுந்தரம் என்கிற நடிகரைப் பற்றி. இவர் கூத்துப் பட்டறை குழுவின் நடிகர் என அறிகிறேன். பிரேமின் ஓரமாக வந்து போகும் துணைப் பாத்திரம் போல் முதலில் அறிமுகமாகி, பின்பு ஒவ்வொரு பிரேமிலும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே போகும் இவரின் அசாத்தியமான நடிப்பைப் பார்த்து பிரமித்தே போனேன். தமிழின் சிறந்த யதார்த்த நடிப்பு என்று இதுவரை அறியப்பட்டிருக்கும் அத்தனை திறமைகளையும் ஒரே தாவலில் தாண்டிச் சென்றிருக்கிறார் என்று நான் குறிப்பிடுவது சற்று மிகையாகத் தோன்றினாலும் அது குறைந்தபட்சம் எண்பது சதவீதமாவது உண்மையாகத்தான் இருக்கும். 'நீ வேஸ்டுப்பா... என்று சிடுசிடுக்கும் மகனிடம்.... 'நீயும் அப்படிச் சொல்லாதடா..என் வெள்ளக் குஞ்சு' என்று தழுதழுக்கும் காட்சியில் எனக்குப் பொறி கலங்கிப் போயிற்று. இத்தனையொரு சிறந்த நடிப்பை இதுவரையில் எங்கும் நான் கண்டதில்லை. ராபர்ட் டி நீரோ.. என்கிறோம். ஜாக் நிக்கல்சன்.. என்கிறோம். சாமுவெல் ஜாக்சன் என்கிறோம்... அந்த வரிசையில் தமிழில் இனி இவரையும் வைத்து கொண்டாடலாம். ஆனால் இதற்குத் தீனி போடும் வகையிலான இயக்குநர்கள்தான் துரதிர்ஷ்டவசமாக தமிழில் இருக்கப் போவதில்லை.

ஆரண்ய காண்டத்தில் கதை என்கிற வஸ்து பெரிதாக ஒன்றுமில்லை. போதைப் பொருள் கடத்தல் சரக்குக்காக மல்லுக் கட்டும் இரண்டு ரவுடிக் கோஷ்டிகள், அதன் வலது கரங்கள், அல்லக்கைகள், இதனிடையே சிக்கி அல்லறும் ஒரு கோழை இளைஞன், மூத்த ரவுடியிடம் அவ்வப் போது அறைவாங்கும் இளம்பெண், தனது ஊரில் இழந்த போன பெருமையை நகரத்தில் பணம் சம்பாதிப்பதன் மூலம் மீட்க விரும்பும் ஜமீன், அவனின் மகன்...இவர்களின் நிகழ்வுகள், அடுக்கு மாடியின் ஜன்னல் காட்சிகள் போல் மாற்றிக் மாற்றிக் காட்டப்படுகின்றன. ஓர் அழுக்குப் பையிலிருக்கும் போதைப் பொருளை மையமாகக் கொண்டு சுழன்று வீழ்ந்து எழுந்து மடிகிறது இவர்களின் வாழ்க்கை. இதுவரை தமிழ் சினிமா அறவே கண்டிராத பிரமிக்க வைக்கும் திரைக்கதையின் மூலம் திறமையான கதைச் சொல்லாடலை முன் வைத்திருக்கிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

ஒரு கானகத்திற்குள் நுழையும் அந்நியனின் உணர்வை ஒரு திரைக்கதை தர உணர்த்த வேண்டும் என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ஆ.கா.வின் திரைக்கதையை கூறலாம். சாவகாசமாக துவங்கும் காட்சிகள், நெற்றில் அடித்தாற் போன்ற உணர்வுடன் சட்டென்று முடிகின்றன. ஒரு உதாரணம் சொல்கிறேன்.

சிங்கப் பெருமாளின் வலது கையான கஜபதி, போட்டி ரவுடித் தலைவனான கஜேந்திரன் என்பவன் எதிரிகளை துடைத்தெடுப்பதில் எத்தனை குரூரமானவன் என்பதை தேநீர் கடையில் அமர்ந்து சக அடியாட்களிடம் விவரித்துக் கொண்டிருக்கிறான். "அந்தப் பொண்ணு கட்டைவிரலை பிடிச்சு கஜேந்திரன் கரகரன்னு கடிச்சுத் துப்பிட்டான். அதான் தப்பு செய்யலையேன்னு கேட்டா... தப்பு செஞ்சப்புறம் கடிச்சுத் துப்ப முடியுமான்றான்". கஜபதி இதை சொல்லிக் கொண்டிருக்கும் போது கேட்டுக் கொண்டிருப்பவர்களில் ஒருவன் நம்பாமல் கபகபவென்று சிரிக்கிறான். "இதெல்லாம் பீலா. யாராவது ஒருத்தன் கிளப்பி இன்னொருத்தன் கிட்ட சொல்லி... அவன் இன்னொருத்தன் கிட்ட...

அந்த நான்கு பேருக்கும் தேநீர் கொண்டு வந்து வைக்கும் பணியாள் பெண்ணின் கையை குளோசப்பில் காட்டுவதோடு இந்தக் காட்சி சட்டென்று முடிகிறது.

அந்தப் பெண்ணின் கையில் கட்டை விரல் இருப்பதில்லை.

(தொடரும்)

suresh kannan

19 comments:

Anonymous said...

சு .க .

அலறிட்டேன் இந்த படத்த பார்த்து ....,ஸ்க்ரீன் ப்ளே சான்ஸ் லெஸ் ..,அதே மாதிரி அந்த ஜமின் பாத்திரத்தில் நடித்த காளையன் ...,பிரம்மிப்பின் உச்சியிலே போனேன் ..,என்ன ஒரு நடிப்பு

காவேரிகணேஷ் said...

உங்களின் விமர்சனம் ஆக விறுவிறுப்பை கூட்டுகிறது சு.க..

Ashok D said...

தியெட்டர்ல 12 பேரு தான் இருக்காங்களா...

மொத ஆள் நீங்க... 12th man நானோ?
ரொம்ப நாள் கழிச்சு ப்ளாக் பக்கம் வந்த சுவையா உங்க பதிவு... waiting for 2nd part...

avan ivanaiyum vidathinga :)

அருண் வைத்யநாதன் said...

இன்னும் இருபது வருடம் கழித்துப் பார்த்தாலும், குமாரராஜா மற்றும் சரண் காலரைத் தூக்கி விட்டு, "நான் செய்த திரைப்படம் இது" என்று பெருமையாய் சொல்லிக் கொள்ளலாம். தமிழ்த் திரைப்படங்களில் ஒரு அசாத்தியமான, நேர்மையான படைப்பு - ஒரு அழகிய மைல்கல்!

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே...
இப்படத்தின் விமர்சனத்தை உங்களிடம் இருந்து சற்று பயத்துடன் எதிர்பார்த்தேன்.
ஆகச்சிறந்த படத்துக்கு...
ஆகச்சிறந்த விமர்சனம்.
நன்றி.

Ravindran said...

அப்பாடா கடைசியா ஒரு நல்ல தமிழ் படம். தமிழ் படம் எல்லாம் மறந்து விட வேண்டியதுதான் என்று நினைத்தேன்.
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி. இந்த வாரம் பார்க்கவேண்டும் . நியூ ஜெர்சி தியேட்டரில் ஓடினால்!

அருண் said...

ஒரு சின்ன திருத்தம் : சிங்கப்பெருமாளின் வலது கை பசுபதி,கஜபதி அல்ல.சம்பத் அருமையாக நடித்திருப்பார்.இந்த படம் கிராண்ட் ஜூரி அவார்ட் வாங்கியதில் தப்பேயில்லை.
ஒரு கேள்வி : பஞ்ச தந்திரம் திரைப்படத்தை முழு நீள நகைச்சுவை திரைப்படமாக எடுத்துக்கொள்ள முடியாதா?
-அருண்-

Bystander said...

நல்ல விமர்சன பதிவு சுரேஷ். அடிக்கடி எழுதுங்கள்.

Anonymous said...

blogger have intoduced autopagination...u cannot control number of posts to be shown at maximum by putting a maximum number in settings hereafter...only autopagination decides it...it only decide how many posts to be displayed at maximum on a page...autopagination decides number of posts to be displayed based on html and images used in the essays...

i hate blogger for introducing this...everybody hates this autopagination....

http://www.google.com/support/forum/p/blogger/thread?tid=5d62062854607a02&hl=en

hitherto said...

the acting of kaalaayan and the kid. kodukapulli.dont say it dint resemble anybody...kamalhassan did it in japanil kalyanaraman with the kid.sappai is a tribute to the sappani character..but still this is tremendous film

rajkumar said...

நீங்கள் சபாஷ் மீனா பார்த்திருக்கிறீர்களா? இல்லையா? மிகவும் பழைய படம். ஆனால் ஒரிஜினல் ஆள்மாறாட்ட காமெடி. இதைப் பற்றிய உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்

Anonymous said...

நான் தஞ்சாவூர். சில நாட்கள் முன் என் ஊருக்கு இந்த படம் வந்தது. படம் நன்றாய் உள்ளது என்று இணையத்தில் படித்ததால் போகலாம் என்று முடிவு செய்து தியேட்டருக்கு போனேன். படம் அதற்குள் தூக்கப்பட்டு விட்டது. என்னமோ...ஒன்னும் புரியலை...

chandramohan said...

நிச்சயம் படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது உங்கள் பதிவு சுரேஷ். வெறுமே தமிழ் சினிமாவை திட்டிக்கொண்டிராமல் நல்ல படங்கள் வரும்போது உள்ள மகிழ்வுடன் வரவேற்கும் உங்களை நான் வாழ்த்துகிறேன்.

geethappriyan said...

நல்ல விமர்சனம் நண்பரே

யுவா said...

"காசேதான் கடவுளடா" கூட என்னைப் பொருத்தவரை "க்ளாசிக் காமெடி" வகையை சார்ந்ததுதான். விமர்சனம் அருமை.

J said...

பார்கிற அளவுக்கான நல்ல படம்தான். ஆனா, ஆகா ஓகோ-ன்னு சொல்ற அளவுக்கு ஒன்னும் இல்லாத இந்த படத்துக்கு இவ்வளவு பாராட்டு தேவையான்னு சந்தேகமா இருக்கு!

குடிகாரன் said...

atbuthamana paarvai! vazhthukkal!

Jegadeesh Kumar said...

ஒரு அசாத்தியமான தமிழ்ப்படத்துக்கு நல்ல மரியாதை செய்திருக்கிறீர்கள்.

இந்தப் படம் பார்த்ததும், 'வாழ்க்கை ஓர் அபத்த நாடகம் ' என்று தோன்றியது.

மொத்தக் கதையையும் எள்ளல் முறையில் சொல்லியிருக்கும் இந்தமுறை தமிழுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே புதிது என்று நினைக்கிறேன்.அது சரியா?
டாரன்டினோவின் சொல்முறை எனக்கு உவப்பான ஒன்று. Inglorious bastards அனுபவித்துப் பார்த்தேன்.

சுப. முத்துக்குமார் said...

ரொம்ப நாளாக பாக்கணும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன் நேத்து தான் நேரம் கிடைச்சது, ஒரு மொக்கையான பிரிண்ட் தான். (படம் நல்லா ஓடலைன்னா திருட்டு DVD கூட நல்லா இருக்க மாட்டேங்குது.) படத்தைப்பாத்துட்டு உங்க விமர்சனம் எப்படி இருக்குன்னு வாசிக்க வந்தேன் (ஏற்கனவே வாசிச்சிருந்தாலும்). நீங்க குறிப்பிட்டிருக்கும் அதே இடத்தில் நான் நிஜமாகவே கலங்கிவிட்டேன்.
"நீயும் அப்படிச் சொல்லாதடி என் பிள்ளக்குஞ்சு". மை காட் சான்ஸ்லெஸ். அந்த சீனை யுவன் அழகா ரொம்ப அழகா மெருகேத்தியிருப்பார். அதே ஷாட்ல நான் பாத்தது -காளியப்பன் கொடுக்காப்புளிய கையை நீட்டி அழைச்சிட்டுப் போகும் போது லாங்ஷாட்ல அவுட் ஆஃப் போகஸ்ல ஒரு கர்ப்பிணிப்பெண் நடந்து வந்திட்டிருப்பாங்க. இது டைரக்டரோட ஐடியாவா இல்ல சூட்டிங்ல தற்செயலா நடந்ததானு தெரியல. But the scene is simply Awesome. இதுக்காகவாவது தியாகராஜன் குமாரராஜா இன்னும் படம் எடுக்கணும்னு வேண்டிக்கிட்டேன். நல்ல விமர்சனம்.