Thursday, November 22, 2007

சற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்

நண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற்படுத்தின படம் போகப்போக தீவிர வேகமாகி பட இறுதியின் போது அதிர்ச்சியான விஷயத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

என்னதான் நாம் அஹிம்சை, கருணை என்றெல்லாம் தியரிட்டிக்கலாக பேசி சிலாகித்துக் கொண்டாலும் வன்முறை என்பது நம் ரத்தத்திலிலேயே ஊறிப்போன இயற்கையானதொரு அம்சம். வெள்ளைப் பேண்ட்டில் சேற்றுச் சக்கரத்தை இடித்து கறையை ஏற்படுத்தும் பைக் ஓட்டுநரை "குழந்தாய்.. கவனமாக செல்லக்கூடாதா?" என்றெல்லாம் நாம் கேட்பதில்லை. "த்தா.... கண்ணு என்னா பின்னாலயே இருக்கு?" என்று ஆரம்பித்து ஏக வசன கலாட்டாவில் முடியும். எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும். 'நான் அப்படியெல்லாம் இல்லை' என்று விவாதிப்போர் கடவுளால் பிரத்யேகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாக பயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதி உட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும் போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன். மேற்சொன்ன படமும் "பழிவாங்குதல்" என்கிற அடிப்படையான தத்துவத்தில் இயங்குகிறது. உடனே இது எம்.ஜி.ஆர் vs நம்பியார் டைப் படம் என பாமரத்தனமாக விளங்கிக் கொள்ளக்கூடாது. திகைக்க வைக்கும் திரைக்கதையும் ட்ரீட்மெண்ட்டும், நடிகர்களின் பங்களிப்பும் இந்தப்படத்தை தரமான உயரத்தில் இயங்க வைக்கின்றன.

()

OLD BOY இயக்குநர் PARK CHAN-WOOK-ன் trilogy-ல் இரண்டாவது பகுதி படம். மற்ற படங்கள் SYMPATHY FOR MR.VENGEANCE & SYMPATHY FOR LADY VENGEANCE. சுமார் 10 படங்களை இயக்கியிருக்கும் தென் கொரிய இயக்குநரான Park-ன் ஏழாவது படமிது. Vertigo என்கிற படத்தின் பாதிப்பினால் திரைத்துறைக்கு வந்த இவர் பல படங்களில் screen writer ஆகவும் பணிபுரிந்தார். சிறந்த சினிமா விமர்சகருமாவார். முதல் இரண்டு படங்களை இயக்கி வெளியிட்ட பின்னரும் கூட இயக்குநர் என்கிற புகழை விடவும் screen writer - என்கிற அளவில்தான் இவர் புகழ் ஒங்கி இருந்தது. Joint Security Area (2000) என்கிற படத்தின் வணிக மற்றும் விமர்சக ரீதியாக வெற்றிக்குப் பின்னரே "இயக்குநர்" என்கிற புகழை அடைய முடிந்தது. கான் (cannes) திரைப்பட விருது (2004)உட்பட பல விருதுகளை OLD BOY பெற்றுள்ளது.

Photo Sharing and Video Hosting at Photobucket

Dae-su குடிபோதை கலாட்டா ரகளையில் காவல் நிலையத்திலிருந்து அவர் நண்பரால் மீட்கப்படுகிறார். பொது தொலைபேசி மூலம் வீட்டிற்கு சீக்கிரம் வந்துவிடுவதாக மனைவியிடமும் மகளிடமும் கூறுகிறார். அவர் நண்பரும் வீட்டாரிடம் தாம் பத்திரமாக அவரை அழைத்து வந்துவிடுவதாக உறுதியளித்து விட்டு, திரும்பிப்பார்த்தால் Dae-su-வைக் காணோம்.

Dae-su தாம் வெளித்தொடர்பு ஏதுமில்லாத ஒரு அறையில் சிறை வைக்கப்பட்டிருப்பதை உணர்கிறார். வேளா வேளைக்கு வறுக்கப்பட்ட பணியாரம் போன்ற உணவு மாத்திரம் சிறு துளை வழியாக வழங்கப்படுகிறது. யார், ஏன் தம்மை கடத்தி வைத்திருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு விடை தெரியாத குழப்பமான உணர்வு. தற்கொலை முயற்சியும் தோல்வியாக, shadow boxing பயிற்சி எடுப்பதின் மூலம் சுதாரித்துக் கொள்கிறார். அறையில் உள்ள தொலைக்காட்சியின் மூலமாக அவரின் மனைவி கொலை செய்யப்பட்டதையும் அதற்கு காரணமாக முதல் குற்றவாளியாக இவரை காவல் துறை சந்தேகப்படுவதையும் அறிந்து அதிர்ந்து போகிறார். இவரின் மகளைப் பற்றிய விவரமும் தெரியவில்லை. கடுமையான தனிமையின் காரணமாக ஹிஸ்டீரியாவும், சற்றே மனநிலை பிறழ்வு சூழலில் விநோதமாக காட்சிகளும் அவருக்கு தோன்றுகிறது. கூடவே ஹிப்னாடிசமும் செய்யப்பட்டு அவருள் சில விஷயங்கள் பதியப்படுகின்றன. இப்படியாக 15 வருடங்கள் கழிந்த பிறகு ஒரு நாள் திடுதிடுப்பென்று விடுதலை செய்யப்படுகிறார்.

தம்மை கடத்தி சிறை வைத்திருந்தவர் யார் என்று கண்டுபிடித்து பழிவாங்க தீவிரப்படும் இவரை ஒரு பிச்சைக்காரர் அணுகி ஒரு கைபேசியையும் பணத்தையும் அளித்து மறைந்து போகிறார். ஒரு உணவகத்தினுள் நுழையும் இவர் அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணால் (mido) கவரப்பட்டு அன்பு கொள்கிறார். அப்போது கைபேசியில் வரும் அழைப்பின் குரல் "நான்தான் உன்னை 15 வருடங்களாக சிறை வைத்தவன். இயன்றால் என்னை கண்டுபிடி. என்னை கண்டுபிடித்தால் நானே தற்கொலை செய்து கொண்டு சாகிறேன். இல்லையென்றால் mido கொல்லப்படுவாள்" என்று சவால் விடுக்கிறது.
தனக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட உணவின் மூலம் அதன் பிரத்யேக சுவையை நன்கறிந்த Dae-su ஒவ்வொரு உணவகமாக சென்று எங்கு தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கிறார். டெலிவரி செய்யும் பையனின் மூலம் தாம் சிறைப்பட்ட இடத்தை கண்டுபிடிக்கும் அவர், அங்கு வார்டராக இருந்தவனின் பல்லைப்பிடுங்கி மூலவரைப் (Woo-Jin) பற்றி அறிகிறார். அவர் சிறைப்படுத்தப்பட்ட காரணமாக கூறப்படுவது '"he talks too much". Woo-Jin பற்றி தம் நண்பர்களிடமும் அறிந்தவர்களிடமும் விசாரிக்கும் போது அவர் தம்முடன் பள்ளியில் இணைந்து படித்த பழைய மாணவர் என்று அறிய நேர்கிறது. அவருக்கும் தமக்கும் என்ன மாதிரியான பகை இருக்க முடியும் என்று Dae-su ஆராய்கிறார். இதற்கிடையில் அவருக்கும் midoவிற்குமான உறவு மிகவும் நெருக்கத்தை அடைந்து உடல்ரீதியான தொடர்பிற்கு செல்கிறது.

()

தம்முடைய மாணவப் பருவத்தை நினைவு கூறும் Dae-su, Woo-Jin-ம் அவரது சகோதர உறவு முறையிலான soo-ah என்கிற பெண்ணும் பாலியல் நோக்கத்தில் ஈடுபடும் காட்சியை ஒளிந்திருப்பதை காண நேரிடுகிறது. இவர் பார்ப்பதை அவர்களும் பார்த்து விடுகிறார்கள். பள்ளி முழுவதும் soo-ah பற்றிய செய்திகள் வதந்தி, வம்புகளுடன் இணைந்து ஒலித்து அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் செய்தி பரவுகிறது. இதை தாங்க முடியாத அந்தப் பெண் Woo-Jin எதிரிலேயே தற்கொலை செய்து கொள்கிறாள். இந்தச் செய்திகளை ஆராய்ச்சிகளின் மூலம் அறிந்து கொள்ளும் Dae-su, Woo-Jin-ஐ கண்டுபிடித்து நேருக்கு நேராக சந்திக்கிறார். "உன் சகோதரியின் மரணத்திற்கு நீதான் காரணம்" என்று குற்றஞ்சாட்டுகிறார். தாம் அவனை கண்டுபிடித்து விட்டதால் ஒப்பந்தப்படி அவன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.

பதிலாக Woo-Jin அவருக்கு ஒரு பரிசை அளிக்கிறார். அதைப் பிரிக்கும் Dae-su-விற்கு பூமியே இரண்டாக பிளந்தாற் போன்ற அதிர்ச்சி ஏற்படுகிறது. திகைக்க வைக்கும் அந்த அதிர்ச்சி என்ன என்பதையும் பின்பு இருவருக்கும் என்ன ஆனது என்பதையும் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்வதுதான் இயக்குநரின் உழைப்பிற்கு நியாயமான செயலாக இருக்கும் என்று கருதுகிறேன்.

()

சற்றே நுட்பமான இந்தக்கதைக்கு PARK CHAN-WOOK-ன் திரைக்கதை என்னை அயர வைக்கிறது. Dae-su சிறையில் அடைத்து வைக்கபட்டிருக்கும் போது வருடங்கள் கடந்து செல்வதை தொலைக்காட்சியில் முக்கிய உலக செய்திகள் மூலம் fast cutting உத்தி மூலம் சொல்லும் காட்சியும் மனநிலை பிறழ்கிற Dae-su, தம் உடம்பில் எறும்பு ஒன்று துளையிட்டு வெளிவருவதாக உணரும் காட்சியும் கவர்கிறது. சிறையில் இருந்து வார்டர் மற்றும் அவர்கள் ஆட்களிடம் சண்டையிட்டு தப்பிக்கும் சண்டை காட்சி ஒன்று தொடர்ச்சியாக சுமார் ஐந்து நிமிடத்திற்கு ஒரே கோணத்தில் காட்டப்படுவதும் அருமை. படத்தின் ஒளிப்பதிவு சிறப்பானதாக இருக்கிறது.

Dae-su-வாக நடித்திருக்கும் Choi-Min-sik பல காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். Woo-Jinவின் காலைப்பிடித்து கதறும் போதும் தம்முடைய நாக்கை துண்டித்துக் கொள்ளும் காட்சிகளிலும் அவரின் முகபாவங்கள் மிகுந்த நம்பகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. Woo-Jin-ஆக நடித்திருக்கும் Yu-Ji-tae அலட்டிக் கொள்ளாமல் நம்முடைய வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நான் முன்னமே கூறினது மாதிரி 'பழிவாங்குதல்' என்கிற தத்துவத்தில்தான் இந்தப்படம் இயங்குகிறது. தம்மை சிறைப்படுத்திவனை Dae-su கண்டுபிடித்தவுடன், Mido கூறுகிறாள். "உனக்குத் தேவையானது கிடைத்து விட்டது. இத்தோடு விட்டுவிட்டு நாம் அமைதியாக வாழலாமே". அதற்கு Dae-su "இல்லை. பழிவாங்குதல் என்னுடைய ஒரு பகுதியாக இருக்கிறது".

()

இந்த trilogy-யின் மற்ற இருபடங்களையும் இயக்குநரின் மற்ற படங்களையும் கூட காண வேண்டும் என்கிற ஆவலை இந்தப்படம் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப்படத்தின் சட்டப்படி அல்லாத தழுவலாக zinda என்கிற இந்தித் திரைப்படம் வந்திருப்பதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.

நன்றி: விக்கிபீடியா

17 comments:

யாத்ரீகன் said...

boss.... where do you get these movies to watch ? any store or online ?!!!

Anonymous said...

//இந்தப்படத்தின் சட்டப்படி அல்லாத தழுவலாக zinda என்கிற இந்தித் திரைப்படம் வந்திருப்பதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது. //

இந்தப் படத்தின் முக்கியமான மேட்டர், இந்தியக் கலாசாரத்துக்கு ஒத்துவராது என்று நினைத்தோ என்னமோ, இந்திப் படத்தில், முக்கியமான இரண்டு பாத்திரங்களின் உறவு முறையை மாற்றி விட்டார் இயக்குனர்.

வானம்பாடி said...

இந்தப் படத்தையெல்லாம் எங்கேயப்பா பிடிக்கிறீர்?

Sridhar Narayanan said...

Very good review. Thanks a lot for such reviews.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

என்னையும் கொஞ்சம் திகைக்க வைத்த படமிது சுரேஷ்கண்ணன். கான் திரைப்பட விழாவினூடாகத்தான் இந்தப் படம் பற்றித் தெரிந்துகொண்டேன். அந்த வரு்ஷம் நடுவர் குழுத்தலைவராக இருந்த டாரண்டீனோ இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமாகவிருக்கவில்லை. :) ஆனால், அது கொஞ்சம் சலசலப்பை உருவாக்கியிருந்தது.

அந்த அடைத்து வைத்திருந்த காட்சியை CSI என்ற தொலைக்காட்சித் தொடரில் காப்பியடித்திருந்தார்கள். என்னங்கடான்னு நினைச்சுக்கிட்டேன். ;)

அந்த உணவுவிடுதியில் உயிருள்ள ஆக்டோபஸை சாப்பிடும் காட்சியில் பதினைந்து வருடமாக எந்தவொரு உயிரினத்துடனும் தொடர்பில் இல்லாத உணர்வைக் கொண்டு வந்தது பிடித்திருந்தது. எல்லாவற்றையும்விட படத்தில் பிடித்திருந்தது மனித உணர்வுகள். Whew!!! வன்முறை வன்முறை என்று பிசத்திக்கொண்டிருக்காமல் அந்த மனித உணர்வுகளைப் பார்த்தாலே நமக்குத் திகைப்பு வருந்தான். so much in so short a time.

[திகைப்பு + கொரியத் திரைப்படம் என்ற வார்த்தைகளைப்பார்த்ததும் இந்தப் படத்தைப்பற்றித்தான் எழுதியிருக்கீங்களோன்னு வந்தேன். நீங்க ஏமாத்தல. ;) ]

-மதி

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஆர்வமூட்டுற மாதிரி எழுதி இருக்கீங்க..இது வரை கொரியப் படங்கள் பார்த்தது இல்லை..இனிமேல் பார்க்க வேண்டும்..இந்தப் படம் இணையத்தில் தரவிறக்கக் கிடைத்தால் தெரிவிக்க இயலுமா :)

அப்புறம், உங்கள் blogger settingல் site feed- allow blog feed- full என்று தந்தால் நன்றாக இருக்கும். நன்றி

Balaji Chitra Ganesan said...

சில மாதங்களுக்கு முன்பு விர்ஜீனியா டெக் பல்கலைக் கழகத்தில் சக மாணவர்களையும், சில பேராசிரியரையும் (ஒருவர் தமிழர்) கொன்ற மாணவன், இந்தப் படத்தின் நாயகனைப் போல சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தான்! அந்த அளவுக்குப் 'பவர்புஃல்' ஆக்கும்!

மற்றபடி vimarsanam.wordpress.com இல் உங்கள் சினிமா விமர்சனங்களை பகிர்ந்துகொள்ள வாங்களேன்!

Anonymous said...

Please read this.

http://greatbong.net/2006/02/05/zinda-buddha-beta-old-boy-is-alive/

Badri Seshadri said...

சிடி எங்கே கிடைக்கும்?

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

வேலைப்பளுவின் இடையில் மெனக்கெட்டு இந்த மாதிரி விமர்சனங்கள் எழுதுவதெல்லாம் உலக சினிமா மீது ஆர்வம் ஏற்படுத்தவும், தமிழ்த் திரைப்படம் தாண்டியும் பிரம்மாண்ட உலகம் இருக்கிறது என - அது தெரியாத மக்களுக்கு - தெரிவிக்கவும்தான். நானே அந்த சூழலிலிருந்து சமீபத்தில்தான் வெளிவந்தேன்.

மதி, டிசே தமிழன் போன்ற முன்னோர்களே எனக்கு inspiration. :-)

இந்தப் படத்தின் குறுந்தகடு என்னுடைய நண்பரின் மூலமாக கிடைத்தது. dvd rental store-க்களிலோ பர்மா பஜார் போன்ற இடங்களிலோ (pirated copy) கிடைக்கக்கூடும். இணையத்தில் தரவிறக்கம் செய்வது பற்றி எனக்குத் தெரியவில்லை.

ரவிசங்கர்,

செய்து விடுகிறேன். ஆலோசனைக்கு நன்றி.

Darren said...

I will try to post the video of this movie in my movie blog asap..Cinematography was excellent in this movie.

Anonymous said...

சுரேஷ் கண்ணன், Oldboy உங்களுக்குப் பிடித்திருந்தால், தொடர்ந்து இந்தப் படத்தையும் பார்க்க முயற்சி செய்யவும். Bad guy என்று சொதப்பலான ஆங்கிலத்தில் தலைப்பு இருப்பதை கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிடவும் :-)

-சன்னாசி

ஹரன்பிரசன்னா said...

இந்தப் படம் பார்த்தேன்.

01. உண்மையில் கொஞ்சம் அதிர வைக்கும் பரிசுதான். அக்காட்சிக்கு ஒரு ஐந்து நிமிடத்திற்கு முன்பு இப்படி இருக்குமோ என்று எனக்கு ஒரு ஃப்ளாஷ். அப்படித்தான் இருந்தது.

02. டிசோ மற்றும் மைடோ இருவருமே ஹிப்நாட்டிஸத்திற்கு உள்ளாக்கப்படுவது, அதன் விளக்கக் காட்சிகள் நன்றாக இருக்கின்றன.

03. ரொம்ப அமைதியாக காட்சிகள் செல்வது பெரிய பலம். திடுக் இசை, திடுக் அதிர்ச்சியெல்லாம் இல்லை. எல்லாமே subtleஆகத்தான் காட்டப்படுகின்றன.

04. ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் டிசோவும் அங்கே இருப்பது போன்ற காட்சியமைப்பு (ஏற்கனவே Grudeges படத்தில் இக்காட்சி அமைப்பைப் பார்த்து அசந்திருக்கிறேன்) மிகப் பிரமாதமாக இருக்கிறது.

05. டிசோ அசைவ உணவை உயிரோடு உண்ணும் காட்சி அதிசயிக்க வைத்தது.

06. மிகச் சிறந்த படம் என்று சொல்லமுடியாவிட்டாலும், ஆச்சரியம் தரும்படியாக நன்றாகவே இருந்தது.

பிச்சைப்பாத்திரம் said...

சன்னாசி,

உங்கள் பரிந்துரைக்கு நன்றி.

மதுசூதனன் said...

இந்த படம் இந்தியில் காப்பி அடிக்கப்பட்டு

ZINDA என்ற பெயரில் சஞ்சய் தத், ஜான் ஆப்ரகாம்,லார தத் நடிக்க சில வருடங்களுக்கு முன்பு வெளியானது.

உண்மைத்தமிழன் said...

சுரேஷ் கண்ணன் உங்களுடைய சுப்பிரமணியபுரம் திரைப்பட விமர்சனம் மூலமாக இங்கு வந்தேன். படித்தேன். நானும் இந்தப் படத்தைப் பார்த்திருந்தேன். ஆனால் விமர்சனம் எழுத முயலவில்லை. திரைக்கதையை ரசிப்பதற்கு இலகுவாக அமைத்திருந்தார்கள். அருமை.

ஒரு புதிய திரைப்படம் தமிழில் வரப் போகிறது. புதிய இயக்குநர் ஒருவர் இயக்கப் போகிறார். கதை இந்தப் படத்தை மையமாகக் கொண்டது.. வரட்டும் பார்க்கலாம்..

KARTHIK said...

// பதிலாக Woo-Jin அவருக்கு ஒரு பரிசை அளிக்கிறார். அதைப் பிரிக்கும் Dae-su-விற்கு பூமியே இரண்டாக பிளந்தாற் போன்ற அதிர்ச்சி ஏற்படுகிறது.//

உண்மைதாங்க.

இந்தப்பதிவை முன்னமே படித்திருந்தால் ஒருவேளை இந்தப்படத்தை பார்த்திருக்கவேமாட்டேனு நெனைக்குறேன்.

ஆனா இதே கதை நம்மவர்கைல கெடச்ச அந்தப் பெண்ணப் பாதத்தையும் இவற்றுக்கு எதோ ஒரு உள்ளுணர்வு எல்லாத்தையும் சொல்லிரும்.அங்க ஒரு குடும்ப பாடல் ஒன்னுவரும் இப்படியே போகும்......