Saturday, May 14, 2016

கெட்ட பய சார் இந்த கபாலி!




மே 1  அன்று என்ன ஸ்பெஷல்?  என்று தமிழக இளைஞர்களிடம் பொதுவாக  கேட்டுப் பாருங்கள். 'உழைப்பாளர் தினம்' என்பது கூட அவர்களுக்கு மறந்திருக்கும். 'தலயோட பர்த்டே' என்பார்கள் கோரஸாக.  சமூக வலைத்தளங்களில் அந்த நாளில் 'தலைக்கு் வாழ்த்துகள் பறக்கும். மற்ற ரசிகர்கள் கூட சற்று பம்மி அமர வேண்டிய நாள் அது. ஆனால் இந்த வருடம் அந்த நாளில் இணையத்தில் ஒரு கணிசமான மாற்றம் தெரிந்தது. ரஜினி ரசிகர்கள் அந்த இடத்தை ஆக்ரமித்துக் கொண்டார்கள்.

ஆம். ரஜினிகாந்த் நடித்துக் கொண்டு வரும் 'கபாலி' திரைப்படத்தின் டீஸர் அன்றுதான் வெளியானது. முன்பெல்லாம் ரசிகர்கள் தங்களின் அபிமான நடிகர்களின் பட ரிலீஸ் அன்று பிலிம் சுருள் பெட்டிகளை ஊர்வலமாக எடுத்து வந்து பூஜையெல்லாம் செய்வார்கள். அந்த பரவசம் இன்று அப்படியே இணையத்திற்கு மாறியிருக்கிறது. டீஸர் வெளிவருவதற்கு முன்பேயே அது குறித்த பரபரப்பு உற்சாக தீயாக பரவியது. படிக்கும் காலத்தில் பரிட்சைக்கு எழுந்து படித்திராதவர்கள் கூட ஞாயிறு அன்று காலையிலேயே கணினியிலும் வாட்ச்அப்பிலும்  மொத்தமாக குழுமி விட்டார்கள்.

டீஸர் வெளியான பத்து மணி நேரத்தில் சுமார் 26 லட்சம் பேர் இந்த டீஸரை  பார்த்ததாக ஒரு தகவல் சொல்கிறது. வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லாத வரவேற்பு இது.

 #KabaliTeaser என்ற ஹேஷ் டாக் உடன் இந்த விஷயம் டிவிட்டர் தளத்தில் உடனே டிரைண்டிங் ஆனது.


***

கடந்த சில வருடங்களாக ரஜினிகாந்த்தின் திரை அந்தஸ்து சற்று இறங்குமுகத்தில் சென்று கொண்டிருந்தது. 'கோச்சடையான்' 'லிங்கா' ஆகிய திரைப்படங்களின் சுவாரசியமின்மைதான் காரணம். ரஜினி திரைப்படங்களின் தோல்வியை முன்பு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாத  அவரது ரசிகர்கள் கூட அந்தச் சமயத்தில்  சோர்வடைந்தார்கள். ஏறத்தாழ 'பாபா' காலத்து நிலைமை. முன்பெல்லாம் ரஜினியைப் பற்றி இணையத்தில் எவரேனும் ஒரு துளி கிண்டலடித்தால் கூட பொறி பறக்கும். ஆனால் அந்த வரிசையில் அவரது ஒருசில ரசிகர்களே கூட இணைந்து கொண்ட அளவிற்கு நிலைமை மோசமாகிப் போயிருந்தது.

ஆனால் அத்தனை சோர்வையும்  அவப்பெயரையும் ஒரு நிமிடத்திற்கும் சற்று கூடுதலாக மட்டுமே ஓடும் இந்த டீஸர் ஒட்டுமொத்தமாக  துடைத்தெறிந்திருக்கிறது. பியர் பாட்டில் பொங்கி வழிவது போல  'தலைவா.. தெறி மாஸ்' 'Emperor is back' என்கிற ரசிகர்களின் உற்சாக கூக்குரல்கள் இணையமெங்கும் பொங்கி வழிகின்றன.

***

அப்படி என்ன இருக்கிறது இந்த டீஸரில்?

நரைத்த தாடியுடன் வயதான கெட்டப்பில் இருந்தாலும் கம்பீரம் எந்த வகையிலும் குறையாத வகையில் கோட், சூட், கூலிங்கிளாஸ் அணிந்த விறுவிறுப்பான ரஜினியைக் காண முடிகிறது. ஹீரோவின் கால்களை அறிமுகப்படுத்தும் வழக்கமான தமிழ் சினிமா பாணியையும் தவறவிடவில்லை.  'நெருப்புடா' என்கிற பாடல் வரியுடன் தெறிக்க வைக்கும் சந்தோஷ் நாராயணின் ரகளையான இசையுடன் ரஜினியின் எண்ட்ரி. காது கிழிய விசிலடிக்கப் போகும் ரசிகர்களின் உற்சாகம் இப்போதே கற்பனையில் கேட்கத் துவங்கி விட்டது. 'நீங்க ஏன் கேங்ஸ்டர் ஆனீங்க?" என்று கூட்டத்தில் எவரோ ஒருவர் கேட்கும் போது தனது டிரேட் மார்க் சிரிப்பை வழங்கும் போது  உற்சாகம் கொப்பளிக்கிறது.

டீஸரின் கடைசி நொடிகளில், எழுபதுகளின் தோற்றத்தில் இருந்த ரஜினியின் கெட்டப்பில், டிசைனர் சட்டையுடனும் கூலிங்கிளாஸூடனும் வழிகிற தலைமுடியை இடது கையால் தள்ளி விட்டுக் கொண்டே இளமையான ரஜினி  வேகமாக கடந்து செல்லும் காட்சியில் ஒவ்வொரு ரசிகனும் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று விடுகிறான் என்பது உறுதி. 'என்னய்யா. இந்த ஆளு?' என்று நமக்கே சற்று திகைப்பாகி விடுகிறது. அத்தனை அபாரமான Screen Presence.

'வருவேன்.. ஆனால் வரமாட்டேன்' என்று நெடுங்காலமாக காமெடி கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த காரணத்திற்காக ரஜினியின் அரசியல் பிம்பம் முற்றிலும் நகைச்சுவையாகி விட்டாலும் அவரது திரை பிம்பம் இன்னமும் கூட பெரிதும் சேதாரம் ஆகாமல் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை தெளிவாக நிரூபிக்கிறது இந்த டீஸர்.

***

தனது வழமையான பாணியை கைவிட்டு அமிதாப் பச்சன் போன்று தனது வயதுக்கேற்ற பாத்திரங்களில் இளம் இயக்குநர்களின் உருவாக்கத்தில் ரஜினி ஏன் நடிக்கக்கூடாது என்கிற கேள்வி அவரது ரசிகர்கள் உட்பட பலரின் மனதில் பல ஆண்டுகளாக உலவிக் கொண்டிருந்தது. அதை பிரதிபலிக்கும் வகையில் 'அட்டகத்தி' 'மெட்ராஸ்' ஆகிய படங்களை உருவாக்கிய இளம் இயக்குநரான ரஞ்சித் உடன் ரஜினியின் கூட்டணி அமைந்த போது பெரும்பாலோனோர் வரவேற்று மகிழ்ந்தார்கள்.

ரஞ்சித்தின் முதல் இரண்டு திரைப்படங்களிலும் தலித் அரசியல் தொடர்பாக குறியீடுகள் லேசுபாசாக இருந்ததாக பேசப்பட்டதால்  'கபாலி' திரைப்படத்திலும் அப்படிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றனவா என்று ஆர்வக்கோளாறுடன் ஒரு குழு இந்த டீஸரில் தேடிக் கொண்டிருக்கிறது. 'ஓரிடத்தில் அம்பேத்கர் படம் மாட்டியிருந்ததே, கவனித்தீர்களா?' என்று பயங்கர ஆர்வத்துடன் ஒரு புலனாய்வுக் கேள்வியை கேட்டார் நண்பரொருவர்.

வெகுசன திரைப்படத்தின் வடிவத்திற்குள் தலித் அரசியலை உறுத்தாத அளவில் கலந்து தருவது ரஞ்சித்தின் பாணியாக சொல்லப்படுகிறது. எனவே அது குறித்தான ஆர்வமும் இந்த திரைப்படத்தின் மீதான தேடலில் அடங்கியுள்ளது.

பொதுவாக மிகச் சுருக்கமான காட்சிகளோடு உருவாக்கப்படுவதே டீஸர்களின் பாணி. அதில் நீளமான வசனங்கள் இடம்பெறாது. கண்ணிமைப்பதற்குள் காட்சிகள் மாறிக் கொண்டே பார்வையாளனுக்குள் பரபரப்பையும் ஆர்வத்தையும் கொட்ட வேண்டும் என்பதே டீஸர்களின் பொதுவான விதி.. ஆனால் அதை உடைக்கும் வகையாக ரஜினி பேசும் ஒரு நீண்ட வசனம் இதில் இடம் பெற்றிருக்கிறது. மற்றவர்களின் திரைப்படங்களாக இருந்தால் ஒருவேளை சுவாரசியமற்றதாக போயிருக்க வேண்டிய விஷயத்தை ஹைலைட்டாக மாற்றியிருப்பது ரஜனிக்கேயுரிய 'கரிஸ்மா'வின் விளைவு.

"பழைய நம்பியார் படங்கள்ல அவர் கையைக் கசக்கிக்கிட்டே 'டேய் கபாலி' ன்னு கூப்பிட்டவுடனே 'சொல்லுங்க எஜமான்..'ன்னு வருவானே.. அந்த கபாலி -ன்னு நெனச்சியா.. கபாலி.... டா... என்று ரஜினி தனக்கேயுரிய மேனரிஸத்துடன் சொல்வது அள்ளுகிறது. தமிழ் திரை மட்டுமல்லாமல் பொதுவாகவே  கபாலி என்பது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு ரவுடியின் அடையாளத்துடனேயே அதுவரை உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அந்த பழமையான மரபை இத்திரைப்படம் உடைக்கும், அதற்கான அரசியல் அடையாளம்தான் அந்த வசனம் என்கிறார்கள்.

இறுதி நொடியில் ரஜினி சொல்லும் 'மகிழ்ச்சி' என்கிற சொல் உடனே இணையத்தில் டிரெண்ட் ஆகி விட்டது. 'எங்க பெரியப்பா செத்து போயிட்டாருங்க' என்று ஒருவர்  வருத்தமான ஸ்டேட்டஸ் போட்டாலும் கூட அதை சரியாக கவனிக்காமல் 'மகிழ்ச்சி' என்று கமெண்ட் போடுகிற ரீதியில் ரசிகர்கள் தாறுமாறான கொலைவெறி உற்சாகத்துடன் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 டீஸரில் வரும் காட்சிகள் புகைப்படங்களாகவும் துண்டு காட்சிகளாகவும் மாற்றப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

'இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஒரு காட்சியில் வரும் ராதிகா ஆப்தே என்ன அழகு பார்த்தீங்களா" என்று ஓரு கூட்டம் தனியாக 'ஜொள்ளிக்' கொண்டிருக்கிறது.


இது வழக்கமான ரஜினி படமா, அல்லது அதுவும் கலந்த ரஞ்சித் தின் பிரத்யேக பாணியில் உருவாகும் அரசியல் படமா என்பது வெளிவந்தவுடன் தெரிந்து விடும்.

எது எப்படியோ,  நழுவிப் போய்க் கொண்டிருந்த ரஜினியின் சூப்பர் ஸ்டார் கிரீடமானது இந்த அபாரமான வரவேற்பின் மூலம் அவர் தலையிலேயே மறுபடியும் அழுத்தமாக பொருத்தப்பட்டு விட்டது என்பதுதான் இந்த டீஸரின் உற்சாக எதிர்வினைகளின் மூலம் உணரப்படும் நீதி. பல திரையுலக பிரமுகர்களும் இந்த டீஸரை 'மகிழ்ச்சி'யுடன் வரவேற்றிருக்கிறார்கள்.


***

இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக ஒரு செய்தியைப் பார்த்தேன்.

 'இந்த டீஸரை இணையத்தில் பார்த்து அதன் எண்ணிக்கை சாதனையைக் கூட்ட வேண்டாம். எனவே இதை பார்க்காதீர்கள். அது நம்முடைய நடிகரின் சாதனையை மீறிப் போய் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று இன்னொரு நடிகரின் ரசிகர்கள் தங்களுக்குள் ரகசியமாக செய்தி பரப்பிக் கொள்கிறார்களாம். ஒரு தமிழ்  திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் வடிவேலு 'டுபாக்கூர் வாக்கி டாக்கி'  ஒன்றின் மூலம் ஓவர் ஓவர் என்று தனது  தேறாத அல்லக்கை ஆட்களிடம் சதித்திட்டங்களைப் பற்றி பேசுவதுதான் நினைவிற்கு வருகிறது.

இருந்தாலும்  டீஸரின் பார்வையாளர்கள் எண்ணிக்கை இந்த நொடி வரை கூடிக் கொண்டே போவதுதான் மேட்டர்.

யார் கிட்ட... கபாலிடா..! மகிழ்ச்சிடா!

(08.05.2016 தேதியிட்ட குமுதம் வார இதழில் வெளியானது: நன்றி குமுதம்)

suresh kannan

No comments: