Sunday, September 02, 2012

'நீதானே என் பொன் வசந்தம்' - இசை.



'நீதானே என் பொன் வசந்தம்' - பாடல்கள் இசை.

கொஞ்சம் ஓவராத்தான் பில்டப் கொடுத்துட்டாங்களோ?...ஏதோ பீத்தோவனின் 18 வது சிம்பொனி வரப்போகிறது என்பது போல் பீற்றிக் கொண்டதில் நானும் புது ஸ்பீக்கர் செட்அப் எல்லாம் வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தேன்.ஆனால்...

1992-ல் ரோஜாவில் ரகுமான் புயல் போல் நுழைந்து பின்பு தமிழ்சினிமாவை மெள்ள...ஆக்ரமித்துக் கொண்டதில் .. அவ்வளவுதான் .. இனி ராஜா காலி என்று பேசிக் கொண்டார்கள். அன்னக்கிளி காலத்திற்குப் பிறகு எம்.எஸ்.வி.. என்கிற மகத்தான கலைஞன் அவுட் ஆஃப் போகஸிற்கு போனது போல ராஜாவும் அப்போது சற்று காணாமற்தான் போய் விட்டார். ஆனால் ... மவனே யாரு கிட்ட...? 1994-ல் 'வீரா' மூலம் 'கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட'.. என்று அதிரடியாக திரும்பி வந்ததில் பரவசமாகவே இருந்தது. (ஆனால் எம்.எஸ்.வி-யால் இவ்வாறு வரவே இயலவில்லை என்பதுதான் வித்தியாசம்). என்றாலும் பல புதிய இளம் இசையமைப்பாளர்கள் வந்து விட்ட பிறகு தமிழ்த்திரையிசை ரெடிமேட் பிளாஸ்டிக் ட்யூன்களுக்கு மாறிவிட்ட பிறகு ராஜாவால் தனது பழைய சிம்மாசனத்தை கைப்பற்றவே முடியவில்லை.  சிங்கத்திற்கு தயிர்சாதம் திணித்த கதையாய் உளியின் ஓசை,பொன்னர் சங்கர் போன்ற மொக்கைகளையெல்லாம் ஏன் இவர் செய்கிறார் என்று வருத்தமாக இருந்தது.

ஆனால் முன்பு வீரா மூலம் நிகழ்ந்ததைப் போல நீதானே...வின் மூலம் மறுபடியும் ராஜா தனது இருப்பை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் என்றுதான் சொல்லலாமே ஒழிய 'ராஜாவின் புதிய பரிமாணம், உன்னதம்' பரவசம் என்றெல்லாம் கொண்டாடும் அளவிற்கு நீதானே...வில் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கெளதம் வாசுதேவன் வேண்டுமானாலும் தனது படத்திற்கான பிரமோவிற்காக இந்த ஆல்பத்தை over hype செய்து கொள்ளட்டும். ஆனால் எத்தனை இசை வந்தாலும் ராஜாவின் இசையை தாய்ப்பாலை போல பூஜை செய்யும் ராஜாவின் அசலான ரசிகர்கள் அவ்வாறு ஏமாறத் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

'காற்றைக் கொஞ்சம்...' மாத்திரம் சில காலத்திற்காகவாவது பண்பலை வானொலிகளை ஆக்ரமிக்கப் போவது நிச்சயம்.

நிற்க... இந்த ஆல்பத்தை பத்திருபது முறை கேட்ட பிறகு ஏற்பட்ட தற்காலிக அவதானிப்பே இது. நானே பிற்பாடு இதை கொண்டாடவும் செய்யலாம். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்.....ரகுமான் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டால்தான் பிடிக்க ஆரம்பிக்கும். ஆனால் ராஜா அப்படியல்ல. முதல் கவனிப்பிலேயே இது வேறு ஜாதி என்பது தெரிந்துவிடும். விருமாண்டியில் 'உன்ன விட' கேட்ட போதே தெரிந்து விட்டது. இது ராஜாவின் உன்னதமான பாடல்களில் ஒன்றாக இருக்கப் போகிறது என்று. ஆனால் நீதானே..வில் 'காற்றைக் கொஞ்சம்' தவிர வேறெதுவிலும் அப்படியான பரவசமேதும் நிகழவில்லை என்பதே என் பாமர இசையனுபவம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ராஜா திரும்ப வந்திருக்கிறார். ஆனால் மகாராஜாவாக அல்ல.
 
suresh kannan

15 comments:

  1. உண்மை!.."காற்றை கொஞ்சம் நிற்கச் சொல்லி",அவரே அடிக்கடி உபயோகிக்கும் 'தானனான தானேனானா' ஒரு கிராமியம் கலந்த அருமையான டியூன்..இருப்பினும் அதற்கு வேறு ஒரு பரிமாணம் கொடுத்து உபயோகித்திருப்பது அழகோ அழகு...ஆர்கெஸ்ட்ரேஷனும் மற்ற பாடல்களுடன் ஒப்பிடுகையில் குறைவே.ஆனால் அந்த எளிமையும் பாடிய விதமும் ,வரிகளும்,மொத்தமாக அழகு சேர்த்துவிட்டது..வானம் மெல்ல கீழிறங்கி-நன்று.ஷ்ரேயா ஏன் தமிழில் ஒரு பாடல் கூட பாடவில்லை,மாறாக பேலா ஷிண்டே மற்றும் சுனிதி சவ்ஹான் பாடுகின்றனர்..-சாய்ந்து சாய்ந்து- ராஜா அடிச்சு அடிச்சு பாட வேச்சுருப்பாருனு நினைக்கறேன்,தமிழ்ல நல்லா பாடறாரு யுவன். புடிக்கல மாமு-ராஜா கைய வெச்சா ஸ்டைல்-புடிச்சிருக்கு மாமு...கேட்க கேட்க பாடல்கள் இன்னும் பிடிக்கவேண்டும் பார்ப்போம்...

    ReplyDelete
  2. Disappointed or i had over expectation on this songs.. Your review is very nice..

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். இது ராஜாவின் அதிஉன்னத சங்கீதம் என்றோ இன்னொரு பாய்ச்சல் என்றோ சொல்ல முடியாதபடி இருக்கலாம். எல்லாம் அவரவர் எதிர்பார்ப்புகளைப் பொறுத்து. இன்று திரையிசை என்பது மாறி விட்டது.அதற்கு ஜுனியஸ் அல்லது மேதமை தேவையில்லை.எனவே ரகுமானோ, ராஜாவோ, எம்.எஸ்.வியோ இல்லாமல் கூட அது தொடரும்.
    கெளதம் மேனன் ராஜா ராஜா என்று பேசி பேசி மார்கெட்டிங் செய்துவிட்டார்
    படம் நிற்குமா இல்லை விழுமா இல்லை ராஜாவின் இசையால் தாக்குபிடித்து ஒடுமா என்பது பின்னரே தெரியும்.இந்த பில்ட் அப்புகளை நம்பி ஏமாந்தோரில் எத்தனை பேர் அதை ஒப்புக் கொள்வார்கள்.

    ReplyDelete
  4. படத்துடன் சேர்ந்து பார்க்கும் பொது இன்னும் நிறைய வித்தியாசங்களை உணரலாம்.
    சட்டென நினைவுக்கு வரும் உதாரணம் 'சேது' . ஒரு பாடலுக்கான அவசியத்தை அந்த சூழ்நிலை அழுத்தமாக உணர்த்துகையில், (திரை) இசை அனுபவம் வேறாக இருக்கும். எல்லாம் இயக்குனரின் கைகளில்தான் உள்ளது.

    ReplyDelete
  5. 'காசி' படத்தையும் கணக்கில் வையுங்கள். ஆனால் இளையராஜாவைப் பற்றிய என் அபிப்பிராயம் வேறு: என்றைக்கு அவர் 'சாமியார்' வேஷம் போட்டாரோ அறைக்கே அவர் பொய்யர் ஆகிப் போகிறார்.

    ReplyDelete
  6. மதுரைவீரன்September 02, 2012

    "ஆனால் எம்.எஸ்.வி-யால் இவ்வாறு வரவே இயலவில்லை என்பதுதான் வித்தியாசம்" - நான் இதனை நேரில் காணும் அளவுக்கு எனக்கு வயது போதாதென்றாலும், இரஹ்மான் வந்த சில ஆண்டுகளுக்கு இளையராஜா எப்படி சில ஹிட் பாடல்களை கொடுத்தாரோ அது போல விஸ்வநாதன் அவர்களும், எண்பதுகளின் துவக்கம் (அதிகபட்சமாக 85 வரை கூட) கொடுத்திருக்கிறார் என்று எண்ணுமளவுக்கு கீழ்கண்ட பாடல்கள்/படத்தின் பாடல்கள்/படத்தில் சில பாடல்கள் அமைந்திருக்கின்றன - ஆண்டுவாரியாக வரிசைப் படுத்தவில்லை, அதேவேளை அனைத்தையும் கொடுக்கவும் முடியவில்லை:

    * இராகங்கள் பதிணாறு (தில்லுமுல்லு)
    * உனக்கென்ன மேலே (சிம்லா ஸ்பெஷல்)
    * அந்த ஏழு நாட்கள்
    * சந்திப்பு
    * வறுமையின் நிறம் சிவப்பு
    * 47 நாட்கள்

    ஆனால் இளையராஜா புயல் விஸ்நாதன் அவர்களைத் தாக்குப் பிடிக்க முடியாமல் செய்து விட்டது தான் போலும். இரஹ்மான் வரவுக்குப் பிறகு, இளையராஜா, விஸ்வநாதனை விட, நீண்டகாலம் தாக்குப் பிடித்திருக்கிறார் என்றாலும், விஸ்வநாதன் அளவுக்கே இளையராஜாவும் கவனிக்கத்தக்க பாடல்களைக் கொடுத்திருக்கிறார் என்பது எனது எண்ணம்.

    ஆனால் இந்தக் குறிப்பிட்ட படத்தின் பாடல்கள் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளதை அப்படியே ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  7. கவுதம் மேனன் பேட்டியை ஜெயா டீவீயில் பார்த்தபோது எதோ இதுவரை உலகில் இல்லாத ஒரு புதிய இசையை இளையராஜா கொடுக்கப்போகிறார் என்று கொஞ்சம் பயந்தே போனேன்.வழக்கம் போல இளையராஜா விசில்கள் ஆராவாரம் செய்து தட்ஸ் தமிழ் போன்ற இணையங்கள் பெரிய இசை அனுபவத்துக்கு நம்மை அழைத்தன.கடைசியில் எட்டில் இரண்டு பாடல்கள் கொஞ்சம் பரவாயில்லை.இளையராஜா என்றாலே அவரின் interlude இசையே நம் கவனத்தை கவரும். இங்கே அந்த அற்புதமான interlude காணாமல் போய்விட்டது.வித்தியாசமான தாளம் என்று ஒரே மாதிரி ஒலிக்கும் ட்ரம்ஸ் போரடிக்கிறது.பாடல்களின் பல்லவி நன்றாக இருந்தாலும் சரணம் நினைவில் தங்க மறுக்கிறது. யுவனின் பாத்ரூம் முக்கல் தொனியில் பாடும் வழக்கமான பாடல் உண்டு. இப்போது நீங்கள் சொல்லிஇருக்கும் எம் எஸ் வி பற்றி என் கருத்து. எம் எஸ் வி மீண்டும் எழவே இல்லை என்று ஒரே வரியில் சொல்வது முற்றும் தவறு. இளையராஜா கொலோச்சிகொண்டிருந்த போதே நினைத்தாலே இனிக்கும் என்று உண்மையான இசை விருந்தை அவர் அளித்தார். அவர் பாடல்கள் என்றும் சோடை போனதில்லை . திரு மதுரைவீரன் கொடுத்துள்ள பட்டியல் இந்த உண்மையை சொல்லும்.அதே போல எ ஆர் ரகுமான் வந்த பிறகு இளையராஜா தன் விலாசத்தை இழந்தது தமிழ் நாட்டுக்கே தெரியுமே. அப்போது காணாமல் போனவர்தான்.. இன்னும் மீண்டுவரவே இல்லை. கமலஹாசன்,பிரகாஷ்ராஜ்,நாசர்,பாலா,மிஸ்கின்,கவுதம் போன்றவர்கள் என்னதான் இளையராஜா இசைகடவுள் என்று தங்கள் பிசினசை நடத்தினாலும் பெரிதாக ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. இளையராஜா இளையதலைமுறை இசை அமைப்பாளர்களை வாழ்த்த வேண்டிய இடத்திற்கு வந்து விட்டார் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  8. கடைசி வரி நச்..

    ReplyDelete
  9. படத்தையும் பாடல்களையும் தனித்தனியாக வெளியிட்டு அதற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுததி ஏமாற்றி விடுகிறார்கள்.

    ReplyDelete
  10. /ஏதோ பீத்தோவனின் 18 வது சிம்பொனி வரப்போகிறது என்பது போல் பீற்றிக் கொண்டதில்../

    :)

    பீத்தோவனின் சொச்ச சிம்பனிகளை கேட்டு இசை விமர்சனம் எழுதியாகி விட்டதா..இனிமேல் தானா?.சும்மா :)

    இப்படி ஒரு படம் வருவதே இன்று தான் தெரிந்தது என்பதால் மேலதிக ஏமாற்றங்கள் இல்லை.கேட்ட பொழுது பாடல் எல்லாம் இவருடையதா இளவலுடையதா என்றும் சந்தேகமாக இருந்தது.

    ஒரு ஆயுளில் தன் வரையில் ஆக சாத்தியமான அத்தனை விதங்களிலும் இசையை பிரசவித்தவரிடம் இன்னும் இன்னும் என எதிர்பார்த்தால் ஏமாற்றம் தானே எஞ்சும்..வந்தவரை லாபம்.

    ReplyDelete
  11. good review!

    I like your blog very much. I want you to write more and more...

    read my story @ http://venkicorner.blogspot.in/2012/08/blog-post.html

    ReplyDelete
  12. read my story @ http://venkicorner.blogspot.in/2012/08/blog-post.html

    ReplyDelete
  13. நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். என்னோடு வா வா பாடலின் வரிகளும் இசையும் அழகாக வந்திருக்கிறது. நீங்கள் சற்று குறைசொல்லி எழுதியவுடன், ரகுமான் வந்தவுடன் இளையராஜா காணமால் போய்விட்டார் என்றெல்லாம் சரடு விடுகிறார்கள்.கலைஞர்களகி வியாபாரிகளாக நினைப்பது நாம் செய்யும் தவறு..

    ReplyDelete
  14. என்ன சுரேஷ் கண்ணன் சார், ராஜபக்தர்களின் பின்னூட்டங்களை வடிகட்டி விட்டீர்களா? யாருமே உங்களை திட்டி கமெண்ட் போடவில்லை?
    நீதானே... இசைக்கு நான் கண்டடைந்த முதல் நடுநிலையான விமர்சனம் உங்களுடையது.

    ராஜபகத்தர்களின் கூச்சல் ஒரு பக்கம் என்றல், மற்றவர்கள் அவர்களுக்கு பயந்து கொண்டு இந்த ஆல்பம் சூப்பரோ சூப்பர் என்கிறார்கள்.

    ReplyDelete
  15. It is true that ilayaraja has failed with NEP. Even blogs like songsofage which treat ilayaraja like god have expressed the same feeling of you have written.

    ReplyDelete