Tuesday, December 29, 2009

அண்டை நாட்டின் அறியப்படாத முகம்

இலையுதிர் காலத்தில் ஒரு காலை நேரம். கடைக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். எதிரே சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்கள்.... பராக்குப் பார்த்துக் கொண்டே வந்தவர்களுக்கு என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி விட்டது. ..

உள்ளூர்க்காரர்கள் என்னைப் பார்த்து ஆச்சரியப்படுவது எனக்குப் புதிதல்ல. *ஹீடாங்கில் தங்கள் மத்தியில் ஒரு வெளிநாட்டுக்காரி சர்வ சாதாரணமாக வசிப்பது ஆரம்பத்தில் அவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றியது. ஆனால் மேல்நாட்டுக்காரர்களும் இந்த மாதிரியே வாயைப் பிளப்பது இதுவே முதல் முறை.

அவர்களுடைய கோணத்திலிருந்து என்னைப் பார்க்க முயன்றேன். சுத்த உள்ளூர்ப் பகுதியில் ஓர் அந்நியப் பெண். கலர் பைஜாமா. அதற்கேற்ற மாதிரி ஒரு ஜிப்பா. வாய் ஓரத்தில் சிகரெட் தொங்குகிறது. வலது கையில் ஒரு பூனையை இடுக்கிக் கொண்டு பாத்ரூம் சப்பல் படக் படக்கென்று சத்தம் செய்ய நடந்து போகிறாள் என்றால் எப்படி இருக்கும்? ஹீடாங் என்னை முழுவதும் தன் கலாசாரத்துக்குள் இழுத்துக் கொண்டு விட்டது.

* ஹீடாங் - சீனாவின் அசுரத்தனமான நகரமயமாக்கலில் தப்பிப் பிழைத்திருக்கிற, பெரும்பாலும் வயதானவர்கள் வாழும் அமைதியான புராதனப் பகுதி.

பொதுவாக தமிழின் பயணக்கட்டுரைகள், சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்து திரும்பிய துணிச்சலின் அடிப்படையில் எழுதப்படும். பயணம் மேற்கொண்டதின் விவரங்கள், அதில் ஏற்பட்ட இடையூறுகள், தகுந்த உணவு கிடைக்காமலிருந்ததின் அலைச்சல்கள், மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள், கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்கப்படும் அரசின் கையேடு விவரங்கள் .. போன்றவற்றின்  அபத்தங்களோடு கட்டுரையாளர் விதவிதமான போஸில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் அந்தக் கட்டுரைகளில் அமைந்திருக்கும். இந்த தகவல்களிலிருந்து சம்பந்தப்பட்ட இடத்தைப் பற்றின சரியான சித்திரத்தை, அந்தப் பிரசேத்தின் ஆன்மாவை நிச்சயம் நம்மால் அறிய முடியாது. (இதயம் பேசுகிறது) மணியன் என்கிறதொரு முன்னோடி பயணக்கட்டுரையாளர் இதில் விற்பன்னராக இருந்தார். இட்லியும், சாம்பாரும் கிடைக்காமல் தவித்ததையும் பிறகு தூதரகத்தில் பணிபுரியும் உயர்அதிகாரியின் முயற்சிக்குப்பின் அந்தப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதை ஒரு அத்தியாயத்திற்கு விவரிப்பதற்கு இவரைப் போல் யாரும் இன்னும் தோன்றவில்லை என்றொரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது.

ஆனால் சீனாவைப் பற்றின நூலை எழுதியிருக்கிற பல்லவி (அய்யர்) அப்படியல்ல. அறியாத பிரதேசம் என்கிற காரணத்தினால் மிகுந்த தயக்கத்திற்குப் பின் சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட பத்திரிகையாளரான அவர், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக (2002 - 2007) அங்கு விருப்பத்துடன் தங்கி அங்கிருந்த சூழலுடன் தம்மைப் பிணைத்துக் கொண்டு அப்போதைய நிகழ்வுகளை அந்த நாட்டின் கலாசார, வரலாற்று, பொருளாதாரப் பின்னணியில் கூர்மையான அவதானிப்புகளாக எழுதின ஆங்கில நூல் Smoke and Mirros: An Experience of China. வெறுமனே புள்ளிவிபரங்களை மாத்திரம் அடுக்காமல் மக்களுடன் நெருங்கிப் பழகி எழுதப்பட்டிருக்கிற காரணத்தினாலேயே இது ஒரு முக்கியமான பயணக்கட்டுரை நூலாகிறது. இது சீனா:விலகும் திரை எனும் தமிழ் மொழி பெயர்ப்பாக கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது.



.. சீனாவைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? ஒன்றும் தெரியாது என்பதுதான் உண்மை... என்று முன்னட்டையில் குறிப்பிடப் பட்டிருக்கிற வார்த்தைகள் 'வாசகனை' சீண்டுவது போல் தெரிந்தாலும் புத்தகத்தில் உள்ளே இறங்கிய பின் அவ்வாறு குறிப்பிட்டிருப்பதின் முழுமையான அர்த்தத்தை அறிந்து கொள்ள முடிகிறது. சீனாவைப் பற்றியும் வல்லரசு கனவுகளோடு முன்னேறிக் கொண்டிருக்கும் சீனா மற்றும் இந்திய பொருளாதார வளர்ச்சிகளைப் பற்றியும் பல ஆங்கில மொழி நூல்கள் இருந்தாலும், சீனாவின் சமகால சூழ்நிலையைப் பற்றி துல்லியமான விவரணைகளுடன் வந்திருக்கும் முதல் தமிழ் நூல் இதுவே.

()

பல நூறு வருடங்களாக மன்னராட்சி; அதற்குப் பின்னர் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்கள்; 1949-ல் இப்போது சீனா என்று அறியப்படுகிற சீன மக்கள் குடியரசின் தோற்றம், மாவோவின் காலத்தில் மக்கள் சந்தித்த இழப்புகள் மற்றும் லாபங்கள், டியானன்மென் சதுக்க படுகொலைகள்...  

பிறகு 1990-களில் சீனா தன்னுடைய கடுமையான முகமுடியை சற்று தளர்த்தி பொருளாதார சீர்திருத்தங்களை அமைத்துக் கொண்ட பின்னர் அசுர வளர்ச்சியின் வேகத்தில் திரும்பிப் பார்ப்பதற்கு அதற்கு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

கண்டொனீஸ் மற்றும் (பெரும்பான்மையான புழக்கத்தில் இருக்கும்) மாண்ட்ரின் என்ற இரண்டு மொழிகள் பிரதானமாக இருந்தாலும், பேச்சு வடிவத்தில்  வெவ்வேறு ஒலிக்குறிப்புகளுடனும் எழுத்து வடிவத்தில் ஏறக்குறைய ஒரே மாதிரியுமிருக்கிற விநோதம், 2003 வரை இருந்த 'ஹீகோவு' என்கிற உள்ளூர் பாஸ்போர்ட் முறை, 2008 ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிக்காக தன்னை சர்வதேச ஒப்பனை செய்யும் கொள்ளும் முயற்சியில் மக்களைப் பற்றி கவலைப்படாமல் இடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடியிருப்புகள்; புராதன கட்டிடங்கள்,  கடுமையாக பிரயோகிக்கப்பட்ட; படுகிற மனித உரிமை மீறல்கள், அரசாங்கத்தை சந்தேகமே படாமல் இயந்திரங்கள் போல் செயல்படும் இளைய தலைமுறை, வில்லன் நடிகர் நம்பியார் போல் சித்தரிக்கப்படுகிற 'நாட்டுடைப்பி' தலாய் லாமா', கம்யூனிசம் அனுமதிக்கப்படுகிற எல்லை வரைக்கும் புழங்கும் பெளத்தம் உள்ளிட்ட மதங்கள், அதனுடன் பிணைந்திருக்கும் பொருளாதார நோக்கங்கள், உலகமே வியந்து பார்த்த பெய்ஜிங் - திபெத்தின் முதல் ரயில் ...

இவற்றையெல்லாம் இந்த நூலில் பல்லவி மிக சுவாரசியமான நடையில் சொல்லியிருக்கிறார்.

1980-வரை வணிகமே இல்லாதிருந்த ஒரு தேசம் சுமார் இருபது ஆண்டுகளில் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சி கண்டிருப்பது எப்படி என்கிற சிக்கலான கேள்வியைப் பற்றி யோசிப்பதற்கு ஆச்சரியமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. உலக மைய நீரோட்டத்தில் இணைய பொருளாதார சீர்திருத்தங்களை சீனா ஏற்றுக் கொண்டது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் அதன் ஒற்றைக்கட்சி சர்வாதிகார அமைப்பு. ஆம் அதுதான்.

உதாரணமாக நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு பெரிய தொழிற்சாலையை அமைப்பதற்கோ, ஒரு பாலத்தைக் கட்டுவதற்கோ 'கட்சி' தீர்மானித்தது என்றால் அதைத்தடுக்கவோ கேள்வி கேட்கவோ யாருமிருக்க மாட்டார்கள்; இருக்கவும் முடியாது. குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை முடிந்துவிடும். எந்த வேலையையும் இழிவாக நினைக்காத, 'அரசாங்கம் நம்முடைய நன்மைக்குத்தான் செய்யும்' என்று நம்பும் அல்லது நம்பக் கட்டாயப்படுத்தப்படும் மக்கள், அகலமான சாலைகள் முதற்கொண்டு எல்லாவிதமான அடிப்படை கட்டுமானங்களும் கொண்ட நாடு... கட்டி வைக்கப்பட்டிருந்த பொருளாதார மிருகம் திமிறிக்கொண்டு அசுரத்தனமாக ஓடினதில் ஆச்சரியமில்லை. சீனாவின் பிரதான பலமும் பலவீனமும் அதன் சர்வாதிகாரம். ஆனால் அதே சமயம் இந்தியாவை நோக்கினால் பலகட்சி ஜனநாயகத்தில் எந்தவொரு வேலையையும் ஆரம்பிப்பதற்குள்ளாகவே பாராளுமன்றத்தில் குடிமிப்பிடி சண்டை ஆரம்பமாகிவிடும்.

இன்னொரு நுட்பமான விஷயமும் உண்டு. சர்வாதிகாரம் என்பதாலேயே டியானன்மென் சதுக்க போராட்டம்  போல் 'எப்போது வேண்டுமானாலும்' மக்கள் பொங்கி எழக்கூடிய வாய்ப்புண்டு. அதனாலேயே மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது; அதை நிகழ்த்தியும் கொண்டுமிருக்கிறது. ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிற 'பெரிய பெயரை' மாத்திரம் வைத்துக் கொண்டிருக்கிற இந்தியாவில் அந்தப் பிரச்சினையில்லை. ஒரு முறை டிவி பெட்டியை லஞ்சமாகக் கொடுத்து சிரமப்பட்டு ஆட்சியில் அமர்ந்துவிட்டால் போதும்; ஐந்து வருடத்திற்கு ஜாம் ஜாமென்று சுரண்டிக் கொண்டிருக்கலாம். அதிர்ஷ்டமிருந்தால் இன்னும் ஐந்து வருடங்களுக்கு அதை  நீட்டித்துக் கொள்ளலாம். பெயருக்கு பாலத்தைக் கட்டிவிட்டு அதன் பெரும்பாலான செலவை சுருட்டிக் கொள்ளலாம். ஆனால் ஒன்று... இங்கேயும் ஜனநாயகம் அப்படியொன்றும் பொங்கி வழிந்துவிடவில்லை என்பதை  பல மனித உரிமை மீறல் சம்பவங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். இந்தியக் காவல் நிலையத்தின் ஏதாவதொன்றில் ஒரு நாள் இரவைக் கழித்தால் கூடப் போதும்.

ஆசியாவின் இருபெரும் நாடுகளான சீனாவையும் இந்தியாவையும் அடிப்படையான விஷயத்தில் சுருக்கமாக ஒப்பிடுவேமேயானால்.. முன்னது சர்வாதிகாரத்தின் பலவீனம் மற்றும் பொருளாதாரத்தின் பலம் ஆகியவற்றின் கலவை. பின்னது ஜனநாயகத்தின் பலம் மற்றும் பொருளாதார பலவீனம்.. என்று மேம்போக்காக சொல்லாம். இரண்டு நாடுகளிலுமே ஊழல் பொதுவானதாக இருந்தாலும் சீனாவின் தனிநபர் வருமானம் இந்தியாவைப் போல இருமடங்கு. இந்தியாவும் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிற நாடுதான் என்றாலும் அது நிதானமாக ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் சீனா, அமெரிக்காவை இலக்காகக் கொண்டு ஒரு மைல் வேகத்திற்கு தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. சீனாவின் வளர்ச்சியும் இந்தியாவின் ஜனநாயகத்தையும் இணைத்துக் கொண்ட ஒரு பிரதேசம் ஒன்று இருக்குமானால் அதுதான் அடித்தட்டு மக்களின் சொர்க்கமாக இருக்க முடியும் எனக் கருதுகிறேன். 

சீனாவின் காட்டுத்தனமான அடக்குமுறையை இந்தியாவின் ஜனநாயகத்தோடு ஒப்பிட்டு நம்மால் பெருமை அடைய முடிந்தாலும், பெரும்பாலான மக்களுக்கு எல்லாவித அடிப்படை வசதிகளையும் அமைத்துத் தந்திருக்கிற சீனாவையும் குப்பைத் தொட்டியில் தன்னுடைய அடுத்த வேளைச் சோற்றை தேடிக் கொண்டிருக்கிற குடிமக்களை 'அப்படியே' வைத்திருக்கிற இந்தியாவின் அரசியலையும் நினைக்கிற போது நம்முடைய உடனடித் தேவை 'கருணையுள்ள ஒரு சர்வாதிகார' அமைப்புத்தானோ என்று தோன்றுகிறது.

()

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது போல் பல்லவியின் மிதமான நகைச்சுவை கலந்த சுவாரசியமான எழுத்து சுகமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. சீனாவின் ஒவ்வொரு வளர்ச்சியையும், தன்னுடைய அனுபவங்களையும் நூல்நெடுக இந்தியாவோடு ஒப்பிட்டுக் கொண்டே செல்கிறார்.
மொழிபெயர்ப்பு நூல்களில் வழக்கமாக நிகழும் எந்தவித சங்கடமும் நேராமல் மிக நேர்த்தியாக தமிழிற்கு மாற்றியிருக்கும் ராமன் ராஜாவின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. இது ஒரு நேரடி தமிழ் நூலோ என்கிற மயக்கத்தை அந்த சிறப்பான மொழிபெயர்ப்பு ஏற்படுத்துகிறது. பொருத்தமான 'சிவப்பு' நிற அட்டையைக் கொண்டிருக்கும் இந்த நூல் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முந்தையதொரு பதிவில் குறிப்பிட்டிருந்தது போல் 'கிழக்கு' வெளியீடுகளில் இந்நூல் மிக முக்கியமானதொன்றாக இருக்கும். சீனாவைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிற ஆர்வத்தை இந்நூல் ஏற்படுத்தியிருக்கிறது.

வருகிற புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூற்களின் பட்டியலில் இந்நூலை நிச்சயமாக இணைத்துக் கொள்ளலாம் என்கிற பரிந்துரையை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.

இந்நூலை இணையத்தில் வாங்க http://nhm.in/shop/978-81-8493-164-8.html

ப்ரீத்திக்கு.... மன்னிக்கவும்.. பல்லவிக்கு நான் கியாரண்டி. :-)

suresh kannan

Sunday, December 27, 2009

தமிழ் சினிமா 2009


இந்த ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களை தரஅடிப்படையில் நோக்கினால் பொதுவாக திருப்தியில்லாத சூழல்தான் நிலவுகிறது. பெரும்பாலான படைப்புகள் வணிகநோக்குத் திரைப்படங்களின் பிரத்யேக வார்ப்பினில் முடங்கியிருக்கின்றன. கடந்த ஆண்டுகளில் வெளியான 'பருத்தி வீரன்' 'சுப்ரமணியுபுரம்' ஆகிய படங்களைப் போல trendsetting படங்கள் எதுவும் இந்த ஆண்டில் வெளியாகாதது துரதிர்ஷ்டவசமானது. ரெட் ஒன் போன்ற புதிய தொழில் நுட்பங்கள் தமிழிற்கு அறிமுகமாகியிருந்தாலும் தொழில்நுட்பத்தை மாத்திரமே வைத்துக் கொண்டு ஒரு நல்ல திரைப்படத்தை தந்துவிட முடியாது என்கிற அடிப்படை புரிதல் இல்லாதது போல்தான் இருக்கிறது. பெரும்பாலான இயக்குநர்கள் பாதுகாப்பான பாதையிலேயே பயணம் செய்ய விரும்புகிறார்கள் என்பதும் வெளிப்படை.

வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற படங்களே பிரதானமாக பேசப்படுவதால் புதிய முயற்சிகளுக்கு இயல்பாக தடைக்கற்கள் உருவாகின்றன. பாண்டிராஜன், அறிவழகன், அருண் வைத்தியநாதன், நந்தினி, சுசீந்திரன் போன்ற அறிமுக இயக்குநர்கள் புதிய நம்பிக்கைளையும் அடையாளங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றனர் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சர்வதேச திரைப்படச் சூழலோடு ஒப்பிடும் போது நம்முடைய சினிமா இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறது என்பதை வேதனையுடன் சொல்ல வேண்டியிருக்கின்றது. ஒரு நல்ல முயற்சி வெளிவந்தாலும் அது பற்றிப் படர்வதற்குள் ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற வணிகப்பட இயக்குநர்கள் பிரம்மாண்டங்களை வெளியிட்டு அதற்கு வெடிகுண்டு வைத்து விடுகின்றனர். இரான் போன்ற போன்ற அடக்குமுறை சூழல் கொண்ட சிறிய நாடுகளிலிருந்து கூட தரமான திரைப்படங்கள் வெளிவரும் போது ஜனநாயக சூழல் கொண்ட, அதிகத் திரைப்படங்கள் தயாரிக்கிற இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலிருந்து அதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படாமலிருக்கும் நிலை மாற்றப்பட வேண்டியது. பொழுது போக்குப் படங்களைக்கூட ஒரே மாதிரியான வார்ப்பில் தரும் திரைப்படங்களை ஒதுக்கி தரமான படங்களை வரவேற்கின்ற சூழல் ஏற்படுவது ரசிகர்களின் ரசனை மாற்றத்தில்தான் அடங்கியுள்ளது. "வேட்டைக்காரன்" போன்ற குப்பைகள் இவ்வளவு பரபரப்பாகவும் ஆவலுடனும் எதிர்பார்க்கப்படும் நிலையை கவனிக்கிற போது அம்மாதிரியான சூழல் ஏற்படுவதற்கு இன்னும் சில ஆண்டுகளாகும் என கருதுகிறேன்.

இந்நிலையில் என்னுடைய பார்வையில் 2009-ல் வெளிவந்ததில் (இலுப்பைப்பூ சர்க்கரை) சிறந்த மற்றும் குறிப்பிடத்தகுந்த திரைப்படங்களையும் படைப்பாளிகளையும் பற்றிக் குறிப்பிட வேண்டும் என்று தோன்றியதில் இந்தப் பதிவு உருவானது.

சிறந்த திரைப்படங்கள்

வெண்ணிலா கபடிகுழு
பசங்க
அச்சமுண்டு அச்சமுண்டு
நான் கடவுள்


குறிப்பிடத்தகுந்த திரைப்படங்கள்

சிவா மனசுல சக்தி
யாவரும் நலம்
குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்
நாடோடிகள்
பொக்கிஷம்
ஈரம்
திறுதிறு துறுதுறு
பேராண்மை
ரேணிகுண்டா
லாடம்
காதல்கதை

குறிப்பிடத்தகுந்த மறுஉருவாக்க மற்றும் மொழிமாற்றத் திரைப்படங்கள்

உன்னைப் போல் ஒருவன்
கண்டேன் காதலை
பழசிராஜா
நினைத்தாலே இனிக்கும்

சிறந்த அறிமுக இயக்குநர்கள்

 சுசீந்திரன்(வெண்ணிலா கபடிகுழு)
பாண்டிராஜன் (பசங்க)
அருண் வைத்தியநாதன் (அச்சமுண்டு அச்சமுண்டு)
நந்தினி (திறுதிறு துறுதுறு)
அறிவழகன் (ஈரம்)

சிறந்த அறிமுக இசையமைப்பாளர்கள்

ஸ்ருதி கமல்ஹாசன் (உன்னைப் போல் ஒருவன்)
செல்வகணேஷ் (வெண்ணிலா கபடி குழு)
தமன் (ஈரம்)
கணேஷ் ராகவேந்திரா (ரேணி குண்டா)
ஹரிஹரன்-லெஸ்ஸி (மோதி விளையாடு)

சிறந்த ஒளிப்பதிவு கொண்ட திரைப்படங்கள்

 நான் கடவுள் (ஆர்தர் வில்சன்)
ஈரம் (மனோஜ்)
அச்சமுண்டு அச்சமுண்டு (கிரிஸ் பிரெய்லிச்)

சிறந்த இசையமைப்பாளர்

 ஹாரிஸ் ஜெயராஜ் (அயன், ஆதவன்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்கள்

இளையராஜா (நான் கடவுள்) ஸ்ருதி ஹாசன் (உன்னைப் போல் ஒருவன்)

சிறந்த கதை


நான் கடவுள்

சிறந்த திரைக்கதை


உன்னைப் போல் ஒருவன்

சிறந்த வசனம்

ஜெயமோகன் (நான் கடவுள்) பாஸ்கர் சக்தி (வெண்ணிலா கபடிகுழு)

சிறந்த இயக்குநர்

பாலா (நான் கடவுள்)

சிறந்த நடிகர்

மோகன்லால் (உன்னைப் போல் ஒருவன்), ஆர்யா (நான் கடவுள்)

சிறந்த நடிகை

பூஜா (நான் கடவுள்)

சிறந்த நிகழ்வு

ரஹ்மான் ஆஸ்கர்

பிரகாஷ்ராஜ் - தேசிய விருது (சிறந்த நடிகர்-காஞ்சிவரம்)

சிறந்த ஏமாற்றம்

யோகி

துரதிருஷ்டவசமான நிகழ்வு

நாகேஷ் மறைவு


suresh kannan

Saturday, December 26, 2009

இருபத்தி நான்கு கண்கள் - ஜப்பானியத் திரைப்படம்

Keisuke Kinoshita-ன் 'Twenty four eyes' (1954) என்கிற இந்தத் திரைப்படம் பள்ளி ஆசிரியை ஒருவரைப் பற்றியது. ஜப்பானிய கிராமமொன்றின் பள்ளிக்கூடத்தில் தன்னுடைய பணியைத் துவங்கிற அவளுடைய வாழ்க்கையை இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் பின்னுமான பின்னணியில் சுமார் இருபது வருடங்கள் பின்தொடர்கிறது இத்திரைப்படம்.



தன்னுடைய முதல்வகுப்பை 12 சிறுவ/சிறுமிகளுடன் (அதைத்தான் படத்தின் தலைப்பு குறிப்பிடுகிறது) துவங்குகிற அவள், மிகுந்த தாய்மை உணர்வுடன் குழந்தைகளுக்கு போதிக்கிறாள். அவளுக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற நேச உணர்வு கவித்துவமாகவும் நெகிழ்ச்சியாகவும் சொல்லப்படுகிறது. குழந்தைகளின் வறுமையும் கல்வியைத் தொடர இயலாத சிறுமிகளின் குடும்பப் பின்னணியும் அவளைத் துயருரச் செய்கிறது. போருக்கு எதிராக உரையாட முடியாத சூழலும் சிப்பாய்களாவதுதான் தமது இலட்சியம் என சிறுவர்களுக்கு மூளைச்சலவை செய்யும் அதிகார மையத்தின் செயல்பாடுகளும் அவளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி ஆசிரியை தொழிலிலிருந்து விலகச் செய்கிறது. கப்பல் படையில் பணிபுரியும் தன்னுடைய கணவனை இழக்கும் அவள் தன்னுடைய குழந்தைகளுடன் வறுமையின் பிடியில் சிக்குகிறாள். பிறகு வயதான காலத்தில் தம்முடைய பழைய பள்ளிக்கே ஆசிரியையாக வருகிறாள். பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் அவளுடைய வறுமையை உணர்ந்து ஒரு சைக்கிளை பரிசாக வழங்குகின்றார்கள். அவர்களுடனான நெகிழ்ச்சியான நினைவுகளுடன் படம் நிறைகிறது.

()

படத்தில் என்னை மிகப் பிரதானமாக கவர்ந்தது இதன் ஒளிப்பதிவு. இதை ஒரு காவியப்படம் என்கிற பிரக்ஞையுடனும் முன்தீர்மானத்துடனும் ஒளிப்பதிவாளர் Hiroyuki Kusuda பதிவு செய்திருக்கிறாரோ என்கிற பிரமிப்பு படம் முழுவதும் என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அந்தக் கிராமத்து நிலப்பகுதிகளின் பிரம்மாண்ட பின்னணியுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெரும்பாலான பிரேம்கள் புகைப்படப் போட்டியில் பரிசு பெற்ற அழகுணர்ச்சியுடனும் கலைத்தன்மையுடனும் இருக்கின்றன. ஒளிப்பதிவு குறித்து ஆர்வம் கொண்டிருப்பவர்கள் தவற விடக்கூடாது படைப்பிது.



ஆசிரியையாக Hideko Takamine மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். தாய்மை நிரம்பிய அவரது முகம், மற்றவர்களின் துயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அழுது விடும் அந்தப் பாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. படத்தின் ஊடாக ஜப்பானிய கிராமத்தின் கலாசாரமும் மக்களின் வாழ்க்கை முறையும் வெளிப்படுகிறது. படத்தின் துவக்கத்தில், சைக்கிளை ஓட்டிச் செல்லும் ஆசிரியையையும் அவளுடைய நவீன உடையையும் கிராம மனிதர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். சில பெண்கள் தங்களுடைய நிலையுடன் ஒப்பிட்டு பொறாமை கொள்கின்றனர். பெரும்பாலான சிறுவர்களின் கனவு படையில் சேர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. "ஏன் நீ ஒரு விவசாயி ஆகவோ, மளிகைக்கடைக்காரன் ஆகவோ உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக்கூடாது?" என்று மாணவர்களிடம் கேட்கிறாள் ஆசிரியை. "நீங்கள் ஒரு கோழை" என்கிறான் ஒரு சிறுவன். மாணவர்களின் குறும்பு காரணமாக காலை ஒடித்துக் கொள்ளும் ஆசிரியையைக் காண சிறுவர்கள் நீண்ட தூரம் நடந்து வரும் காட்சிகள் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை.

அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டு கல்வி கற்றவர்களும் அஞ்சும் சூழ்நிலையை சில காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. போருக்கு எதிரான கருத்துக்களை கொண்ட ஒரு புத்தகத்தை வைத்திருந்த காரணத்திற்காக ஒரு ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். "அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் நியாயமானவைகளாத்தானே தோன்றுகின்றன?" என்று ஆசிரியை கேட்கும் போது தலைமையாசிரியர் மிகுந்த பதட்டமடைந்து விடுகிறார். "ஆசிரியர்களாகிய நாம் தேசத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்" என்று அந்தப் புத்தகத்தை எரித்துவிடுகிறார். மேலும் முதலாளித்துவம் பற்றி மாணவர்களுடன் உரையாடும் அவளைக் கண்டிக்கிறார்.

()

ஒளிப்பதிவின் நேர்த்தி ஒருபுறம் எனக்கு 'பதேர் பாஞ்சாலி'யை நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது என்றால் மறுபுறம் படத்தின் உள்ளடக்கம், Zhang Yimou-ன் "Not one Less" என்கிற சீனப்படத்தை நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. அந்தப்படத்திலும் கிராமத்து வறுமையான பின்னணியும் ஆசிரியை குழந்தைகளின் மீது கொள்ளும் அக்கறையும் நெகிழ்ச்சியாக வெளிப்பட்டிருக்கும்.

படத்தின் இயக்குநர் Keisuke Kinoshita, அகிரா குரோசாவைப் போல் சர்வதேச திரைப்படச் சமூகத்தில் புகழ் பெற்றவர் இல்லையெனினும் ஜப்பானியக் குடும்பங்களில் இவரது திரைப்படங்கள் இன்றளவும் கொண்டாடப்படுகின்றன. சிறுவயது முதலே திரைப்பட உருவாகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர், பல துறைகளில் உதவியாளராக இருந்த பின்னரே இயக்குநராக முடிந்திருக்கிறது. இவரது பெரும்பாலான திரைப்படங்கள் போரின் பாதிப்பு சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றியே உரையாடுகின்றன.

ஆங்கிலேயக் கல்விமுறை நம்மை ஆட்டு மந்தைக் கூட்டங்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் அவலத்தைப் பற்றிய எந்தவொரு உணர்வும் இன்றி, சம்பளக் கமிஷனைத் தாண்டி சிந்திக்கத் தெரியாத சமகால கல்விச் சூழலை இப்படத்துடன் பொருத்திப் பார்க்கும் போது பெருமூச்சு மாத்திரமே எழுகிறது.

image courtesy: wikipedia

suresh kannan

Tuesday, December 22, 2009

ஜெயமோகன் நூல் வெளியீட்டு விழா 19.12.09


பத்து நூல்கள். தேவநேய பாவாணர் நூலக அரங்கம்.

பின்நவீனத்துவ சூழலுக்கு ஏற்றாற் போல் அடுக்குகளில் புத்தகங்கள் மாற்றி மாற்றி அடுக்கப்பட்டு மரபை கட்டுடைக்கும் இந்த நூலகத்திற்கு அவ்வப்போது செல்வது வழக்கமெனினும் பக்கத்திலிருக்கும் இந்த அரங்கத்திற்கு செல்வது அபூர்வம். காதல் தோல்வியடைந்தவனின் கவிதைப் புத்தகம் மாதிரி அழுது வடிந்து கொண்டிருக்கும் அந்த அரங்கு, இப்போது அறிமுகப்படுத்தப்படும் சினிமா நாயகி போல் பளபளவென்றும் (ஏசி) குளிர்ச்சியோடுமிருந்தது.

(நூலகங்களில் புத்கக அடுக்கு முறை பற்றிப் பேசும் போது The Shawshank Redemption திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவைக்காட்சி நினைவுக்கு வருகிறது. தொடர்ச்சியான போராட்டத்தைத் தொடர்ந்து அதிகாரிகளின் அனுமதியுடன் சிறையில் நூலகம் ஒன்றை அமைப்பார் Tim Robbins. சக சிறைவாசிகளின் உதவியோடு புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருக்கும் போது ஒரு ஆங்கில புதினத்தைக் காட்டி 'அது எதைப் பற்றியது?' என்று கேட்பார் ஒருவர். "சிறையிலிருந்து தப்பிப்பதற்காக தொடர்ச்சியாக முயலும் ஒருவரைப் பற்றின புதினம்" என்று பதிலளிப்பார் Tim Robbins. "அப்படியென்றால் அதை 'Education' என்ற அடுக்கில் வைத்து விடவா?" என்று குறும்பாக கேட்பார் Morgan Freeman.)

நான் சென்ற போது ஏறக்குறைய அரங்கு நிறைந்து பதிப்பாளர் மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரை நிகழந்து கொண்டிருந்தது. 'எழுத்தாளன் படைப்பிலக்கியத்தைத் தாண்டி எல்லாத் துறையையும் பற்றி கருத்து சொல்ல வேண்டுமா? எனக் கேட்கப்படுகிறது. இன்றைய மெளன சூழ்நிலையில் எழுத்தாளன்தான் அனைத்தையும் பற்றி உரையாட வேண்டியிருக்கிறது' என்று வெளியிடப்படயிருக்கிற நூல்களின் உள்ளடக்கங்களை தர்க்கப்படுத்திக் கொண்டிருந்தார். தலைமை உரை ஆற்றிய டாக்டர் வி.ஜீவானந்தம், (பசுமை இயக்கம்) ஈரோட்டில் மாற்று மருத்துவனை ஒன்றை நடத்திக் கொண்டிருப்பதும், ஜெ.மோவின் நீண்ட கால நண்பர் என்பதும் தெரிந்தது.

மென்மையான குரலில் எனக்கும் புரியும்படியான எளிய ஆங்கிலத்தில் உரையாற்றினார் கன்னட எழுத்தாளர் விவேக் ஷன்பேக். (ஜெயமோகனின் மொழிபெயர்ப்பில் இவரது சில சிறுகதைகள் மொழி பெயர்க்கப்பட்டு அவரது தளத்தில் வெளியிடப்பட்டிருந்ததை வாசித்த போது தமிழின் சமகால சிறுகதை உலகம் கிணற்றை விட்டு வெளியே வரவேண்டிய தருணம் ஏற்பட்டிருப்பதை உணர முடிந்தது.) உலகமயமாக்கத்தின் விளைவாக கன்னட சூழ்நிலையில் புத்தக வாசிப்பில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவையும் ஜெ.மோவுடனான நீண்ட கால நட்பையும் விவரித்தார்.

வீட்டுச் சோபாவில் சாய்ந்து கொண்டு 'ஊரின் வெள்ளாமை' பற்றி எச்சில் தெறிக்க விவரிக்கும் விவசாய 'பெரியப்பா' மாதிரி பார்வையாளர்களோடு மிகுந்த அன்யோன்ய மலையாளத்தில் உரையாடினார் கல்பற்றா நாராயணன்.

அப்போது நிகழ்நத ஒரு அதிசயத்தைப் பற்றி நிச்சயம் சொல்ல வேண்டும். அவர் மலையாளத்தில் உரையாடுவதை குறித்துக் கொண்டு உடனுக்குடன் அதை தமிழில் இலக்கிய வாசனையுடன் கூடிய வாக்கியங்களாக அமைத்து பார்வையாளர்கள் விளங்கிக் கொள்ளும்படி சொன்னார் ஜெயமோகன். கிறிஸ்துவ மதப்பிரச்சாரக் கூட்டங்களின் நினைவு வந்தாலும், என்னைப் பொறுத்தவரை இதை மொழியாளுமை கொண்டவரின் ஒரு சாதனையாகவே காண்கிறேன்.

..அந்தரங்க உறவுகளே சில காலத்திற்குப் பிறகு சலித்துப் போகிற சூழ்நிலையில் ஜெயமோகனுக்கும் தமக்கும் உள்ள நட்பும் உறவும் எவ்வித தடங்கல்களுமின்றி தொடர்கிறதைப் பற்றி விவரித்த கல்பற்றா நாராயணன், எப்போதும் சலிப்பில்லாத உற்சாகத்தோடு இயங்கும் ஜெமோவின் எழுத்து 'தசாவதார' வடிவங்களில் வெளிப்படக்கூடிய வீர்யமுள்ளது" என்றார்.

எப்போது வாசித்தாலும் அப்போதைய காலகட்டத்திற்கு பொருந்திப் போகிற, ஜெமோவின் எழுத்துக்களில் உள்ள நிரந்தரத் தன்மையைப் பற்றி வியந்துப் போற்றின யுவன் சந்திரசேகர் அதை நூலில் உள்ள பொருத்தமான வாக்கியங்களோடு விளக்கினார். 'புன்னகைக்கும் பெருவெளி' என்ற கட்டுரையை மிக அவசியமான பரிந்துரையாக முன்வைத்தார். இணையத்திலிருந்து விலகியே நிற்கும் யுவனை யாராவது விமர்சித்து எழுதினால் மாத்திரமே அதை நண்பர்கள் தம்முடைய கவனத்திற்கு கொண்டு வருவதாக சொன்னார். யுவனின் கவனத்தைக் கவருவதின் எளிய வழி, அவரை உச்சமாக திட்டி எழுதுவதே என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

வசந்தபாலனை சாய்ஸில் விட்டுவிடுவோம்.

பர்வீன் சுல்தானா தாம் ஜெமோவின் எழுத்துக்களினால் பாதிக்கப்பட்டிருப்பதை பிரத்யேக பட்டிமன்ற 'உரத்த' குரலில் வெளிப்படுத்தினார். 'உரத்த சிந்தனை' எனும் சொல்லாடல் பட்டிமன்ற பேச்சாளர்களிலிருந்து கிளைத்ததாக இருக்க வேண்டும். கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறார் போலிருக்கிறது. நீண்ட நேரத்தை எடுத்துக் கொண்டார்.

இளைஞரான பெரியாரியவாதி செல்வ புவியரசன், ஜெயமோகன் தம்முடைய எழுத்துக்களில் பெரியாரைப் பற்றியும் திராவிட இயக்கத்தை குறித்தும் திரித்து எழுதினதாக கருதியவைகளை ஆவேசமான குரலில் மறுத்தார். "ஜெயமோகன் ஒரு சினிமா வசனகர்த்தா' என்று சொல்வது எப்படி அபத்தமாக இருக்குமோ அப்படியே 'பெரியார் ஒரு சீர்திருத்தவாதி' என்று அவரை குறுகிய பார்வையில் நோக்குவது". என்றாலும் இவரின் பேச்சில் ஆவேசம் இருந்த அளவிற்கு அழுத்தமோ, உரையாடலில் கோர்வையோ இல்லாமலிருந்ததாக எனக்குத் தோன்றியது. (மொக்கையாக இருந்தாலும் அது தமக்கான ஜால்ராப் பதிவாக இருந்தால் அதை மாத்திரமே தம்முடைய தளத்தில் வெளியிடும் சாரு போன்றவர்கள் மாற்றுச் சிந்தனைகளை அங்கீகரிக்கும் அடிப்படை பாடத்தை இந்நிகழ்விலிருந்து கற்றுக் கொள்ளலாம் என்பதும் தோன்றியது).

வழக்கத்திற்கு மாறாக மதனின் பேச்சு சுவாரசியமாக இருந்தது. சில ஆளுமைகளைப் பற்றியும் சில சமாச்சாரங்களைப் பற்றியும் எளிதில் கருத்து சொல்ல முடியாத ஒரு கட்டுப்பெட்டியான, அராஜகமான சூழ்நிலை தற்போது இருப்பதாகவும் குறைந்தபட்சம் எழுத்தாளர்களாவது அந்தச் சூழ்நிலையை மாற்றியமைக்கும் பணியை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்பது இவர் உரையாடலின் சாரமாக இருந்தது.

()

தர்க்கத்தின் அடிப்படையிலேயே உண்ணும் உறங்கும் எழுதும் ஜெயமோகன், ஏற்புரையில் மற்றவர்களின் கருத்துரைகளைப் பற்றி எதிர்வினை செய்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் முன்னரே தயாரிக்கப்பட்ட பத்து (ரெடிமேட்) சட்டைகளோடு தம்முடைய பேச்சை முடித்துக் கொண்டார். ஜெமோவை சந்தித்து ராட்சசத்தனமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் அவருடைய எழுத்துக்களின் வேகத்தையும் விழாவில் வெளிப்பட்ட உடனடி மொழிபெயர்ப்பின் நேர்த்தியையும் வியந்தேன். நண்பர் சிவராமனின் உதவியோடு ஏற்கெனவே அறிமுகமிருக்கிற சக பதிவர்களோடு உரையாட முடிந்ததோடு சில புதிய பதிவர்களின் அறிமுகமும் நிகழ்நதது. கவிஞர் ராஜசுந்தரராஜனையும் யுவன் சந்திரசேகரையும் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். தேநீர் அருந்தும் சம்பிராதயத்தோடு அன்றைய நாள் நிறைந்தது.

சாரு மற்றும் ஜெயமோகன் நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளிலிருந்த வித்தியாசங்களையும் அவற்றின் பின்னேயிருக்கும் சமூகக் காரணங்களை இன்றைய நுகர்வு கலாசார பின்னணியில் யோசிப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. சாரு தம்முடைய நூல் வெளியீட்டு நிகழ்வு இளமைக் கொண்டாட்டமாக நிகழ்ந்ததாக புளகாங்கிதப்படுகிறார். இன்றைய தலைமுறையினர் தம்முடைய இளமை உற்சாகத்தை செலவழிக்க ஒன்றுமில்லாத பரபரப்பான புள்ளிகளை நோக்கி மாத்திரமே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் பின்பு யதார்த்தம் முகத்தில் அறைந்ததும் தெளிந்து அங்கிருந்து விலகி விடுகிறார்கள் என்பதும் தொடர்ச்சியான சமூக நிகழ்வு. சாரு இதிலெல்லாம் மயங்கிப் போகாமல் நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிற தம்முடைய எழுத்துக்களை பலப்படுத்திக் கொள்வதன் மூலம்தான் தன்னை மீட்டுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தால் சரி.

துரதிர்ஷ்டவசமாக எஸ்.ரா நூல் வெளியீட்டு விழாவிற்கு செல்ல முடியாமலிருந்தது. சென்றிருந்தால் ஞாநி குறித்த சாருவின் இந்த திரித்தல் பேச்சையும் கண்டு கொள்ள இயன்றிருக்கும்.

disclaimer: (நிகழ்வில் உரையாடப்பட்டவை என்னுடைய நினைவிலிருந்து எழுதப்படுவது; கருத்துப் பிழைகள் இருக்கலாம்)

image courtesy: original uploader


suresh kannan

Monday, December 21, 2009

கிழக்கு பதிப்பகத்தின் முக்கியமான நூல் - ஒரு டிரைய்லர்

ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவதற்கு டிரைய்லர் போட்ட முதல் பிரகஸ்பதி நானாகத்தான் இருப்பேன் என்று நம்புகிறேன்.



கிழக்குப் பதிப்பக வெளியீடுகளில் நான் வாசித்த வரை (மிகச் சொற்பமே) அபுனைவு வகைகளில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த வெளியீடாக இருக்கிறது என்பதை மிக நிச்சயமாகச் சொல்ல முடியும். நூல் கையில் கிடைத்தவுடனேயே சுவாரசியமாக வாசித்து முடித்து விட்டேன். என்றாலும் குறிப்புகளை எழுதிக் கொள்ள மறுபடியும் வாசிக்க வேண்டியதாயிற்று. என்றாலும் கூட என்ன எழுதுவது என்பது புகைமூட்டமாகவே இருக்கிறது. மொக்கையான புத்தகம் என்றால் பரபரவென்று ஒரு பத்து பக்கத்திற்கு திட்டி உடனே எழுதி விடலாம். ஆனால் இது மிகச் சிறந்த உள்ளடக்கத்துடன் வெளிவந்து தொலைத்திருக்கிறது. எனவேதான் இந்தக் குழப்பம். அதனாலேயே இதைப் பற்றி எழுதுவது தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தது.

எனவேதான் கார்ரேஸில் ஜெயிக்க தன் வண்டியிலேயே டைம்பாம் வைத்துக் கொள்ளும் 'காதல் மன்னன்' கரணைப் போல இந்த teaser trailer-ஐ வெளியிடுவதன் மூலம் எனக்கு நானே ஒரு நெருக்கடியையும் deadline-ஐயும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நூல் பற்றிய விவரம் ஒரு சிறிய சஸ்பென்ஸ்.

எனவே.. புத்தகப் பார்வை வெகு விரைவில்.

(ரொம்பத்தான் பில்டப் கொடுத்துட்டேன் போலிருக்கே.. ஆண்டவா..)

Image Courtesy: original uploader

suresh kannan

தமிழில் ஒரு ஹாலிவுட் சினிமா

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தலைப்பு சினிமா போஸ்டர்களிலும் பூஜைகளிலும் வெறும் சம்பிதாயத்திற்காக உபயோகப்படுத்தப்படும் வாக்கியமாக இருந்தாலும் நான் அந்த நோக்கில் அல்லாமல் அதன் மதிப்பை உணர்ந்தே குறிப்பிட்டிருக்கிறேன். சு.ரா. பாணியில் I mean, what i said.

இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனின் திரைப்படமான 'கண்டு கொண்டேன்(2)-ல் ஒரு காட்சி வரும். படத்தின் நாயகன் அமெரிக்காவில் படித்துவிட்டு தமிழ்த் திரையுலகில் தன்னுடைய இயக்குநர் வாய்ப்புக்காக போராடுவான். ஹாலிவுட் தரத்தில் நல்லதொரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் இங்கு தரவேண்டும் என்பது அவனுடைய நோக்கமாக இருக்கும். ஆனால் கதாநாயகனின் ஹீரோயிச நிழலில் ஒளிந்து கொண்டும் அபத்தமான சம்பிரதாயங்களில் அமிழ்ந்து கொண்டுமிருக்கிற தமிழ் சினிமாவின் போக்கு அவனைத் திண்டாட வைக்கும். அவனுடைய அப்பா "ஏண்டா இப்படி இங்கிலீஷ்காரன் மாதிரி படமெடுக்கணும்ணு கெட்டுப் போறே. அவனுக்கு ஒரு ரொட்டியும் சிக்கன் துண்டும் வெச்சா திருப்தியாயிடுவான். இங்க அப்படியா, சாம்பார், குழம்பு, ரசம், அப்பளம், ஊறுகான்னு... ஒரு புல் மீல்ஸ்' சாப்பிட்டாதான் திருப்தியாவாங்க" என்பார். (இப்படி கலோரி கணக்கில்லாமல் உட்கொள்கிற காரணத்தில்தான் பெரும்பாலான தமிழர்களைப் போலவே அவர்களின் சினிமாவும் வீங்கின வடிவத்தோடும் சர்வதேச தரத்திற்கு ஏற முடியாமல் மூச்சு வாங்கியபடியும் உருண்டு நடக்கிறது.) பிறகு அவன் நொந்து போய் ஒரு தெலுங்கு அதிரடி நாயகியை வைத்து எல்லா சமரசங்களுடன் 'ஒரு வணிக வெற்றிப்படத்தை' தருவான். இப்படியாக தமிழ்ச்சினிமாவின் சூழல் அவனை 'காயடித்துவிடும்'.

நண்பர் அருண் வைத்தியநாதன் நல்லவேளையாக தன்னுடைய முதல் திரைப்படமான 'அச்சமுண்டு அச்சமுண்டு'-வை அமெரிக்கச் சூழலிலேயே எடுத்து முடித்துவிட்டார். தப்பித்தவறி அவர் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தால் மேற்சொன்ன நாயகனைப் போல அவரும் காயடிக்கப்பட்டிருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த, தமிழகச் சூழலில் கண்டு கொள்ளப்படாமலேயே போன இந்தத் திரைப்படத்தைப் பற்றி இப்போது பேச என்ன அவசியம் வந்தது என்றால், இது சர்வதேச திரைப்படச் சூழலில் தொடர்ந்த கவனத்தைப் பெற்று வந்துக் கொண்டிருக்கிறது. ஷாங்காய், யு.எஸ்., ஜப்பான், கெய்ரோ போன்ற நகரங்களில் திரைப்பட விழாக்களில் திரையிடும் தகுதியைப் பெற்றதோடு அண்மையில் கோவாவில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட இரண்டே தமிழ்த் திரைப்படங்களில் இதுவும் ஒன்று (இன்னொன்று பாண்டிராஜின் 'பசங்க). தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச திரைப்பட நிகழ்விலும் திரையிடத் தேர்வு பெற்றிருக்கிறது. அது மாத்திரமல்ல. சர்ச்சைக்குரிய விஷயங்களிலிருந்து கவனமாக தள்ளி நிற்கிற ஆச்சாரமான தமிழ்த் திரையுலகம் இதுவரை தொடாத 'குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை' என்கிற சமாச்சாரத்தைப் பற்றி இத் திரைப்படம் உறுத்தாமல் உரையாடுகிறது. (கமலின் 'மகாநதி'யின் சில காட்சிகளை மட்டும் இதனோடு தொடர்புப்படுத்திக் காணலாம்).



Psychological thriller வகையைச் சேர்ந்த இத்திரைப்படம் ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான திரைக்கதை, எளிமையான நடிகர்கள், திரில்லர் என்பதற்காக அபத்தமாக பயமுறுத்தாத காட்சிகள் என்று பொதுவான தமிழ்த் திரைப்படங்களுக்கு சம்பந்தமேயில்லான தளத்தில் இயங்குகிறது. அதனாலேயே இதை ஹாலிவுட் கிளாசிக் திரைப்படங்களுடன் ஒப்பிடத் தோன்றுகிறது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் ஊடகங்கள் 'குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை' என்கிற பிரச்சினையைப் பற்றி தொடர்ச்சியாக உரையாடுகின்றன. பெண்களில் 15-25%, ஆண்களில் 5-15% பேரும் தங்களின் இளமைக்காலத்தில் பாலியல் வன்புணர்ச்சியால் ஆளாகிக் கொண்டிருப்பதாக ஒரு தோராயமான புள்ளிவிபரம் கூறுகிறது. அந்தப் பாதிப்பு 30% நெருங்கிய உறவினர்களாலும் 60% நண்பர்கள் மற்றும் பணியாளர்களாலும் 10% அந்நியர்களாலும் நிகழ்த்தப்படுவதாகவும் அது கூறுகிறது. Gregg Araki-ன் அமெரிக்கத் திரைப்படமான Mysterious Skin (2004), அறியாச் சிறுவர்களின் மீது பிரயோகிக்கப்படும் வன்புணர்ச்சி எவ்வாறு அவர்களின் எதிர்காலத்தை உளவியல் ரீதியாக பாதிக்கிறது என்பதை அதிர்ச்சி கலந்த காட்சிகளுடன் விவரிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நம் தமிழ்ச் சூழலோ கலாசாரத்தின் மீதான மிகை மயக்கம் காரணமாக இதை தன்னுள்ளேயே புதைத்துக் கொள்கிறது. சரி. இப்போது அருணின் திரைப்படத்தை கவனிப்போம்.

()

படம் துவங்குகின்ற முதல் காட்சியிலேயே தன்னை பகடி செய்துக் கொள்கிறது. நாயகன் பயணிக்கும் வாகனத்தில் ஒலிக்கும் பாடல் 'அச்சம் என்பது மடமையடா'. படத்தின் தலைப்போ 'அச்சமுண்டு, அச்சமுண்டு'.

இத்திரைப்படத்தின் பாத்திரங்கள், நடுத்தர வர்க்கத்தின் குணாதிசயங்களை மிக நெருக்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளுமளவிற்கு மிகுந்த நுண்ணுணர்வுடன் படைக்கப்பட்டிருக்கின்றன; இயங்குகின்றன. பொருளீட்டுவதற்காக புலம்பெயர வேண்டியிருக்கிற குடும்பம் சந்திக்க நேர்கிற கலாசார முரண்கள், அதன் காரணமாக குடும்ப நபர்களிடையே எழும் மோதல்கள், அடிமனதில் உறங்கிக் கொண்டிருக்கும் தாய்நாட்டு ஏக்கம்.. போன்ற அகவயமான உரசல்கள் மிகுந்த திறமையுடன் பாத்திரங்களின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. காட்சிகளை கையாள்வதில் இயக்குநர் கூர்மையான யதார்த்தத்துடனும் நுட்பமாகவும் வெளிப்பட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

உதாரணமாக இந்த விஷயங்களைச் சொல்லலாம். தாங்க்ஸ் அங்கிள்' என்று சொல்லு" என்று தாய் சொல்லிக் கொடுக்க அமெரிக்க கலாசாரத்தில் வளர்ந்த அந்தச் சிறுமி மிக இயல்பாக "தாங்க்ஸ் ராபின்சன்" என்கிறாள். இந்தியர்களுக்கு 'கீரின் கார்டு' மேலிருக்கும் மோகத்தை ஒரு 'திறந்த மார்புக்காரி' மூலம் கிண்டலடிக்கிறார் அருண்.

இன்னொரு உதாரணம். பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் அயல்நாட்டவர்களை காட்சிக்குள் உரையாடுபவர்களாக சித்தரிக்கும் போது (அயல் நாட்டவர்கள் என்றாலே அது ஆங்கிலம் பேசும் வெள்ளைக்காரர்கள்தான்; வேறு எவரையும் தெரியாது) அவர்கள் பேசும் வசனத்தை ஒரு கோவிந்தசாமி "அவர் என்ன சொல்றாருன்னா.." என்று மெனக்கெட்டு மொழிபெயர்ப்பார் அல்லது கீழே தமிழ் வரிகள் ஓடும். தமிழ் ரசிகர்களுக்கு புரிய வேண்டுமாம். இதில் அவ்வாறான விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு அயல் மொழியை இயல்பாக பேசிக் கொள்கிறார்கள் மொழி புரியாதவர்களுக்கு கூட பாத்திரங்களின் உடல்மொழியின் இயக்கம் மூலம் காட்சிகளை தடையின்றி புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நிறத்தேர்வுக் கார்டுகளின் மீது சிறுமி விரல்களை நகர்த்தி விளையாட அதைப் பின்தொடரும் ராபின்சனின் விரல்கள் சம்பந்தப்பட்ட காட்சியைச் சொல்லலாம்.

காட்சிகள் (ஒளிப்பதிவு கிரிஸ் பிரெய்லிச்) அழகுணர்ச்சியுடனும் காட்சிக் கோணங்கள் பொருத்தமாகவும் கையாளப்பட்டிருக்கின்றன. தம் வீட்டைச் சுற்றி நிகழும் பூடகமான சம்பவங்களைக் கண்டு நடுஇரவில் பிரசன்னா யோசிக்கும் காட்சி போதுமான இருளும் மெலிதான ஒளியுமாக... நல்லதொரு கலவை. தம்முடைய வீட்டுப் பாதுகாப்பு குறித்து பிரசன்னா ஒருவருடன் உரையாடும் லாங் ஷாட்டில் வசனம் மிக மெலிதாக, முணுமுணுப்பாக கேட்ட போது நான் பிரமித்துப் போனேன்.

பாடல்களைப் பொறுத்தவரை இளையராஜாவின் வாரிசுகளில் ராஜாவின் இசைக் கோர்வைகளை மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்டவர் என்று கார்த்திக் ராஜாவைச் சொல்வேன். 'டும்டும்டும்" திரைப்படத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டால் நான் சொல்வது புரியும். யுவனை விட அதிக உயரத்தில் கார்த்திக்கை நான் வைப்பேன். இன்னும் அதிர்ஷ்டம் கைகூடவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இத்திரைப்படத்தில் அவரின் ஒரு பாடல் (கண்ணில் தாகம் தீருமோ) கேட்ட மாத்திரத்திலேயே சங்கடத்தை ஏற்படுத்தி வயிற்றைப் பிசைய வைக்கும் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. படத்தைப் பா¡க்கும் முன்னரே இது எனக்கு ஏற்பட்டது என்பதுதான் ஆச்சரியம். (இது என்ன ராகம் என்பதை யாராவது தெளிவுப்படுத்துங்கள்). ஆனால் கார்த்திக்கின் பின்னணி இசை பல இடங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதைச் சொல்லியே தீர வேண்டும். (சிறிய உதாரணம்: துவக்கத்தின் லிப்ட் காட்சி).

()

பிரசன்னா மிக இயல்பாக நடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகவும் குறைவான வார்த்தை. (ஐம்பது வயதைத் தாண்டியும் தங்களுடைய நாயக அந்தஸ்தை விட்டுக் கொடுக்காமல் மரத்தைச் சுற்றி வந்து ஆடும் ஹீரோக்கள் மத்தியில் 'அஞ்சாதே'வில் இவரது துணிச்சலைக் கண்டு பாராட்டவே தோன்றியது). இவருக்கும் சிநேகாவுக்குமான வேதியியல் (?!) நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. வழக்கமாக எனக்கு சிநேகாவைப் பார்க்கவே பிடிக்காது, குறிப்பாக அவர் சிரிக்கும் காட்சிகளில். ஆனால் இதில் அவர் அழகாகத் தோன்றியிருப்பதற்கு காரணம் ஒளிப்பதிவாளரின் திறமையோ, என்னவோ.

விளம்பரப் படங்களில் தோன்றும் கொழு கொழு குழந்தையாக அல்லாமலும் "குழந்தைகள்லாம் எப்படி பொறக்குது?" என்பது போன்ற அதிகப்பிரசங்கித்தனமான வசனம் பேசாமலும் திராவிடக்களையுடன் இயல்பாக நடித்திருக்கிறாள் அந்தச் சிறுமி. (அக்ஷயா தினேஷ்).

Emmy award நடிகரான ஜான்ஷே பிரமாதப்படுத்தியிருக்கிறார். சிறுவ/சிறுமிகள் மீது தமக்கெழும் இச்சையை பார்வையினாலேயே உணர்த்துகிறார். சிறுமியின் கட்டிலில் படுத்து தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வது, உணர்ச்சிமிகு நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளின் மூலம் அதைக் கடந்துவருவது போன்ற காட்சிகளில் இவரது நடிப்பு மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. எந்தக் காட்சியிலும் இவர் நடிக்கிறார் என்கிற உணர்வே வரவில்லை.

()

இந்தியாவில்தான் அதிக அளவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்ச்சி நிகழ்கிறது எனும் போது (அந்தப் புள்ளி விபரங்கள் இந்தப் படத்தின் இறுதிலேயே காட்டப்படுகின்றன) ஏன் இத்திரைப்படம் இந்தியாவில் அல்லாமல் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது? என்றொரு கேள்வியை ஒரு விமர்சனத்தில் சந்தித்தேன். இம்மாதிரியான சர்ச்சையான சமாச்சாரம், தமிழகச் சூழலில் நிகழ்வது போல் இத்திரைப்படம் சித்தரிக்கப்பட்டிருந்தால் கலாசார காவலர்களும் போலி முற்போக்குவாதிகளும் அதன் அடிப்படையை புரிந்து கொள்ள விரும்பாமல் கூப்பாடு போட்டிருப்பார்கள். மேலும் இவ்வாறு நிகழ்வது வேறு எங்கோ ஒரு பிரதேசத்தில் நிகழ்வது" என்கிற உணர்வை பார்வையாளன் கிடைக்கப் பெற்றால்தான் அவனால் சங்கடப்படாமல் படத்தை ரசிக்க முடியும் என்று இயக்குநர் நினைத்திருக்கலாம்.

இத்திரைப்படத்தில் குறைகளும் இல்லாமலில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டியது சற்றே தொய்வான திரைக்கதை. பாத்திரங்களின் அறிமுகங்கள், பிரச்சினையின் உள்நுழைவு மற்றும் அது நகரும் விதம், பிரச்சினை தீர்க்கப்படுதல். என்கிற திரில்லர் படங்களின் பொருத்தமான மூன்றடுக்கு திரைக்கதை அமைப்பை இயக்குநர் தேர்ந்தெடுத்திருந்தாலும் ஒரே மாதிரியான சூழ்நிலை, அதே பாத்திரங்கள் திரும்பத்திரும்ப காட்டப்படும் போது சலிப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து குழந்தைகள் கொல்லப்படுவதால் அந்த நகரத்திலும் காவல்துறையினரிடமும் ஏற்படும் பரபரப்பையும், pedophile பாத்திரம் சிறுமியை அடைய முயற்சிப்பதை இன்னும் அதிக பதைபதைப்பான காட்சிகளுடன் நகர்த்திச் சென்றிருக்கலாம். மேலும் கிளைமாக்ஸ் காட்சி போதுமான அவகாசமின்றி திடீரென்று தீர்மானித்தது போல் நிகழ்கிறது.

முன்னரே குறிப்பிட்டது போல் தமிழ்ச் சினிமா இதுவரை சித்தரிக்காத ஒரு சமூகப் பிரச்சினையை பற்றி மேலோட்டமாகவேனும் உரையாடினதற்காகவும் அதன் வழக்கமான சம்பிதாயங்களிலிருந்து விலகி நேர்த்தியான ஒரு திரைக்கதை அமைப்பைக் கொண்டிருந்ததற்காகவும் என்னைப் பொறுத்த வரை இது ஒரு முக்கியப் படைப்பாகிறது.

தொடர்புடைய பதிவுகள்:

அருண் வைத்தியநாதனின் திரைப்படத்துக்கு விருது

அருண் வைத்யநாதனின் சில குறும்பட முயற்சிகள்




suresh kannan

Wednesday, December 16, 2009

ரே குறித்த சிறந்த அறிமுகக் கட்டுரை


சத்யஜித் ரே எனும் மகா உன்னதக் கலைஞனை, இந்தியத் திரைப்பட இயக்குநரை நீங்கள் இதுவரை அறிந்திருக்கவில்லையெனில் இந்தக் கட்டுரை உங்களுக்கானது. ரேவை மேம்பாக்காக அறிந்தவர்களுக்கும் இதில் உள்ள சில நுண்மையான தகவல்கள் உபயோகமாக இருக்கக்கூடும். கட்டுரையின் உள்ளடக்கத்தின் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் அடிப்படையில் இது நல்லதொரு அறிமுகம் என்பதால் 'கீற்று'வில் வெளிவந்த (புத்தகம் பேசுது'வில் பிரசுரமானது) அஜயன் பாலா எழுதின இந்தக் கட்டுரையை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.


நன்றி: கீற்று / புத்தகம் பேசுது

Sunday, December 13, 2009

சாருவின் நூல் வெளியீட்டு விழா - 12.12.09 - பகுதி 2



முதல் பதிவின் தொடர்ச்சி...

இணையப் பதிவர்கள் குறித்து எஸ்.ரா முன் வைத்த பொதுவான விமர்சனம் எனக்கு ஏற்புடையது. பொதுவாக, தமிழக்ப் பதிவர்களைப் போலவே அயல் மாநில/நாட்டுத் தமிழர்களின் தேடலும் ஆர்வமும் வெகுஜன சினிமா குறித்தும் அரட்டை அரசியல் குறித்தும் அதன் தொடர்ச்சியான வீண் விவாதங்களுமாகத்தான் இருக்கிறது. பெளதீக ரீதியாக அவர்கள் தங்களின் சொந்த ஊர்களிலிருந்து விலகி இருந்தாலும் அவர்களின் எண்ணங்களும் தேடல்களும் தமிழகத்தின் பொதுப்புத்தி சார்ந்த விஷயங்களைச் சுற்றி மாத்திரமே அமைந்துள்ளது. அடிப்படையாக இதில் தவறில்லையெனினும் தான் தற்போது வாழ்கின்ற பிரதேசங்களின் பிரத்யேக கலாச்சாரம் குறித்தும் அங்குள்ள சிறந்த இலக்கியம், சினிமா, சிறந்த மனிதர்கள், மக்களின் வாழ்க்கை முறை போன்றவற்றைப் பற்றியும் அவர்கள் பதிவு செய்வது ஆரோக்கியமான இணையப்பயன்பாட்டிற்கு உதவும். திரைப்படங்களிலும் நூல்களிலும் காணப்படாத, பதியப்படாத கலாசார பண்பாட்டு விஷயங்களை உள்ளூர் வாழ் மக்களின் மூலமாகத்தான் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும். இது சரிதான்.

ஆனால் ஆனந்த் மீது எஸ்.ரா வைத்த விமர்சனம் எனக்கு ஏற்புடையதல்ல.

சாருவின் இணைய தளத்தில் மலாவி குறித்து ஆனந்த் எழுதிய தொடர் பதிவுகளின் மூலம் அப்பிரதேசத்தின் மக்களைப் பற்றியும் கலாசாரத்தைப் பற்றியும் நிறையவே என்னால் அறிய முடிந்தது. எப்படி இந்தியா என்றொரு நாடு இருக்கிறது என்பதையே உலகப் பந்தின் சில பகுதிவாசிகள் அறியாமல் இருக்கிறார்களோ, அப்படியே நானும் இப்படியொரு தேசம் இருக்கிறது என்பதையே ஆனந்தின் பதிவுகள் மூலம்தான் அறிந்து கொண்டேன். பதிவுகளின் கூடவே அவர் தன்னுடைய வாழ்க்கைத் துளிகளையும் இடையில் பகிர்ந்து கொண்டார் என்பது உண்மைதான். தொழில் முறை அல்லாத அதிகம் அனுபவமில்லாத எழுத்தாளருக்கு இயல்பாக ஏற்படும் விபத்துதான் இது. அதற்காகவே ஆனந்த்தை முழுக்க எஸ்.ரா. புறக்கணித்தது ஏற்க முடியாததாக இருந்தது. ஆனந்தின் மொழி மிகுந்த நுண்ணுணர்வோடும் லாகவமாகவும் ஏன் அவர் உரையாடிக் கொண்டிருந்த சாருவையும் சில இடங்களில் தாண்டிச் சென்ற சுவாரசியத்தோடும் அமைந்திருந்தது. இப்போதும் கூட சாருவின் இணையத்தளத்தில் வாசிக்கக் கிடைக்கும் ஆனந்தின் பதிவுகளை திறந்த மனத்துடன் வாசிக்கும் எவருமே இதை உணர முடியும். பொதுவாக அதீதமான விமர்சனங்களை முன்வைக்காத எஸ்.ரா., இதை தவறவிட்டதுதான் எனக்கு சற்று திகைப்பை ஏற்படுத்தியது.

அடுத்ததாக வந்தார் மிஷ்கின். சாருவின் கேள்வி-பதில் நூலைப் பற்றி இவர் பேச வேண்டும். ஆனால் அதைத் தவிர மற்ற அனைத்தையும் பேசினார். நந்தலாலா குறித்த புலம்பலே இவர் பேச்சில் அதிகம் இருந்தது. முழுவதும் நாடகத்தனமான பேச்சு. (சாருவின் முந்தியதொரு நூல் வெளியீட்டு விழாவில் பேசின பார்த்திபனின் நினைவு வந்தது.) அவரின் முந்தைய இருபடங்களும் மற்ற திறமையான விஷயங்களுக்காக பேசப்பட்டதை விட அதிலிருந்த 'குத்துப் பாடல்களுக்காக'வே அதிகம் சிலாகிக்கப்பட்டதை கறுப்பு நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார். 'நந்தலாலா'விற்காக இளையராஜாவை அணுகிய போது அவரும் 'அப்ப.. நானும் ஒரு குத்துப் பாட்டு போட்டுத்தரவா?' என்றாராம். (ராஜாவின் அதீத ரசிகர்கள் கவனிக்க) இவர் "நம்ம நட்ப வேணா இப்பவே முறிச்சுக்கலாம். நான் உங்க கிட்ட வந்ததே நான் காட்சிரீதியாக அதிகம் அமைத்திருக்கும் பல பகுதிகளை உங்களின் இசையால்தான் நிரப்ப வேண்டும்" என்றிருக்கிறார். சாருவின் சினிமா விமர்சனங்களைப் பற்றி முதலில் எதிர்மறையாகத்தான் கேள்விப்பட்டிருந்தாராம். எனவேதான் சாருவிற்கு 'நந்தலாலா'வை திரையிட்டுக் காட்டினாராம். சாரு அவருடைய தளத்தில் இதைக் கொண்டாடியது இவருக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியததாம். 'ஒரு எழுத்தாளனின் பாராட்டை என்ன பெரிய விருது தேவை? இனி இந்தப் படம் வெளிவரவில்லையென்றால் கூட பரவாயில்லை' என்கிற அளவிற்கு சாருவின் விமர்சனம் அவருக்கு திருப்தியை அளித்ததாம். "சாரு புகழ்ந்த அளவிற்கு 'நந்தலாலா' ஒன்றும் சிறப்பான படமில்லை. ஆனால் நீங்க நிச்சயம் பாருங்க".

"மற்ற கூட்டங்களில் செயற்கையாக பேச வேண்டியதிருக்கும். இந்த மேடையில்தான் உண்மையாக இருக்க முடிந்தது. மற்ற கூட்டங்களில் 'கைத் தட்டுங்க' என்றால் உடனே suggestive ஆக கைத்தட்டுவார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அனைவரும் ஜீனியஸ்" என்றவர் ஒரு கட்டத்தில் அபூர்வ ராகங்கள் நாகேஷ் மாதிரி "இந்த இடத்துல நீங்க கைத்தட்டணும்" என்றார். கூட்டமும் விவஸ்தையில்லாமல் கைத்தட்டியது. என்ன எழவோ.

(சாருவின் நேர்காணல்கள் நூல் குறித்து பவா.செல்லத்துரை பேசப்போவதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது நிகழ்த்தப்பட்டதாக தெரியவில்லை. அவருக்குப் பதிலாக வேறு யாராவது இதைப் பற்றி பேசினார்களா என்பது குறித்தும் அறியேன். விழாவிற்கு வந்திருந்த மற்ற இணைய நண்பர்கள் யாராவது இதை தெளிவாக்கலாம்.)

ஏற்புரையும், நன்றியுரையும் நிகழ்த்த வந்தார் சாரு. அவர் பேச்சின் சாரம் பெரும்பாலும் அவர் இணையத்தில் சமீபத்தில் எழுதியவைதான். எனவே திரும்பவும் அவற்றைக் கேட்க சலிப்பாக இருந்தது. 'நந்தலாவை' இன்னும் கூடுதலாகப் புகழ்ந்தவர், "இதை ஒரு ஜப்பானியப்படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜீலியட்டின் ஒரே நாடகம், ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களாக வெவ்வேறு படைப்பாளிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு படைப்பால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து தம்முடைய ஒன்லைனை எடுத்து தம்முடைய பாணியில் அதை விரிவாக்குவதில் தவறில்லை. ஆனால் அமீர் அயல்மொழித் திரைப்படத்தினை காட்சிக்கு காட்சி அப்பட்டமாக உருவியிருக்கிறார். ஏன் தமிழ்ப்படத்தின் கதாநாயகி லுங்கி கட்டியிருக்கிறார், தமிழ்நாட்டுப் பெண்கள் பொதுவாக லுங்கி கட்டுவதில்லையே என்று யோசித்தேன். மூலத்திரைப்படத்தைப் பார்த்ததும்தான் தெரிந்தது. அந்தப் படத்தின் பெண்ணும் லுங்கி கட்டியிருக்கிறார்" என்றார்.

[இங்கு என்னுடைய இடைச் செருகல் ஒன்று. 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படத்தைப் பற்றி எழுதும் போது நான் குறிப்பிட மறந்து போன ஒன்று. கமல் மொட்டை மாடியில் 'சாண்ட்விட்ச்' சாப்பிடுவார். படத்தின் மற்ற பகுதிகளை 'தமிழ்ப்படுத்தியவர்' ஏன் இந்த உணவு விஷயத்தை வடநாட்டு பாணியில் அமைத்திருந்தார் என்று யோசித்தேன். அப்புறம்தான் புரிந்தது. இந்தித் திரைப்படத்திலும் நஸ்ருதீன் ஷா 'சாண்ட்விட்ச்' சாப்பிடுவார். அடப்பாவிகளா! இப்படியா செட் பிராப்பர்டி முதற்கொண்டு நகலெடுப்பார்கள்? அது மாத்திரமல்ல அந்த 'சாண்ட்விட்ச்' கூட இந்தித் திரைப்படத்தில் உபயோகப்படுத்தின அதே சாண்ட்விட்ச்சாக இருக்குமோ என்கிற சந்தேகம் கூட எனக்கு ஏற்பட்டது. ஏனெனில் சாப்பிடுவதற்கு முன் அதை முகர்ந்து பார்ப்பார் கமல். இதையும் தமிழ்ப்படுத்தி ஏன் ஒரு சாம்பார் சாதமோ, இட்லியோ ('தயிர் சாதம்' வேண்டாம். நமது கட்டுடைப்பு விமர்சனவாதிகள் இதையும் எப்படியாவது தங்களுக்குச் சாதகமான 'பார்ப்பன எதிர்ப்பு' சட்டகத்தில் இட்டு இன்னும் அதிகம் கமலை திட்டியிருப்பார்கள்) பயன்படுத்தவில்லை என்று புரியவில்லை.]

சாருவின் இந்தக் கருத்து ஏற்படுத்துடையது என்றாலும் 'நந்தலாலா' 'Kikujiro'வின் பாதிப்பினால் உருவான படம்தான் என்று மிஷ்கின் வெளிப்படையாக அறிவிப்பாரா என்று தெரியவில்லை. இல்லையெனில் அமீருக்கு ஒரு நீதி, மிஷ்கினுக்கு ஒரு நீதியா? என்ற இயல்பான கேள்வி சாருவை நோக்கி எழுவதை தவிர்க்க முடியாது.


()

வாசிப்பு உணர்வும் பழக்கமும் குறைந்து கொண்டே வருகிற தற்கால சூழ்நிலையில் ஒரு பதிப்பகம் 90 நூற்களை வெளியிடுவது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் இதை நுகர்வுப்பண்டம் போல் இப்படி அவசரம் அவசரமாக நிதானமில்லாமல் ஒரே சமயத்தில் அடித்துத் தள்ள வேண்டும் என்பதுதான் புரியவில்லை. இன்னொரு வகையில் இந்த வகையான வணிகப் போட்டியே ஒரு gimmicks ஆக தெரிகிறது. மேலும் சிறப்புரை ஆற்றி நூலை அறிமுகப்படுத்த வந்தவர்கள் பெரும்பாலும் (எஸ்.ரா, அழகிய பெரியவன் நீங்கலாக) நூலையொட்டின தம்முடைய உரையை முன்வைக்கவில்லை. சிலர் நூல் மிகத் தாமதமாகத்தான் தம்முடைய கைக்குக் கிடைத்தது என்றார்கள். இதைக்கூட நியாயமான காரணமாக ஒப்புக் கொள்ளலாம். ஆனால் பொதுவாக நூல் வெளியீட்டு விழாக்களில் தாம் வெளியிடப் போகும் அல்லது உரையாடப் போகும் நூலைப் பற்றி எதுவும் அறிந்திருக்க வேண்டாம் அல்லது அதை வாசித்திருக்க வேண்டாம் என்பதுதான் பேச்சாளர்களின் முக்கியத் தகுதியாக இருக்கிறது. (சா.கந்தசாமி நிச்சயம் நூலைப் பற்றி மட்டும்தான் பேசியிருப்பார் என்று முன்அனுபவங்களின் அடிப்படையில் யூகிக்கிறேன்).

மிஷ்கின் மற்றும் சாருவின் பேச்சு மிகுந்த நாடக்த்தனமாக அமைந்திருந்தது. இதைத்தான் 'கிளிஷே' என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். இருவருமே தங்களின் குடிப்பழக்கத்தை கிளர்ச்சியுடனான பாவனையுடன் மேடையில் வெளிப்படுத்தினார்கள். தங்களிடமுள்ள கெட்ட பழக்கங்களை (கெட்ட பழக்கம் என்கிற வார்த்தையை பொதுப்புத்தி சார்ந்து உபயோகிக்கிறேன்) பொது வெளியில் மறைப்பது ஒரு காலகட்டத்து பழக்கமாக இருந்தது. ஆனால் மரபை உடைப்பதாக தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள், இது ஒளிக்க வேண்டிய அவசியமில்லை. இதுவும் நமது வாழ்வியலின் ஒரு அங்கம்தான். இதை ஆரோக்கியமாகவும் வெளிப்படையாகவும் விவாதிப்போம் என்றனர். (வழக்கமாக நடிகர்கள் செய்யாத ஒன்றாக, ரஜினி தம்முடைய குடிப்பழக்கத்தை வெளிப்படையாக தெரிவித்ததின் காரணத்திற்காகவே 'இன்னா நல்லவருப்பா. எதையும் மறைக்கறதில்லை' என்று பொதுவெளியில் சிலாகிக்கப்பட்டார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது). ஏனெனில் பொதுவாக நாம் அனைவருமே இம்மாதிரியான ஏதாவது ஒரு சமூகத்தால் அறமற்றதாக முன்வைக்கப்பட்டிருக்கிற பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறோம். இதையே ஒரு பிரபலம் பகிரங்கமாக சமூகத்தின் முன்வைக்கும் போது இயல்பாக அவருடன் ஒரு நேசமான மனநிலை நமக்கு உருவாகிறது.

ஆனால் இப்போது இந்தக் காலகட்டத்தையும் தாண்டி வந்துவிட்டோம் என்றுதான் நம்புகிறேன். வணிகமயமாக்ப்பட்ட தற்போதைய நிலையில் வணிகரீதியாகவும் நட்புரீதியாகவும் நடத்தப்பெறுகிற மதுவிருந்துகள் நம்முடைய வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன். முரண்நகையாக, மதுப்பழக்கம் இல்லாதவர்கள்தான் சமூகத்தின் முன் கோமாளிகளாக சித்தரிக்கப்படும் நிலை தோன்றியே பல காலம் ஆகிவிட்டது. இந்நிலையில் சாருவும், மிஷ்கினும் தங்களின் குடிப்பழக்கத்தை ஏதோ புரட்சி செய்வதான பாவனையுடனும் ரகசியக் கிளுகிளுப்புடனும் மேடையில் வெளிப்படுத்துவது காமெடியாக உள்ளது. சாரு தன்னுடைய பேச்சின் இடையில் நிறுத்தி 'கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கறேன்' என்ற நாடகத்தனமான காட்சியை என்னவென்று சொல்வது?. தன்னைப் பற்றி குடிகாரன் என்கிற பிம்பமே பொதுப்புத்தியில் ஆழமாகப் பதிந்திருப்பது குறித்து சாருவின் சலிப்பு வேறு. அடப் போங்கப்பா..

இவ்வாறாக நூல் வெளியீட்டு விழா இனிதே நடந்தேறியது.

()

பாரதி மணி அவர்களுடன் சற்று நேர உரையாடல், ஷாஜி அவர்களுடன் ஒரு கைகுலுக்கல் ஆகியவற்றுக்குப் பின் இணையத்தில் பைத்தியக்காரன் என்று அறியப்படுகிற சிவராமனையும், யாழிசை என்ற வலைப்பூவில் எழுதிவரும் லேகாவையும் இன்னபிற இணைய நண்பர்களையும் சந்திக்க முடிந்தது. இதில் சிவராமனைப் பற்றி சற்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு திரையிடல்களின் போதும் சிறுகதைப் போட்டி மற்றும் பட்டறைகளின் போதும் தொடர்ச்சியாக சலிக்காமல் என்னை அழைப்பார்; தொலைபேசியில் பேசுவார். ஆனால் ஒவ்வொரு முறையும் பணி அழுத்தம் காரணமாகவோ சோம்பேறித்தனத்தின் காரணமாகவோ என்னால் செல்ல முடியாமலே இருக்கும். ஆனால் அவர் இதனால் சற்றும் எரிச்சலடையாமல் முதல் முறை பேசின அதே நட்பான தொனியிலேயே எப்போதும் உரையாடிக் கொண்டிருப்பார். நான் அவராக இருந்திருந்தால் 'போய்யா சொங்கி' என்று எப்போதோ நட்பை முறித்துக் கொண்டிருப்பேன்.

இப்போதுதான் முதன்முறையாக அவரைச் சந்திக்கிறேன். பலத்த மழை ஓயும் வரையில் இருவரும் பொதுவாக நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். அந்தத் தாமதமான இரவிலும் சென்னையின் தெற்குப்புறமுள்ள அவர் வடக்குப் பக்கத்தில் உள்ள என்னை அவருடைய வண்டியில் இறக்கிவிட்டுச் சென்றார். எவ்வித எதிர்பார்ப்புமில்லாத இந்த மாதிரியான மனிதர்களின் அன்பும் பண்பும் என்னை வெட்கப்படவும் திருத்திக் கொள்ளவுமான சிந்தனைகளை ஏற்படுத்துகிறது. அதற்காக சிவராமனுக்கு நன்றி.

(சாருவின் கடந்த நூல்விழா பற்றிய பதிவு)

image courtesy: original uploader

suresh kannan

சாருவின் நூல் வெளியீட்டு விழா - 12.12.09 - பகுதி 1


ரஜினியின் பிறந்த நாளும் சாருவின் நூல்வெளியீட்டு விழாவும் ஒரே தேதியில் அமைந்தது தற்செயலாகத்தானிருக்க வேண்டும். ஏனெனில் ரஜினியின் படங்களில் வழக்கமாக சலிப்பேயின்றி அடங்கியிருக்கும் 'கிளிஷே'க்கள் போலவே சாருவின் நூல் வெளியீட்டு விழாவும் அதனுடைய பிரத்யேக 'கிளிஷே'க்களுடன் நடந்து முடிந்தது. இதைப் பற்றி பின்னால் எழுதுகிறேன்.

நேரடியாக அல்லாமல் சாருவை ரஜினியுடனும் ஜெயமோகனை கமலுடனும் ஒப்பிட்டு நேசகுமார் முன்னர் திண்ணையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வேடிக்கையான ரீதியில் இருந்தாலும் அதில் சற்று உண்மை இருக்கிறது. வேறெந்த இலக்கிய எழுத்தாளருக்கும் இல்லாத அளவிற்கு இந்த நூல் வெளியீட்டிற்கு அரங்கு நிறைந்த கூட்டம். ரஜினி திரைப்படக்காட்சி போலவே. மாத்திரமல்ல பெரும்பாலோனோருக்கு அமர இடமில்லாத நிலையிலும் விழா முடிய இரவு 10.00 மணிவரையான நிலையிலும் பெரும்பாலான கூட்டம் அப்படியே இருந்தது.

நான் சென்ற போது (சுமார் மாலை 06.45) மதன்பாப் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். ஒன்றும் புரியவில்லை. "மேடையில் எதை வேண்டுமானாலும் பேசி விட்டுப் போங்கள்: என்று சாருவே சொன்னதாக சொல்லிக் கொண்டிருந்தார். சா.கந்தசாமி பேசிவிட்டு அமர்ந்துவிட்டார் என்று யூகிக்க முடிந்தது.

இந்த மாதிரி நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளும் கூட்டங்களுக்கு ஒரளவாவது சாப்பிட்டு விட்டுச் செல்வது நலம். இல்லையெனில் சற்று தாமதமானவுடனேயே பசி எடுக்க ஆரம்பித்துவிடும். எனவே நான் உடனே தீர்மானித்து வெளியே வந்து விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்த சிற்றுண்டி மேஜையை அடைந்த போது இரண்டு வடைகளே மீதமிருந்தது. அதில் ஒன்றையும் ஒரு கோப்பை காப்பியையும் அருந்திவிட்டு மீண்டும் சென்றேன்.

(Disclaimer: இனி சிறப்புரையாளர்களின் பேச்சில் நினைவில் இருப்பதை என்னுடைய மொழியில் தொகுத்து எழுதுகிறேன். எவ்விதமான குறிப்பும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. உரையாடல்களிலிருந்து விலகி கருத்துப் பிழையுடனான குறிப்புகள் ஏதாவது இங்கு பதியப்பட்டிருந்தால் அது உரையாடினவர்களின் தவறல்ல ; என்னுடைய நினைவுப் பிசகின் விளைவே).

()

'தாந்தேயின் சிறுத்தை' நூல் பற்றி அழகிய பெரியவன் உரையாடினார். "சாருவின் எழுத்து ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக இருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்திக் கூட இங்கு கட்டுரை எழுதப்படுகிறது. சமகால பிரச்சினைகளைப் பற்றி எந்தவொரு எழுத்தாளரும் பெரிதாக எழுதவில்லை. திண்ணியத்தில் தலித் ஒருவரின் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்த போதும் மேல்வளவு முருகேசன் படுகொலை சம்பவத்தைப் பற்றியும் எந்த இலக்கியவாதியும் எழுதினாகத் தெரியவில்லை" என்றார். ஜெயமோகனுக்கும் சாருவிற்கும் இடையேயான சர்ச்சைகளைப் பற்றி குறிப்பிடும் போது "ஜெயமோகன் 'தலித் அரசியல்' கட்டுரைகளில் அம்பேத்கர் பற்றி உண்மைக்கு மாறானவைகளை எழுதுகிறார். அவர் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே எழுதுவது மோசமானது. அவரை கேரளத்தில் பைங்கிளி எழுத்தாளர் என்கிறார்கள்."

ஷாஜி ஆங்கிலத்தில் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் தமிழிலேயே நன்றாகவே பேசினார். மொழியை சரியாக அறியாத தன்னுடைய குறைபாட்டை நகைச்சுவையின் மூலம் கடந்து வந்தார். ஷாஜி இவ்வளவு நகைச்சுவையுடன் பேசுவார் என்பது நான் எதிர்பாராதது. மோகன்லாலை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக மலையாளம் சற்றே அறிந்த ஒரு இயக்குநருடன் சென்ற சம்பவத்தைச் சுவாரசியமாக விளக்கினார். கேரள பத்திரிகைகளின் எழுதுமுறையைப் பற்றி குறிப்பிடும் போது "நான், எனது என்கிற மாதிரி அங்கே எழுத முடியாது. இந்தக் கட்டுரையை எழுதுகிற இந்த ஆள்..." என்று பணிவாகத்தான் எழுத முடியும். ஆனால் சாருவின் எழுத்தில் அம்மாதிரியான பணிவெல்லாம் கிடையாது. 'நான்' என்பதுதான் தீர்மானமாகவும் அவரது எழுத்துக்களின் பிரதானமாகவும் இருக்கிறது. அவரது எழுத்துக்களின் மோசமான மலையாள மொழிபெயர்ப்புத் தடையைத் தாண்டியும் அவரது எழுத்து அங்கே மிகுந்த செல்வாக்கை பெற்றிருக்கிறது. அந்தளவிற்கு வீர்யமானது சாருவின் எழுத்து" என்றார்.

வசந்தபாலனின் பேச்சு தோழமையானதாகவும் வெளிப்படையாகவும் இருந்தது. "பொதுவாக சாரு தமிழ் சினிமாக்களை கிழிகிழியென்று கிழிக்கிறார். அதனாலேயே அவருடன் நட்பு பாராட்ட பயமாய் இருக்கிறது. அவருக்கு ஒரு படத்தை பிடித்து விட்டால் ஓகோவென கொண்டாடுகிறார். பிடிக்கவில்லையென்றால் மரண அடிதான். என்னுடைய வெயில் படத்தை அவர் பாராட்டவேயில்லை. அதில் உள்ள சிறந்த பாடல்களையும் அவர் கண்டு கொள்ளவில்லை. இன்றைக்கு தமிழ் சினிமாவை தர்க்கப்பூர்வமாகவும் ஆழமாகவும் விமர்சனம் செய்ய ஆளில்லை. அந்தத் தேவையை சாரு பூர்த்தி செய்கிறார். தமிழ் சினிமா மீது அவருக்கிருக்கும் ஈடுபாடும் அக்கறையுமே அவர் பால் என்னை நெருங்கிவரச் செய்கிறது"

ரெண்டாம் ஆட்டம் நாடகம் தொடர்பான நூலைப்பற்றி திருநங்கை கல்கி பேசினார். "ஒரினப்புணர்ச்சி பற்றி 1992-ல் இந்த நாடகத்தில் நிகழ்த்தப்பட்ட போது எழுந்த எதிர்ப்பும் வெளிப்பட்ட வன்முறையுமான நிலை இன்று வரை மாறாதிருப்பது துரதிர்ஷ்டவசமானது. பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்காக சாரு தொடர்ந்து எழுதுகிறார். அவரை எங்களின் பிரதிநிதியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். மணிரத்னம், பாலா போன்றவர்களைத் தவிர பெரும்பாலான இயக்குநர்கள் திருநங்கைகளை பாலியல் ரீதியாகத்தான் சித்தரிக்கின்றனர். (சமீபத்திய திரைப்படமான 'நினைத்தாலே இனிக்கும்' காட்சிகளை குறிப்பிட்டுப் பேசுகிறார்) இந்நிலை மாற வேண்டும்."

'ராமையாவின் குடிசை' ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், சாருவின் அரசியல் கட்டுரைகளைப் பற்றி முற்போக்கு முகாம்களில் ஒலிக்கும் பாவனைகளோடு பேசினார். நகைச்சுவையாக ஆரம்பித்த இவரது பேச்சு போகப் போக தீவிர பாவனையுடன் தொடர்ந்தது. 'கீழ்வெண்மணி சம்பவத்தைப் பற்றி அப்போது எந்தவொரு எழுத்தாளரும் எழுதவோ, குரல் கொடுக்கவோ இல்லை" கும்பகோண தீவிபத்தில் இறந்த போன குழந்தைகளைப் பற்றின சம்பவத்தைப் பற்றி இவரது அடுத்த ஆவணப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது பேச்சின் இடையில் தெரிய வந்தது.

'மலாவி' என்றொரு தேசம்' நூலைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார். இவர் பேச்சு எனக்கு சற்று அதிர்ச்சியைத் தந்தது. ஏனென்று சொல்கிறேன். அதற்கு முன் எஸ்.ராவைப் பற்றி என்னுடைய பார்வையை சொல்லியாக வேண்டும். உலக சினிமா மீது எனக்கு தீவிர ஆர்வமேற்பட்டதற்கு எஸ்.ராவின் பல சினிமா கட்டுரைகளுக்கு கணிசமான பங்குண்டு. பொதுவாக இவரது கட்டுரைகளில் தெரியும் கடலின் ஆழமான அமைதியும் கட்டுரையின் மையத்திலிருந்து விலகாத நேர்த்தியும் உணர்வு பூர்வமான மொழியும் உணர்ச்சி வசப்படாத நியாயமான மதிப்பீடுகளும் எனக்குப் பிடிக்கும். எனவேதான் இவரது எழுத்துக்களை தொடர்ச்சியாகவும் சிரத்தையாகவும் வாசிப்பேன். இணையத்தில் புழங்கும் பெரும்பாலான மற்ற எழுத்தாளர்கள், இணையத்தில் எழுதுபவர்களை "முதிர்ச்சியற்றவர்கள்" என்கிற ரீதியில் விமர்சிக்கும் போது எஸ்.ரா மாத்திரமே தன்னுடைய வலைப்பக்கத்தில் ஆரோக்கியமான பதிவுகளை அடையாளங் காட்டி நம்பிக்கை ஏற்படுத்துகிறவர் என்கிற முறையில் அவர் மீது எனக்கு மரியாதையுண்டு.

எஸ்.ரா தனது பேச்சில் இணையத்தில் எழுதுபவர்களைப் பற்றின தன்னுடைய மதிப்பீட்டை பகிர்ந்து கொண்டார். 'இணையத்தில் எழுதும் பல பேர் இங்கு வந்துள்ளனர். வாசகன் என்கிற நிலை இன்று குறைந்திருக்கிறது. எல்லோருமே எழுத்தாளர்கள்தான்." பின்பு, இணையத்தின் மூலம் ஏற்பட்ட இரண்டு நட்புகளைப்பற்றி விவரிக்கிறார். "ஒருவர் தான் எப்போது ஒரு கட்டுரையை எழுதினாலும் உடனே தொடர்பு கொண்டு "இப்பத்தான் இதப் பத்தி யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் எழுதிவிட்டீர்கள். என்பார். இது தொடர்ந்த போது அவர்தான் நானோ என்ற குழப்பங்கூட ஏற்பட்டது. ஜப்பானில் வசிக்கும் இன்னொரு நண்பர் எப்போதும் தமிழ்ப்படங்களைப் பற்றியும் அவற்றின் குறுந்தகடுகள் எங்கே கிடைக்கும் என்பது பற்றியே பேசிக் கொண்டிருப்பார். நான் ஜப்பானில் உள்ள சிறந்த எழுத்தாளர் பற்றியோ சிறந்த திரைப்பட இயக்குநர் பற்றியோ உரையாட ஆரம்பத்தில் அதில் அவருக்கு ஆர்வமும் அக்கறையும் இருக்காது" என்று தொடர்கிற எஸ்.ரா, மலாவி தேசத்தைப் பற்றி சாருவுடன் உரையாடின ஆனந்த்தையும் இதே வரிசையில் வைக்கிறார்.

"தன்னுடைய வாசகருடன் ஏற்பட்ட கருத்துப் பரிமாற்றத்தை புத்தகமாக வெளியிட்டது இந்தியாவிலேயே சாருவாகத்தான் இருக்க முடியும். வாசகரின் அறியாமைக் குரலையும் மீறி சாரு நேசக்கரம் நீட்டுகிறார். என்னால் அது இயன்றிருக்காது. இதில் அவரது வாசகரான ஆனந்த் மலாவி தேசத்தைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் ஒவ்வொன்றிலும் அவரைப் பற்றியே அதிகம் எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி எழுதுவதற்கு மலாவியை ஒரு அடிப்படையாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மாறாக சாரு மலாவியிலுள்ள உன்னதமான அம்சங்களைப் பற்றி உரையாடும் போதும் கேட்கும் போதும் ஆனந்த் அதற்கு தன்னைப் பிரதானமாகக் கொண்ட பதிலையே எழுதுகிறார். சாரு மலாவியில் வாழ்கிறார்; ஆனந்த் மயிலாப்பூரில் வாழ்கிறார் என்றுதான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. மலாவியிலுள்ள மிகப்பெரிய ஏரி ஒன்றைக் குறிப்பிட்டு சாரு கேட்கும் போது ஆனந்த்தோ 'அந்த ஏரியில் அமர்ந்து காபி அருந்திய படி 'அலைபாயுதே கண்ணா' பாடலை கேட்பதாக' எழுதுகிறார். மலாவி பற்றின சித்திரத்தை சாருதான் பொறுமையாக ஒருபுறம் தீட்ட வேண்டியிருக்கிறது."

(இங்கு எஸ்.ராவுடன் நான் சற்று மாறுபட வேண்டியிருக்கிறது).

தொடரும்....


suresh kannan

Saturday, December 12, 2009

சாருவும் டி.ராஜேந்தரும்



முன்பொரு காலத்தில் டி.ராஜேந்தர் என்றொரு இசையமைப்பாளர் இருந்தார். (இன்னும் பலவும் செய்து வந்தார் என்று சொல்வார்கள்) பிறந்ததிலிருந்தே இவருக்கு தாடியிருந்ததோ என்னுமளவிற்கு "தோன்றிற் தாடியுடன் தோன்றிய" இவரை தாடியில்லாமல் பார்த்த சிலர் இன்னும் மனநல சிகிச்சை எடுத்து வருவதாக கேள்வி. 'ஒரு தலை ராகம்' திரைப்படம் வெளியானவுடன் இதன் பாடல்கள் அந்தக்காலத்தில் காட்டுத்தீ போல் தமிழ்நாட்டில் பரவியது. என்னுடைய பள்ளி நாட்களில் வளாகத்துக்குள்ளே நடைபெறும் விழாக்களில் 'மன்மதன் ரட்சிக்கணும்' ஜாலியான குரலின் பாடல் நிச்சயம் இடம்பெறும். இவரது இசையமைப்பில் 'வைகைக் கரை காற்றே நில்லு' பாடல் எம்.எஸ்.விஸ்வநாதனாலேயே சிலாகிக்கப்பட்டது. ஒரு ஏகாந்தமான மனநிலையில் கேட்டால் இப்போதும் கூட அது ஒரு நல்ல பாடல். அதன் இசைக்கோர்வை கேட்பதற்கு இதமாக இருக்கும். 'மாலை எனை வாட்டுது' இன்னொரு ரத்தினம்.

எதற்கு இத்தனை விஸ்தாரமாக டி.ஆரின் இசையைப் பற்றி சொல்கிறேன் என்றால் மற்ற துறைகளில் அவர் மக்களால் பொதுவாக காமெடியனாகவே பார்க்கப்பட்டார். "தங்கச்சி.. நான் என்ன சொல்றேன்னா.." என்று அவர் அழுது புலம்பி நடித்திருப்பதை இப்போதிருக்கும் ரசிகர்கள் துளிக்கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பாடலில் இதயம் என்ற ஒரு வார்த்தை வந்தால் உடனே பெரிய பெரிய அளவில் இதய வடிவ உருவத்தை பாடல்களில் நகர்த்திக் காட்டுவார். இந்த ஒரு விஷயத்தில் பொதுமக்களை விட தச்சர்கள், பெயிண்டர்கள் இவரை மிக அதிக அளவில் விரும்பினார்கள் என்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது. இன்றும் கூட 'டண்டணக்கா' என்றால் டிஆரே நினைவுக்கு வரும் வகையில் காமெடி நிகழ்ச்சிகளில் இவரை கதறக் கதற பிழிந்து விடுகிறார்கள். ஒரு நல்ல அல்லது சுமாரான இசையமைப்பாளர் மற்ற துறைகளில் நிகழ்த்தின் அபத்தச் சுவடுகளின் பின்னால் மறைக்கடிக்கப்படுவது அல்லது மறக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது.

ஏறக்குறைய இதே புள்ளியில் எழுத்தாளர் சாருநிவேதிதாவை நிறுத்திப் பார்க்கிறேன். அவரது எழுத்தை கணையாழி குறுநாவல் (நினைவில் புதர்ச்சரிவுகளிலிருந்து) போட்டிக் காலத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். பாலியல் எழுத்தின் மீது கவிந்திருக்கும் பாசாங்குகளை முற்றிலுமாக களைந்து விடுகிற, வாசகனிடம் நேரடியான எளிமையில் உரையாடுகிற, மற்றவர் தொடக்கூட தயங்கும் விஷயங்களை உக்கிரமான ஆழத்தில் இறங்குகிற, நவீன மரபில் உதாசீனப்படுத்தப்படுகிற உடலைக் கொண்டாடுகிற, அயல் இலக்கியங்களை இசையை தமிழ் சமூகத்திற்கு அறிமுகப்படுத்துகிற விஷயங்களுக்காக கொண்டாடப்படுவதை விட, அவர் மேம்பாக்காக எழுதுகிற, விரும்பியே சர்ச்சையில் ஈடுபடுகிற, புனிதப்பசுக்களின் பீடத்தை தாக்குகிற, சில சக எழுத்தாளர்களை இடுப்பின் கீழ் தாக்குகிற எழுத்துக்களுக்காக அதிகம் வெறுக்கப்படுகிறவராகவும் காமெடியனாக பார்க்கப்படுகிறவராகவும் இருக்கிறார்.



சாருவின் 'கடவுளும் நானும்' எனும் கட்டுரைத் தொகுதியை சமீபத்தில் படித்துப் பார்த்தேன். ஏற்கெனவே இணையத்தில் அவசரமாக படித்ததுதான் என்றாலும் சாவகாசமாக புத்தகத்தில் படிப்பது இன்னும் சுவாரசியமாக இருந்தது. 'ஆன்மீகம்' எனும் சமாச்சாரம் சமகால சூழலில் அதன் உண்மைக்கு மாறாக பல பரிமாணங்களில் புரியப்பட்டும் குழப்பப்பட்டும் இருக்கிற நிலையில் சாருவின் ஆன்மீகம் என்ன என்பதைப் பற்றின அடிப்படை வடிவத்தை இந்தப் புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. பாபா படத்திலிருந்த விபூதி கொட்டுகிற காமெடிகளையெல்லாம் (உண்மையில் சுவற்றின் காரை பெயர்ந்து விழுந்திருக்கலாம்) அவர் ஆன்மீகச் சட்டகத்தில் இட்டு நம்பிக் கொண்டிருக்கட்டும். ஆனால் இதில் என்னைக் கவர்ந்தது அதுவல்ல. அரபி இசையைப் பற்றியும் சூ·பிக்களை பற்றியும் சாரு எழுதிக் கொண்டு போகிறார். எனக்குத் தெரிந்து நவீன தமிழ் இலக்கியம் இந்த எல்லையை அதிகம் தொட்டதில்லை. De saz இசைக்குழு, ஹெடோனிஸம், ஹ·பீஸின் கஜல் பாடல்கள், சூ·பி கதைகள், பிஸ்மில்லா கான், பட்டினத்தார் போன்றவற்றைப் பற்றி சாருவைத் தவிர வேறு யாரும் எழுதினாக எனக்குத் தெரியவில்லை. வேறு யாரேனும் எழுதியிருந்து பரவலாக அறியப்படாமல் போயிருக்கலாம். அல்லது வாசகனை நெருங்க விடாத மொழியில் நிறுத்தி வைத்திருந்திருக்கலாம். வெறுமனே பெயர்களை உதிர்க்கிறவர் என்ற புகாரும் அவர் மீதுண்டு. அது ஒருவேளை உண்மையாகவே இருந்தாலும் அந்த எளிய வேலையைச் செய்யக்கூட சாரு போன்றோரைத் தவிர வேறு யாரும் எனக்குத் தென்படவில்லை. சாரு அறிமுகப்படுத்துகிற அந்த ஆரம்பப்புள்ளியைப் பற்றிக் கொண்டு மேலேறிச் செல்வது வாசகனின் கடமையே ஒழிய எழுதுபவரே அனைத்தையும் புட்டுப் புட்டு வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறையற்றது.

இந்த ஒரு காரணத்திற்காகவே சாருவை நான் பாராட்ட விரும்புகிறேன்; அவரது சில அலட்டல்களைத் தாண்டியும் அவரது எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கிறேன்.

கடவுளும் நானும் (கட்டுரைத் தொகுதி)'
உயிர்மை பதிப்பகம் பக்கம் 80 ரூ.40/-

image courtesy: original uploader & uyirmmai


suresh kannan

Friday, December 11, 2009

தர்க்கத்திற்குள் அடங்காத ஆதவன்


ஆதவன் திரைப்படம் பார்த்தேன். எந்தவிதமான தர்க்கவிதிகளுக்குள்ளும் அடங்காத கதை/திரைக்கதை. கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அது உருகி அதன் கண்ணை மறைக்கும் போது அதைப் பிடித்துவிடலாம் என்ற பொருளில் ஒரு பழம்பாடல் உண்டு. இதன் திரைக்கதையும் அப்படித்தான் உள்ளது. இதனாலேயே இது ஒரு சிறந்த காமெடிப் படமாகிறது. வடிவேலுவின் காமெடி தனி. அவ்வப்போது புன்னகைக்க வைக்கிறார். ஆனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே பயணிப்பதை உணர வேண்டும். சீக்கிரம் போரடித்துவிடலாம். குழந்தைகள் அவரைக் கண்டவுடன் சிரிக்கும் வரை அவருக்கு பயமில்லை.

'ஜட்ஜை போட்டுத் தள்ளணும்' என்று படம் முழுக்க உரையாடிக் கொண்டிருந்த ராசியோ, என்னமோ ஜட்ஜ் பாத்திரத்தில் நடித்த முரளி படம் முடிந்தவுடன் நிஜமாகவே போய்ச் சேர்ந்து விட்டார். அற்புதமான ஒரு நடிகர்களை தமிழ்த் திரையுலகம் எப்படி பாழ்படுத்தி உபயோகிக்கிறது என்பதற்கு இந்தப்படம் இன்னும் ஒரு உதாரணம். இதே படத்திலேயே இன்னொரு பாழ் 'சாயாஜி ஷிண்டே'.

'கருப்பு வெள்ளை' காலத்திலேயே தான் போட்டிருக்கும் சிகப்பு லிப்ஸ்டிக் தெரியுமளவிற்கு திரையில் தோன்றும் சரோஜாதேவியின் குளோசப் காட்சிகளைக் கண்டு குழந்தைகள் 'வீல்'கிறார்கள். சிம்பு உறிஞ்சனது போக மிச்சமிருக்கிற நயனதாராவைக் காண பரிதாபமாக இருக்கிறது.

பாரதியார் கேட்ட வரங்களில் ஒன்றினைப் போல 'விசையுறும் பந்தாக' மிக உற்சாகமாக இருக்கிறார் சூர்யா. வில்லாக வளைகிறார்; நெளிகிறார்; தாவுகிறார். 'விஜய்'யைத் தாண்டுவதுதான் அவரது பிரதான நோக்கு என்பது கண்களில் தெரிகிறது. இதையே தொடராமல் 'காக்க காக்க' பாணிப் படங்களிலும் நடிப்பது மார்க்கெட் சாஸ்வதமாக இருப்பதற்கு உகந்தது. ஹாரிஸின் பாடல்கள் உற்சாகத்தைத் தருகிறது. ஆனால் இவரும் அடுத்த படியில் ஏற வேண்டிய தருணம். குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் மெட்ரோ வாட்டர் போல CG பல காட்சிகளில் விரயமாக்கப்பட்டிருக்கிறது.

அந்தரத்தில் தொங்குகிற காரின் மீது ராக்கெட் பாமை செலுத்துகிறான் வில்லன். அது உடனே வெடிக்காமல் அடையார் சிக்னல் போல வெடிப்பதற்கு எத்தனை நிமிடங்கள் ஆகும் என்று காட்டுகிறது. அதற்குள் மரண உறக்க நாயகன் முந்திக் கொள்கிறான். இப்படி ஒரு அசமஞ்ச வில்லன் இருந்தால் நான் கூட ஜெயித்துவிடுவேன். குழந்தைகள் கூட விழுந்து சிரிக்கும் இம்மாதிரி பல காட்சிகளை வைத்து லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று இயக்குநர் கேட்டாலும், கே.எஸ்.ரவிக்குமாரிடம் சுவாரசியமாக கதை சொல்லும் அடிப்படையான திறமை இருக்கிறது. அதை 'தசாவதாரம்' போல் ஒழுங்கான விதிகளுக்குள் அடைக்கத் தெரிந்தால் அவரால் இன்னும் சிறப்பான வெற்றிப் படங்களைத் தர முடியும்.

ஆனால் வணிகநோக்கு ஒன்றையே பிரதானமாகக் கொண்டு 'கிளிஷேக்களின்' தொகுப்பாக வெளிவரும் அவரது தொடர்ச்சியான திரைப்படங்களைக் காணும் போது, தமிழ்த் திரையின் தரத்தை அதல பாதாளத்திற்கு கொண்டுச் செல்ல இவர் ஒருவரே போதும் என்று தோன்றுகிறது.

suresh kannan

Thursday, December 10, 2009

யூமா வாசுகியும் அமெரிக்கக் குற்றமும்

அந்தப் புத்தகம் ஒரு கருப்பு பிசாசு போல் என் முன் அமர்ந்திருந்தது.

சில பக்கங்களை வாசிப்பேன். வயிற்றைப் பிசையும் உணர்வும் நெஞ்சை அடைக்கும் உணர்வும் எழும். மனதுக்குள் அழுகை பொங்கி வரும். உடனே புத்தகத்தை மூடி விடுவேன். உடல் மற்றும் மனரீதியான வன்முறையை எதிர்கொள்ளும் குழந்தைகளின் கதறலும் கூப்பாடும் விசும்பலும் அழுகையும் கலந்து ரத்தக்கறைகளுடனும் வாதையின் ஓலங்களுடனும் எல்லாப்பக்கங்களிலும் நிறைந்திருக்கும் அதை வாசிக்காமலே விட்டுவிட்டால்தான் என்ன என்று தோன்றும். ஆனால் விபத்தில் குடல் சரிந்து ரத்த சகதியில் விழுந்து கிடப்பவனை குறுகுறுப்புடன் வேடிக்கை பார்க்க நினைக்கும் குரூர மனம் 'எடுத்து வாசி' என்று கட்டளையிடும். தட்ட முடியாமல் மீண்டும் சில பக்கங்கள். திரும்பவும் மூடல். இவ்வாறாகத்தான் அந்தப் புதினத்தை வாசிக்க முடிந்தது. யூமா வாசுகியின் 'ரத்த உறவு' நாவல் வாசிப்பு அனுபவத்தைத்தான் குறிப்பிடுகிறேன். ஜெயமோகனின் 'ஏழாம் உலகத்தையும்' தி.ஜானகிராமனின் 'மரப்பசுவையும்' (இதற்கு காரணம் வேறு) இவ்வாறாகத்தான் வாசிக்க முடிந்தது.

ஏறத்தாழ மேற்குறிப்பிட்ட அதே அனுபவத்தை இந்தத் திரைப்படத்தை காணும் போது அனுபவிக்க நேர்ந்தது. An Amercican Crime (2007). அமெரிக்க மாவட்டமான இண்டியானாவில் 1965-ல் Sylvia Likens என்கிற சிறுமி அவள் தங்கியிருந்த வீட்டுப் பெண்மணியான Gertrude Baniszewski-ன் மூலம் சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்து கொல்லப்பட்டாள். "The most terrible crime ever committed in the state of Indiana" என்று இந்த வழக்கை விசாரணை செய்தவரால் கூறப்படுமளவிற்கு இந்த வழக்கு அப்போது மிகப் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த உண்மைச் சம்பவத்தையும் வழக்கின் நீதிமன்ற விசாரணைக் குறிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் An Amercican Crime.



சில்வியாவின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று கண்காட்சி நடத்தி பொருள் ஈட்டுபவர்கள். அவளுக்கு போலியோ காலுடன் ஜென்னி என்கிற சகோதரியுமுண்டு. குழந்தைகளின் படிப்பு காரணமாக அவர்களை தங்களுடன் அழைத்துச் செல்ல முடியாமல் பெற்றோர் யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் Gertrude Baniszewski என்கிற பெண்மணியின் அறிமுகம் தற்செயலாக நேர்கிறது. ஏற்கெனவே ஆறேழு குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து வறுமையில் வாடும் அவள், இவர்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்வதாக முன்வருகிறாள். மாதம் 20 டாலர் தந்தால் போதும் என்றும் தமக்கு அது உதவிகரமாக இருக்கும் எனவும் வேண்டுகிறாள்.

எல்லாக் குழந்தைகளும் ஆனந்தமாக விளையாடும் காட்சிகளோடு திரைப்படம் நகர்கிறது. ஆனால் மாத தவணைப் பணம் வரத் தாமதமாகும் தருணத்தில் Gertrude Baniszewski-ன் குரூர முகம் வெளிப்படுகிறது. இரண்டு சிறுமிகளையும் நிலவறைக்கு அழைத்துச் சென்று புட்டத்தில் பெல்ட்டால் அடிக்கிறாள். சில்வியா தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாலும் ஜென்னியால் இதை சகித்துக் கொள்ள முடிவதில்லை.

மணமான ஒருவனிடம் கர்ப்பமாகிவிடுகிற அந்தக் குடும்பத்தின் மூத்த பெண், தன்னிடமுள்ள குறையை மறைக்க 'சில்வியா தன்னைப் பற்றி ஊரெங்கும் அவதூறு சொல்கிறாள்' என்று தாயிடம் பொய்ப் புகார் செய்ய சில்வியாவிற்கு சிகரெட் சூடு கிடைக்கிறது. ஒரு முறை சில்வியா ஆண் நண்பனுடன் சர்க்கஸிற்கு சென்று வர அதை தவறாக யூகிக்கும் Gertrude Baniszewski அவளுடைய யோனியுள் குளிர்பான பாட்டிலை திணிக்கிறாள். தாய் செய்யும் கொடுமை போதாதென்று அந்த வீட்டின் சிறுவ/சிறுமிகளும் பக்கத்து வீட்டுப் பையன்களையும் அழைத்து வந்து சுவாதீனமின்றி கிடக்கும் சில்வியாவை கொடுமை செய்கின்றனர். இவ்வாறான பல வதைகளுக்குப் பின் "I'M A PROSTITUTE AND PROUD OF IT" என்ற எழுத்துக்களுடன் வயிற்றில் சூடு போடப்பட்ட சில்வியா ஒரு உச்சக்கட்ட பரிதாப கணத்தில் இறந்து போகிறாள். (நிஜ சம்பவங்களில் சில்வியா மலம் தின்னப்படுத்தப்பட்டாள் என்கிற தகவல் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. நல்ல வேளையாக படத்தில் இது தவிர்க்கப்பட்டிருக்கிறது. பசோலினியின் 120 Days of Sodom திரைப்படத்தில் இவ்வாறான மலம் தின்ன வைக்கப்படும் காட்சியும் பின்னர் கூட்டாக மல விருந்து நடத்தப் பெறும் காட்சிகளையும் கண்டு சில மணி நேரத்திற்கு ஒரு மார்க்கமாகவே இருந்தது).

Gertrude Baniszewski-க்கு 18 வருட சிறைத்தண்டனையும் சில்வியாவை இரக்கமின்றி துன்புறுத்தின சிறுவர்களுக்கு சில வருட சீர்திருத்தப் பள்ளித் தண்டனையும் அளிக்கப்படுகிறது. வழக்கு விசாரணையின் போது தாம் எந்தவித குற்றமும் செய்யவில்லை என்றும் தொடர்ந்து அருந்தி வந்த இருமல் மருந்து காரணமாக தாம் எப்போதும் ஒருவித மன உளைச்சலிலேயே இருந்ததாகவும் தம்மைச் சுற்றி என்ன நடந்தது என்பதை அறியவில்லை என்றும் கூறுகிறார்.



Gertrude Baniszewski பாத்திரத்தை மிக அற்புதமாக நடித்துள்ளார் Catherine Keener. முதலில் இந்த கொடூரமான பாத்திரத்தை ஏற்கத் தயங்கியதாகவும் பின்னர் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டதாகவும் கூறுகிறார். இவரது பாத்திரம், நமது தமிழ்த் திரைப்படங்களைப் போல் முழுக்க கருப்பில் அல்லாது இரண்டிற்குமான சமனுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவரது முன்னாள் கணவன் ஒரு போலீஸ்காரன். இவளை அடித்து கொடுமைப்படுத்தியிருக்கிறான் என்பது உரையாடலின் மூலம் வெளிப்படுகிறது. இவளது தற்போதைய சின்னஞ்சிறு குழந்தைக்கு தகப்பன், இவளது மகன் வயதே இருப்பவன். இவளிடமிருந்து நைச்சியமாக பணத்தைப் பறித்துச் செல்கிறான். ஐந்தாறு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு வறுமையில் சிரமப்படும் இவளுக்கு தன்னுடைய மகளான பவுலா கர்ப்பமாயிருக்கும் விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. என்றாலும் அதை ஊரார் முன்னால் ஒப்புக் கொள்ளாமல் தனிமையில் அழுகிறாள். சில்வியாவை தண்டிக்கும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் விட்டு அழுகிறாள். எந்த வித கொடூர முகபாவங்களுமின்றி இவள் தண்டனையை நிறைவேற்றும் போதெல்லாம் பார்வையாளர்களுக்குத்தான் வயிற்றைப் பிசைகிறது. 'தம்முடைய குழந்தைகள்தான் தம்முடைய வாழ்க்கையின் ஒரே ஆதாரம்' என்று ஒரு முறை சில்வியாவிடம் கதறுவதிலிருந்து கொடூர மனத்தின் பின்னேயுள்ள தாய்ப்பாசம் தெரிகிறது.

சில்வியாவைத் தவிர அவளது சகோதரியின் பாத்திரமும் இயக்குநரால் (Tommy O'Haver) திறமையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. போலியோ கால் காரணமாக இயல்பிலேயே தாழ்வு மனப்பான்மை உள்ள அவள், தம்முடைய சகோதரி கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டு மெளனமாக அழுகிறாள். என்றாலும் Gertrude Baniszewski மீதுள்ள பயம் காரணமாக இதை வெளியுலகிற்கு வெளிப்படுத்தாமலேயே இருக்கிறாள். தாமும் அவ்வாறே கொடுமைப்படுத்தப்படலாம் என்கிற நியாயமான எண்ணம் காரணமாக சகோதரியின் மீதுள்ள பாசத்தை விட தண்டனைகளின் மீதுள்ள பயமே ஜெயிக்கிறது.

நிஜ சம்பவத்தில் இல்லாத ஒன்றை திரைப்படத்தில் இணைப்பதின் மூலம் படைப்பாளியின் சுதந்திரத்தையும் வலிமையையும் உணர்த்துகிறார் இயக்குநர். ஒரு நிலையில் அந்த வீட்டிலிருந்து பவுலாவின் உதவியுடன் தப்பிக்கிறாள் சில்வியா. எப்படியோ தன் பெற்றோரை அடைந்து அழுகைக்கு நடுவில் அனைத்தையும் சொல்கிறாள். பெற்றோர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். மீண்டும் அதே வீட்டிற்கு வருகிறார்கள். சில்வியா மிகுந்த தயக்கத்துடன் உள்ளே நுழைகிறார். அங்கே சில்வியாவின் இறந்து போன உடல் கிடப்பதையும் Gertrude Baniszewski குடும்பத்தினரும் ஜென்னியும் அதிர்ச்சியுடன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் சில்வியா காண நேருகிறது.

அங்கிருந்து தப்பிக்கும் எண்ணம் சில்வியாவினுள் பிரம்மாண்ட எண்ணமாக எழுந்து அது பிரமையாக அவள் முன் நிற்கிறது என்பதை இயக்குநர் மிக திறமையாக இந்தக் காட்சிக் கோர்வைகளின் மூலம் உணர்த்துகிறார்.

()

'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்பது நம் தமிழ் மரபின் சூழலில் விளைந்த பழமொழி. என்றாலும் அந்நியர்களிடம் தம்முடைய குழந்தைகளை ஒப்படைக்கும் முன் தீர யோசிக்க வேண்டும் என்ற செய்தியை இந்தப்படம் முன்வைக்கிறது. தாயும் பணிக்குச் செல்ல நேரும் இந்த பொருளீட்டு யுகத்தில் பணியாட்களினால் கொடுமைப்படுத்தப்படும் எத்தனை சில்வியாக்கள் இருக்கிறார்களோ? இதே சம்பவத்தை வைத்து The Girl Next Door என்கிற புதினமும் எழுதப்பட்டிருக்கிறது.

மிகுந்த மனச்சங்கடத்தை ஏற்படுத்திய திரைப்படமென்பதால் மெல்லிய உணர்வுள்ளவர்கள் இதை தவிர்த்துவிடலாம்.

suresh kannan

Monday, December 07, 2009

காட்சிப் பிழை

கண்ணொளி அற்ற கதாபாத்திரங்கள் இயல்பாகவோ மிகையாகவோ இயங்கும் பல திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். தமிழ்த் திரைப்படங்களில் கமலின் ராஜபார்வை, விக்ரமின் காசி, 'அமர்க்களத்தின்' சார்லி பாத்திரம், 'நான் கடவுள்' அம்சவல்லி... போன்றவற்றை ஒரளவிற்கு குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால் கண்ணொளியை இழந்த ஒரு பாத்திரம் அதை மீண்டும் பெற்ற பிறகு அவர்களுக்கு ஏற்படும் மனச்சிக்கல்களை எந்தவொரு திரைப்படமும் முன்வைத்ததாக எனக்குத் தெரியவில்லை. கண் பார்வை கிடைத்ததோடு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவே அவை நிறைவுறும். பார்வையற்ற ஒருவர் அந்தக் குறைபாட்டில் இருந்து விடுபடுவது மகிழ்வடையக்கூடிய நிகழ்வுதானே, அதில் என்ன பிரச்சினை இருக்கப் போகிறது என்பதைத்தான் ஒரு சராசரி மனம் யோசிக்கும். ஆனால் அதிலிருக்கும் மனச்சிக்கல்களை பிரதானமாக வைத்து இயங்குகிறது மஜித் மஜிதியின் The Willow Tree திரைப்படம். (Beed-e majnoon - 2005).



யூசுப் கல்லூரி பேராசிரியர். சிறுவயது விபத்தில் கண்பார்வையை இழந்தவர். மனைவியுடனும் அன்பான மகளுடனும் வாழ்க்கை நகர்கிறது. தம்முடைய தீராத முனைப்பின் மூலம் தம்முடைய தடையைத் தாண்டி சிறந்த பேராசிரியராக இருக்கிறார். என்றாலும் தம்முடைய கண் பார்வை திரும்புவதைப் பற்றின ஆசையும் வேண்டுதலும் அவருக்கு இருக்கிறது. ஏறத்தாழ முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மருத்துவ அதிசயமாக, பிரான்சில் நடைபெறும் அறுவைச் சிகிச்சையின் மூலம் அவருடைய பார்வை திரும்பக் கிடைக்கிறது. இலையைச் சுமந்துச் செல்லும் ஒரு எறும்பைக் காண நேர்கிற முதல் காணலில் மிகவும் அகமகிழ்ந்து போகிறார் யூசுப். தாம் இதுவரை குரல்களாகவும் விரல்தடவல்களாகவும் உணர்ந்த விஷயங்களைக் காணப் போகிற மகிழ்ச்சித் திகைப்பில் ஆழ்கிறார். ஆனால் நிகழ்வுகள் எதிர்த்திசையில் பயணிக்கின்றன. இதன் காரணமாக தீராத மன உளைச்சலுக்கு ஆளாகிறார். மனைவி அவரை விட்டு பிரிந்துப் போகிறார். யூசுப் என்கிற அந்த மனிதன் எதிர்கொள்கிற அகச்சிக்கல்களை அறிய நாம் இந்தத் திரைப்படத்தினைக் காண வேண்டும்.



சிறந்த நடிப்பிற்காக நாம் யாரையெல்லாமோ பாராட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் யூசுப்பாக நடித்த Parviz Parastui-ன் திறமையைக் காண நேர்ந்தால் வியப்பால் நாம் திகைப்படைந்து விடுவோம். அந்த அளவிற்கு தம்முடைய உயிரோட்டமான, இயல்பான பங்களிப்பின் மூலம் இந்தப் படைப்பின் முழுக்க நிறைந்திருக்கிறார். Scent of a Woman-ல் அல்பசினோவின் பார்வையற்ற பாத்திரத்தின் திறமையை இந்தப் பதிவில் திகட்ட திகட்ட எழுதியிருந்தேன். ஆனால் இப்போது அல்பசினோவை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு Parviz Parastui முன்னே நிற்கிறார்.


பார்வையற்ற நிலையில் தம்முடைய மகளுடன் பழகுகிற ஆரம்பக் காட்சியில் அவருடைய முகத்தில் தந்தையின் கனிவு நிறைந்திருப்பதைக் காணலாம். அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு தம்முடைய நீண்ட வருட வேண்டுகோள் நிறைவேறப் போகிற மகிழ்ச்சியிலும் பதட்டத்திலும் மருத்துவர் பிரிப்பதற்கு முன்னாலேயே தம்முடைய கண் கட்டுக்களை தாமே மெல்ல அவிழ்த்துக் கொண்டு சுற்றுப் புறக்காட்சிகள் தெரிவதைக் கண்டு மகிழும் காட்சி குறிப்பிடத்தகுந்தது. பார்வையற்ற நிலையில் ஊன்றுகோலின் உதவியுடன் இயல்பாக நடக்க முடிந்தவருக்கு, பார்வை கிடைத்தவுடன் அப்போதுதான் நடக்க முயல்கிற குழந்தை போல் நடக்கிற காட்சியில் அவருடைய உடல் மொழி மிக அற்புதமாய் அமைந்திருக்கிறது. இதிலிருந்து மெல்ல மெல்ல விடுபவதை தொடர்ச்சியாக காட்சிகளில் மிகத் திறமையாக பின்பற்றியிருக்கிறார்.

விமான நிலையத்தில் தம்மைக் காண வந்திருக்கும் பெருந்திரளான கூட்டத்தில் எந்த முகம் தம்முடைய மனைவி, மகள் என்று தேடுகிற காட்சியும் மிக அற்புதம். மெல்ல அவருக்குள் ஏற்படுகிற ஏமாற்றத்தையும் அவர் கற்பனைக்கு மாறாக உலகம் இயங்கும் ஏமாற்றத்தையும் இயக்குநர் மஜித் மஜிதி உணர்வுப்பூர்வமான காட்சிப் பின்னணிகளின் மூலம் நகர்த்துகிறார். ரயில் பயணத்தில் பிக்பாக்கெட் திருடனின் சாகசத்தை வியப்புடனும் திகைப்புடனும் பார்க்கும் காட்சி ஒரு உதாரணம். தம்முடைய வாழ்க்கை இத்தனை வருடங்கள் வீணாக கழிந்ததாக தம்முடைய தாயிடம் வெடிக்கும் காட்சியிலும் இறுதியில் தம்முடைய புத்தகங்கள் அனைத்தையும் வீசியெறியும் காட்சியும் பார்வையாளனுக்கு திகைப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் காட்சிகள்.

மஜித் மஜிதியின் இன்னுமொரு சிறந்த திரைப்படம்.


suresh kannan