Tuesday, June 16, 2009

கமல் தந்த அதிர்ச்சி


தமிழ் சினிமாவை சில புள்ளிகளேனும் அடுத்த தரத்திற்கு நகர்த்திச் செல்பவர்களில் இங்கு கமலின் பங்கு பிரதானமானது என்று பல முறை நான் எழுதியிருக்கிறேன். பல சிறந்த தொழில்நுட்பங்களை முதலில் இங்கு பெரும்பாலும் பயன்படுத்த ஆரம்பித்தது அவர்தான். [ஆனால் பெரும்பாலான நாயகர்களைப் போல கதைக்குள் தன்னை நுழைத்துக் கொள்ளாமல் தன்னையே பிரதானமாக சுற்றி வருமாறு கதையை அமைப்பது மோசமான முன்னுதாரணம் என்பதையும் சொல்ல வேண்டும்.] அப்படியான கமல் திரைக்கதைக்கான ஒரு பயிற்சிப் பட்டறையை சமீபத்தில் நடத்தி முடித்திருப்பது நிச்சயம் நல்லதொரு விஷயம். தன்னுடைய அனுபவத்தின் மூலம் கிடைத்த அறிவை அடுத்த தலைமுறையினருக்கு கடத்திச் செல்ல வேண்டும் என்கிற ஒரு பொறுப்பான செயல். ஆனால் இதை தமிழில் நடத்தியிருக்க வேண்டும் என்கிற முணுமுணுப்புக் குரல்கள் எரிச்சலையே வரவழைக்கிறது. தமிழர்களைக் குறிக்கும் பிரத்யேக 'நண்டு' கதை நினைவிற்கு வருகிறது. இந்த போலி 'தமிழ்ப் பாசக்காரர்களை' ஒன்றுகூட்டி அவர்களின் தமிழ் இலக்கண அறிவைச் சோதித்துப் பார்த்தால் என்ன முடிவுகள் வரும் என்பதை யோசித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. 'நள்ள தமிளில் எலுதுங்கல்' என்று வெற்றுக் கோஷம் போடுவதில் அர்த்தமே கிடையாது. நிற்க. இப்போது நான் குறிப்பிட வந்தது இந்த அரசியலைப் பற்றி அல்ல.

பயிற்சிப் பட்டறையின் நிறைவு நாளின் போது கமல் உரையாடுகையில் 'நான் சினிமாப் பாடல்களுக்கு எதிரி அல்ல. தமிழ் சினிமாவில் பாடல் இருந்தால் அதில் தவறில்லை. நானே பாடல் நடன அமைப்பாளராகத்தான் என் திரை வாழ்க்கையைத் துவங்கினேன்' என்கிற ரீதியில் பேசியிருப்பது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க கமல் இப்படியொரு அதிர்ச்சியைத் தந்திருக்க தேவையில்லை.

'இயல், இசை, நாடகம்' எனும் கலாசாரம் என்பது நம் மரபிலேயே வந்தது. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் 'காட்சி ஊடகம்' பெருமளவில் முதிர்ந்துக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் நாம் சூழலுக்கேற்றவாறு அதை சீரமைத்துக் கொள்ள வேண்டாமா? மேலும் நம்முடைய திரைப்பாடல்கள் ரசிக்கும் வகையிலா உருவாக்கப்படுகின்றன? கவர்ச்சிப்பாடல், குத்துப்பாடல், சோகப்பாடல், சென்டிமென்ட் பாடல், காதல் பாடல்.. என்று எல்லா மசாலாவையும் உள்ளே நுழைக்கும் வகையில்தான் திரைக்கதையே யோசிக்கப்படும் போது எப்படி நாம் நல்ல சினிமாவை உருவாக்க முடியும்?

வறட்டி தட்டிக் கொண்டிருக்கும் நாயகி சாணத்தை தூக்கி எறியும் போது அந்த வழியே வரும் நாயகன் மேல் பட்டு விடுகிறது. வெட்கத்துடனும் சங்கடத்துடனும் அதை அவள் துடைக்க முயற்சி செய்ய, விளக்கெண்ணைய் குடித்த பசுமாடு போல் நோக்கும் நாயகன், அவள் கையைப் பிடிக்க, அதிரடி பின்னணி இசையுடன் அடுத்த காட்சியில் அவர்கள் மலேசியாவிலோ ஆஸ்திரேலியாவிலோ நடுரோட்டில் நடனமாடி பாட்டுப்பாடுவது நமக்கு பயங்கர காமெடியாய் தெரியவில்லை? அல்லது அது நமக்கு பழகிப் போய்விட்டதா? ஆனால் பரவசத்துடன் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தப் பாடல் காட்சியை வெளிநாட்டுக்காரர்கள் 'யாரடா இந்தக் கோமாளிகள்' என்னும் ரேஞ்சில்தான் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

()

'தமிழ்ச் சினிமா வீடியோப்பாடல் ஒன்று ஓடிக் கொண்டிருக்கும் போது உங்கள் ரிமோட்டில் உள்ள mute பட்டனை அழுத்தி விட்டுக் கவனியுங்கள். சிரிப்பாக இருக்கும்' என்று, வாத்தியார் சுஜாதாவும் தமிழ்ச் சினிமாப் பாடல்களில் உள்ள அபத்தத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். சமீபத்தில் ஒரு திரை நிகழ்ச்சியில் பேசிய பாலுமகேந்திராவும் 'குரங்குக் குட்டிகள் குதிப்பது போல் இருக்கிறது' என்று பாடல் காட்சிகள் பற்றின தம் அதிருப்தியை பல முறை வெளிப்படுத்தியிருக்கிறார். மதன் நடத்திய விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதுய விவாதம் வந்த போது பல முன்னணி இயக்குநர்கள் பாடல்களை உள்ளே நுழைப்பதில் தங்களுக்கு விருப்பமில்லை என்றே தெரிவித்திருக்கின்றனர். என்றாலும் எது அவர்களை இதை தொடர வைக்கிறது.

இதன் வணிக மதிப்பு. 'நல்ல சினிமாவாவது, மண்ணாவது' என்று எல்லாவற்றிலும் காசு பார்க்க நினைக்கும் தயாரிப்பாளர்களாலும் இயக்குநர்களாலும் இதை நிச்சயம் கைவிட முடியாது. படத்திற்கு முன் வெளியிடப்படும் இந்தப் பாடல் தொகுப்புகள் சிலபல கோடிகளுக்கு விற்பனையாகின்றன. அதிலும் அதீதமாக hype செய்யப்படும், வெற்று இசைக்கூச்சலான பாடல்கள் விற்பனையில் நிறைய பணத்தை சம்பாதிக்கின்றன. (கந்தசாமி சமீபத்திய உதாரணம்). இன்னொன்று, படம் வெளிவருவதற்கு முன்னால் வரும் பாடல்களை ஒரு சிறந்த விளம்பர டிரைய்லராக நினைக்கிறார்கள். ரசிகர்களிடம் பாடல்கள் ஹிட்டாகிவிட்டால் அதன் மூலம் ஒரு எதிர்பார்ப்பு உருவாகி படமும் ஹிட்டாகிவிடும் என்பது இவர்களின் கணக்காக இருக்கிறது.

()

கமலால் உருவாக்கப்படும் சமீபத்திய படமான 'என்னைப் போல் ஒருவன்', 'A Wednesday' என்கிற இந்திப்படத்தின் மறுஉருவாக்கம் என்பது தெரிந்த செய்தி. ஆனால் இந்தப் படத்தில் பாடல்கள் இருக்கின்றன என்ற செய்தி வெளியாகும் போது, எப்படி அப்படியொரு படத்தில் பாடல்களை நுழைக்க முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்திப்படத்தை பார்த்திருந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். நஸ்ரூதின்ஷா நடுரோட்டில் பின்னால் நூற்றுக் கணக்கானவர்கள் வர "ஹே.. என் பாரத தேசமே' என்றதொரு பாடலுடன் வந்தால் எப்படி அபத்தமாக இருக்கும்?

தமிழ்ச் சினிமாவில் பாடல்களே இல்லாமல் இதுவரை இரண்டே படங்கள்தான் வந்திருக்கின்றன. ஒன்று 'அந்த நாள்'. இரண்டாவது கமலின் 'குருதிப்புனல்'. இதிலும் கூட ஒரு முன்னுதாரணமாய் இருந்திருக்கும் கமல் பாடல் காட்சிகளுக்கு வக்காலத்து வாங்கியிருப்பது நிச்சயம் எனக்கு அதிர்ச்சிதான்.

பாடல்கள் என்பதை திரைப்படத்தோடு கலக்காமல் மேற்கத்திய நாடுகளின் பாணியில் தனி ஆல்பங்களாக வெளியிடும் சூழ்நிலையை இங்கு உருவாக்க வேண்டும். இதனால் இசையமைப்பாளர்களும் 'situation-க்கு மூளையைச் கசக்காமல் முழுச் சுதந்திரத்தோடு தங்களின் உருவாக்கங்களை வெளியிட முடியும். இயக்குநர்களும் பாடல்கள் எனும் இடையூறு இல்லாமல் நல்ல கதையோட்டத்துடன் தங்களின் திரைக்கதையை யோசிக்க முடியும். இதனால் இரண்டு துறையுமே உருப்படும். பார்வையாளர்களும் இந்த மாதிரியானதொரு சூழ்நிலைக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியொரு சூழல் விரைவிலேயே நிகழும் / நிகழ வேண்டும் என நாம் நம்புகிறேன்.

suresh kannan

39 comments:

  1. ஏர்போர்ட்னு ஒரு சத்யராஜ் படத்துல கூட பாட்டு இல்லைனு நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. AnonymousJune 16, 2009

    One more Without Song movie also from Raj Kamal International. Kadamai Kanniam Kattupadu (Sathya Raj Hero)

    ReplyDelete
  3. //தமிழ்ச் சினிமாவில் பாடல்களே இல்லாமல் இதுவரை இரண்டே படங்கள்தான் வந்திருக்கின்றன. ஒன்று 'அந்த நாள்'. இரண்டாவது கமலின் 'குருதிப்புனல்'//

    சத்யராஜ் நடித்த ஏர்போர்ட் படத்திலும் பாடல்கள் கிடையாதுங்க.இன்னும் ஓரிரு படங்களும் இருக்கின்றன.

    //இயக்குநர்களும் பாடல்கள் எனும் இடையூறு இல்லாமல் நல்ல கதையோட்டத்துடன் தங்களின் திரைக்கதையை யோசிக்க முடியும்//

    வழிமொழிகிறேன்.

    (ஆனால் அதற்கு முன்பாக குத்துப்பாட்டு கலாச்சாரம் ஒழிந்து கவிதைநயம் மிகுந்த பாடல்கள் வந்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கிறேன்.எனது கல்லூரி நாட்களில் தேவாவின் கானா பாடல்களை கேட்கும்போது மகா எரிச்சலாக இருக்கும்,இப்ப இந்த கேவலமான வரிகளைக் கொண்ட குத்துப் பாடல்கள்.)

    ReplyDelete
  4. //தமிழ்ச் சினிமாவில் பாடல்களே இல்லாமல் இதுவரை இரண்டே படங்கள்தான் வந்திருக்கின்றன. //

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு, வண்ணக்கனவுகள் இந்த படங்களிலும் பாடல்கள் கிடையாது தலைவா!

    ReplyDelete
  5. பாடல்கள் இல்லாமல் படம் வரணும்ங்கற உங்க கருத்தோட ஒத்துப்போகிறேன். ஆனா என்னைப்போல் ஒருவன்ல பாடல் வர்றதால கதையோட்டம் பாதிக்கப்படும் அப்படின்னு சொல்றதெல்லாம் சும்மா ஏதோ போற போக்குல விமர்சனம் பண்ணனும்னு பண்றா மாதிரிதான் தோணுது. ஹிந்தி படத்தோட மேக்கிங்க்ல பாடல்கள் தேவைப்படலை. தமிழ்ல எந்த மாதிரியான வகையில திரைக்கதையாடல் மையப்படுத்தியிருக்கும்ன்னு தெரிஞ்சுக்காம உட்டாலக்கடி பாஷை விடுறா மாதிரி தோணுது.

    அப்படி பார்த்தா மும்பை மாதிரி டிரெயின்ல குண்டு கூடத்தான் சென்னையில வெடிக்கலை. அப்ப இந்த படத்தையும் குண்டு வெடிச்சப்புறம் எடுக்கலாம்ன்னு சொல்வீங்க போலருக்கே.. தமிழ் பாரம்பரியத்துல பாட்டுக்கு தனி இடம் இருக்குது. அது தாலாட்டோ, ஒப்பாரியோ ராகமா இழுத்து பாடுனாத்தான் கேக்க முடியும்.

    உலகின் மிகச்சிறந்த நூறு படங்களின் வரிசையில் இடம் பெற்ற நாயகன் படமும் நீங்கள் குறிப்பிட்டுள்ள காதல், குத்து, செண்ட்டிமெண்ட் போன்ற அத்தனை பாட்டு இழவுகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது!

    அதென்னமோ கமல் வரப்போகுதுன்னா மாத்திரம்தான் விமர்சனம் கொடி கட்டி பறக்க ஆரம்பிச்சுடும் :-))

    நீங்க ஆரம்பிச்சு வைச்சுருக்கீங்க.. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  6. சுரேஷ் கண்ணன்,

    நீங்கள் அந்த குறிப்பிட்ட பேட்டியை எந்த ஊடகத்தின் மூலம் அறிந்து கொண்டீர்கள் என்பது தெரியவில்லை.ஏனெனில் எடிட் செய்யப்பட்டவையே இங்கு பெரும்பாலும் வெளிவருகின்றன.

    கமல் எப்பொழுதுமே பாடல் காட்சிகளை விரும்பாதவர்தான். இதை பலமுறை பேட்டிகளில் கூறிவந்துள்ளார்.

    மணிரத்னம், ஆங்கில (இந்தி சினிமா பற்றி வெளிவரும்) பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியொன்றில் கமல் பாடல்காட்சிகளை படத்தில் வைப்பதை அன்கம்பர்ட்டாக பீல் பண்ணுவார். ஆனால் நான் முழுமனதோடுதான் வைப்பேன் என பேட்டியளித்துள்ளார்.

    இதே கருத்தை, மதன் பொறுப்பாசிரியராக இருந்து, வினாயக மிஷன் சண்முகசுந்தரத்தால் தொடங்கப்பட்டு விரைவில் மூடுவிழா கண்ட செமி இலக்கிய (ஆனந்த விகடன்+ காலச்சுவடு சரி விகிதத்தில் கலந்த) பத்திரிக்கையிலும் மணிரத்னம் தெரிவித்திருந்தார்.


    நீங்கள் குறிப்பிட்டுள்ள பேட்டியின் போது, கமல் பாடல்கள் நல்ல திரைக்கதைக்கு இடையூறு என்ற கருத்தை சொன்னார். உடனே நம் நிருபர்கள் அப்படியென்றால் நீங்கள் பாடல்காட்சிகளுக்கு எதிரியா என்ற கூக்ளியை வீசவும், கமல் தடுப்பாட்டம் ஆட வேண்டியதாயிற்று. எடிட்டிங்கால் அது உங்களுக்கு தப்பாட்டமாய் தோன்றிவிட்டது

    ReplyDelete
  7. தவறு இருந்தால் மன்னிக்கவும், சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு, படத்தில் கூட பாடல்கள் இல்லை என்றே எண்ணுகிறேன்.

    ReplyDelete
  8. 1 more tamil film wo songs : airport. satyaraj & gowthami & charlie.

    ReplyDelete
  9. பாடல் தேவையில்லை... பாடல் இல்லாததே நல்ல சினிமா... என்றில்லாமல் படங்களில் பாடல்களை சரியாக பயன்படுத்துவது என்பது முக்கியம். தவிர, வணிக ரீதியாகவும் இது தேவைப்படுகிறது... மணிரத்னம் சொல்லியிருந்தார், "நான் ஒவ்வொரு முறை முயன்றும் முடியாமல் போகிறது" என்று.

    நீங்களே ஒரு பதிவில் 'கண்கள் இரண்டால்' பாடலை ரசித்து எழுதி இருக்குறீர்கள்... ஏன்? அது போலவும் வேண்டாம் என்று சொல்கிறீர்களா?

    நீங்கள் சொல்லும் வெளிநாட்டில் ஆடும் கோமாளிக்கூத்தை ஒத்து கொள்கிறேன். ஆனால், நம் சினிமாவில் பாடல் என்பது நம்மிடம் உள்ள தகுதி வாய்ந்த பெஸ்ட் இசை கலைஞர்களை பயன்படுத்தி கொள்ளும் ஒரு வாய்ப்பு. ரஹ்மானை பயன்படுத்தி அவர்களும் பாடல்களை வைக்கிறார்களே?

    தவிர, நல்ல சினிமாவுக்கு எந்த இலக்கணமும் இல்லை என்று கருதுகிறேன். பாடல்கள் இருக்க கூடாது என்பது உட்பட.

    ReplyDelete
  10. சுரேஷ் கண்ணன் அவர்களே உங்கள் பதிவில் அந்த அழகிகளின் படம் எதற்கு? அதைப்போலத் தான் திரைப்படத்தில் பாடல்களும். பெரும்பாலான கமல் படங்களில் பாடல்கள் இடைச் செருகல்களாக இல்லை. அத்துடன் சில காட்சிகளை பாடல்களுடன் வைத்தால் தான் மக்களுக்கு விளக்க முடியும், எடுத்துக்காட்டாக விருமாண்டியில் கமலும் அபிராமியும் காதல் வயப்பட்டபோது "ஒன்னைவிட" பாடல் இல்லையென்றால் அந்தக் காட்சி படுக்கையறைக்காட்சிபோல் இருக்கும். அதுபோல பிதாமகனின் "இளம்காற்று வீசுதே" பாடல். ஆனால் வசூல்ராஜாவிலோ பஞ்சதந்திரத்திலோ வந்தபாடல்கள் பெரும்பாலும் இடைச் செருகல்கள் தான். டூயட் பாட வெளிநாட்டுக்கு போகவேண் டும் என எண்ணம் தயாரிப்பாளாருக்கு இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. பாடல்களும் காட்சி அமைப்பும் அழகாக இருந்தால் எந்தப்பாடலையும் ரசிக்கலாம். சிறந்த உதாரணம் வாரணம் ஆயிரம், காதலர் தினம், கரகாட்டக்காரன் பாடல்கள்.

    கரகாட்டக்காரன் பாடல்களுக்காகவே ஓடியபடம்.

    ReplyDelete
  11. மகேந்திரன்June 16, 2009

    வெளிவரும் படங்களில் பாதிக்கும் மேலே மசாலா படங்கள் என்பதால் மட்டுமே பாடல் காட்சிகள் தேவையில்லாத ஒன்றாக இருந்துவிடமுடியாது. மேலும் பாடல்களில்லாமல் எடுக்கப்படுவதால் மட்டுமே ஒரு தமிழ்ப்படம் உலகத்தரத்தில் அமைந்து விடுமா? கருத்து சொன்ன கமல் மேலும், அவர் கருத்து மேலும் கண்டிப்பாக தவறு இல்லை. பாடல்களை தவறாக பயன்படுத்தும் இயக்குனர்களும், வியாபார நோக்கோடு மட்டுமே படமாக்கத்தூண்டும் தயாரிப்பாளர்களும் மட்டுமே யோசிக்க வேண்டும். அதிலும் கூட பாடல்களில்லாத, உலகத்தரத்திலான ஒரு சினிமா என்பது மேம்பட்ட காட்சி ஊடகத்தைப்பற்றிய விழிப்பு கொண்ட உங்களைப்போன்ற மேல்வர்க்க மக்களுக்கானது. திரைப்படம் என்ற ஒரு விஷயமே முதலில், தொடர்ச்சியான பாடல்களைக்கொண்டதாக தானே அறிமுகமானது. குறிப்பிட்ட ஒரு சாரருக்கான உரிமையாய் மட்டுமே இருந்த இசையை, இயல்பான வழியில் பொதுவுடமை ஆக்கியது கண்டிப்பாக திரைப்பட ஊடகம்தான். சாதாரண ஒரு பாமரனுக்கு, "அனல்மேலே பனித்துளி" சுதா ரகுநாதனும் ஒன்றுதான், "நாக்கமுக்க" சின்னபொண்ணுவும் ஒன்றுதான். இந்த அசாதாரணமான சமவுடைமை திரைப்பாடல்கள் தந்தது தானே? ஒரு திரைப்படத்தில் பாடல்கள் என்பது எவ்வளவு இயல்பான விஷயமாய் அமையவேண்டும் என்பதற்கு "பருத்திவீரன்" மிக நல்லதொரு உதாரணம். படத்தின் துவக்கத்தில் தோன்றுமொரு திருவிழாக்காட்சியையோ, கேட்பாரற்று உச்சிவெயிலில் நாயகன் ஆடிக்கொண்டிருப்பதையோ பாடல்களின்றி கூற இயலுமா? இயன்றாலும் ருசித்திருக்குமா?, காதல் துளிர்த்தபின் வரும் உசுருக்குள்ள தீயை வெச்சான் பாடல் கூட பின்னணியில் ஒலிக்கும் பாடல் தானே தவிர, நாயகனோ நாயகியோ செயற்கையாக வாயசைக்கவில்லை. மிகுந்த சந்தோஷமான பொழுதுகளில் உங்கள் மனசுக்குள் நீங்கள் இசை கேட்டதில்லையா? நீங்களேவா ஆடிப்பாடி கொண்டிருக்கிறீர்கள்? அதேப
    ோலதான் இதுவும். இன்னுமொரு நல்ல உதாரணம் "முதல்மரியாதை". வயல்வெளிகளில் வேலை செய்யும் பெண்களுக்கான பாடல் துவங்கி, ஆறுதல் தேடும் நாயகனுக்கான பாடல் வரை அற்புதமாக கையாளப்பட்டது. பாடல்களே வாழ்க்கையாகிப்போன இயல்பான நாட்டுப்புற வாழ்க்கையது. உங்கள் கேள்வி புரிகிறது.. கிராமத்துப்படங்களில் உதாரணம் காட்டுவது எளிது என்கிறீர்கள் தானே? நகரத்துப்படங்களில் "உன்னாலே உன்னாலே" மிக நல்ல சான்று. மேல்தட்டு நாகரீகத்தில் திளைக்கும் பாத்திரங்கள் அமெரிக்காவின் தெருக்களில் ஆடிப்பாடுவதில் ஒன்றும் வியப்பில்லை. இது நமக்கு தேவையில்லையென துப்புரவாக ஒதுக்குவதை விட வேண்டிய இடத்தில் ரசிக்கும்படியாக பயன்படுத்துவதில் தவறொன்றும் இல்லை தானே??

    ReplyDelete
  12. \\தமிழ்ச் சினிமாவில் பாடல்களே இல்லாமல் இதுவரை இரண்டே படங்கள்தான் வந்திருக்கின்றன. ஒன்று 'அந்த நாள்'. இரண்டாவது கமலின் 'குருதிப்புனல்'. இதிலும் கூட ஒரு முன்னுதாரணமாய் இருந்திருக்கும் கமல் பாடல் காட்சிகளுக்கு வக்காலத்து வாங்கியிருப்பது நிச்சயம் எனக்கு அதிர்ச்சிதான்.\\\

    தல

    ஹவுஸ்புல் - பார்த்திபன்
    எவனோ ஒருவன் - மாதவன்
    இந்த படங்களில் கூட பாடல்கள் இல்லை

    ReplyDelete
  13. பின்னூட்டமிட்டவர்களுக்கும் இடப்போகிறவர்களுக்கும் நன்றி. சில பின்னூட்டங்களுக்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். உடனடியாக எழுத முடியாத சூழல். விரைவில் இதைப் பற்றி உரையாடுவோம்.

    ReplyDelete
  14. சரவணகுமரன் said...

    நல்ல சினிமாவுக்கு எந்த இலக்கணமும் இல்லை என்று கருதுகிறேன். பாடல்கள் இருக்க கூடாது என்பது உட்பட.//

    100% இதுவே எனது கருத்தும்.
    சமயங்களில் வசனங்கள்,ஒளிப்பதிவு,நடிப்பு அனைத்தையும் தாண்டி நல்ல இசையும்,பாடல்களும் படத்தை எங்கோ உயரத்திற்குத் தூக்கிச் சென்றிருக்கும் அனுபவம் எல்லோருக்குமே உண்டு.

    மலர்ந்தும் மலராத பாடல் இல்லாத பாசமலரைக் கற்பணை பண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை.

    எதற்கு எடுத்தாலும் மேற்கத்திய படங்களையே தியரியாக நாம் ஏன் கொள்ள வேண்டும்?

    ReplyDelete
  15. AnonymousJune 16, 2009

    40 users online StatCounter - Free Web Tracker and Counter

    ReplyDelete
  16. இதைப் பற்றி நானும் சமீபத்தில் சிந்தித்தேன். ஹீரோ ஓப்பனிங் சாங், டூயட், குத்துப்பாட்டு போன்று வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் பாடல்கள்தான் தேவை இல்லையே தவிர மற்றபடி பாடல்கள் திரைக்கதைக்கு மாபெரும் வசதி மற்றும் பலம் சேர்க்கின்றன. அதைப் பயன்படுத்துவதில்தான் திறமை இருக்கிறது. உதாரணத்திற்கு கீழ்வரும் பாடல்கள் இல்லாமலிருந்தால் அதே உணர்ச்சிகளை/சூழ் நிலையை விளக்க எப்படி காட்சிகள் வைக்க கஷ்டப்பட வேண்டியதிருக்கும் என யோசித்துப் பாருங்கள்:

    1. உன் குத்தமா என் குத்தமா - அழகி. இப்பாடலின் அழகியலை பாடல் இல்லாமல் கொண்டுவருவது சாத்தியமா?
    2. அந்திமழை மேகம் - நாயகன். ஹீரோ குடும்பத்தின் மற்றும் அவர்களது சுற்றத்தாரின் உற்சாகம், கொண்டாட்டம்.
    3. அடே நண்பா - அண்ணாமலை. ஒரே பாடலில் ஹீரோ பணக்காரர் ஆயிருவாராமா? என நாம் கிண்டல் அடித்தாலும் டி.வி. சீரியல் வருவது போல் ஒருவர் 3 கிலோமீட்டர் போகிறார் என்றால் 3 நிமிடம் காரையே காட்டுவதை விட இப்படி கதையை நகர்த்துவது மேல்.

    நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். சொல்லவரும் பாயிண்ட் என்ன என புரிந்திருக்கும் என நினைக்கிறேன். மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் நம்மிடையே தாலாட்டு, ஒப்பாரி, வேலை செய்யும்போது பாடும் பாடல் என இசை வாழ்க்கை முழுவதும் கலந்திருக்கிறது. அதே உணர்ச்சிகளை திரையில் கொண்டுவரவும் பாடல்கள் உதவுகின்றன...

    ReplyDelete
  17. நீங்கள் சொல்வது போல் குத்து பாடல்களும், வெளிநாட்டு பாடல் காட்சிகளும் தேவை இல்லை தான்..

    ஆனால் நல்ல பாடல் இல்லாமல் அனைத்து திரைப்படங்களையும் ரசிக்க முடியாது என்று தோன்றுகிறது..

    பாடல்கள் தேவை, ஆனால் அப்பாடல்கள் திரைப்படத்திற்கு இடஞ்சலாக இருக்ககூடாது என்பது என் கருத்து..

    ReplyDelete
  18. AnonymousJune 16, 2009

    சமயங்களில் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த பாடல்கள் உதவின. உ-ம் பணக்காரனாவது, பெரியவனாவது போன்றவை.

    ஆனால் பிற்காலத்தைல் வலிந்து திணிக்கப்பட்ட பாடல்கள் வரவைப்பது வாந்தியையே.

    ஆனால் இளையராஜவையும், ரஹ்மானையும் நமக்கு இத்திரைப் பாடல்களே அடையாளம் காட்டின என்பதால் பொறுத்துக் கொள்கிறேன் நான்.

    ReplyDelete
  19. பாட்டில்லாத படம்னா தம் அடிக்க போகமாட்டங்கன்னு அன்புமணி ராமதாஸ் சொல்லியிருபாரோ ???

    ReplyDelete
  20. ///தமிழ்ச் சினிமாவில் பாடல்களே இல்லாமல் இதுவரை இரண்டே படங்கள்தான் வந்திருக்கின்றன. ஒன்று 'அந்த நாள்'. இரண்டாவது கமலின் 'குருதிப்புனல்'////

    அதாவது உண்மை தெரியாவிட்டாலும் தன்னிடமிருக்கும் தெரிவுகளை வைத்து வாசகர்களை முட்டாள்களாக நினைத்து இஷ்டத்துக்கு எழுதி தள்ளுவது.. இப்ப டவுசர் கிழிஞ்சிருக்குமே ??

    நல்ல பாடல்கள் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கும் ஹிஸ்ட்ரி இருப்பதுதான் தமிழ் படத்தில் பாடல்கள் வைப்பதற்கு காரணம். ஏன் இங்கிலீசு காரன் பீசா திங்கிறான், ஏண்டா தமிழா இட்லி திங்குறே, நீயும் பீஸ்ஸா தின்னு என்று உங்களது அபத்தத்தை அடுத்தவர் மேல் திணிக்கும் கெட்ட பழக்கத்தை எப்போது விடப்போகிறீர்களோ ??

    ReplyDelete
  21. // பரவசத்துடன் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தப் பாடல் காட்சியை வெளிநாட்டுக்காரர்கள் 'யாரடா இந்தக் கோமாளிகள்' என்னும் ரேஞ்சில்தான் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.//

    புரட்சிக்கலைஞர் பாரின்ல டான்ஸ் ஆடுரமாதிரி காட்டும் போதெலாம் நானும் இப்படித்தான் நினைப்பேன்.அவன்லாம் இந்தியன பத்தி என்ன நினைப்பான்னு.

    மொதல்ல ஒரு படத்தல் 18,20 பாட்டு இருந்துது அது அப்படியே சுருங்கி இன்னைக்கு 4,5னு வந்திருக்கு.அஞ்சாதே,பருத்திவீரன்,வெய்யில்,தமிழ்MA,
    சுப்ரமணியபுரம்...மாதிரியான படங்கள் பாத்தீங்கன்னா பாட்டும் கம்மி அந்த பாட்டும் கதாபாத்திரத்துக்கு பின்னாடிதான் வரும்.இது ஒரு ஒரு நல்ல மாற்றம் தான்.

    அம்ரோஸ் பெரோஸ் படத்தோட ரீமேக் நம்ம ஆயுத எழுத்து.அதுல என்னா பாட்டு.அந்த மாதிரி நல்ல பாட்டு கேக்கும் போதெல்லாம் படத்துல பாட்டு தப்பில்லைனு தோனும்.

    ஆனா பொதுவா பாட்டு இல்லாமா படம் வந்தா ரொம்ப நல்லாவே இருக்கும்.

    ReplyDelete
  22. சில நேரங்களில் வசனங்கள் காட்சிகளை விட பாடலும் ஆடலும் உணர்வுகளை எளிதாக பரிமாற்ற உதவும்.

    உதாரணம் பல, சில இங்கே: (வேட்டையாடு விளையாடு- பார்த்த முதல் நாளே கண்ணே.. எத்தனயோ பேசி இன்னும் தீரவில்லையே, மஞ்சள் வெய்யில் மாலை நிலா... மின்னலே- ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்.. ,- கள்ளு கடை காசிலே தாண்ட கட்சி கொடி ஏறுது போடா..)

    குறிப்பாக காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் உணர்வுகளை பறிமாற வசனங்களை விட ராகத்தோடு பாடலாக சொன்னால் எளிதில் புரிந்து விடும் (அதுவும் கூட பத்து இருபது க்ரூப் டான்சர்களுடன், சுவிசர்லாந்து அல்லது அமெரிக்காவில் )

    ஒரேயடியாக வசனங்களாய் இருந்தால் பார்க்கும் என் போன்ற படிக்காத பாமர ரசிகனுக்கு அலுப்பு தட்டி விடும். நாங்களே கல்லூரி விரிவுரையாளர், அரசியல் மேடை பேச்சாளர் பேச்சில் இருந்து தப்பிக்கத்தான் திரைப்படமே வருகிறோம். வெண் திரை யிலும் பேச்சா.

    சண்டை காட்சிகளும் இதே போல தான், அப்போது தான் வீரம் குரோதம் என்ற உணர்வு மனதில் ஆழாமாய் பதியும்.

    எனவே குறை கமல், மணிரத்தினம், ஷங்கர், பாரதிராஜா, பாலுமஹெந்ட்ரா மீது அல்ல, என் போன்ற பாமர ரசிகர்கள் மீதே.

    ReplyDelete
  23. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    1) பாடல்கள் இல்லாத திரைப்படங்கள் என்று யோசித்த போது இரண்டு திரைப்படங்களே நினைவுக்கு வந்தன. 'ஏர்போர்ட்'டைப் பற்றி பல நண்பர்கள் குறிப்பிட்டிருந்தனர். அது பிரபல மலையாள இயக்குநர் ஜோஷி இயக்கிய திரைப்படம் என்பதால் டப்பிங் படமோ என்று நினைத்து விட்டேன்.

    'கடமை கண்ணியம் கட்டுப்பாடு'ம் மலையாள திரைப்படத்தின் மறுஉருவாக்கமே என்றாலும் (இதுவும் கமல் தயாரித்த படம்தான்)
    நினைவுக்கு வராமலே போய்விட்டது. சென்ஷி குறிப்பிட்ட அமீர்ஜான் இயக்கத்தில் வெளிவந்த 'வண்ணக் கனவுகள்' முக்கியமான திரைப்படம்.

    பார்த்திபன் தயாரிப்பில் வெளிவந்த 'ஹவுஸ்புல்' திரைப்படத்தில் பாடல்கள் உண்டா இல்லையா என்று குழப்பமாக இருக்கிறது. யாராவது தெளிவுப்படுத்தவும். 'எவனோ ஒருவனில்' கடைசியில் டைட்டில் கார்டின் பின்னணயில் ஒரு பாடல் ஒலிக்கும். (ஆனால் அது படத்துக்கு இடைஞ்சல் இல்லாததுதான்).

    2) ஏற்கெனவே எழுத நினைத்திருந்த இந்தப் பதிவை தாமதமாகிறதே என்று அவசரமாக எழுதினேன். பாடல்கள் இல்லாத திரைப்படங்கள் பற்றி குறிப்பிடும் போது,பின்னூட்டத்தில் இதை தெளிவுப்படுத்துங்கள்' என்று குறிப்பிட இருந்தது,அவசரத்தில் விடுபட்டுப் போயிற்று. இது ஒரு தகவல் பிழைதான்.

    ஆனால் முதல் சுற்றில் வந்த பின்னூட்டங்களில் இதுவே பிரதானமாக இருந்த போது பதிவின் நோக்கம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். ஆனால் பின்னால் சில செறிவான் பின்னூட்டங்கள் வந்தன.

    3) கமல் பேட்டியை நேரடியாக காண முடிந்த முரளி கண்ணன் கமலின் கருத்தை தெளிவுப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நன்றி. ஆனால் 'பாடல்கள் நல்ல படத்துக்கு இடையூறு' என்ற உணர்ந்திருக்கிற கமல் அதை ஏன் விடாப்பிடியாக (தன்னுடைய தயாரிப்புகளில் கூட) பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதுதான் புரியவில்லை.

    //மதன் பொறுப்பாசிரியராக இருந்து//

    அந்த இதழின் பெயர் 'விண்நாயகன்'

    4) பலருக்கு பாடல்கள் இல்லாத திரைப்படங்களை பற்றி யோசிக்கவே சங்கடமாகவும் ஒப்புதல் இல்லாமலும் இருக்கிறது என்று நினைக்கிறேன். தவறில்லை.

    யதார்த்த நோக்கில் பாடல்கள் அவற்றிற்கு புறம்பானது என்பதாலும் அவை தற்போது மிக அநாவசியமாகவும் இடைஞ்சலாகவும் அதனால் திரைப்படத்தின் முழு உருவமே சிதையும் வகையிலும் உருவாக்கப்படுவதால்தான் இதை எழுத வேண்டியதாயிற்று.

    பாடல்கள் இல்லாத திரைப்படம் என்பது என்னுடைய விருப்பமான கருத்தாக்கம். உங்களின் மீது அதை திணிப்பது என் நோக்கமில்லை. அப்படி யார்மீதும் யாரும் எதையும் திணித்துவிட முடியாது.

    இந்த விவாதங்கள் இது குறித்து இன்னொரு பதிவை இன்னும் விளக்கமாக எழுதத் தூண்டுகிறது. விரைவில் எழுதுவேன் என நினைக்கிறேன்.

    [இனிமே பின்னூட்டம் போடுவீங்க. :-)]

    ReplyDelete
  24. மீ த 25 :-)

    அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்!

    (போட்டோமுல்ல கமெண்ட்டு)

    ReplyDelete
  25. //இந்த விவாதங்கள் இது குறித்து இன்னொரு பதிவை இன்னும் விளக்கமாக எழுதத் தூண்டுகிறது. விரைவில் எழுதுவேன் என நினைக்கிறேன்.

    [இனிமே பின்னூட்டம் போடுவீங்க. :-)] //

    என்ன சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்... பூஸ்ஸ்... :-)

    ReplyDelete
  26. //.. பூஸ்ஸ்... :-) //

    :-)))

    சரவணகுமரன்:

    இது சீரியஸ். நிச்சயம் இன்னொரு பதிவு போடத் தோன்றுகிறது. பின்னூட்டத்தில் அத்தனை நீளமாக விளக்க முடியாது. என்னுடைய தரப்பை இன்னும் விரிவாக சாவகாசமாக இயன்றவரை முன்வைக்க முயல்கிறேன். அப்போது இன்னும் விரிவாக உரையாட இயலும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  27. வழ்க்கம் போல கமலை நொள்ளை கண்டு பிடித்து விட்டேன் பார் என சொல்லிக்கொள்ளும் பதிவு.

    ஓரளவு கமல் சம்பந்தப்பட்ட பேட்டிகளையும் நிகழ்ச்சிகளையும் கவனித்து வருபவர்களுக்கு கமல் முடிந்த அளவுக்கு திரைப்ப்டங்களில் பாடல்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற கருத்துள்ளவர் என தெரியும் ..அக்கருத்தை அவர் வெளிக்காட்டியிருப்பதாலேயே ஒரேயடியாக தான் பாடல்களுக்கு எதிரி இல்லை என சொல்ல வேண்டியதாகிறது.

    முன்பு ஜெயா தொலைக்காட்சியில் வந்த 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் கூட பாடல்களை முடிந்த மட்டும் தவிர்க்க வேண்டும் என கமல் விவாதம் செய்ய கே.எஸ்.ரவிக்குமார் அதை மறுத்து விவாதம் செய்வார்

    ReplyDelete
  28. //அந்த நாள்'. இரண்டாவது கமலின் 'குருதிப்புனல்'.//
    Airport- kadamai, kanniyam kattupadu.

    ReplyDelete
  29. AnonymousJune 16, 2009

    நவரச நாயகன் கார்த்திக் நடித்த ஒரு படத்திலும் பாடல்கள் இல்லை. படம் பெயர் மறந்து விட்டது. சார்லி ப்ரோக்கராக வந்து A முதல் Z வரை பெண்கள் பெயர் சொல்லும் காட்சி உண்டு. படத்தின் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  30. இயக்குனர் மகேந்திரனின் படங்களில் வரும் பாடல்களை வேண்டாம் என்று கூற முடியுமா ? பிரபல அடிதடி ஹாலிவுட் மசாலா சூப்பர் ஹிட் படமான Desparado வில் பாட்டு இல்லையா?? ஏன், உலகின் நம்பர் ஒன் படமாக கொண்டாடப்படும் Godfather இல் பாடல் இல்லையா? நான் கடவுள் படத்தில் 'பிச்சைப்பாத்திரம்' தாக்கம் பற்றி உங்களுக்கே சொல்ல வேண்டுமா? என்னவென்றால், நம்மவூர் போல கன்னா பின்னா வென்று எடுக்கக்கூடாது. தேவையான இடத்தில இயற்கையாக சேர்க்கப்படவேண்டும். கரெக்டா நண்பரே?

    ReplyDelete
  31. // Anonymous said...

    நவரச நாயகன் கார்த்திக் நடித்த ஒரு படத்திலும் பாடல்கள் இல்லை. படம் பெயர் மறந்து விட்டது. சார்லி ப்ரோக்கராக வந்து A முதல் Z வரை பெண்கள் பெயர் சொல்லும் காட்சி உண்டு. படத்தின் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.//

    அனானி அண்ணே.. முன்னாடியே கமெண்டுல அந்த படம் பேரு வந்திருக்கே..

    படம் பேரு: வண்ணக்கனவுகள்
    நடிகர்கள்: கார்த்திக், முரளி, ஜெயஸ்ரீ, நாசர்
    இயக்கம்: அமீர்ஜான்

    ReplyDelete
  32. AnonymousJune 16, 2009

    திறமையான இயக்குநர்கள் (மற்றும் கதாசிரியர்கள்) பாடல்களை கதையை முன்னெடுத்துச் செல்ல அருமையாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தற்போதைய படங்களைக் காணும்பொழுது பெரும்பாலானவர்களுக்கு 5 பாடல்கள்/சண்டைக் காட்சிகள் படத்தின் 1 மணி நேரத்தை வெட்டியாகத் திண்பதற்கே வைப்பதுபோல் இருக்கிறது. ஹோட்டலில் ரோம் போட்டு டிவிடி பார்த்து சீன் பிடிக்காமல் உருப்படியாக ரெண்டேகால் மணி நேரத்திற்கு தொய்வில்லாமல் கதை சொல்லத் தெரிந்தால் பாடல்களுக்கு தேவையே இருக்காது.

    ReplyDelete
  33. சுரேஷ் கண்ணன்

    எனக்கு உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை. அதாவது இந்த கருத்தரங்கத்தை தமிழில் நடத்தி இருக்க வேண்டும்!!! திரைகதை எப்படி ஒரு திரைப் படத்திற்கு முதுகெலும்பு என்பதை தாய் மொழியில் நடத்தி இருந்தால் சராசரி தமிழனுக்கு புரிந்து இருக்கும். நீங்கள் சென்னைவாசி என்பதால் உங்களுக்கு இந்த சிரமம் ஏற்பட வாய்ப்பு இல்லை...

    சினிமா மீது தணியாத தாகம் உள்ள கிராமத்து இளைஞர்களுக்கு இது தமிழில் நடந்து புத்தகம் அல்லது ஒலி/ஒளி தட்டுகளாக வந்து இருந்தால் மிக மிக உபயோகமாக இருந்து இருக்கும்!

    எழுத்தாளர் ஞானிகூட இதனை தமிழில்தான் நடத்தி இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

    அதற்காக நம் தமிழ் ஆர்வலர்களை நீங்கள் கிண்டல் செய்து இருப்பது நியாயம் அல்ல :-))

    மயிலாடுதுறை சிவா....

    ReplyDelete
  34. //நீங்கள் சென்னைவாசி என்பதால் உங்களுக்கு இந்த சிரமம் ஏற்பட வாய்ப்பு இல்லை...//

    சிவா,

    சென்னையில் இருப்பவர்கள் அனைவரையுமே ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் உயர்குடிகளாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்ன? :-))

    பயிற்சிப் பட்டறை 'தமிழில்' நடத்தப்பட வேண்டும் என்பதற்கும் 'தமிழிலும்' நடத்தப்பட வேண்டும் என்பதற்கு வி்த்தியாசம் இருக்கிறது. ஒரு நல்ல முயற்சி அபூர்வமாக நடைபெறும் போது எந்தக் காரணத்தைச் சொல்லியும் குறைகாணக் கூடாது.

    சாவதேச சமூகத்தை நோக்கி முன்னேறும் போது அதற்கான தகுதியை நாம் வளர்த்துக் கொள்வதுதான் முறையாக இருக்கும். மாறாக 'நான் நிற்கும் புள்ளியிலேயேதான் நிற்பேன். நீங்கள்தான் இங்கு வரவேண்டும்' என்று வம்பு செய்யக்கூடாது.

    இன்னொரு விஷயம். எப்படி எழுதுவதை பயிற்சியெல்லாம் கொடுத்து வரவழைக்க முடியாதோ அவ்வாறே இவ்வாறான சினிமா பட்டறைகளும். இயல்பான ஆர்வமும் மிகுந்த உழைப்பும் பல உலக சினிமாக்களின் கூர்ந்த கவனிப்பும் இயக்குநர்களின் பேட்டியும் நடைமுறை அனுபவமும் போன்றவற்றை பின்பற்றினாலே போதும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

    ReplyDelete
  35. பதிவு திணிக்கப்பட்ட பதிவு மாதிரி மாதிரி இருக்கிறது.

    பல படங்கள் பாடல்கள் இல்லாமல் வந்திருக்கு..
    பாடல்களுக்காகவே சில படங்கள் ஓடியுமிருக்கு...

    ReplyDelete
  36. சென்னையில் இருப்பவர்கள் அனைவரையுமே ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் உயர்குடிகளாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்ன? :-))

    அப்படி நினைக்கவில்லை சுரேஷ், ஆனால் சென்னை மக்களுக்கு தமிழில் மீது ஆர்வம் இல்லை என்றால் சொல்லலாம் அல்லாவா?

    ReplyDelete
  37. கமல் படங்கள் வருவதற்கு முன்பே விமர்சனம் செய்வது என்றோ தொடங்கிவிட்டது. நீங்களும் கையில் keyboard கிடைத்ததென்று எதையோ எழுதித்தள்ளுகிறீர்கள்...

    முரளிகண்ணன், சென்ஷி, வந்தியத்தேவன் ஆகியோர் நான் சொல்ல எண்ணியதை சொல்லி விட்டார்கள். இதற்கு மேல் மழுப்பாமல், உங்கள் தவறை ஒத்துக்கொள்ளுங்கள்...

    ReplyDelete
  38. தமிழன் கறுப்பி நன்றி.

    //சென்னை மக்களுக்கு தமிழில் மீது ஆர்வம் இல்லை //

    சிவா,ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களை பொதுமைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை வைப்பது முறையன்று என்பது உங்களுக்கே தெரியும். சென்னையிலும் தமிழ் மீது ஆர்வமுள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள். (நானே ஒரு சிறந்த உதாரணம்) :-)

    ஆசிப்பின் சமீபத்திய பதிவை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றால் படித்துப் பாருங்கள்.

    //கமல் படங்கள் வருவதற்கு முன்பே விமர்சனம் செய்வது/

    randramble. இந்தப் பதிவில் விமர்சனம் எங்குள்ளது? இநதப்படம் விறுவிறுப்பான திரைக்கதையில் இந்தியில் கொண்டுள்ளது. அதுவே உருமாற்றம் செய்யப்படும் போது பாடல்களும் சேர்க்கப்பட்டால் எவ்வாறு அபத்தமாகிவிடக்கூடும் என்கிற கவலையைத்தான் வெளிப்படுத்தினேன்.

    ReplyDelete
  39. ஆ.வி. மதனிடம் முன்பு ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
    பாடல்க்ள இல்லாமல் சினிமா எடுக்கலமா? அதற்கு அவர் பதில் சொன்னது
    தம் அடிக்கிற பழக்கம் உள்ளவங்களுக்கு ரொம்ப கஷ்டமாகிவிடும். அவர்களுக்கு பாடல் வருவதே வெளியில் சென்று புகைப்பிடிப்பதற்குதான்.

    பாடல்களோட படங்களைப்பார்க்கும் பழக்கப்பட்ட நமக்கு இதை உடனே மாற்றுவது ரொம்ப கஷ்டம் சார். பாடல்கள் இல்லாமல் நிறைய படங்கள் வந்துருக்குன்னு பின்னூட்டத்துல சொல்றாய்க அதுல எத்தனை படம் வெற்றியடைந்தது. தோல்வியுற்றப்படங்களில் ஒருவேளை பாடல்வைத்திருந்தால் வெற்றியடைந்திருக்குமோ? பாடல் இல்லாமல் சினிமா எடுக்க முன்வந்தால் அவர்கள் அவர்களை கோமாளியாத்தான் ரசிர்கள் பார்ப்பார்கள்.

    ReplyDelete