Saturday, December 29, 2007

புத்தகங்களும்... கண்காட்சியும்... சுயபுலம்பலும்...

நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சியை முன்னிட்டு புதிதாக வெளியிடப்பட்டுள்ள/படவுள்ள புத்தகங்களில் என் கண்ணில் பட்ட/கவனத்தை கவர்ந்த புத்தகங்களை - யாருக்காவது பயன்படும் என்கிற எண்ணத்தில் - இங்கே பகிர்ந்து கொள்ள உத்தேசம்.

1) காந்திஜியின் இறுதி 200 நாட்கள் - (மொழிபெயர்ப்பு நூல்) - பாரதி புத்தகாலயம்
2) பகத்சிங் பற்றிய முழுமையான பதிப்பு - பாரதி புத்தகாலயம்
3) அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் அணு ஒப்பந்தமும் - அ.மார்க்ஸ் - எதிர் வெளியீடு
4) அசோகவனம் - நாவல் - ஜெயமோகன் - தமிழினி
5) சூடியபூ சூடற்க - சிறுகதைகள் - நாஞ்சில் நாடன் - தமிழினி
6) உலக சிறுவர் திரைப்படங்கள் - விஸ்வாமித்திரன் - வம்சி புக்ஸ்
7) உயிர்த்தலம் - சிறுகதைகள் - ஆபிதீன் - எனிஇந்தியன்
8) நதியின் கரையில் - கட்டுரைகள் - பாவண்ணன் - எனிஇந்தியன்
9) பேசும் பொற்சித்திரம் - கட்டுரைகள் (திரைப்படம்) - அம்ஷன்குமார் - காலச்சுவடு
10) பேசும் படம் - கட்டுரைகள் (திரைப்படம்) - செழியன் - காலச்சுவடு
11) நினைவோடை: தி.ஜானகிராமன் - சுந்தரராமசாமி - காலச்சுவடு
12) போரின் மறுபக்கம் (ஈழஅகதியின் அனுபவங்கள்) - பத்திநாதன் - காலச்சுவடு
13) நினைவலைகள்: அம்பேத்கர் (தொகுப்பு: அழகிய பெரியவன்) - நியூ செஞ்சுரி
14) உலகமயமாக்கல்: இந்திய இறையாண்மையின் மீது ஒரு தாக்குதல் - அரவிந்த் - விடியல்
15) உலகமயமாக்கல் - மிகச்சுருக்கமான அறிமுகம் - மான்·பிரெட் பி.ஸ்டெகர் - அடையாளம்
16) யாமம் - நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை
17) மரம் - நாவல் - ஜீ.முருகன் - உயிர்மை
18) காலத்தின் கலைஞன் - மணா - உயிர்மை
19) மணற்கேணி - குறுங்கதைகள் - யுவன் சந்திரசேகர் - உயிர்மை
20) எம்.ஆர்.ராதா: திரைக்கடலில் ஒரு தனிக்கலைஞன் - கிழக்கு
21) நான் வித்யா - ஒரு திருநங்கையின் வலிமிகுந்த வாழ்க்கை - கிழக்கு
22) எல்.டி.டி.ஈ. - விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாறு - கிழக்கு

(புத்தகங்களின் விவரம் பெரும்பான்மையாக கிடைக்கும் பட்சத்தில் இந்தப் பட்டியல் நீளக்கூடும்)

()

ஆனால் நான் எந்தப் புத்தத்தையும் வாங்கப் போவதில்லை. ஏனெனில்:

1) முந்தைய, அதற்கும் முந்தைய, அதற்கும் மு...ந்தைய கண்காட்சிகளில் வாங்கின புத்தகங்களே இன்னும் படிக்கப்படாமல் என்னுள் குற்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பதும்...

2) அதிக விலை கொடுத்து வாங்கின புத்தகம், நூல்நிலையத்தில் கண்ணில் படும் போது .. புத்தகத்திற்குப் பதிலாக மகளின் ஒரு மாத பள்ளிக்கூட கட்டணத்தை செலுத்தியிருக்கலாம் என்றோ அவள் அடம்பிடித்தும் மறுக்கப்பட்ட உடையை வாங்கித் தந்திருக்கலாம் என்றோ, ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்து தகப்பனாக யோசிப்பதும்....

3) பரணையிலும், அலமாரிகளிலும், கட்டில் மீதும், தரையிலும் அகதிகள் மாதிரி பரந்து இறைந்திருக்கிற புத்தகங்கள், ஒரு வேளை நான் தீடீரென்று செத்துப் போய்விட்டால் என்ன ஆகும் என்று அடிக்கடி தோன்றுவதும்...

4) "·பிளைட் எப்படி பறக்குது'ன்னு கேட்டா அதுக்கு விடை தெரில. ஆனா எப்பப் பார்த்தாலும் என்னத்தையோ படிச்சிட்டே இருக்கீங்க. என்கூட கொஞ்ச நேரம் விளையாடமில்லையா?" என்று அடிக்கடி என்னுடைய ஏழு வயது மகள் கேட்க ஆரம்பித்திருப்பதாலும்....

5) மாதா மாதம் வாங்குகிற வார/மாத இதழ்கள், கன்னிமரா/தேவநேய பாவாண நூல்நிலையங்களிலிருந்து கொண்டுவரும் புத்தகங்களை படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதற்கே பெரும்பாடாய் இருப்பதாலும்....

இனிமேல் புதிதாய் எந்தப் புத்தகத்தையும் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். ஆனால்... போன வருடமும் இதே மாதிரி ஒரு பதிவு எழுதிவிட்டு, கண்காட்சிக்கு போனபிறகு ஆவல் தாங்காமல் சில புத்தகங்களை வாங்கின நினைவிருக்கிறது.

ஆகவே....

Tuesday, December 25, 2007

ஒரு சைக்கிளும் இரண்டு சிறுவர்களும்

Beijing Bicycle (2001)

சுமார் 12 வயதாக இருந்த போது இரண்டு ரூபாய் ஒன்றை ஒரு அந்நியனிடம் திருட்டு கொடுத்ததை உணர்ந்த தருணத்தில் எனக்கு ஏற்பட்ட பதைபதைப்பும், பயமும், ஏமாற்றப்பட்ட கோபமும், திருடியவனை தப்பிக்கவிட்ட ஏமாற்றமும் ஒன்றுசேர்ந்த கலவையான உணர்ச்சி இன்னமும் என் மூளை நரம்புகளில் பத்திரமாக பொதிந்திருக்கிறது. வெற்றிகரமாக திருடுவதில் உள்ள சந்தோஷத்தை விட திருட்டுக் கொடுக்கும் போது ஏற்படும் துயரத்தின் சதவிகிதம் அதிகமாகவே இருக்கிறது. அதிக விலை மதிப்பில்லாததாக இருந்தாலும், மிகவும் ஆசையாக, சென்டிமென்ட்டாக பாதுகாக்கிற பொருள் திருட்டுப் போகிற போது ஏற்படுகிற வலியின் துயரம் பிரத்யேகமானது. இத்திரைப்படத்தில், பதினேழு வயதுச் சிறுவன் Guei-யும் தொலைந்து போன தனது பிரியமான சைக்கிளை மீட்க ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக போராடுகிறான்.

Photobucket

கிராமப்புறம் ஒன்றிலிருந்து Beijing நகருக்கு பிழைப்பு தேடி வருகிறான் Guei. பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒரு நண்பனுடன் தங்குகிறான். கடிதங்களை டெலிவரி செய்யும் கொரியர் கம்பெனி ஒன்றில் அவனுக்கு வேலை கிடைக்கிறது. பணிபுரிவதின் நிமித்தம் ஒரு புத்தம்புதிய சைக்கிள் ஒன்று வழங்கப்படுவதுடன் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அந்தச் சைக்கிள் அவனுக்கே சொந்தமாகும் வாய்ப்பு உள்ளது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. சைக்கிளை சொந்மாக்கிக் கொள்வதற்காக தீவிரமாக உழைக்கிறான் Guei. பரபரப்பான Beijing நகரின் வீதிகளில் சைக்கிளில் வேகமாக பயணிப்பது அவனுக்கு உற்சாகமாகவே இருக்கிறது. சைக்கிள் அவனுக்கு சொந்தமாகப் போகும் நாளன்று அது திருட்டுப் போகிறது. சைக்கிள் இல்லாமல் அவனுக்கு தொடர்ந்து பணிபுரிய வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்றும் ஒரு வேளை அவன் சைக்கிளை மீட்க நேர்ந்தால் அவனை மறுபடியும் பணி வழங்க தயாராக இருப்பதாக அவனுடைய மேலாளர் தெரிவிக்கிறார். அவ்வளவு பெரிய நகரத்தில் இந்தச் சிறுவனால் எப்படி சைக்கிளை கண்டுபிடிக்க முடியும் என்று அவநம்பிக்கையாக இருக்கிறது அவருக்கு.

Guei சைக்கிளில் கீறல்களின் மூலம் அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருப்பதால், அந்தக் குறியீடு இருக்கிற சைக்கிளை தேடி நகர் முழுவதும் அலைகிறான். ஒரு இரவில் சைக்கிளை திருட வந்ததாக தவறாக குற்றஞ்சாட்டப்பட்டு பிறகு அவனுடைய மேலாளரால் கடுமையான வசவுகளுக்குப் பிறகு காவல் துறையினடமிருந்து மீட்கப்படுகிறான். பள்ளிக்கூட மாணவன் ஒருவன், குறிப்பிட்ட அடையாளமுள்ள அந்த சைக்கிளோடு தம்முடைய பெட்டிக்கடைக்கு வந்ததாக அவனுடைய நண்பர் தெரிவிக்கிறார்.

()

Jian என்கிற பள்ளிக்கூட மாணவன் தம்முடைய புதிதான சைக்கிளுடன் சக மாணவர்களுடன் விளையாடுகிறான். சைக்கிளின் மூலம் தனது காதலியையும் அவனால் கவர முடிகிறது. வீட்டை அடைந்ததும் சைக்கிளை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கிறான். சைக்கிள் அவனுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை ஊட்டுகிறது. அவன் தன்னுடைய காதலியுடன் தனிமையாக இருக்கும் ஒரு தருணத்தில், அவனைப் பின்தொடரும் Guei தன்னுடைய சைக்கிளை அடையாளம் கண்டுகொண்டு அதை மீட்டெடுத்து ஓடுகிறான். வேகமாக அவனைப் பின்தொடர்ந்து ஒடிவரும் Jian எப்படியோ அவனைப் பிடித்து சைக்கிளை திருப்பி எடுத்துக் கொள்கிறான். சாலையிலிருக்கும் மற்ற இளைஞர்கள் அப்பாவிச் சிறுவன் Guei-ஐ சைக்கிள் திருடன் என்று தீர்மானித்து அடித்து உதைக்கிறார்கள்.

வீட்டிற்குத் திரும்பும் Jian தனது தந்தை காணாமற் போன பணத்தை பரபரப்புடன் தேடிக் கொண்டிருப்பதை பார்க்கிறான். அது அவனுடைய தங்கையின் உயர்படிப்பிற்காக சேமித்து வைக்கப்பட்டது. "பணத்தை எடுத்தாயா" என்று கேட்கும் தந்தையிடம் "இல்லை" என்கிறான் Jian. அவனுக்கு வாங்கித் தருவதாக சொல்லியிருந்த சைக்கிளை அந்த மாதமும் வாங்கித்தர முடியவில்லையென்றும் அடுத்த மாதம் கண்டிப்பாக வாங்கித்தருவதாகவும் கூறும் தந்தையிடம் "எனக்குத் தேவையில்லை" என்று எரிச்சல் அடைகிறான் Jian.

Jian தனது வீட்டில் சைக்கிளை ஒளித்து வைப்பதை, பின்தொடரும் Guei கவனித்து மறுபடியும் எடுத்துக் கொண்டு ஓடி விடுகிறான். தன்னுடைய பணியையும் மிகுந்த பிடிவாதத்திற்குப் பிறகு மீட்டுக் கொள்கிறான். சைக்கிள் இல்லாத காரணத்தால் தன்னுடைய மகிழ்ச்சியை தொலைத்தாக உணரும் Jian நண்பர்களிடமும் காதலியிடமும் எரிச்சலை காண்பித்து அவர்களைப் புறக்கணிக்கிறான். அந்தச் சிறுவனை கண்டுபிடித்து சைக்கிளை மீட்டு விடலாம் என்று அவனுடைய நண்பர்கள் ஆறுதல் சொல்கிறார்கள். Guei பணிபுரியும் கொரியர் நிறுவனத்தை ஊகித்து, அவனை அடித்து உதைத்து சைக்கிளை தம்முடைய நண்பனிடம் மீட்டுக் கொடுக்கிறார்கள்.

காதலியுடன் சுற்றிவிட்டு சைக்கிளுடன் வீட்டுக்கு திரும்பும் Jian-க்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவனுடைய அப்பாவுடன் சைக்கிளின் உரிமையாளனான Guei நிற்கிறான். "சைக்கிள் எப்படி வந்தது" என்று கேட்கும் தந்தையிடம் "நான்தான் பணத்தை திருடி வாங்கினேன். எத்தனை மாதமாக என்னை ஏமாற்றினீர்கள்? தங்கைக்கு மாத்திரம் செலவழிக்க பணம் இருக்கிறதா?" என்று வெடிக்கிறான். அவனை 'பளார்'ரென்று அறையும் அவனுடைய அப்பா, சைக்கிளை அவனிடமிருந்து பிடுங்கி Guei-யிடம் கொடுக்கிறார்.

()

Jian-ன் நண்பர்கள் அவனிடம் "இந்தச் சைக்கிளை திருடினாயா?" என்று கேட்டு கோபப்படுத்துகிறார்கள். அதை தாம் 500 யென்கள் கொடுத்து Second Hand மா¡க்கெட்டில் வாங்கியதாக கூறுகிறான். அத்தோடு இருக்கையை மாற்றியதற்கான ரசீதை காண்பிக்கிறான். "அப்படியென்றால் அந்தப் பையனிடமிருந்து நாம் சைக்கிளை பிடுங்குவதற்காக உரிமை இருக்கிறது. நீ சரியென்றால் செய்யலாம்" என்கின்றனர் நண்பர்கள். அவர்களது ஆலோசனைப் படி Guei-யிடமிருந்து சைக்கிளை பிடுங்க முயற்சிக்கையில் Guei சைக்கிளை மிக இறுக்கமாக பிடித்துக் கொண்டு இயலாமையின் காரணமாக 'ஓ'வென்று கதறுகிறான். "இந்தச் சைக்கிள் என்னுடையது" என்று கூறும் அவனிடம் "இந்தச் சைக்கிளை எங்கள் நண்பன் காசு கொடுத்து மார்க்கெட்டில் வாங்கியிருக்கிறான். வேண்டுமானால் நீ சைக்கிளை திருடியவனை கண்டுபிடித்து மீட்டுக் கொள். இது எங்கள் நண்பனுக்குத்தான் சொந்தம்" என்று விவாதிக்கிறார்கள். ஆனால் Guei சைக்கிளை இறுகப் பற்றின கைகளை விடுவிக்காமல் மெளனமாக அமர்ந்திருக்கிறான்.

இந்த விவாதம் கிட்டத்தட்ட இரவு வரை நீடிக்கிறது. "வேண்டுமானால் எங்கள் நண்பன் செலவழித்த பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு நீ சைக்கிளை எடுத்துக் கொண்டு போ” என்கிற மாற்று ஆலோசனை¨யும் ஏற்றுக் கொள்ளாமல் கல்லுளிமங்கன் போல் அமர்ந்திருக்கிறான் Guei. சோர்ந்து போகும் நண்பர்கள் இறுதியாக ஒரு யோசனையை முன்வைக்கிறார்கள். இருவருமே சைக்கிளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்கிற யோசனைதான் அது. இருவருமே அதை ஏற்றுக் கொண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்றி மாற்றி உபயோகின்றனர். (Children of heaven நினைவுக்கு வருகின்றதா?). சில நாட்கள் இவ்வாறாக கழிகிறது.

()

சைக்கிள் சாகச விளையாட்டில் சிறந்தவனாக இருக்கும் Da Huan என்பவனை எல்லோரும் வியந்து பாராட்டுகின்றனர். Jian காதலியின் பார்வை இவன் மீது விழுகிறது. இதனால் தன்னைத் தொடர்ந்து வரும் Jian-ஐ புறக்கணிக்கிறாள். பின்தொடரும் அவனை Da Huan அவமானப்படுத்தி விட்டுப் போகிறான். எரிச்சலின் உச்சத்தை அடையும் ஒரு கல்லை எடுத்து Da Huan-ன் மண்டையை உடைக்கிறான்.

மறுமுனையில் சைக்கிளுக்காக காத்துக் கொண்டிருக்கும் Guei-யிடம் சைக்கிளை கொடுத்து விட்டு "இனிமேல் தமக்கு சைக்கிள் தேவைப்படாது. நீயே வைத்துக் கொள்" என்று விரக்தியுடன் கூறுகிறான். அடிபட்ட Da Huan பழிவாங்குவதற்காக தம்முடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு வரும் போது இருவரும் தென்படுகிறார்கள். துரத்தும் குழு இரண்டாக பிரிந்து இருவரையும் சிரமத்திற்குப் பிடித்து நையப் புடைக்கிறார்கள். அப்பாவியான Guei-யையும் அடித்துப் போடுகிறார்கள். அவர்கள் விலகும் போது ஒருவன் Guei-ன் சைக்கிளை தூக்கிப் போட்டு உடைக்க முயல்கிறான். "சைக்கிளை ஒன்றும் செய்ய வேண்டாம்" என்று கெஞ்சும் அவனின் அழுகைக்குரல் அவன் காதில் விழுவதில்லை. Guei ஒரு கல்லை எடுத்து மண்டையை உடைக்க, அவன் கீழே சாய்கிறான். சேதமடைந்த தன்னுடைய சைக்கிளை தூக்கிக் கொண்டு Beijing நகரின் தெருவில் எல்லோரும் கவனிக்க நடப்பதோடு படம் நிறைகிறது.

()

ஒரு சைக்கிள், இரண்டு சிறுவர்களை வைத்துக் கொண்டு இவ்வளவு சுவாரசியமான திரைக்கதையை அமைக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக சைனா, ஜப்பான்காரர்களில் எனக்கு ஜாக்கிசானைத் தவிர வேறு யாரையும் அடையாளம் தெரியாது. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகங்கள் கிடையாது அவர்களுக்கு. இதில் Guei-யாக நடிக்கும் சிறுவனும் அப்படித்தான். சில காட்சிகளைத் தவிர பல இடங்களில் அவனுடைய முகபாவம் மொண்ணையாகவே இருக்கிறது. என்றாலும் கதையின் சுவாரசியமான போக்கில் இது பொருட்படுத்தத் தேவையில்லாததாக இருக்கிறது. Guei-யின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார சூழ்நிலை காரணமாக கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு நகரும் மக்களின் work performance பொதுவாக சிறப்பாகவே இருக்கும்.

விளம்பர நிறுவனமொன்றில் பணிபுரியும் என்னிடம், எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் அவருடைய நிறுவனத்திற்காக சென்னையில் தேவைப்படும் பணியாளர்களுக்காக சென்னையைத் தவிர, தமிழ்நாட்டின் இதர நகரங்களில் விளம்பரம் செய்வார். "சென்னை இளைஞர்கள் உல்லாசமான வாழ்க்கைக்கு பழகிப் போனவர்கள். எனவே அவர்களால் முனைப்புடன் வேலை செய்ய இயலாது. ஆனால் கிராமத்திலிருந்து வருபவர்களிடம் ஆங்கில மொழியறிவு முன்னே பின்னே இருந்தாலும், நல்ல சம்பளத்தைப் பெறுவது அவர்களின் பிரதான நோக்கமாக இருப்பதால் சிறப்பாக பணிபுரிவார்கள்" என்பது அவரின் அனுபவ ரீதியான கருத்து.
Guei-யும் சைக்கிளை சொந்தமாக்கிக் கொள்ள ஊக்கமுடன் பணியாற்றுவதிலும், கைவிட்டுப்போன வேலையை மீண்டும் பிடிவாதத்துடன் திரும்பப் பெற்று அவனுடைய மேலாளரை வியக்கச் செய்கிறான்.

படத்தின் திரைக்கதையின் மூலம் Jian சைக்கிளை திருடியிருப்பான் என்பது மாதிரி பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுகிறது. மேலும் அவன் வீட்டில் காணாமற் போன பணத்தையும் அவன்தான் எடுத்திருப்பான் என்பதையும் பார்வையாளர்கள் ஊகிப்பதன் காரணமாக அவன் மீது வெறுப்பு படர்கிறது. ஆனால் கதையின் போக்கில் அவன் சைக்கிளை second hand மார்க்கெட்டில் வாங்கியிருப்பது தெரிவதும், காதலியை இழந்து அடிவாங்கி சைக்கிளை திருப்பித்தரும் தருணத்தில் அவன் மீதான கோபம் மறைந்து அனுதாபம் வருகிறது. இரண்டு சிறுவர்களுமே எந்த சினிமா அனுபவமுமில்லாத புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

()

படத்தின் கிளைக்கதையாக, பெட்டிக்கடைக்கார நண்பரும் Guei-யும் அருகிலிருக்கிற பங்களாவில் உள்ள ஒரு பணக்கார பெண்ணின் அழகை ரகசியமாக பார்த்து ரசிக்கின்றனர். அவள் விதவிதமான உடை உடுத்துவதைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர். ஆனால் அவள் அந்த வீட்டில் பணிபுரியும் பெண் என்பதும் உரிமையாளர் இல்லாத நேரங்களில் அவர்களுடைய உடைகளை அணிந்து பிடிபட்டு வெளியேற்றப்படுபவள் என்பதும் கதைப் போக்கில் தெரிகிறது.

சைக்களில் வேகமாக வரும் Guei பணக்கார பெண்ணாக கருதப்படும் பெண்ணின் மீது மோதிவிடுகிறான். தனது சைக்கிளை Jian-னிடமிருந்து மீட்டுக் கொள்ளும் பொருட்டு வேகமாக செல்லும் போது இன்னொரு பெரிய வாகனத்தின் மீது மோதி கீழே விழுகிறான். படத்தின் இவ்வாறான மோதல் காட்சிகள் நேரடியாக பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படுவதில்லை. மோதலுக்கு முன்னதான காட்சியையும் கீழே அலங்கோலமாக விழுந்து கிடக்கும் காட்சியையும் வைத்து பார்வையாளர்கள் யூகித்துக் கொள்ளும் படியான விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

()

படத்தின் இயக்குநர் Wang Xiaoshuai. இந்தப்படத்திற்கு முன்னதாக இவர் நான்கு படங்களை இயக்கியிருந்தாலும் Beijing Bicycle வெளியான பின்னர்தான் சர்வதேச அரங்கில் இவர் மீதான பார்வை விழுந்தது. இந்தப்படத்தில் சில திருத்தங்களை செய்ய சைனா திரைப்பட நிர்வாகம் இவரைப் பணித்தது. பெர்லின் திரைப்பட விருதுக்கு காலதாமதமாகிவிடும் என்பதால் நிர்வாகத்தின் அனுமதியில்லாமலேயே படத்தை விழாவிற்கு அனுப்பியது இந்தப்படத்தின் மீது தடை விதிக்கப்பட்டது. பின்னர் இது விலக்கி கொள்ளப்பட்டது.

கிராமப்புற மக்களின் வறுமையையும் கல்வியறிவு பெற முடியாத அவர்களின் சூழ்நிலையை படம் வெளிப்படுத்துவதாக சித்தரித்திருப்பதால் அரசு தடையை ஏற்படுத்தியிருக்கலாம் என்று யூகிக்கிறேன். பெர்லின் திரைப்பட விருது உட்பட பல விருதுளை இந்தப்படம் பெற்றுள்ளது.

()

பின்குறிப்பு: 'பொல்லாதவன்' திரைப்பட பார்வையை எழுதும் போது, அந்தப்படத்தின் சில காட்சிகள் Beijing Bicycle திரைப்படத்தோடு ஒத்ததாக இருப்பதாக, மதி பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறிப்பே இந்தப் படத்தை பார்க்க என்னைத் தூண்டியது. அவருக்கு நன்றி. வாகனத்தின் மீது நாயகனின் தீவிர ஈர்ப்பும், அதற்காக தந்தையிடம் சண்டையிடுவதும், வாகனத்தின் மூலம் தன்னுடைய காதலைப் பெறுவது, வாகனத்திற்காக ரத்தம் சிந்துவது... என பல காட்சிகள் தமிழ்ப்படத்திலும் புத்திசாலித்தனமாக மறுபதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ் இயக்குநர்கள் இதற்கான credit-களை வெளிப்படையாக டைட்டிலில் குறிப்பிடுவதுதான் யோக்கியமான செயலாக இருக்கும்.

Image Courtesty: wikipedia

உலக சினிமா ஒன்றை காண வேண்டுமா?

உங்களில் பெரும்பாலோரைப் போல எனக்கும் கலைப்படம் என்றழைக்கப்படும் artfilm மீது ஒவ்வாமை இருந்ததுண்டு. 'ஒரு ஆள் பீடி பிடித்துக் கொண்டிருப்பதை அரை மணி நேரமும் ஒண்ணுக்கு போவதை கால் மணி நேரமும் காட்டிக் கொண்டிருப்பார்கள்' என்று நானும் நண்பர்களுடன் பேசிச் சிரித்திருக்கிறேன், சத்யஜித்ரேவின் படங்களை தொலைக்காட்சியில் - என்னுடைய இருபதாவது வயதில் - காணும்வரை. அதில் 'பதேர் பாஞ்சாலி 'சாருலதா' 'ஜனசத்ரு' போன்ற வங்காளிப் படங்கள் என்னுடைய திரைப்பட ரசனையையே மாற்றியமைத்து விட்டன. இத்தனை நாள் யதார்த்தமேயில்லாத, மக்களின் வாழ்வனுபவங்களை பிரதிபலிக்காத, வெறும் குப்பைத்தனமான பொழுதுபோக்கு படங்களை பார்த்துக் கொண்டிருந்தோம் என்று தோன்றியது.

பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இயந்திர வாழ்க்கையோடு போட்டி போட்டுக் கொண்டிருந்ததினால் அதிகத் திரைப்படங்களை காணும் வாய்ப்பு இல்லாமல் போனாலும் சிற்றிதழ்களின் மூலமாக உலகத் திரைப்படங்களின் இயக்குநர்களின் பரிச்சயம் ஏற்பட்டது. சில திரைப்படங்களை குறித்த கட்டுரைகளை வாசிக்கும் போது அந்தப்படங்களை உடனே காண வேண்டும் என்கிற ஆவல் ஏற்படும். ஆனால் அந்தத் திரைப்படங்களின் திரையிடல் குறித்த தகவலின்மையால் அது நிறைவேறாத ஆசையாகவே போய்விடும். இந்தத் தொலைக்காட்சிகள் வணிக நோக்கமுள்ள நிகழ்ச்சிகளின் நடுவே ஒரு இரண்டு மணிநேரத்தையாவது ஒதுக்கி ஏன் நல்ல திரைப்படங்களை ஒளிபரப்பி தங்கள் பாவங்களை ஒரளவிற்காவது கழுவிக் கொள்ளலாமே என்று தோன்றும். ஒரு முறை சத்யஜித்ரேவின் 'அகாந்துக்' (agantuk) திரைப்படத்தை தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள் என்று கேள்விப்பட்டு உறவினர் ஒருவரின் இல்லத்திற்கு காணச் சென்றேன். அவரோ படம் துவங்கின ஐந்தே நிமிடத்திலேயே "என்னப்பா படமிது" என்று வேறு சானலுக்கு மாற்றியதில் அவமானமாக திரும்பினேன்.

Photobucket

எதையோ சொல்லப் போய் என்னுடைய சொந்தக்கதையை விவரித்ததற்கு மன்னிக்கவும். உலகத் திரைப்படங்களின் பரிச்சயம் இல்லாதவர்கள் அல்லது பரிச்சயம் இல்லாமலேயே அதன் மீது ஒவ்வாமை கொண்டிருப்பவர்களுக்கு ஓர் வேண்டுகோள். இந்திய நேரப்படி, இன்றிரவு (25.12.2007) 08.00 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் 'Baran' என்கிற இரானியத் திரைப்படம் ஒளிபரப்பாகவிருக்கிறது. சர்வதேச அரங்கில் அந்த குட்டி தேசத்திலிருந்து வரும் திரைப்படங்கள் பெரும்பாலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. Majid Majidi என்கிற சிறந்த இரானியத் திரைப்பட இயக்குநரின் உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட படமிது.

ஒன்றரை மணி நேரத்தை தியாகம் செய்து இந்தத் திரைப்படத்தை பாருங்கள். தமிழ்த்திரைப்படங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நச்சுச்சூழலில் - அது தெரியாமலே - நாம் உழன்று கொண்டிருக்கிறோம் என்று தெரியும்.

Baran பற்றிய விக்கிமீடியாவின் அறிமுகம் | Baran பற்றிய ஹரன்பிரசன்னாவின் பதிவு

Friday, December 14, 2007

Nayak (1966) - Satyajit Ray

ஒரு நடிகரின் அக, புறச் சிக்கல்களை இவ்வளவு கூர்மையாக, நெருக்கமாக அவதானித்த திரைப்படத்தை இதுவரை நான் கண்டதில்லை. சத்யஜித்ரே என்கிற திரைப்பட மேதையால் இது சாத்தியமாகியிருக்கிறது. திரைப்பட உலகை, அதன் மாந்தர்களை சித்தரித்து தயாரிக்கப்பட்ட படங்கள் வெகு சொற்பமே. தமிழ்த்திரைப்பட உலகில், இவ்வாறு எடுக்கப்படும் படங்கள் 'சென்டிமென்ட்டுக்கு' எதிரானதாகவே கருதப்படுகிறது, அவை பொதுவாக வணிகரீதியாக வெற்றி அடையாததால். நட்சத்திரம், கல்லுக்குள் ஈரம், ஒரு வீடு, இருவாசல், என்று சில படங்கள் நினைவுக்கு வருகின்றன.

பொதுவாகவே நாம் நடிக, நடிகையர்களை அவர்களது செல்வச் செழிப்பு மற்றும் அளவுக்கதிகமான புகழ் காரணமாக வியப்புடனும், பொறாமையுடனும், வெறுப்புடனும்தாம் நோக்குகிறோம். நாணயத்தின் மறுபக்கத்தை பார்த்தால், அவர்களின் பளபளப்பான முகத்தைத் தாண்டி முட்கீரிடத்தை அணிந்து கொண்டு அவதிப்படும் முகமொன்று இருப்பது பெரும்பாலும் நமக்குத் தெரியாமலே போகிறது. தோல்வியின் கருநிழல் தங்கள் மீது பரவி விடவே கூடாது என்கிற திகிலுடனேயே அவர்களின் வாழ்வு கழிகிறது. ஒவ்வொரு படவெளியீடுகளின் போதும் மூலநோய்க்காரனைப் போலவே அவர்கள் அவஸ்தையோடு திரிகிறார்கள். பரமபத விளையாட்டு போல, எவ்வாறு விரைவில் உயரத்தை அடைந்தார்களோ, அதே போல் ஒரு நீளமான பாம்பின் மூலம் எந்நேரமும் அவர்கள் ஆரம்பப் புள்ளியை அடையக்கூடும் என்கிற insecurity feeling அவர்களை குடைந்து கொண்டே இருக்கிறது.

()

புகழின் உச்சியில் இருக்கிற நடிகனொருவன், முதன் முதலாக தோல்வியின் கசப்பை ருசித்து விடுவோமோ என்று மன உளைச்சலுக்கு ஆளாவதும், நனவோடை உத்தியின் மூலம் அவனுடைய வாழ்க்கையின் முக்கியமான திருப்பங்களும் துரோகங்களும் உள்மன சிக்கல்களும் பார்வையாளனுக்கு உணர்த்தப்படுவதுதான் இந்தப் படைப்பின் (Nayak) முக்கிய அம்சம்.



அரிந்தம் முகர்ஜி (உத்தம் குமார்) என்கிற புகழ்பெற்ற வங்காள நடிகர் விருதொன்றை பெறுவதற்காக ரயில் மூலம் டில்லிக்குச் செல்கிறார். அங்கே பலவிதமான பயணிகளை அவர் சந்திக்க நேர்கிறது. அவருடைய சமீப்த்திய படம் தோல்வியடைப் போவதாக அவர் உணர்வதும், அவரைப்பற்றிய சர்ச்சையான ஒரு விஷயம் அன்றைய நாளிதழ்களில் பிரசுரமாகியிருப்பதும் அவரை ஒருவிதமான மனநெருக்கடிக்கு ஆளாக்குகிறது.

சிறுபத்திரிகை ஒன்றை நடத்தும் அதிதி சென்குப்தா (ஷர்மிளா தாகூர்) தன் தோழியின் ஆலோசனை காரணமாக நடிகரை சந்தித்து ஒரு நேர்காணலுக்காக அணுகுகிறார். சினிமாவின் மீது அவ்வளவாக ஆர்வமில்லாத அவரின் முயற்சி நடிகரின் அலட்சியம் காரணமாக வெற்றிகரமாக அமைவதில்லை.

பணத்தின் புதைகுழியில் மாட்டிக் கொள்வதாக அன்றிரவு நடிகன் காணும் கனவு அவனை முழுவதுமாக கலைத்துப் போடுகிறது. மிகவும் தனிமையாக உணரும் அவன், தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காக அதிதியை அணுகி தன்னுடைய சினிமா பயணத்தின் முக்கிய நிகழ்வுகளை தன்னிச்சையாக சொல்லத் துவங்குகிறான். அதிதி இதை பதிவு செய்கிறாள்.

(1) நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அரிந்தமுக்கு சினிமா வாய்ப்பொன்று கிடைக்கிறது. அவரின் நாடக குருவான சங்கருக்கு இது பிடிக்கவில்லை. சினிமா உலகின் மாயைகளையும் மாய்மாலங்களையும் எடுத்துரைத்து போக வேண்டாமென எச்சரிக்கிறார். ("சினிமாவில் நீ இயக்குநரின், எடிட்டரின், ஒப்பனையாளனின் கைப்பொம்மையாகத்தான் இருக்க வேண்டும். There is no art in Cinema"). கட்டிப் போடப்பட்ட நிலையில் இருக்கும் அவனுக்கு சங்கரின் தீடீர் மரணம் விடுதலை உணர்வை அளிக்கிறது.

(2) முதல் நாள் படப்பிடிப்பின் போது முகுந்த் லஹரி என்கிற மூத்த நடிகர் அவனுடைய நடிப்பை குறைசொல்லி அவமானப்படுத்துகிறார். அரிந்தம் சற்றே புகழ் பெற்ற நடிகராகிவிட்ட பிறகு, தோல்வியடைந்து நொடித்துப் போய் உதவி கேட்டு வரும் மூத்த நடிகருக்கு உதவி செய்ய மறுத்து பழிவாங்குகிறான்.

(3) அரிந்தம் நாடக நடிகராக இருக்கும் சமயத்திலிருந்தே நண்பராக இருப்பவர் பைரேஷ். தொழிற்சங்க நடவடிக்கைளில் தீவிரமாக ஈடுபடும் நண்பரின் செயல்களில் இருந்து ஒதுங்கியே இருக்கிறான் அரிந்தம். காலம் அவர்களை பிரிக்கிறது. நான்கு வருடங்கள் கழித்து நடிகனாகியிருக்கும் தன் நண்பனை காண வருகிறார் பைரேஷ். 24 நாட்களாக நீண்டுக் கொண்டிருக்கும் ஒரு தொழிற்சங்க போராட்டத்தில், தோழர்களை உற்சாகப்படுத்துவதற்காக நடிகனை வந்து பேசச் சொல்கிறார். அவ்வாறு செய்வது தன் தொழிலை பாதிக்கும் என்கிற அரிந்தம், நண்பனின் கோரிக்கையை தீவிரமாக மறுத்து விடுகிறான்.

(4) சினிமா வாய்ப்பொன்று தேடி வரும் ஒரு பெண்ணை தன்னுடைய உபயோகத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறான். அவளுடைய கணவனுடன் ஏற்படும் கைகலப்புதான் நாளிதழ்களில் செய்தியாக வந்து நடிகனை பயண நாளன்று தொந்தரவு செய்கிறது.

()

மேற்கண்ட நிகழ்வுகளை கிட்டத்தட்ட ஒரு சுய வாக்குமூலம் போல் அதிதியிடம் சொல்லும் அரிந்தம், இந்த சுயபரிசோதனையால் தீவிர குற்றவுணர்வுக்கு ஆளாகி உச்சக்கட்ட போதையில் தற்கொலையை யோசிக்கிறான். அதிதி அவனை தடுத்து நிறுத்தி, தான் பதிவு செய்ததையெல்லாம் கிழித்துப் போகிறாள். நடிகனின் நிலையை நினைத்து பரிதாபப்படும் அவள், அவனை ஆற்றுப்படுத்தி எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் அளிக்கிறாள். எல்லா குற்றங்களையும் கொட்டிவிட்ட நடிகன் பயண இறுதியில் ஆசுவாசமாக தன்னுடைய "நடிக" முகமூடிக்கு திரும்புவதுடன் படம் நிறைகிறது.

மேற்சொன்ன நிகழ்வுகளில் நான்காவது மட்டும் பார்வையாளர்களுக்கு நேரடியாக சொல்லப்படாமல் உணர்ந்து கொள்ளப்படும் வகையில் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வையும் நேரடியாக ஒப்புக் கொள்வதற்காக அதிதியை நடிகன் அணுகும் போது அவள் அவனை தடுத்து நிறுத்துகிறாள்.

()

சிக்கலான இந்தப் படைப்பிற்கு சத்யஜித்ரே அமைத்திருக்கும் நுட்பமான, திறமையான திரைக்கதை என்னை அயர வைக்கிறது. (Best screenplay and story award 1967). படம் முழுவதும் ரயிலிலியே, இரண்டே நாட்களில் அமைகிறது. நடிகனின் மனநெருக்கடி ஆரம்பமாவதும், பயங்கர கனவுகள் மூலம் அது தீவிரமாவதும் தற்கொலை எண்ணத்தை அடையும் உச்சத்தையும் நடிகனின் கனவுகள் மூலமும், நனவோடை உத்தி மூலம் தன் பழைய சம்பவங்களை நினைவு கூர்வதின் மூலமும் சொல்கிறார்.

படத்தின் உப நிகழ்வுகளாக, ஒரு விளம்பர நிறுவன முதலாளி, தன்னுடைய வியாபார லாபங்களுக்காக, ஒரு முக்கிய client-ஐ கவர்வதற்காக தன்னுடைய மனைவியை உபயோகப்படுத்த முயல்வதும், அவளோ சினிமாவில் நடிக்கும் கனவில் இருப்பதும் சுவாரசியமாக சித்திரக்கப்படுகிறது. யாரை கவர்வதற்காக விளம்பர நிறுவனர் படம் முழுவதும் அலைகிறாரோ அவர் உபயோகப்படாமல் போவதும், எதிர் இருக்கையில் பண்டாரம் போல் அமர்ந்திருக்கும் ஒரு நபர் பட இறுதியில் தானே முன்வந்து தன்னுடைய நிறுவனத்திற்காக விளம்பர ஒப்பந்தம் தர தீர்மானிப்பதும் சுவாரசியமான நீதி.

படத்தின் நிறைய காட்சிகளில் உள்ள sub-textகளை நாம் கூர்மையாக கவனிக்க வில்லையெனில் இழக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது. நடிகனின் எதிர் இருக்கையில் இருக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள, ஒரு மாத காலமாக நோய்வாற்றிருக்கும் 16 வயது மகள் நடிகனை காதலுடன் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், அவளுடைய தாயும் நடிகன் கவனிக்காத சமயத்தில் தன்னை கண்ணாடியில் சரிபார்த்துக் கொள்வதில் எந்த அசெளகரியமான செய்தியோ மறைந்திருக்கிறது. "அமெரிக்கப் படங்களின் தரம் இங்கே இல்லை" என்று வெளிநாட்டு புகழ் பாடும் தந்தை, விளம்பர நிறுவனரின் மனைவியிடம் அசட்டுத்தனமாக வழிகிறார்.

படத்தில் வரும் சிறுசிறு கதாபாத்திரங்களும் திறமையாக நடிப்பதை நான் ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன். நடிகனின் உதவியாளனிடம் தென்படும் அலட்சியமும், சினிமாவை வெறுத்து கட்டுரை எழுதும் வயதான எழுத்தாளரும், (இவரை நடிகன் அவ்வப்போது சீண்டிக் கொண்டே இருக்கிறான்) அதிதியின் தோழியாக வருபவரும் (நடிகனை பார்த்தவுடன் வெளிப்படையாக உணர்ச்சிவசப்படுவதும் உடனே அதை மறைத்துக் கொள்வதும்) அவரின் கணவரும், ஆரம்பத்தில் மிடுக்காகவும் நொந்து போன சமயத்தில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருக்கும் மூத்த நடிகரும், தொழிற்சங்க தோழரும், தந்திரமாக இயங்கும் தொழில் சாகசக்காரராக இருக்கும் விளம்பர நிறுவனரும் .............என எல்லோருமே திறமையாக தன் பங்களிப்பை அளித்து இயக்குநரோடு ஒத்துழைத்திருக்கின்றனர்.

()

உத்தம் குமாரின் நடிப்பை இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன். இந்தப்படம் தயாரிக்கப்படும் போது அவர் நிஜமாகவே புகழ் பெற்ற நடிகராக இருந்தார் என அறியும் போது அவரது துணிச்சலை நம்மூர் நடிகர்களுடன் ஒப்பிட்டு பாராட்டவே தோன்றுகிறது. ஒரு நடிகனுக்கேயுரிய உடல்மொழியுடன் அவர் படம் பூராவும் வியாபித்துக் கொண்டிருக்கும் போது பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தன்னுடைய முதல் படம் வெளிவரப் போவதற்கு முந்திய நாளில், அவர் பீதியுடனும் அதே சமயத்தில் நம்பிக்கையுடனும் தன்னுடைய நண்படனும் நடத்தும் உரையாடல் ஒரு சிறந்த உதாரணம். ஷர்மிளா தாகூரை முதலில் ஒரு சாதாரண ரசிகையாக நினைத்து ஒதுக்குவதும் பின்னர் அவளுடைய நுட்பமான அறிவுக்கூர்மையை வியந்து தன்னை அவளிடம் ஒப்படைப்பதும் என உத்தம் குமார் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நடிகனின் கனவுக்காட்சிகள் மிகுவும் பொருத்தமான குறியீட்டுத் தன்டையுடனும் திறமையாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. நனவோடை காட்சிகளின் தொடர்ச்சி நிகழ்கால காட்சியுடன் பொருத்தமாக இணைக்கப்படும் உத்தியை கவனித்த போது ரேவின் திறமை குறித்து மிகுந்த நெகிழ்ச்சி ஏற்படுகிறது.

()

இந்தப்படம் அப்படியே யோக்கியமாக தமிழில் தயாரிக்கப்பட்டால், யார் யார் பிரதான பாத்திரங்களில் நடிக்கக்கூடும், அது எப்படியிருக்கும், தமிழ் கூறும் நல்லுலகம் இந்தப்படத்தை எப்படி அணுகும் என்பதை யோசித்துக் கொண்டிருந்தது எனக்கு சுவாரசியமான விஷயமாக இருந்தது.

Sunday, December 09, 2007

எவனோ ஒருவன் - திரைப்பார்வை

'கல்லூரி' திரைப்படத்திற்கு போவதென்று முடிவாயிற்று. வழக்கமாக நான் திரைப்படங்களை வந்த புதிதில் பார்க்க விரும்புவதில்லை. அதன் ஆரவாரங்கள் அடங்கும் வரை காத்திருப்பேன். குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக இது நிகழ்ந்தது. 'அழகிய தமிழ் மகன்'.. போகலாம் என்று தொண தொணத்துக் கொண்டிருந்த மகளை "அந்தப்படம் பார்த்துவிட்டு நூறு பேர் மனநல மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களாம்" என்று நல்ல பொய் சொல்லி அடக்கியாயிற்று. 'காதல்' திரைப்பட இயக்குநரின் அடுத்த படம் மீது எனக்கும் இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பிருந்தது. ஆனால் தேவி திரையரங்கம் எங்களை 'housefull' பலகையுடன் இனிதே வரவேற்றது. சினிமாவுக்கு என்று கிளம்பி வெறுமனே வீடு திரும்புவது நம் கலாச்சாரத்திற்கு ஏற்புடைய விஷயமில்லை அல்லவா? வேறு 'நல்ல' படத்திற்காக தேடியதில் பக்கத்திலிருந்த அரங்கிலிருந்த இந்தப்படம் கண்ணில் பட்டது. அதுவும் நல்லதாய்ப் போயிற்று. இல்லையென்றால் இப்படியொரு சிறந்த படத்தை காண்பது இன்னும் தாமதப்பட்டிருக்கும்.

அப்படி என்ன இந்த படத்தில்..? சொல்கிறேன்.


()

பேருந்தில் ஐம்பது பைசா பாக்கி தராமல் ஏமாற்றுகிற நடத்துநர் மீது ஏற்படுகிற சுயநலக் கோபம் முதல், ஏதோ காசு கொடுத்து கூட்டி வந்த விபச்சாரி மாதிரி ஆட்சிக் கட்டிலை (?) நீ ஆறுமாதம் நான் ஆறுமாதம் என்று பங்கு போட்டுக் கொள்கிற கேடு கெட்ட அரசியல்வாதிகள்... ஒரு படைப்பாளி தன் எண்ணங்களை சுதந்திரமாக சொல்லவிடாமல் மாநிலம் மாநிலமாக துரத்துகிற மதஅடிப்படைவாதிகள் மீது ஏற்படுகிற பொதுநலக் கோபம் வரை.... நம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் சில சமூக கோபங்கள் இருக்கும். கீழ்வர்க்கத்தினருக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லாததால் தங்கள் கோபங்களை உடனே வெளிப்படுத்தி விட முடிகிறது. உயர் வர்க்கத்தினர் யார் மூலமாகவாவது தங்கள் கோபங்களை புன்னகை முகத்துடன் தீர்த்துக் கொள்ள முடிகிறது. ஆனால்... இந்த கோழைத்தனமான படித்த நடுத்தர வர்க்கம் ... தங்கள் கோபங்களை தங்களுக்குள்ளேயே மென்று முழுங்கிக் கொள்கிறது. ஆதிமனிதன் இன்னும் உள்ளுக்குள் அமர்ந்திருந்தாலும் இந்த 'எழவெடுத்த படிப்பு' என்கிற சமாச்சாரம் 'நாகரிகம்' என்ற பெயரில் நம்முள் புதைத்திருக்கிற அசட்டுத்தனம், விபத்தில் அடிபட்டிருக்கிறவனுக்கு உதவப் போனால் பின்னால் என்ன பிரச்சினையாகுமோ என்கிற சுயநல எண்ணம், 'நாலு பேர்' நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ" என்கிற தேவையற்ற கவலை, 'யாரோ எப்படியோ போகட்டும். நமக்கு எதற்கு வம்பு' என்று ஒதுங்கிச் செல்கிற மனோபாவம்.. போன்றவைகள் நம்மை இறுக்கமாக கட்டிப் போட்டிருக்கின்றன.

"புளிச்சென்று" சாலையில் துப்புகிற முன்னால் சென்று கொண்டிருக்கும் நபரை, சிக்னல் சிவப்பில் நிற்க பொறுமையில்லாமல் சாலையில் கடக்கும் நம்மை மேலே இடிக்கிறாற் போல் விரையும் கார்காரனை, மார்ச்சுவரியில் பிணத்தை காக்க வைத்து பேரம் பேசும் மருத்துவ ஊழியனை... யார் மீதும் நம்மால் நம்முடைய கோபத்தை நேராக வெளிப்படுத்த முடிவதில்லை. மனசுக்குள் சபிப்பதிலும், வெற்று முணுமுணுப்பிலுமேயே அது நமத்துப் போகிறது. அவ்வாறு அடுக்கி வைக்கப்படும் கோபங்கள் அழுத்தம் தாங்காமல்.. ஒரு நாள் பீறிட்டுக் கொண்டு வந்தால் என்ன ஆகும்?... இதுதான் 'எவனோ ஒருவனின்' மையம்.

ஆனால் இப்படிப்பட்ட கோபங்கள் எதுவுமேயில்லாமல் வாழ்க்கையை அதன் யதார்த்தங்களோடு அசிங்கங்களோடு உள்வாங்கிக் கொண்டு மெளனமாக ஆட்டுமந்தை போல் வாழ்கின்ற கூட்டமும் இருக்கிறது. அது வேறு உலகம். ஆனால் கோபங்களை இப்படி வெற்றுத்தனமாக எழுதிக் கொண்டிருக்கிறேனே, என்னைப் போல் எழுதி, உரக்கப்பேசி சுயமைதுனம் போல் வடிகால் தேடிக் கொள்கிறவர்களும் உண்டு.

Photo Sharing and Video Hosting at Photobucket


ஸ்ரீதர் வாசுதேவனின் இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து படம் துவங்குகிறது. சில அடிப்படையான கொள்கைளோடு வாழ நினைக்கிற அவனை சமூகம் "பைத்தியக்காரன்" என்கிறது. "டியுஷன் போனாத்தான் பாஸாக முடியும்னா, அப்ப எதுக்கு ஸ்கூலுக்கு போகணும். நேரா டியூஷனுக்கே போயிடலாமே?" என்று கேட்கிற பைத்தியக்காரன். டொனேஷன் கேட்டதற்காக தன் குழந்தையை மாநகராட்சி பள்ளிலேயே படிக்க வைக்கலாம் என்கிற பைத்தியக்காரன். சாலையோரம் ஓவியம் வரையும் சிறுவனின் இருமலுக்கு மருந்துக்காக பணம் தருகிற பைத்தியக்காரன். தான் பணியாற்றும் வங்கியில் முறைகேடாக கடன் வாங்க முயலும் தொழிலதிபனை தடுத்து நிறுத்தி பகையை சம்பாதித்துக் கொள்கிற பைத்தியக்காரன். இரண்டு ரூபாய் அதிகமாக கொள்ளையடிக்கும் பெட்டிக் கடைக்காரனை நையப்புடைக்கும் .... ஊருக்காக நீச்சல் குளம் கட்டித்தரும் ஆனால் குடிநீர் வழங்க மறைமுகமாக காசு வசூலிக்கும் ஏரியா கவுன்சிலரை கத்தியால் குத்தும் ..... ஏழைகளுக்கு இலவச மருத்துவம் தருவதாக அரசாங்கத்திடம் சலுகை வாங்கி விட்டு அதைப் பின்பற்றாத மருத்துவனின் முன்னால் துப்பாக்கி நீட்டும் .... போதை மருந்து விற்பனை செய்யும் கும்பலின் குடிசைகளை கொளுத்தும்....... இப்படிப் பல பைத்தியக்காரத்தனங்கள் செய்யும் ஒருவனை ஊரில் உலவ விடலாமா?

எந்தச் சமூகத்திற்காக உண்மையாய் பாடுபடுகின்றனரோ, அவர்கள் அந்தச் சமூகத்தினலாயே கொல்லப்படுவது தொடரும் நிகழ்வு. காந்தி முதல் மார்ட்டின் லூதர் கிங் வரை நம் முன்னாலேயே பல வரலாற்று உண்மைகளை காண முடியும். ஸ்ரீதர் வாசுதேவனும் அப்படித்தான் ஆனானா, இல்லை சாமர்த்தியமாக தப்பித்துக் கொண்டானா என்பதை அறிய இந்தப் படத்தைப் பாருங்கள்.

"தயாரிப்பாளர் நஷ்டமடையக்கூடாது. அதாங்க முக்கியம்" என்கிற மகா தத்துவத்தை உதிர்க்கும் கேடு கெட்ட சூப்பர் ஸ்டார்களும் இளையதளபதிகளும், ஊடகங்களிலேயே மிகச் சக்தி வாய்ந்த திரைப்படம் என்னும் ஊடகத்தில் மார்பகங்களையும் தொப்புள்களையும் மாத்திரமே காட்டி ஒரு பிம்ப்-பை போல பிழைத்துக் கொண்டிருக்கிறோமே என்கிற சொரணையேயில்லாத வணிக இயக்குநர்களும், "இது ஒரு தொழில். இங்கு லாபம்தான் பிரதானம்" என்று பிதற்றும் சமூக பொறுப்பேயில்லாத தயாரிப்பாளர்களும் உலவுகின்ற சினிமா உலகில், வாழ்க்கையை பிரதிபலிக்கும், சமூக பிரச்சினைகளை மையப்படுத்தும், மனித வாழ்க்கையின் அகபுறச் சிக்கல்களை அலசி ஆராயும் சொற்ப அளவு திரைப்படைப்பாளிகளில் ஒருவராக 'மாதவனை' என்னால் பார்க்க முடிகிறது. வணிகப்படங்களிலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்துகிறவர், 'அன்பே சிவம்' போன்ற படங்களிலும் 'இமேஜ்' பார்க்காது நடித்து தன்னை நிலை நாட்டிக் கொண்டவர். இந்தப்படத்தை நகரில் அவரே செலவழித்து விநியோகம் செய்திருக்கிறார் என்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

()

ஸ்ரீதர் வாசுதேவனாக நடிகர் மாதவன். தினமும் போகும் ரயிலில் ஜன்னலோர இருக்கை கிடைப்பதே ஒரு luxury-யான விஷயம் என்னும்படியான வாழ்க்கை நடத்துகிற பாத்திரத்தில் இயல்பாய் கரைந்து போயிருக்கிறார். கண் முன்னே நடக்கின்ற தவறுகளை கண்டு மனம் கொதித்துப் போகிறவர். மேலே குறிப்பிட்டிருக்கிற அத்தனை பைத்தியக்காரத்தனங்களையும் செய்ய, அவர் மனைவி அவர் முன் வைக்கும் ஒரு கேள்வியே அடிப்படையாக அமைகிறது. "அய்யோ திருட்டுப் போயிடுச்சேன்னு கத்திக் கதர்றவன விட, திருடன ஓடிப் போய்ப் பிடிக்கிறவன்தான் ஆம்பளை"

கணவன் டொனேஷன் தர மறுத்ததால் தன் மகளுக்கு ஆங்கில பள்ளியில் சீட் கிடைக்காமல் போய்விட்டதே என்கிற ஆதங்கத்தின் உச்சத்தில் அவர் மனைவி வெடிக்கும் போதுதான் அந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த அத்தனை கோபங்களும் பொங்கியெழ, ஸ்ரீதர் வாசுதேவன், தன் கரைகளை உடைத்து சமூகத்தின் தவறுகளைத் திருத்த முயல்வதுதான் அத்தனை பைத்தியக்காரத்தனங்களும்.

"தொணதொணக்கும்" மனைவியை சகித்துக் கொள்வதிலாகட்டும், பெட்டிக்கடைக்காரனை அடித்துத் துவைத்து 'இரண்டு ரூபாயை" கேட்கும் போதும், தவறு செய்கிற மேலாளருக்கு எதிராக வெடிப்பதிலும், ஒரு பின்னிரவு சாலையோரத்தில் ரோட்டோரச் சிறுவனிடம் பேசுவதாக.. வாழ்க்கையைப் பற்றி அழுத்தமாகவும் கோபமாகவும் அங்கலாய்ப்பதாகட்டும்.. உச்சமாக கடவுளுக்கு கடிதம் எழுதுவதாகட்டும்... வீட்டுக்குத் திரும்பி வந்துவிடுவேன் என்று மனைவிக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறுவதாகட்டும்... தன் மகளை காண அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் வேண்டுவதாகட்டும்... தன்னுடைய உச்சபட்ச பங்களிப்பை இந்தப் படத்திற்கு அளித்திருக்கிறார் மாதவன். படத்தின் பெரும்பாலான கனமான காட்சிகளை தன்னுடைய தோள்களில் சுமந்திருக்கிறார். இந்தப்படம் அவருடைய திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதை - clicheவாக இருந்தாலும்- சொல்ல விரும்புகிறேன்.

()

ஸ்ரீதர் வாசுதேவனின் மனைவியாக சங்கீதா. ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தலைவியை மிக இயல்பாக பிரதிபலித்திருக்கிறார். "கிச்சன விட்டா ஹால்... ஹாலை விட்டா பெட்ரூம் இல்ல பாத்ரூம்.. இல்லன்னா ரெண்டு குடம் தண்ணி பிடிக்க தெருவுக்கு வர்றேன்... ரெண்டு பசங்கள கவனிக்கறது. இதை விட்டா நாள் பூராவும் எனக்கு என்னதான் வேலையிருக்கு?" என்று இவர் பொங்கும் போது பரிதாபமாகத்தானிருக்கிறது. "சும்மாத்தானே வீட்ல இருக்கா" என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிற மனைவிமார்களின் உண்மையான மனநிலை நமக்கு சொரேர் என்று உறைக்கிறது.

காவல் துறை அதிகாரியாக சீமான். குற்றவாளிகளை வெறும் கைதிகளாக பார்க்காமல் தர்க்க ரீதியாக சிந்திக்கும், சமூக அக்கறை கொண்ட அதிகாரி. "வொயிட் காலர்-லாம் கோபம் கொள்ள ஆரம்பிச்சிட்டான்னா ஒரு சமூகத்திற்கு அது ரொம்பவும் அபாயமாயிடும்" என்று இவர் சொல்கிற வசனம் (பகுதி வசனமும் இவரே) மிகவும் முக்கியமானது. "நான் நியாயமா சம்பாதிக்கிற காசை மட்டும் வெச்சுக்கிட்டு குடும்பம் நடத்த முடியுமா" என்று மனைவியிடம் குற்றவுணர்வுடன் கேட்கிற இவர், உயரதிகாரிகளின் அழுத்தம் தாங்காமல் ஸ்ரீதர் வாசுதேவன் மீது நடவடிக்கை எடுக்கப் போவது குறித்து கொள்கிற ஆவேசம் இயல்பானது. இவர் subtle ஆக நடிக்க முயன்றிருந்தாலும், ஒரே மாதிரியிருக்கிற முகபாவம் சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது.

()

'டோம்பிலி ·பாஸ்ட்' என்கிற வெற்றி பெற்ற மராத்திய திரைப்படத்தின் தமிழ் வடிவமே 'எவனோ ஒருவன்'. இயக்குநர் ரிஷிகாந்த். படத்தின் துவக்கத்திலேயே, ஸ்ரீதர் வாசுதேவனின் இயந்திரத்தனமான வாழ்க்கையை பார்வையாளர்களிடம் establish செய்ய அலாரம், குளியல், ரயில் பயணம், வங்கி, தயிர்சாதம் என்று திறமையான எடிட்டிங் துணையுடன் துரிதமாக காட்சிகளை மாற்றி மாற்றி அமைத்து வைத்திருப்பது சுவாரசியமானதாக இருந்தது. திரைக்கதையை இன்னும் செப்பனிட்டிருந்து, காட்சிகளின் நம்பகத்தன்மையை கூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருந்திருக்குமோ என்று தோன்றினாலும், படத்தின் ஆதார மையமான சமூக கோபங்களை பார்வையாளர்களிடம் சிறப்பாக தூண்டியிருப்பதால் இந்தக் குறைகளை பொருட்படுத்த தேவையில்லை என்றே தோன்றுகிறது.

நல்லவேளையாக இந்தப்படத்தில் பாடல்கள் எதுவுமில்லை. அதே போல் அபத்தமான நகைச்சுவைக்காட்சிகளோ, குலுக்கல் பாடல்களோ இல்லை. சஞ்சய் யாதவ்வின் திறமையான ஒளிப்பதிவு அதிகப்பிரசங்கித்தனமாகயில்லாமல் இயக்குநரோடு ஒத்துப் போயிருக்கிறது. சமீரின் பின்னணி இசை பார்வையாளர்களிடம் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

'தன் வேலையை மாத்திரமே பார்த்துக் கொண்டு போகிற சமூகத்தில் 'எவனாவது ஒருவன்' தலையை தூக்கி கேள்வி கேட்டால் அவனை மண்ணோடு மண்ணாக இந்தச் சமூகம் அழுத்தி நசுக்கி விடுகிறது. அவ்வாறு போராடுபவனும் நாளடைவில் இந்தச் சமூகத்தால் மறந்து போகப்படுகிறான். சூடு, சொரணையில்லாத, முதுகெலும்பில்லாத இந்தச் சமூகம்... என்கிற சீமானின் சிந்தனை வரிகளோடு படம் நிறைவடைகிறது. நசுங்கிப் போன பெருச்சாளியின் மீது மொய்க்கின்ற ஈக்களோடு படத்தின் நிறைவுக் காட்சி பொருத்தமாக அமைகிறது. தொழில்நுட்பர்களின் பெயர்கள் இறுதியில் விரைகிற போது சமூகத்தின் பல்வேறுவிதமான நபர்களின் முகங்கள் காட்டப்படுவதும் பொருத்தமாகத்தானிருக்கிறது.

நம்மைச் சுற்றியிருக்கும் சமூகத்தை நேசிக்கிற, எல்லாவற்றிற்கும் சமூகத்தையே குறை கூறிக் கொண்டிருக்காமல் தன்னிடம் உள்ள குறைகளையும் திருத்திக் கொள்கிற, சமூக முரண்கள் மீது கோபம் கொள்கிற, இன்னமும் சூடு, சொரணைகளை பாக்கி வைத்திருக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் பார்க்க வேண்டிய படமிது.

()

எனக்குள் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தின இந்தப் படத்தினை, சக பார்வையாளர்கள் அணுகின விதம் எனக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.

ஒரு திரைப்படத்தை எப்படி ரசிப்பது, அணுகுவது, மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் நாகரிகமாக இருப்பது என்பதை கல்வித் திட்டத்திலேயே கொண்டு வந்தால் கூட நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. படம் ஆரம்பிக்கும் நேரம் வரை வெளியில் புகைத்துவிட்டு, இருட்டில் அடுத்தவர்களின் கால்களை மிதித்து படத்தின் ஆரம்பக் காட்சிகளை பார்க்க விடாமல் செய்வது, கைபேசியில் பேசி வசனத்தை கேட்க விடாமல் செய்வது, ஏதாவது கமெண்ட்டுகள் சொல்லிக் கொண்டே சிரிப்பது, திரையரங்கிற்குள் அலைமோதிக் கொண்டு நுழைவது, வெளியேறுவது, படத்தின் இறுதிக்காட்சி வரை பொறுமையில்லாமல் எழுந்து அடுத்தவரையும் மறைப்பது, படத்தின் பின்னணியில் பணியாற்றியவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாதது என்று எவ்வாறெல்லாம் எரிச்சல்படுத்த முடியுமோ, அத்தனையையும் செய்கின்றனர். இவர்களைக் கூட மன்னிக்கலாம். சினிமா ஆர்வமுள்ளவர்கள் கூடும் சர்வதேச திரையிடல்களின் போது கூட சில "அறிவுஜீவிகளும்" இதே போன்று நடந்து கொள்வதுதான் கேவலம். தான் காணப் போகிற படத்தைப் பற்றின சில அடிப்படைத் தகவல்களை முன்னமே அறிந்து கொண்டு படத்தின் தொனியை தெளிவாக தெரிந்திருக்கிற பார்வையாளன், அரங்கில் ஏன் அப்படி அதிருப்தி குரல்களை எழுப்பிக் கொண்டிருக்கிறான் என்பதுதான் எனக்கு புரியவில்லை.

Friday, December 07, 2007

பொல்லாதவன் - திரைப்பார்வை

முதலில் இயக்குநர் வெற்றி மாறனுக்கு ஒரு பூச்செண்டு.

வணிக வெற்றியையே பிரதான நோக்கமாக கொண்ட படங்கள், "சக்ஸஸ் பார்முலா" என்ற பெயரில் பரிசோதனை முயற்சி செய்யத் துணிவில்லாமல் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் மத்தியில், வணிகப்படமென்றாலும் சற்றே வித்தியாசமான திரைக்கதையுடனும் இயல்பான காட்சிப் பின்னணிகளுடன் படத்தை இயக்கியிருக்கும் வெற்றி மாறனை தாராளமாகவே வரவேற்கலாம். முதல் படமென்பதால் சில கட்டாயங்களுக்காக வணிக சமரசங்களை செய்ய வேண்டியிருந்திருக்கலாம். வெற்றிப்பட இயக்குநர் ஆகி விட்டதால் அடுத்த படங்களில் தன்னுடைய சுவைக்கேற்ப இயல்பான கதையையும் யதார்த்தமாகவும் படைக்கக்கூடும் என்ற நம்பிக்கையுடனே இவரை அணுகலாம் என்று தோன்றுகிறது.

ஒரு படத்தின் செயலாக்கத்தின் முழுக்கட்டுப்பாடும் இயக்குநரிடம்தான் இருக்க வேண்டும். ஸ்கிரிப்ட் தயாராகி களத்திற்கு சென்று இறங்கிய பிறகு ஹீரோவின் ஒன்று விட்ட சித்தப்பா சொன்னார் என்பதற்காக ஒரு சண்டைக்காட்சியையோ பைனான்ஸியரின் முதலீட்டு நிபந்தனைக்காக 'ஐட்டம்' பாடலையோ இணைப்பது போன்ற அபத்தங்கள் படத்தின் ஜீவனையே அழித்துவிடும். துரதிர்ஷ்டவசமாக இந்தப்படத்திலும் அந்த மாதிரி நிறைய அபத்தங்கள் இருந்தாலும் திறமையான திரைக்கதை இந்த அபத்தங்களை மழுப்பி விடுகிறது.

ஒல்லியாக இருந்தாலும் ஐம்பது பேரை வீழ்த்திவிடும் நாயகர்கள் உலாவும் இந்தச் சமயத்தில் "நான் மொக்கைதானே?" என்று நாயகனை வில்லனிடம் பேச வைத்திருப்பதே இயக்குநரின் வெற்றிதான்.

()

உலகப் புகழ் பெற்ற இத்தாலிய திரைப்படமான 'பைசைக்கிள் தீவ்ஸ்'-ஸின் வாசனை இந்தப்படத்தில் அடித்தாலும் இது வேறு திசையில் பயணிக்கிறது. வெட்டியாக ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் தனுஷீக்கும் அவனுடைய அப்பாவுக்கும் வழக்கமான "தண்டச்சோறு" குறித்தான சண்டை நடக்கிறது. "ஊர்ல இருக்கற அப்பனெல்லாம் தம் புள்ளங்களுக்கு செலவு செஞ்சு வேலை வாங்கிக் கொடுக்கறான். நீ என்னா செஞ்சே?" என்று எகிறும் மகனிடம் ரூபாய் எழுபதாயிரத்தை எறிந்து "எக்கேடானாலும் கெட்டுப்போ" என்கிறார் தந்தை. தன்னுடைய நெடுநாள் கனவான அதிசக்தி இருசக்கர வாகனத்தை வாங்கும் தனுஷீக்கு, வாகனம் வந்த பிறகு எல்லாமே நேர்மறையாக அமைகிறது. இரண்டு வருடமாக திரும்பிப் பார்க்காத காதலி புன்னகைப்பதும் (?) வீட்டில் சுமூகமான சூழ்நிலையுமாக, நல்ல வேலையுமாக...

ஒரு நாள் பைக் திருடு போகும் போது அத்தனையும் எதிர்மறையாக மாற, தனுஷ் திருடு போன பைக்கை தேடிச் செல்வது அவரை வன்முறையின் வெம்மையான உலகினுள் பயணம் செய்ய வைப்பதும் அதிலிருந்து அவர் வெற்றிகரமாக (வழக்கம் போல்) மீளுவளும்தான் கதையின் அடிப்படை.

()

தனுஷை முதல் படத்தில் பார்த்த போது "தோடா! இவனெல்லாம் நடிக்க வந்துட்டான்' என எண்ண வைத்தவர். ஆனால் 'காதல் கொண்டேன்'-ல் அவர் விஸ்வரூபம் எடுத்த போது சிறந்த இயக்குநரால் கையாளப்பட்டால் இவரின் திறமை நன்றாக வெளிப்படும் என்று தோன்றியது. 'புதுப்பேட்டை'யில் அவர் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்திருந்த போதும், நம்பகத்தன்மையில்லாத காட்சியமைப்புகளால் அது வெற்றி பெறவில்லை. இந்தப் படத்திலும் அதேதான் நேர்ந்திருக்கிறது. அரிவாளின் கனம் கூட இல்லாத ஒரு சராசரி இளைஞன் நாலைந்து பேரை தாக்குவதாக காட்டும் போது புன்னகைதான் வருகிறது.

என்றாலும் தனுஷ் ஒரு கீழ்நடுத்தர இளைஞனை சிறப்பாகவே பிரதிபலிக்க முயன்றிருக்கிறார். அப்பாவிடம் அடிவாங்கி விட்டு வாதாடும் போது நம் பக்கத்து வீட்டு இளைஞனின் நினைவு வருகிறாற் போல் சிறப்பாக நடித்திருக்கிறார். அப்பாவாக மலையாள நடிகர் முரளி. மகனிடம் உள்ள love & hate உறவை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மாவாக பானுப்பிரியா... அய்யோ பாவம். (புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக ஸ்ரீதேவியை பார்த்து மூக்கை அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னால் எவ்வளவு அழகாக இருப்பார்.. அதுவும் அந்த exclusive கண்கள்...)

நாயகியாக திவ்யா. எப்போதும் தூங்கி எழுந்த முகத்துடனே இருக்கிற இவரை எப்படி தேர்வு செய்தார்கள் என்றே புரியவில்லை. இதைத் தவிர சிம்ரன், சிநேகா, அசின்... என்று தமிழர்களின் ரசனை குறித்தே எனக்கு நகைப்பாக இருக்கிறது, எப்படி ரசிக்கிறார்கள் என்று. சரி ஒழிந்து போகட்டும். இரண்டு வருடங்களாக ஹீரோவை வெறுக்கும் இவர், பைக் வாங்கியவுடன் காதல் வருவதாக காட்டியிருப்பது பெண்களை கொச்சைப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. (அல்லது இதுதான் இன்றைய நிஜமோ).

டேனியல் பாலாஜி. இன்னொரு திறமையான நடிகர் இதில் எதிர்நாயகனாக வருகிறார். வில்லன் என்றவுடன் புஜபராக்கிரமசாலியாக சித்தரிக்கப்படாமல் அவரது மூத்த சகோதரரால் (கிஷோர் குமார்) "சப்பை" என்று விளிக்கப்படும் அளவிற்கு விநோதமான தந்திர கோழையாக இருக்கிறார். கிஷோரும் தன் திறமையான உடல்மொழியாலேயே வன்முறை காட்சிகளை அதிகம் ரத்தம் சிந்தாமல் வெளிக்கொணர்கிறார்.

()

முன்பே சொன்னது போல் திறமையான திரைக்கதைதான் இந்தப்படத்தை தூக்கி நிறுத்துகிறது. நாயகன் பார்வையாளர்களுக்கு தன் கதையை narrate செய்யும் அதே நேரத்தில் வில்லனும் தன்னுடைய பார்வையில் அதை தொடர்கிறான். திருடு போகும் பைக் சட்ட விரோத கும்பலால் எப்படியெல்லாம் கையாளப்படுகிறது என்று தொடர்ச்சியாக காட்டியிருப்பது நாம் இதுவரை கண்டிராதது.

நிகழ்வு களத்தின் பின்புலமாக வடசென்னை. இரண்டு பைக் மாத்திரமே செல்லக்கூடிய சந்துகளும், சுண்ணாம்பை நீண்ட வருடங்களாக கண்டிராத ஹவுசிங் போர்டு கட்டிடங்களும், தண்ணீர் பக்கெட்டும் கையுமாக கக்கூஸிற்கு செல்ல வேண்டிய ஒண்டுக்குடித்தன வீடுகளும், மந்திர உச்சாடனம் போல அந்த மூன்றெழுத்தை உச்சரிக்காமல் ஒரு வாக்கியத்தை ஆரம்பிக்கத் தெரியாத பெரும்பான்மை மக்களுமாக ... ஆஹா.... எங்க ஊர்.

"கூட்னு போ. அட்ச்சி கிட்சி போட்றப் போறன்" என்று தவ்லத்தாக ஒரு ஆசாமி வருவாரே......அவர்தான் வடசென்னையின் அசலான முகம். என்றாலும் வடசென்னையை அதன் முழு வீர்யத்தோடு பயன்படுத்துகிற திரைப்படம் இனிமேல்தான் வரவேண்டும் போலிருக்கிறது.

()

'ரன்' என்கிற திரைப்படத்தை பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது இதுதான்: ஏன் இந்தப்பட இயக்குநரின் மீது எந்த ஒரு தாதாவும் ரவுடியும் மான நஷ்ட வழக்கு தொடரவில்லை? அந்தளவிற்கு ரவடிகளை ஏதோ தட்டினால் பறக்கும் தூசு போல் காட்டியிருப்பார்கள். இந்தப்படத்திலும் அதே மாதிரிதான் நேர்ந்திருக்கிறது. வன்முறையையே எதிர்கொண்டிராத ஒரு நடுத்தரவர்க்க சராசரி இளைஞன் எப்படி பத்திருபது ஆயுதபாணி ரவுடிகளை அநாயசமாக எதிர்கொள்கிறார் என்பது எனக்கு புரியாத புதிர். நாயகன் marshal arts பயின்றவர் என்று ஒரு காட்சியிலாவது establish செய்தால் கொஞ்சம் மனச்சாந்தியாவது கிடைக்கும். logic.

()

இசை G.V. பிரகாஷ். 'மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்' என்ற பாடலில் வெளிநாட்டு ஆல்பமொன்றின் வாசனை அடித்தாலும் கேட்க இனிமையாகவே இருக்கிறது. 'எங்கேயும் எப்போதும்' ரீமிக்ஸ் பாடலில் திரையரங்கம் அதிர்கிறது. (இந்த மாதிரி ரீமிக்ஸ்களுக்கு ஏதாவது வரையறை இருக்கிறதா என்று தெரியவில்லை. முன்பெல்லாம் ரீமிக்ஸ் என்றால் பின்னணி இசையை மாத்திரம் நவீனப்படுத்துவார்கள் என்று கேள்வி. ஆனால் இப்போதோ அதை செயற்கை திரவங்களுடன் மிக்ஸியில் போட்டு அடித்து மேலே ஏதோ தூவி நட்சத்திர ஓட்டல் பண்டம் போல் கொடுக்கிறார்கள்) இருளும் ஒளியுமாக யதார்த்தமான விகிதத்தில் ஒளிப்பதிவாளர் (R.வேல்ராஜ் ?) சில காட்சிகளில் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.

()

வெற்றிமாறன் தன்னுடைய வணிக கட்டாய தடைகளையெல்லாம் தவிர்த்து தமிழ்ச் சினிமாவின் தரத்தை அங்குலமேனும் முயற்சியில் ஈடுபடுவாரா அல்லது வெற்றியின் ருசியில் அதிலேயே அமிழ்ந்து போவாரா என்பதை அவரின் அடுத்த படத்தைக் கொண்டுதான் தீர்மானிக்க முடியும்.

Monday, December 03, 2007

லா.ச.ரா ஓர் ஆமை...

லா.ச.ரா இறந்து போனதாக அறிந்து கொண்ட போது எனக்கு அதிர்ச்சியாகவெல்லாம் இல்லை. வயதான, நோயின் வாதையில் துயருற்றுக் கொண்டிருந்த "எப்ப வேணா செய்தி வரும்" என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஊரிலிருந்த தாத்தா ஒருவரின் மரணச் செய்தியை அறிந்து கொண்டாற் போல்தான் இருந்தது. வயதானவர்கள் இந்து பத்திரிகையின் sports page-ல் வெளியாகும் சாவு வரி விளம்பரத்தில் தனக்கு அறிமுகமானவரின் பெயரைக் கண்டவுடன் விடும் பெருமூச்சு போல்தான் அது.

எனக்கு முதன் முதலில் வாசிக்க கிடைத்த நூல் சிந்தாநதி. அவருக்கு சாகித்ய அகாடமியைப் காலந்தாழ்ந்தேனும் பெற்றுத்தந்த சுயசரிதையிலான நூல். அவருடைய பிறந்த ஊரான லால்குடியின் மண்ணை நுகரும் பரவசத்தையும் பெருந்திருவின் தரிசனத்தையும் வாசகனும் அடையும் உணர்வை ஏற்படுத்தித் தந்தது. பிறகு அவரின் நூல்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன். "கண்ணாடியில் பிம்பம் விழும் சத்தத்தை" வாசகனும் கேட்கும் அளவிற்கு நுண்ணியமான படைப்பு நாளடைவில் எனக்கு சலிப்பைத்தந்தது. வெறும் அழகியலை மாத்திரம் பிரதானப்படுத்தி எழுதுவதில் எனக்கு இன்றளவும் உடன்பாடு கிடையாது. சமூகப் பிரச்சினைகளை எதிரொலிக்காத எந்தவொரு எழுத்தாளின் படைப்பு தரத்தின் அடிப்படையில் உச்சியில் இருந்தாலும், பிரச்சினைகளை சாதாரண மொழியல் வீர்யமாக எதிரொலிக்கிற ஒரு இளம் படைப்பாளியின் படைப்புதான் என்னளவில் சிறந்தது. ஜெயமோகன் எழுதின "நினைவின் நதியில்" நூலில் சுந்தர ராமசாமி லா.ச.ராவைப் பற்றிக் கூறும் போது "அவர் கதையில் எப்போதும் அம்பாள் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு உலாத்திக் கொண்டிருப்பார்" என்கிற மாதிரியான (சரியான வரிகள் நினைவில் இல்லை) குறிப்பைப் படித்ததும் தொடர்ந்து ஐந்து நிமிடங்களாவது சிரித்துக் கொண்டிருந்தேன்.

தீராநதி (டிசம்பர் 2007) இதழில் ந.முருகேச பாண்டியனின் "லா.ச.ரா என்ற கலைஞனின் உச்சமும் வீழ்ச்சியும்" என்ற கட்டுரையின் பெரும்பான்மையான பகுதிகளுடன் நான் உடன்படுகிறேன்.

... 'சின்ன வயதில்' அவருடைய நடையின் கவர்ச்சியில் பிரமித்துக் கிடந்ததாகவும், பிறகு சலிப்பேற்பட்டு விலகிவிட்டதாகவும், இந்த மாதிரியில், தமது 'வளர்ச்சி' பற்றிய பெருமிதத்தை சொல்வோர் சிலர் உண்டு'. - இது அதே இதழில் கவிஞர் அபி எழுதின அஞ்சலிக் கட்டுரையில் கண்டது.


()

உயிர்மை (டிசம்பர் 2007) இதழில் இந்திரா பார்த்த சாரதி எழுதின அஞ்சலிக் கட்டுரையின் சுவையான ஒரு பகுதியை கீழே குறிப்பிட்டிருக்கிறேன். (நன்றி: உயிர்மை)

.............லா.ச.ராவுக்கு ஆங்கில இலக்கியத்தில் நல்ல தேர்ச்சி இருந்தது. வர்ஜினா வுல்·பைப் பற்றியும், ஜேம்ஸ் ஜாய்ஸைப் பற்றியும் அவரால் மணிக்கணக்கில் பேச முடியும். தமிழ் சித்தர் நூல்களை அவர் நன்கு கற்றறிந்தார் என்பது அவர் பேசுவதினின்றும் விளங்கும். முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதத் தொடங்கியதாக அவர் என்னிடம் கூறினார். தமிழில் எழுத ஆரம்பித்ததும் அவருக்கு இம்மொழியில் இருந்த லாகவம் அவருக்கே முதலில் ஆச்சரியத்தைத் தந்ததாம். அவர் வாக்கின் உபாசகர். ஒவ்வொரு சொல்லையும் அதன் பொருள் ஆழத்துக்குச் சென்று அதை வெளிக் கொணர்ந்து தம் படைப்பில் அர்ப்பணிக்கும் நிர்வாகம் அவர் இலக்கியத்தின் பலம். படிக்கும் போது, அது பிரவாகமாகப் பெருக்கெடுத்துப் பாய்வது போல் தோன்றினாலும், அது அவரைப் பொருத்த வரையில் பகீரதப்பிரயத்தனம். "நீ, ஜானகிராமன் எல்லோரும் அடுப்பிலிருந்து உடனே இறக்கிச் சுடச்சுட பத்திரிகைகளுக்கு அனுப்ப முடிகிறது. என் சமையல் நேரந்தான் ஆகும். தவம் பண்ணாத்தான் சரியான வார்த்தை வந்து விழும். நான் உங்க மாதிரி முயல் இல்லே. ஆமைதான்!" என்றார் ஒரு சமயம். "கடைசியிலே ஆமைதான் ஜெயிக்கும், அப்படித்தானே?"... என்று நான் சொன்னதும் சிரித்துக் கொண்டே என்னைக் கட்டிக் கொண்டார். ஸ்பரிஸம் அவர் உரையாடலின் முக்கிய அம்சம்.

'லா.ச.ரா ஒரே கதையைத்தான் திரும்பத்திரும்ப வெவ்வேறு வகையாக எழுதுகிறார்' என்று கு.அழகிரிசாமி 'தீபத்தில்' ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். நான் அவரை இதுபற்றிக் கேட்டேன். அவர் சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு பிறகு புன்னகையுடன் சொன்னார்:

"நான் யாருக்கும் கதை சொல்லணும்னு கங்கணம் கட்டிண்டு எழுதலியே! நான் எனக்கு நானே பேசிக்கறேன். ஒட்டுக் கேக்கறதும் கேக்காமெ இருக்கறதும் உங்க இஷ்டம்."

"அப்படின்னா, உங்களுக்கு வாசகனைப் பத்திக் கவலையே கிடையாதா?"

"கொள்வார் இருந்தால் கொள்ளட்டும்"

"வள்ளலார்" என்றேன் நான். ..............

()