Tuesday, January 30, 2007

இசைக்க மறந்த கலைஞன்




கானல் நதி (நாவல்) யுவன் சந்திரசேகர்

உயிர்மை பதிப்பகம், விலை ரூ.200/- பக்








பத்திருபது வருடங்களுக்கு முந்தைய ஒரு நாளின் இரவு. மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் காற்றுவரத்து நின்று போன புழுக்கத்தில் அசெளகரியமாக உணர்ந்த மனம் முற்றிலுமாக விழித்துக் கொண்டது. இனி தூங்க இயலாது என்ற நிலையில் ஏதாவது ஒரு பாட்டு கேட்போமே என்று சிறிய ரேடியோவை இயக்கினேன். இசையை முழுவதுமாக உள்வாங்க இரவு நேரம், குறிப்பாக பின்னிரவு நேரம்தான் உகந்தது என்பது என் அபிப்ராயம். மனிதர்களால் ஏற்படுத்தப்படும் நாராச ஓசைகள் ஓய்ந்து போய், பாடலில் பின்னணியில் ஒலிக்கும் நுண்ணிய கூறுகள் கூட கேட்க இயல்வது இரவுகளில்தான் எனக்கு நேர்ந்திருக்கிறது. இன்றைய நாட்களைப் போல் 24 மணி நேரமும் பாடல்களை உமிழ்ந்து கொண்டே இருக்கும் தனியார் அலைவரிசைகள் அப்போதில்லை. சுக்ரதிசை இருந்தால் இலங்கை வானொலி கேட்கும். கொஞ்சம் கரகர சப்தத்தோடு விவிதபாரதியும், மூக்கடைத்த ஜலதோஷக் குரலோடு சரோஜ் நாராயணசுவாமி செய்தி ஒலிக்கும் சென்னை வானொலியும், எப்போதும் டொய்ங்.. டொய்ங்.. என்ற சப்தத்தோடோ அல்லது யாரோ அழுகிறாற் போன்ற கர்நாடக சங்கீதமோ இரண்டாவது அலைவரிசையில் கேட்கக் கிடைக்கும்.



இருட்டில் கை போன படி குமிழைத் திருகினதில் எந்த அலைவரிசையிலோ இடறிய பெண் குரல் என்னை நிதானப் படுத்தியது. ஏதோவொரு பக்தி சங்கீதம். இறை நம்பிக்கை என்பதை வேறொரு தளத்தில் நின்று அணுகும் எனக்கு ஆவேசமான பக்திப்பாடல்களின் மீது ஒவ்வாமையே உண்டு. (குறிப்பாக சில L.R.ஈஸ்வரி அம்மன் பாடல்கள் போன்றவை). என்றாலும் கேட்கும் சுகத்திற்காக மட்டும் ஜேசுதாஸ் போன்றவர்களின் பாடல்கள் மீது பக்தி கலவாத விருப்பமுண்டு. ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த அந்த பாடல் ஹிந்தி மொழியில் கிருஷ்ணா கிருஷ்ணா என்று உருகிக் கொண்டிருந்தது. பாட்டின் அர்த்தம் புரியவில்லையெனினும் ராகமும், குரலில் ஒலித்த தொனியும் பாவமும் மன அடுக்குகளின் உள்ளே புகுந்து எதையோ கிளறி கண்ணீரை வரவழைக்கும் போலிருந்தது. எத்தனை நேரம் கேட்டுக் கொண்டிருந்தேனோ, நினைவில்லை... பாடல் முடிந்து போய் ஒலிபரப்பு நின்று போனாலும் தொடர்ந்து அந்தக் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தாற் போல் ஒரு பிரமையை ஏற்படுத்தியது.



மறுநாளும் அந்த குரலும் ராகமும் பாவமும் எனக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தன. மீண்டும் அந்தப் பாடலை கேட்டேயாக வேண்டும் என்கிற பெருவிருப்பம் எழுந்து மனோநிலையைச் சிதறடிக்கும் விஷயமாக மாறியது. பாடலைப் பற்றிய எந்தவொரு விவரமும் தெரியவில்லையெனினும் ஒலிபரப்பின் முடிவில் பாடினவர் பெயராக அனுராதா பெளத்வால் என்பது ஒலித்தது மாத்திரம் நினைவில் பதிந்து போனது. ஒலிநாடாக்கள் கடையில் விசாரித்த போது குறிப்பிட்ட பாடகி பாடினதாக நிறைய நாடாக்கள் இருப்பதாகவும், எதுவென்று குறிப்பாகவும் கேட்டார்கள். நான் கூச்சத்துடன் அந்தப் பாடலை தயக்கமான குரலில் ஹம்மிங் செய்தேன். இது மார்வாரிகள் பெருவாரியாக கேட்கும் பக்திப்பாடல்கள் வகையில் இருப்பதாகவும், செளகார்பேட்டையில் கிடைக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்கள். செ. பேட்டைக்கு ஓடி விசாரித்ததில் சிறிய சிரமத்திற்குப் பின் குறிப்பிட்ட ஒலிநாடாவை அடைய முடிந்தது. உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பாடலை ஒலிக்கச் சொன்னதில் காலம் பின்னால் சுழன்று நான் அந்த நள்ளிரவில் இருப்பதான ஒரு பிரமை தோன்றி பரவசத்தை ஏற்படுத்திற்று.


()


எதற்காக இதை விஸ்தராரமாகச் சொன்னேன் எனில், திரையிசைப்பாடல்களின் மீதே முழுக்க குவிந்திருந்த கவனத்தை மேற்சொன்ன பாடல் கலைத்துப் போட்டது. சாஸ்தீரிய இசை, கர்நாடக, ஹிந்துஸ்தானி வாத்திய மற்றும் வாய்ப்பாட்டு இசை - அவற்றின் அடிப்படை ஞானம் இல்லையெனினும் - மீதான தேடலை தொடங்க அது ஒர் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. "கானல் நதி" நாவலை எழுதின யுவன் சந்திரசேகருக்கும் இதே போன்றதொரு அனுபவம்தான் ஹிந்துஸ்தானி இசையின் மாறாக் காதலை ஏற்படுத்தி அதை சரடாக அமைத்து ஒரு நாவலை எழுத வைத்திருக்கிறது.


ஸ்ரீ தனஞ்செய் முகர்ஜி என்கிற இந்துஸ்தானி வாய்ப்பாட்டுக் கலைஞனின் - தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் தொடப்படாத பகுதி இது - வாழ்க்கை புனைவின் வடிவில் விரிகிறது. குஜராத்தி மொழியில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதான ஒரு பாவனையுடன் இந்த நாவல் புதுமையான வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. கேசவ் சிங் சோலாங்கி என்கிற, ஹிந்துஸ்தானி இசையைப் பற்றின நூல்களை எழுதியிருக்கும் எழுத்தாளர், ஸ்ரீ குருதரண் தாஸ் என்கிற தபேலா மேதையின் உருக்கமான வேண்டுகோளின் பேரில் அவருடைய நண்பரான ஸ்ரீ தனஞ்செய் முகர்ஜியின் வீழ்ச்சியுற்ற வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார். இதற்காக அவர் தனஞ்சசெயனின் கிராமத்திற்கு சென்று அவருடைய உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து இந்த நூலை எழுதுகிறார்.


கல்கத்தாவின் உள்ளடங்கிய கிராமமான மாமுட்பூர் என்கிற இடத்திற்கு வாசகனை அழைத்து செல்வதான - நூலாசிரியரே குறிப்பிடுகிற மாதிரி - பயணக்கட்டுரை போல் ஆரம்பப்பகுதி அமைந்திருக்கிறது. மாமூட்பூரின் landscape நிதானமாக நமக்கு காட்டப்படுகிறது. அதன் பின் விரிகிறது தனஞ்செயனின் பால்யம், வாலிபம், நாட்குறிப்பு, அழைப்பு.


உலக அளவில் புகழ் பெறக்கூடிய ஒரு ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டுக்காரனின் எல்லாவித அடையாளங்களுடன் வளர்கிறான் தனஞ்செயன். வறுமையான குடும்பமென்றாலும் அவனுக்கு இந்த சூழலை உறுதியுடன் அமைத்துத் தருகிறார் தந்தை கிரிதர முகர்ஜி. விஷ்ணுகாந்த் ஸாஸ்திரி என்கிற மேதை தனஞ்செயனை தன் சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு அவனை இன்னும் மெருகேற்றுகிறார். சரயு என்கிற பெண்ணிடம் ஏற்படும் கவர்ச்சி தனஞ்செயனை ஆட்டுவிக்கிறது. நகர இடம்பெயர்வின் போது பிரபல மேதைகளுக்கு வாசிக்கிற குருசரண் தாஸ் என்கிற தபேலாக் கலைஞனின் அருமையான நட்பு கிடைக்கிறது. தனஞ்செயனின் திறமையைக் கண்டு பிரமிக்கிற குருசரண் ஒரு சிக்கலான சூழலில் தனஞ்செயனை சபையில் பாட வைக்கிறான். பத்திரிகைகள் பாராட்டுகின்றன. ஊர்திரும்புகிற தனஞ்செயனுக்கு திருமணப் பேச்சு நடக்கிறது. சரயுவின் மீது அவன் கொண்டிருக்கிற காதலை அறிந்திருக்கிற அந்தக் குடும்பம் பெண் கேட்டுச் சென்று அவமானப்பட்டுத் திரும்புகிறது. "காற்றில் தங்கமீன் பிடிக்கிறவனுக்கு" என் மகளைத்தர சம்மதமில்லை என்கிறார் பெண்ணின் தந்தை. மாறாக, மிட்டாய்க்கடையில் பணிபுரியும் தனஞ்செயனின் சகோதரனுக்கு வேண்டுமானாலும் தருகிறேன் என்கிறார் அவர்.


இந்த ஒரு விஷயமே தனஞ்செயனின் வீழ்ச்சிக்கு முக்கியமான அடித்தளமாக அமைகிறது. மிதமிஞ்சிய குடிப்பழக்கம், காஞ்சனா தேவி என்கிற ஸாரங்கி வாத்திய இசைக்காரியினுடான உடல்ரீதியான தொடர்பு போன்றவை இன்னும் அவனை அழுத்திப் போடுகிறது. வளர்த்துவானேன்....
இறுதியாக, அஸ்லம் என்கிற செருப்பு தைப்பவனின் ஆதரவில் வாழும் தனஞ்செயன் சாலையோரம் அநாதையாக செத்துப் போகிறான். அவன் செத்துப் போவதற்குள் பல மாற்றங்கள். சரயு கணவனின் கொடுமையில் விபச்சாரியாகிறாள். தனஞ்செயினின் தங்கை கிறித்துவ துறவியாகிறாள். தந்தை காசநோயால் செத்துப் போகிறார். தாய் யாருமில்லாத அநாதையாக நிராதரவின்றி துன்புறுகிறாள். தனஞ்செயன் மற்றும் குருசரண்தாஸ் இருவருக்கிடையேயான நட்பின் கொண்டாட்டமும் பிரிவின் வேதனையும் நுட்பமாக சொல்லப்பட்டிருக்கிறது. (... "முட்டாள். பாட்டின் லயம் பற்றி எனக்குச் சொல்லித் தருகிறாயா? நீ வெறும் பக்கவாத்தியக்காரன்தான். ஞாபகம் வைத்துக் கொள். சங்கீதத்தில் நான் உனக்கு எஜமான். புரிகிறதா?" ..." என்னுடைய சங்கீதம் உயரிலிருந்து புறப்பட்டு வருகிறது. ...உன்னுடையது செத்தமாட்டின் தோலிலிருந்து....")


()



சுருங்கச் சொல்வததெனில், இது ஒரு வீழ்ச்சியுற்ற கலைஞனின் கதை. எந்தவொரு துறையிலும் வெற்றி பெற்றவர்களே கொண்டாடப்பட்டும் மிகையாக பதிவு செய்யப்பட்டுக் கொண்டும் இருக்கிற சூழலில், தோல்வியுற்ற மனிதர்களை காலம் சீண்டுவதில்லை. எந்தவொருவனுக்கும் வெற்றியின் ருசியின் இனிப்பை சுவைத்தவர்களை அறிந்து கொள்வது போல் தோல்வியின் கசப்பை விழுங்கினவர்களை அறிந்து கொள்வது முக்கியமானது. நூலாசிரியரின் மொழியில் சொல்வதானால் "........ வெற்றி பெற்றவர்களுக்குச் சமானாக உழைப்பும் பயிற்சியும் தோல்வியுற்றவர்களும் மேற்கொள்ளத்தானே செய்திருப்பார்கள். வெற்றிகளின் விம்மிதம் போலவே தோல்வியின் வலியும் பாடுவதற்குரியதுதானே".


()


கவிஞராகத் தொடங்கி சிறுகதையாசிரியராக உருமாறிய யுவன் சந்திரசேகரரின் "ஒளிவிலகல்" என்கிற சிறுகதைத் தொகுதியை படித்ததில் மொழியை அவர் லாவகமாக கையாண்டிருந்ததை கண்டு பிரமித்துப் போய் பிடித்த எழுத்தாளர்களின் பட்டியலில் உயர்நிலை அடுக்கில் அவரை உடனடியாகச் சேர்த்தேன். இந்த நாவலில் ஆரம்பக் கட்டங்கள் மாத்திரம் சற்றே சலிப்பை ஏற்படுத்தினாலும் நாட்குறிப்பு என்கிற பகுதியில் யுவனின் மொழி முழு வீர்யத்துடன் வெளிப்படுகிறது.


.. ஸ்வரம் என்பது என்ன? நிசப்தம் என்ற திரையில் விழும் பொத்தலா? அல்லது சப்தம் என்பதுதான் இயற்கையான நிலையா? ஜட வஸ்துக்கள் மட்டும்தானே தன்னியல்பான ஒசையை எழுப்பாதவையாக இருக்கின்றன? இல்லையே, கடல்அலைகளுக்கும் தலை விரித்தாடும் மரக்கிளைகளுக்கும் ஓசை உண்டுதானே? ஆனால் அந்த ஓசையை வழங்குவது காற்று அல்லவா.
உயிர்ப் பொருட்களிலும் ஓசையாய் நிரம்பியிருப்பது காற்றேதான்.



அப்படியானால் காற்றுதான் உயிரோ? உயிர் என்றாலே ஒலி என்றுதான் பொருளோ? ஒழுங்கமைக்கப்பட்ட ஒலிப் பிரவாகத்தைத்தானே சங்கீதம் என்ற பெயரால் அழைக்கிறோம்? என்றால் சங்கீதமும் உயிரும் ஒன்றுக்கொன்று சமானமானவையா? ஒவ்வொரு ஸ்வரமும் ஒரு உயிர்த்துளியோ?
சங்கீதத்தின் தாழ்வாரத்தில் நுழையும் போது உயிர்ப்பெருக்கின் மண்டலத்துக்குள்தான் நுழைகிறேனா? ...........



()



தவறவிடக்கூடாத படைப்பு.

13 comments:

  1. பிளாக்கரை புதிய வடிவத்திற்கு மாற்றின கையோடு எழுதின பதிவு இது. தமிழ்மணத்தில் இடும் போது சில பழைய இடுகைகளையும் காண்பிக்க, எதற்கு வம்பென்று அவைகளையும் பதிப்பிக்க, புதிய பதிவை தாண்டிக் கொண்டு பழைய பதிவுகள் முட்டிக் கொண்டு நிற்கின்றன. சிரமத்திற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  2. சுரேஷ் அருமையான ஒரு ஆக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் நன்றி

    புது ப்ளாகருக்கு மாறியதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //அப்படியானால் காற்றுதான் உயிரோ? உயிர் என்றாலே ஒலி என்றுதான் பொருளோ? ஒழுங்கமைக்கப்பட்ட ஒலிப் பிரவாகத்தைத்தானே சங்கீதம் என்ற பெயரால் அழைக்கிறோம்? என்றால் சங்கீதமும் உயிரும் ஒன்றுக்கொன்று சமானமானவையா? ஒவ்வொரு ஸ்வரமும் ஒரு உயிர்த்துளியோ?
    சங்கீதத்தின் தாழ்வாரத்தில் நுழையும் போது உயிர்ப்பெருக்கின் மண்டலத்துக்குள்தான் நுழைகிறேனா? ...........//

    இது உங்களுடைய வரிகளா? ஆம் எனில், உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். அற்புதமான சிந்தனையை அழகாய் வாக்கியப்படுத்தியுள்ளீர்கள். இல்லை என்றால்,நாவலின் ஆசிரியருக்கு...

    ReplyDelete
  4. sooper!

    ---எப்போதும் டொய்ங்.. டொய்ங்.. என்ற சப்தத்தோடோ அல்லது யாரோ அழுகிறாற் போன்ற கர்நாடக சங்கீதமோ---

    I will be back
    will be back
    :-P

    ReplyDelete
  5. //இது உங்களுடைய வரிகளா?//

    நிச்சயமாய் என்னுடையதில்லை. இப்படியெல்லாம் எழுதவருமென்றால் நான் ஏன் வெட்டியாய் blog எழுதிக் கொண்டிருக்கிறேன். :-) இந்தப் பாராட்டு யுவனுக்கே.

    ReplyDelete
  6. இவரை இதுவரை வாசித்தது இல்லை. அறிமுகத்திற்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  7. உயிர்ப் பொருட்களிலும் ஓசையாய் நிரம்பியிருப்பது காற்றேதான்
    poetically this may be OK but technically it is not so.Air is
    often only a medium, not music
    or sound.
    உயிர்ப் பொருட்களிலும் ஓசையாய் நிரம்பியிருப்பது காற்றேதான்

    If my memory is right this idea
    is expressed in one of the vasana
    kavithaigal by bharathiar.

    ReplyDelete
  8. இறுதியாக, அஸ்லம் என்கிற செருப்பு தைப்பவனின் ஆதரவில் வாழும் தனஞ்செயன் சாலையோரம் அநாதையாக செத்துப் போகிறான். அவன் செத்துப் போவதற்குள் பல மாற்றங்கள். சரயு கணவனின் கொடுமையில் விபச்சாரியாகிறாள். தனஞ்செயினின் தங்கை கிறித்துவ துறவியாகிறாள். தந்தை காசநோயால் செத்துப் போகிறார். தாய் யாருமில்லாத அநாதையாக நிராதரவின்றி துன்புறுகிறாள்.

    Sounds more a like a melodramatic
    movie of 50s and 60s than a novel
    written in 21st century.From what
    you have written i presume that the
    writer has used some stereotyped
    images about musician,love failure
    etc, partially inspired by Devadoss.

    ReplyDelete
  9. அட்டகாசமான ரிவியூ சுரேஷ்..நான் எழுதுவதற்கு முன் இதை படித்திருந்தால ஒன்று நான் எழுதாமல் விட்டிருப்பேன் அல்லது நீங்கள் சொல்லாமல் விட்ட தகவல்களை தேடிப்பிடித்து தர முயன்றிருப்பேன்.
    ஆனால் என்ன செய்ய :)..

    ReplyDelete
  10. நண்பர் சித்தார்த் (www.angumingum.wordpress.com) இந்த நாவலை வைத்து படித்துக்கொண்டிருக்கும் போது பார்த்தேன். என்றாவது அவரிடம் இரவல் வாங்கி படிக்கலாம் என நினைத்தேன். இன்று உங்களின் விமர்சனம் பார்த்ததும் உடனடியாக வாங்கி படிக்கும் ஆவலை தூண்டுகிறது.

    நல்லதொரு விமர்சனம்.
    நன்றி.

    ReplyDelete
  11. குள்ளச் சித்தன் சரித்திரம் வாசிப்பனுபவம் எழுதியகையொடு உங்கள் மதிப்புரையைப் படித்தேன். என்னுடையது உங்களளவுக்கு தீர்க்கமாக இல்லை. நான் கொஞ்சம் புதுசு. படித்துப் பார்த்தால் மகிழ்வேன்.
    http://jekay2ab.blogspot.com/2010/06/blog-post_16.html
    நான் படித்த யுவனின் ஒரே நாவல் இது. உங்களைப் போலவே எனக்குப் பிடித்த எழுத்தாளர் பட்டியலில் அவரும் சேர்ந்து விட்டார்.

    ReplyDelete