Wednesday, February 01, 2006

தொலைந்து போன பதிவு

கீழக்கண்ட தலைப்பில் ஏற்கெனவே அனுப்பப்பட்ட இந்த பதிவை எந்த தொழில்நுட்ப 'காக்காவோ' தூக்கிக் கொண்டு போனதாலும் கடந்த பதிவில் பின்னூட்டமிடுவதில் சிக்கல் இருந்ததாலும் இது மறுபடியும் பதியப்படுகிறது. ஏற்கெனவே படித்தவர்கள் (குறிப்பாக voice on wings) :-) இதை பொறுத்தருள வேண்டுகிறேன்.

புத்தகங்கள், சென்னை Conservative நகரமா?, NDTV விவாதம், தமிழ் சினிமாவாவின் நாயகர்களுக்கு எனிமா

வாழ்வின் ஊடான பயணங்களின் பதிவுகள் - 4

நான் தற்போது படித்துக் கொண்டிருக்கிற / படித்து முடித்த புத்தகங்களைப் பற்றி இங்கே எழுதலாம் என்றொரு உத்தேசம். இது நிச்சயம் சுயதம்பட்டமல்ல. மற்றவர்களிடம் இதை பகிர்ந்து கொள்வதின் மூலம் அவர்கள் இதுவரை முயன்றிராத படைப்புகள் என்னுடைய பட்டியலில் இருந்தால் நூல்நிலையங்களிலோ, புத்தகக்கடைகளிலோ அவர்கள் செல்லும் போது ஏற்கெனவே கேள்விப்பட்ட இந்த நூல்களின் பெயரைக் கொண்டு பரிச்சயமேற்பட்டு அதை முயன்று பார்ப்பார்கள் என்கிற ஆவல்தான். நானும் அப்படித்தான் ஏற்கெனவே கேள்விப்பட்டு மூளையின் ஏதோவொரு ஒரத்தில் பதிவாகியிருந்த செய்தியின் மூலம் பல நூல்களை பிற்பாடு அடையாளங்கண்டு படித்திருக்கிறேன். க.நா.சுவும் சுஜாதாவும் சிறந்த இலக்கிய படைப்பாளிகளை பட்டியலிட்டு அதன் மூலம் எழுந்த சர்ச்சைகளை அறிவீர்கள்.

வழக்கமான வணிக பத்திரிகைகளையும், படைப்புகளையும் படித்த வெறுப்பிலிருந்து விலகி என்னை மீட்டுக் கொண்டு நவீன இலக்கியத்தை சுவைக்க ஆரம்பித்த நேரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைப் பற்றியும், படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல்களைப் பற்றியும் யாராவது எழுதவோ, கூறவோ மாட்டார்களா என மிக்க ஆவலோடு அலைந்துள்ளேன். நான் நூல்நிலையத்திற்கு செல்லும் போது கூட வாசகர்கள் திருப்பியிருக்கிற நூல்கள் நூலகரின் அருகில் இருந்தால் அதைத்தான் முதலில் பார்ப்பது வழக்கம். அடுக்குகளிலிருந்து தேடும் சிரமமில்லை என்பது ஒருபுறமிருக்க, எம்மாதிரியான நூல்கள் அதிகம் விரும்பிப் படிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளவும் அது ஒரு வாய்ப்பாக இருந்தது. அந்த நிலையில் நான் அதிகம் கண்டது ராஜேஷ்குமார்களையும், ரமணிசந்திரன்களையும்தான். எப்பவாவது அத்திபூத்தாற் போல் லா.சா.ராவையும், எம்.வி.வெங்கட்ராமையும், புதுமைப்பித்தனையும் காண்பது.

தற்போது படித்துக் கொண்டிருக்கிற நூல்களின் பட்டியல். புனைவல்லாத இலக்கியங்களை அதிகம் படிக்க வேண்டும் என்ற நோக்கமும் ஆவலும் இருந்தாலும் படிக்க வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்தியிருக்கிற புனைவுகள் கண்ணில்படும் போது அதை தவிர்க்க முடிவதில்லை.

கூகை - சோ.தர்மன் (நாவல்)
காலம் காலமாக - சா.கந்தசாமி (கட்டுரைகள்)
க.நா.சு. நினைவோடை - சு.ரா (அனுபவம்)
தேரோடும் வீதி - நீல பத்மநாபன் (நாவல்)
வெளிவாங்கும் காலம் - வெ.ஸ்ரீராம் (சிறுகதைகள்)
தெளிவு - கரிச்சான் குஞ்சு (சிறுகதைகள்)
பண்டைக்கால இந்தியா - எஸ்.ஏ.டாங்கே (கட்டுரை)
சாய்வு நாற்காலி - தோப்பில் முகம்மது மீரான் (நாவல்)
சுவடுகள் - திருப்பூர் கிருஷ்ணன் (அனுபவம்)
திரும்பிப் பார்க்கிறேன் - நாகேஷ் (வாழ்க்கை)
துயரமும் துயர நிமித்தமும் - பெருமாள் முருகன் (கட்டுரைகள்)

()

Is Chennai India's most conservative city? என்கிற தலைப்பில் நடந்த விவாதமொன்றை NDTV-ல் நேற்றிரவு இடையிலிருந்து யதேச்சையாக பார்க்க நேரிட்டது. நடிகை குஷ்பு, ரேடியோ மிர்ச்சி சுசித்ரா, அனிதா ரத்னம், யூகிசேது, CBI-ன் முன்னாள் இயக்குநர் ராகவன், உட்பட சென்னையின் பல பிரபலங்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்ட விவாதத்தில் ஆடைக்கட்டுப்பாடு பற்றி சமீபத்தில் எழுந்திருக்கும் சர்ச்சையே பெரும்பகுதியை எடுத்துக் கொண்டது. இந்த விஷயத்தில் யாருடைய தலையீடும் தேவையில்லை என்பதே பொதுவான கருத்தாக இருந்தது. எங்கள் கல்லூரியில் சில ஆபாசமான உடைகளை அனுமதிப்பதில்லை என்று கருத்து தெரிவித்த வைஷ்ணவா கல்லூரியின் முதல்வருக்கு மாணவர்கள் பகுதியிலிருந்து பலத்த கேலியான கூக்குரல்கள் எதிர்வினையாக கிடைத்தது. இதே மாதிரியான கருத்தை தெரிவித்த பா.ஜ.க பெண் பிரமுகருக்கும் (பெயர் நினைவில்லை) இதே மரியாதையே கிடைத்தது.

இந்த விஷயத்தை சற்றும் உணர்ச்சிவசப்படாமலும், சுதந்திரத்தில் தலையிடுவது என்கிற அசட்டுத்தனமான எதிர்ப்பும் இல்லாமல் யதார்த்தமாக சிந்தித்துப் பார்த்த போது எனக்குத் தோன்றியது, கல்விக்கூடங்களில் இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தேவை என்பதே. ஸ்பென்ஸர் பிளாசா போன்ற இடங்களிலும் சில கல்லூரி வாசல்களிலும் சில பெண்களால் உடுத்தப்படும் உடை மாதிரியான வஸ்துகள் நம் ரத்தக்கொதிப்பை ஏற்றுகின்றன. (கோபத்தால் அல்ல) "எலுமிச்சம் பழத்திலிருந்து பூசணக்காய் வரை எல்லாத்தையும் பாக்கலாம்"...... என்கிற பாய்ஸ் வசனத்தை நியாயப்படுத்துவது போல் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் தன் அங்கங்களின் அளவுகளை தாராளமாய் காட்டும் ஆடைகளை அணிவது அவர்களின் பார்வையில் சுதந்திரமாய் இருக்கலாம். அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றியும் யோசித்துப் பார்க்குமாய் கேட்கிறேன். அடிப்படையில் நம்முடைய கலாச்சாரம் பாலியல் வறட்சி கொண்டது. ஒரு ஆணும் பெண்ணும் நின்று பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் அண்ணன், தங்கையாக இருக்கலாம் அல்லது நல்ல நண்பர்களாக இருக்கலாம் என்கிற நாகரிக ஊகங்களை செளகரியமாக மறந்துவிட்டு அவர்களை படுக்கையறையுடன் சம்பந்தப்படுத்தி மட்டுமே யோசிக்கும் அளவிற்கு பிற்போக்குத்தனமாக சிந்திப்பவர்களே இங்கு அதிகம். (இதில் பெண்களும் அடக்கம்)

மேலும் ஒரு பெண்ணுடன் உறவு கொள்வது என்கிற சாதாரண, இயற்கையின் ஆதார செய்கையை நியாயமான முறையில் நிகழ்த்த ஒரு ஆண் பல தடைகளை தாண்ட வேண்டியிருக்கிறது. (ஒரு பெண்ணை உதட்டில் முத்தமிட்டால் எப்படியிருக்கும் என்பதை நான் பல வருடங்களாக ஈரமான கனவுகளில் மட்டுமே சாத்தியப்படுத்திக் கொள்ள வேண்டிதாயிருந்தது) அப்படியான பாலியல் வறட்சியும், பாலியலைப் பற்றின புரிதலும் இல்லாத தேசத்தில் சினிமாவில் கூட உடுத்தத் தயங்குகிற உடையை ஒரு பெண் அணிந்து வருவாளாயின், அவள் மற்றவர்களின் மன எண்ணங்களில் எப்படி துகிலுரிக்கப்படுவாள் என்பதையும், சில மூர்க்கர்கள் போதுமான சமயம் வாய்க்கும் பட்சத்தில் இதை வன்முறையின் மூலம் கூட நிகழ்த்த தயங்க மாட்டார்கள் என்பதையும் நாம் பத்திரிகைகளின் மூலம் தினம் தினம் அறிந்து கொள்கிறோம்.

இது இப்படியே இருக்கட்டும். மேற்சொன்ன விவாதத்தின் இறுதிப்பகுதியில் 'சென்னையின் ஏதாவது ஒரு அம்சத்தில் உடனடியாக மாறுதல் ஏற்பட வேண்டுமென்றால் எதை சொல்வீர்கள்?' என்கிற கேள்விக்கு காங்கிரஸ் பிரமுகர் ஜெயந்தி நடராஜன் சொன்ன பதில் உரத்த புன்னகையை வரவழைத்தது. "Ruling Party"

()

அபூர்வமாக கிடைக்கும் பொழுதை போக்குவதற்கு புத்தகங்களையும், இசையையும் தாண்டி, தொலைக்காட்சியின் தயவை நாடும் போது கிடைக்கக்கூடிய அனுபவங்கள் அத்தனை சிலாக்கியமாக இல்லை. (சினிமாவில் advance booking என்கிற விஷயமே எப்போதும் என்னை நகைக்க வைக்கிற விஷயம். பொழுது போவதற்குத்தான் சினிமா. யாராவது பொழுதை போவதற்கு advance-ஆக திட்டமிடுவார்களா?) அழுவாச்சி தொடர்கள், சுவிசேஷ கூட்டங்கள், அதிர்ஷ்ட கல் மோதிரங்கள், உடற்பயிற்சி கருவிகள், அசட்டு காமெடி காட்சிகள், எரிச்சலூட்டும் நிகழ்ச்சி காம்பியர்கள், கொடுமையான டாப் டென்கள்.... என்று உருப்பபடியான நிகழ்ச்சியை பார்ப்பதென்பது அபூர்வமானதொன்றாக மாறிவிட்டது. செட்டாப் பாக்ஸ் இல்லாமல் discoveryயோ geographic-யோ பார்க்க முடியவில்லை. இதில் முக்கியமாக எரிச்சலூட்டுவது தமிழ்ச்சினிமாக்களின் துணுக்குகள்தான். யதார்த்தம் என்கிற விஷயத்தை அறவே மறந்து போய் ஒவ்வொரு பல்லி ஹீரோவும் நூறு பேரை பறந்து உதைப்பதும்.... பஞ்ச் டயலாக்குகளும்..... காதைப் பிளக்கும் பாடல்களும் என..... தமிழ்ச்சினிமா எங்கே பயணித்துக் கொண்டிருக்கிறது? என்பதை ஒரு பார்வையாளனாக மிகவும் கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறேன். மக்கள் எவ்வாறு இந்த அபத்தங்களின் அசெளகரியங்கள் தங்கள் மீது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது இன்னுமொரு ஆச்சரியம். இவ்வளவு அட்டகாசம் செய்யும் ஆக்ஷன் ஹீரோக்களை நிஜ வாழ்வில் பொது மேடையில் ஏதாவது குத்துச் சண்டை வீரரை ஜெயித்து விட்டுத்தான் இனி இப்படியான ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முடியும் என்கிற கட்டாயத்தை ஏற்படுத்தினால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை யோசிக்க நகைச்சுவையாக இருக்கிறது.

8 comments:

Anonymous said...

About Cinema ..

ithai (tamizh cinemavai )
neengal oru 'kanavu ilakiyamaga' paarthu rasikka vendum .

Englishkaran ,Satyajit ray ithellam thaan cinema yenru kooruvathu..thavaru .

Ithu namathu cinema ,namathu kanavu ilakiyam .itharkku varaimurai thevaiya ?

in 80s we had good Tamizh movies..alas we commented 'not upto standard' at that time ..
Remember we had a Tamizh cinema whose subject was only about beggars ?
(Sumai .yenra padam )
Can we imagine such a movie now ..or even then What kind of reception we gave to that movie ..Flop..
Nizhalgal ..FLOP
...
Kurai illaiyenil vaazhvil suvai yethu.. Kurai kooruvom niraivdaivom ...
..

vaazhga namathu Kanavu ilakiyam

அபுல் கலாம் ஆசாத் said...

//நாகரிக ஊகங்களை செளகரியமாக மறந்துவிட்டு அவர்களை படுக்கையறையுடன் சம்பந்தப்படுத்தி மட்டுமே யோசிக்கும் அளவிற்கு பிற்போக்குத்தனமாக சிந்திப்பவர்களே இங்கு அதிகம். (இதில் பெண்களும் அடக்கம்)//

சுரேஷ்ஜி,

எனது பார்வையில், நாம் இதையெல்லாம் தாண்டி வந்துவிட்டோம்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறையே சென்னையை எட்டிப்பார்க்கும் எனக்கே இப்படித் தோன்றுகிறதே, சென்னையிலேயே இருக்கும் உங்களுக்கு மாற்றங்கள் தெரியாமலா போகும்.

உணவு விடுதிகளில், கால் சென்ட்டர் பணி முடிந்து வரும்போது, இப்படி நிறைய.

ஏன், மஃப்சல் பகுதியான எங்கள் போரூரிலலேயே நான் ஷேர் ஆட்டோவில் இளம்பெண் ஒருத்தியுடன் பேசிக்கொண்டே சென்றிருக்கிறேன்.

'டூட்டி முடிஞ்சு போக இவ்ளோ டைம் ஆகிடுது அங்கிள்'

*

'வாப்பா, அவன்தான் மீனாக்ஷி சுந்தரம்'

க்ளாஸ் மேட்டை இப்படி என்னால் என் தந்தையாரிடம் காட்டியிருக்க முடியாது.

காலம் மாறியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

அன்புடன்
ஆசாத்

Muthu said...

//இந்த விஷயத்தை சற்றும் உணர்ச்சிவசப்படாமலும், சுதந்திரத்தில் தலையிடுவது என்கிற அசட்டுத்தனமான எதிர்ப்பும் இல்லாமல் யதார்த்தமாக சிந்தித்துப் பார்த்த போது எனக்குத் தோன்றியது, கல்விக்கூடங்களில் இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தேவை என்பதே.//

that's right..



சுரேஷ்கண்ணன்,

நன்றாக எழுதுகிறீர்கள். முக்கியமாக என்னை போன்ற அறிமுக நவீன தமிழ் இலக்கிய வாசகனுக்கு உங்கள் பத்தி உபயோகமாக உள்ளது...வாழ்த்துக்கள்....

Thangamani said...

கண்ணியமான உடை வேண்டும் என்பதில் பெரிய பிரச்சனைகள் இல்லை. எது கண்ணியமான உடை என்பதையும் அதை தீர்மானிப்பது யார் என்பதும் தான் பிரச்சனை.

Anonymous said...

அவர்கள் அவர்களுக்கு பிடித்த உடையை அணிந்தால் உங்களுக்கு என்ன?உங்கள் கலாச்சாரம் வரட்சி நிரம்பியது என்றால் இப்படி உடை அணிந்து அந்த கலாச்சாரத்தை மாற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

அடுத்தவர் உடையை பற்றி கவலைபடுவதை விடுங்கள்.அவர்கள் உடை.அவர்கள் விருப்பம்.நீங்கள் ஏன் நடுவே கவலைப்படுகிறீர்கள்?

dishyum

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

ஏற்கெனவே இதைப் பற்றி தனிப்பதிவாக கருத்து தெரிவித்த Voice on Wings-க்கிற்கு நீண்ட பதிலெழுதும் உத்தேசம் உள்ளது.

ஆனால் சுருங்கக்கூற விரும்புவது இதுதான். பிற்போக்கான சிந்தனையாலோ, ஆணாதிக்கப் பார்வையிலோ இதை நான் கூற முன்வரவில்லை. ஒரு இளைஞனை இறுக கட்டிப்பிடித்துக் கொண்டு பைக்கின் போல் பின்னால் போகும் ஒரு இளைஞியை காண நேருகிற எழுத்தாளர் சுஜாதா, அது குறித்து தன் பத்தியில் எழுதும்போது "ஓரு காலத்தில் பெண்களை மாய்ந்து மாய்ந்து வர்ணித்துக் கொண்டிருந்தவன், இப்போது அவர்களுக்காக கவலைப்படுகிறேன்" என்று எழுதியிருப்பார். என்னுடைய பார்வையும் இதுவே. பெண்ணுரிமை என்பதை சில பெண்கள் ஆபாசமாக உடையணிவதும், குடிப்பதும், இரவு நேரங்களில் சுற்றுவதும் என்பதாக மட்டும் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. பெண்கள் தங்களிருக்கிற தடைகளை மனதளவிலும் ஆக்கப்பூர்வமாகவும் கடந்துவருவதே அவர்களுக்கான உண்மையான விடுதலையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இனி ஆடைக்கட்டுப்பாடு குறித்து பார்ப்போம். குற்றங்களை நிகழத்துபவர்கள் தவிர, குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பவர்களையும், தூண்டுதலாக இருப்பவர்களையும் கூட சட்டம் கண்டிக்கிறது. அந்த வகையிலே சில பெண்கள் ஆபாச உடையணிவதின் மூலம் சமூகங்களின் குற்றங்களுக்கு தாங்களும் ஒரு காரணிகளாய் இருக்கிறார்கள் என்பதே நான் குறிப்பிட விரும்புவது. இதன் மூலம் காமாந்தரகாரர்களாய் அலையும் ஆண்களை நான் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முயலவில்லை. மரத்திற்கு சேலை கட்டினாற் கூட முறைத்துப்பா¡க்கும் அற்பர்கள் எந்தவிதமான உடை அணிந்து வந்தாலும் தங்களின் ஆபாச எண்ணங்களை சைகையினாலோ, வார்த்தைகளினாலோ வெளிப்படுத்திக் கொண்டேதான் இருப்பார்கள்.

இது ஏதோ பெண்கள் குறித்து மட்டுமே எழுதப்பட்டது கிடையாது. நாகரிகம் என்கிற பெயரில் வீட்டில் மட்டும் அணிய வேண்டிய
ஸ்லீவ்லெஸ் பனியனையும், பெர்முடாஸையும் அணிந்து கொண்டு வீதிகளில் உலாவி எரிச்சலூட்டும் ஆண்களையும் சேர்த்துத்தான்.

மேலும் நான் குறிப்பிட்ட தொலைக்காட்சி விவாதம் கல்லூரி மாணவ, மாணவிகளின் ஆடைக்கட்டுப்பாடு குறித்து மட்டுமே. அந்த வகையில் பார்க்கும் போது, 12வது வகுப்பு நாம் குறிப்பிட்ட சீருடையை எவ்வித வினாக்களுக்கும் உட்படுத்தாமல் அணிந்து கொண்டு போகிறோம். செல்வந்த மாணவர்கள் அணிந்து வரும் பகட்டான உடைகள் ஏழை மாணவரிடம் எவ்வித தாழ்வு உணர்ச்சியையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நம்புகிறேன். கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் போது பொறுப்புணர்ச்சி கூடியிருக்கும் என்கிற எண்ணத்தில் தங்கள் விருப்பம் போல் உடையணிய அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி சினிமாவின் விஷமான பாதிப்பால் கண்ணியமற்ற உடைகளை அணிவது முறையான செயலாகாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

பிச்சைப்பாத்திரம் said...

//எனது பார்வையில், நாம் இதையெல்லாம் தாண்டி வந்துவிட்டோம். //

அன்பு ஆசாத்,

ஆறுமாதத்திற்கொருமுறை சென்னைக்கு வரும் நேரத்தில் நல்ல நிகழ்வுகளும் செய்திகளுமே உங்கள் கண்ணில் படுகிறது. அதிர்ஷ்டக்காரர்தான் நீங்கள். இந்தியாவின் மற்ற நகரங்களோடு ஒப்பிடும் போது சென்னை பாதுகாப்பான நகரம்தான் என்று கேள்விப்படுகிறேன். ஆனால் பத்திரிகைச் செய்திகளை படிக்கும் போது அவ்வாறு தோன்றவில்லை. சமீபத்தில் வடசென்னைப் பகுதியில், வீட்டில் கழிவறை இல்லாத பாவத்திற்காய் நடுஇரவில் சிறுநீர் கழிக்க வெளியே வந்த பத்துவயதுச் சிறுமியை, அருகேயுள்ள தேனீர்க்கடை பணியாளர்கள் கற்பழித்திருக்கிறார்கள். இதை விட குறைந்த வயது பெண் குழந்தைகள் கூட (சில சமயம் அவர்களின் உறவினர்களாலேயே) கற்பழிக்கப்பட்டதாக வரும் செய்தியை படிக்கும் போது மனம் வேதனைப்படுகிறது. சுதந்திரத்தின் குறியீடாய் காந்தி எதிர்பார்த்தது இந்தியாவில் இன்னும் நிகழவில்லை என்றே தோன்றுகிறது.

Muthu said...

சுரேஷ்

,
உயிர்மை கூட்ட விவகாரம் பற்றி உங்கள் கருத்தை படித்தேன்

.ஏறக்குறைய உங்கள் கருத்தே தான் எனக்கும்.
மூன்று பக்க தலையங்கள் இதற்கு தேவையா மனுஷ்யபுத்திரனுக்கு

? அவர்கள் கூட்டம் போட்டு கேவலமாக பேசினார்கள் என்று வாதிட நினைப்பவர் நக்கலாக எல்லோரையும் எழுதலாமா ?இதுக்கு நடுவுல காலச்சுவடுக்கு ஒரு உள்குத்து வேற...ரஜினிராம்கி பேரேல்லாம் உயிர்மைல வந்தாலும் இந்த மாதிரி ஒரு விஷயத்திற்கு உபயோகப்பட்டுவிட்டதே என்ற வருத்தம் தான் எனக்கும் .
மேலாண்மை பொன்னுசாமியின் இன்னொரு கதை

.விகடனில்தான் இதுவும்.
ஒரு பண்ணையார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நல்லது செய்பவர்

.ஆனால் ஒரு தாழ்த்தப்பட்டவர் இவரை கேட்காமல் இவர் அருகில் நாற்காலியிலோ பெஞ்சிலோ அமரும்போது பொங்கி எழுவார்.உரிமையை நீங்க பிச்சை போட்டா மட்டும் நாங்க எடுத்துக்கனுமா? நாங்களே எடுத்துக்கிட்டா உங்களுக்கு ஆகாதா என்பது போல வரும். படித்திருக்கிறீர்களா?
இந்த சுட்டியை படித்து உங்கள் கருத்தை கூறவும்

.நன்றி. http://muthuvintamil.blogspot.com/2006/02/2.html


extra:

keep title small so that blogger will not eat your post.....