Saturday, April 23, 2005

புலிக்குப் பிறந்தது பூனையானதா?

பொதுவாக நான் விஜய் போன்றவர்களின் படங்களைப் பார்ப்பதில்லை. தமிழ்ச் சினிமாவின் தரத்தை முன்னேற்றவிடாமல், வணிக நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி பின்னுக்கிழுப்பதில் ரஜினிகாந்த், விஜய் போன்றவர்கள் முக்கியமானவர்கள். (ரஜினிகாந்தைப் பற்றி தனியானதொரு கட்டுரையை பின்னாளில் எழுதுகிறேன்) என்றாலும் 'சச்சின்' என்கிற விஜய்யின் திரைப்படம் ஆரம்பிக்கப்படும் போது படத்தின் இயக்குநரைப் பற்றி கேள்விப்பட்ட போது ஆச்சரியமாக இருந்தது. நான் பெரிதும் மதிக்கும் டைரக்டர் மகேந்திரனின் மகன் (ஜான்) அவர்.

திரைப்படத் துறைக்கு வந்த பிறகும் நாடகங்களின் பாதிப்பில் இருந்து மீளாமல் மூலைக்கு மூலை நான்கு பேரை நிறுத்தி படம் எடுத்துக் கொண்டிருந்த பாலச்சந்தர் போன்றவர்களின் நடுவில் ஒரு கதையை கேமரா மூலம் எப்படி சொல்வது என்கிற திறமை அபாரமாக வாய்க்கப் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் மகேந்திரனும், பாலுமகேந்திராவும். தமிழ்ச்சினிமாவை ஒரு புது உலகிற்கு கையை பிடித்து அழைத்துச் சென்றவர்களில் இவர்களின் பங்கு மிக அதிகம். 'தங்கப்பதக்கம்' போன்ற வணிக படங்களில் மகேந்திரன் புழங்கியிருந்தாலும் அந்த மாயவலையில் சிக்கிக் கொள்ளாமல் 'உதிரிப்பூக்கள்' 'மெட்டி' பான்ற சர்வதேச தர படங்களை கொடுத்தவர். 'முள்ளும் மலரும்' மூலம் ஒரு புதிய ரஜினிகாந்த்தை நம் கண் முன் நிறுத்தியவர். இவர் கடைசியாக எடுத்த NFDC-யால் தயாரிக்கப்பட்ட 'சாசனம்' திரைப்படம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை.

இப்பேர்ப்பட்டவரின் மகன் தமிழ்ச் சினிமாவில் ஒரு படம் இயக்கப் போகிறார் என்றதும் என்னுள் ஏதோ நம்பிக்கை பிறந்தது. மகேந்திரனின் படங்களை பார்த்தே சில விஷயங்களை கற்றுக் கொண்ட பிற்கால துரோணர்களே சில நம்பிக்கையான படங்களை கொடுத்திருந்த போது, அவருடனே அதிகம் பழக நேர்ந்திருக்கிற ஜான் அதே மாதிரியான பாதையில் செல்வார் என்று தோன்றியது. 80 களில் தமிழ்ச்சினிமாவில் ஒரு புதுக்காற்று வீச காரணமாக இருந்த மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, ருத்ரையா, ஜான் ஆபிரகாம் போல, இப்போது மசாலா படங்கள் என்னும் பாதாள சாக்கடையில் வீழ்ந்திருக்கிற தமிழ்ச்சினிமாவை மீட்டெடுப்பதற்கு இவர் படம் ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று நம்பினேன்.

ஆனால் படத்தின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் பிரசுரமானபோது அந்த நம்பிக்கை சற்று தளர்ந்து போனது. என்றாலும் புகைப்படங்களை வைத்து மட்டும் முடிவு செய்யக்கூடாது என்றும் தோன்றியது. ஆனால் படம் வெளிவந்து அதனுடைய விமர்சனங்களின் மூலம் படத்தின் வரைபடத்தை அறிய நேர்ந்த போது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. இந்தப் படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை என்றாலும் (தமிழ்ச்சினிமாக்களை கடுமையாக விமர்சித்துக் கொண்டே சூப்பர் ஸ்டார்களின் படம் வந்தவுடன் முதல் நாளே பார்த்து விட்டு மறுபடியும் திட்ட ஆரம்பிப்பவர்களை புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருக்கிறேன்) ஏறக்குறைய குஷி படத்தை சற்றே மாறுதல்களுடன் தந்திருக்கிறார் என்பதை ஊகிக்க முடிகிறது. அதில் ஊறுகாயாக மும்தாஜைப் போல இதில் பிபாஷா பாசு. பாடல்களும் இப்போதைக்கு வெளியாகிற டப்பாங்குத்துகளுக்கு சவால் விடுகிறாற் போன்ற எரிச்சலூட்டும் பாடல்கள்.

ஆக ... இப்போதைக்கு தமிழ்ச் சினிமா உருப்பட வாய்ப்பே இல்லை போலிருக்கிறது.

suresh kannan

Thursday, April 21, 2005

ஓரு மழை நேர கவிதை நூல் வெளியீட்டு விழாத் துளிகள்......

நேற்றைய சென்னையின் ஒரு ஆச்சரியமான மழை நேர மாலைப் பொழுது. வாட்டிகனில் மக்கள் வெண்புகை தெரிகிறதா என்று ஆவலோடு பார்த்தது போக (தகவல் நுட்பம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த காலக் கட்டத்திலும் இந்த சம்பிரதாயங்களை கட்டி மாரடிக்கத்தான் வேண்டுமா?) நான் வானத்தை சூழந்திருந்த கருமேகங்களை ஆச்சரியத்துடன் கவனித்தேன். சென்னையில் மழை பெய்வது ஓர் ஆச்சரியமென்றால் அதனோடு இன்னொரு ஆச்சரியத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு போயிருந்தேன் என்பதுதான் அது. மழை என்பது அபசகுனமோ அல்லது சுபசகுனமோ நானறியேன்; கவிதை என்பது நிச்சயம் அபசகுனம்தான். அதிலும் மூத்திரம் போவது போலும் கவிதை ஒரு கழிவுப் பொருளாக ஆகிவிட்ட இந்தக் காலத்தில்.

காலையில் செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருக்கும் போது (மாடுகள் கூட செய்யக்கூடிய காரியமிது) 'இன்றைய நிகழ்ச்சிகள்' பகுதியில் முனியப்பராஜ் என்பவரின் 'ஒற்றனைத் தொலைத்த செய்தியிலிருந்து' என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழா நடக்கவிருப்பதை அறிந்தேன். விருந்தினர் பட்டியலில் 'பெரிய தலைகள்' சில தென்பட்டதால் அந்த நிகழ்ச்சிக்கு போக முடிவு செய்தேன். 'கவிதை நூல் வெளியீட்டுக்கெல்லாம் ஏம்ப்பா போறே?' என்று இயற்கையே என்னைத் தடுக்கிறாற் போல் மாலையில் மழை பெய்ய ஆரம்பித்தது.

()

கவிதை என்கிற இலக்கிய வடிவம் ஆரம்பத்திலிருந்தே எனக்கு மிரட்சியும் பயத்தையும் கொடுத்து வந்துக் கொண்டிருக்கிறது. பாமரரர்கள் எளிதில் அணுகாதபடிக்கு நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட செய்யுள்கள் எனக்கு வெறுப்பையே ஏற்படுத்தின. சீர், தளை, தொடை, அல்குல், யோனி என்று எதுவும் தட்டாமல் எழுத வேண்டி தனக்குத்தானே ஒரு வலையை ஏற்படுத்திக் கொண்டு சிக்கலான மொழியில் எழுதி, யாராவது 'என்னங்க சொல்ல வர்றீங்க? என்றவுடன்
அதற்கொரு தெளிவுரையை எழுதி..... அடப் போங்கப்பா...

இதற்கு நேராக உரைநடையிலேயே சொல்ல வந்தததை நேரடியாக சொல்லி விடலாம். அதுவும் நிச்சயமாக சொல்லி விட முடியாது. நவீன எழுத்தாளர்கள் சிலருடைய படைப்புகளை அகராதியும் அமிர்தாஞ்சன் தைலமும் வைத்துக் கொள்ளாமல் படிக்க முடியாது. (உதாரணத்திற்கு, கோணங்கி எழுதியிருக்கிற 'பிதிரா' நாவலை முயற்சித்துப் பார்க்கவும்). என்றாலும் கவிதையில் இருக்கிற சூட்சுமத்தையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு என்னை நெருங்கி ஆசுவாசப்படுத்தியவன் பாரதி என்கிற கவிதை தொழில் செய்தவன். ..... உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்.... என்கிற போதே என் மீது யாரோ தீக்குச்சியை கிழித்து போட்டாற் போல் உணர்ந்தாற் போன்ற கவிதைகளை எழுதியவன்.

வெறும் அழகுணர்ச்சியை கொண்டு ஏதாவதை வியந்து கொண்டும், தலைவனைப் பிரிந்த தலைவியின் காமப் பிதற்றல்களையும், அசட்டுக் காதல் கவிதைகளும் என்னை வெறுப்படையவே செய்கின்றன. இதனாலேயே கவிதைப் பக்கங்களை புத்தகங்களை கண்டவுடன் திகைப்பூண்டை மிதித்தவன் போல் (என்ன அர்த்தம் இதற்கு?) விலகிப் போகிறேன். கடந்த கால படைப்புகளில் சிறந்தவை என்பதற்கு ஓர் அளவுகோல் உண்டு. அந்தந்த கால கட்டங்களில் நடந்த சமூகப் பிரச்சினைகள், போராட்டங்கள் போன்றவை அந்தப் படைப்புகளில் எதிரொலித்திருக்க வேண்டும். இந்த நோக்கில் எழுதப்பட்ட அபூர்வமான கவிதைகளே என்னை பெரிதும் ஈர்க்கின்றன. மிகச்சிறந்த உதாரணமாக சமகால காசி ஆனந்தனைச் சொல்லலாம்.

வண்டியில் பூட்டப்பட்ட மாடுகள்
எப்படி மறந்தன
தம் கொம்புகளை?

(கவிதை வரிகள் சரியாக நினைவில் இல்லை)

என்ற மிகச்சிறிய அணுகுண்டுக் கவிதையில் ஒரு புரட்சிக்கான விதையே அடங்கியிருக்கிறது. இம்மாதிரியான கவிதைகளே ஒரு சமூக மேம்பாட்டிற்கு அதிகம் தேவை. மற்ற தலைப்புகளில் எழுதுபவர்களும் ஒரு மூலையில் எழுதித் தொலைக்கட்டும். 'மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்' என்றும் 'சினிமாச்சுருள்களை எல்லாம் ஒரு சின்ன தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம்' என்று கோபமாக எழுதின வைரமுத்துதான் இன்று 'ஆரிய உதடுகள் உன்னது; திராவிட உதடுகள் என்னது' என்று எழுதிக் கொண்டிருக்கிறார்.
எங்களால் மனிதர்களை
மந்திரிகளாக்க முடிகிறது
மந்திரிகளைத்தான்
மனிதர்களாக்க முடியவில்லை

என்று சிறுவயதில் படித்திருந்தும் நான் இன்னும் மறக்க முடியாத கவிதையை எழுதிய வாலிதான் 'எப்படி எப்படி? சமைஞ்சது எப்படி? என்று விஞ்ஞான ரீதியான கேள்வியை கேட்கிறார். விளக்கம் கேட்டால் அது 'கற்பனைத் தமிழ்' இது 'விற்பனைத் தமிழ்' என்று மழுப்புகிறார்.

எதுகை, மோனையின் மீது உள்ள மோகம் தமிழனுக்கு குறையாத வரையில் அவன் உருப்பட வாய்ப்புகள் மிகக்குறைவு. இப்படியாக கவிதை என்கிற வடிவத்தின் மீது எனக்கு வெறுப்பை ஊட்டினவர்களின் பட்டியல் அதிகம்.

என்றாலும் இந்தக் கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு போன போது உரையாற்றியவர்களில் பலர் என்னுடைய மேற்கூறின என் பார்வையையே எதிரொலித்தது ஒர் ஆச்சரியம். அது பற்றி அடுத்த பகுதியில் ..........

suresh kannan

Monday, April 18, 2005

பயர்பாக்ஸ் உலாவி தொடர்பான உதவி தேவை

நான் சமீபத்தில் எங்கள் கணினியில் Firefox 1.0.3 இணைய உலாவியை நிறுவினேன். அதில் திண்ணை, திசைகள், தமிழ்மண தமிழ் வலைப்பதிவுகள் ஆகிய எதையும் படிக்க முடியாதபடி எழுத்துருக்கள் குழம்பித் தெரிகின்றன. இதை சரிசெய்ய எந்தமாதிரியாக font settings-களை மாற்றுவது?

Proportional என்கிற மெனுவில் Serif மற்றும் Sans Serif ஆகிய இரண்டு எழுத்துருக்கள் மட்டுமே தெரிகின்றன.

நண்பர்கள் உதவ வேண்டுகிறேன். My Advance Thanks.

வலைப்பதிவு மன்றத்தில் இந்த பிரச்சினையை தொடர்பான கேள்வி பதிலை தேடிப் பார்த்து காணாததால் இந்தக் கேள்வியை இங்கே வைக்கிறேன்.


suresh kannan

Thursday, April 07, 2005

ஜெயகாந்தன் என்கிற ஆளுமை

கடந்த மாதத்தின் ஏதோவொரு நாளின் மாலை வேளை. சோர்வும், எரிச்சலும், விரக்தியுமாக இருந்தது சூழ்நிலை. சிறுநீரக கல் அடைப்பினால் ஏற்பட்ட உட்கோளாறில் உடல்நலம் குன்றிப் போய் உடலும் மனமும் மிகவும் சோர்ந்திருந்திருந்ததனால் ஏற்பட்டிருந்த மனநிலை அது. (கல் வைத்திருந்தால் அதிர்ஷ்டம் என்கிறவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் போலிருக்கிறது) வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்றிருக்கிற குழந்தை அவ்வப் போது உள்ளே வந்து அம்மாவின் முந்தா¨¨யை தொட்டுச் செல்வது போல் சுரமும் அவ்வப் போது வந்துப் போய்க் கொண்டிருந்தது. புத்தக அலமாரிகள் வழிய நிறைந்திருந்த எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் கூட கைகொடுக்கவில்லை. படுக்கையறையின் புழுக்கம் தாங்காமல் ஒரு மாற்றத்திற்காக வரவேற்பறையில் வந்து உட்கார்ந்தேன். தொலைக்காட்சியில் ஏதோ 'எழவெடுத்த' தமிழ்ப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. எரிச்சல் தாங்காமல் கண்களை மூடிக் கொண்டேன். இதே நிலை இன்னும் நீடித்தால் சற்று நேரத்தில் பாயைப் பிராண்ட ஆரம்பித்து விடுவேனோ என்று பயமாக இருந்தது.

அந்த நேரத்தில்தான் தொலைக்காட்சியின் தலைப்புச் செய்திகளில் அது காதில் விழுந்தது. 'ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது'.

Image hosted by Photobucket.com

ஏதோவொரு விசையை அழுத்தினாற் போல் சூழ்நிலையே சட்டென்று இடவலமாக மாறியது. மெல்ல மதுவருந்திக் கொண்டிருக்கிறவன் ஏதோவொரு கணத்தில் போதையை மூளைக்குள் உணர்கிறாற் போல் அல்லாமல் அந்தச் செய்தி சட்டென்று என்னை தாக்கியது. என்னுள் ஊறிக்கிடந்த எரிச்சலையும் வேதனையையும் அடித்துக் கொண்டு போய் பதிலாக உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வந்து நிரப்பியது. மிக மிக சந்தோஷமாக உணர்ந்தேன். எனக்கே பரிசு கிடைத்த மாதிரி இருந்தது.

இந்தியா போன்ற லஞ்ச லாவண்யம் ஊறிக்கிடக்கும் நாடுகளில் நியாயமான அங்கீகாரம் அரசியல் இடையீடு எதுவும் இல்லாமலும் தகுதியானவர்களுக்கும் சென்று சேரும் எண்ணிக்கைகள் மிகவும் சொற்பமானவை. அதுவும் தமிழில்....? தகுதியானவர்களுக்கல்லாமல் போன முறை தமிழில் இந்த விருது போய் சேர்ந்த இடம் குறித்த அதிருப்தியும், அதிக முறை வாங்கிக் குவிக்கிற பக்கத்து மாநில மொழி குறித்த எரிச்சலும் சந்தேகங்களும் இந்த செய்தியால் சற்று மட்டுப்பட்டன.

இந்தச் செய்தியை உடனே யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. 'சூர்யாவும் ஜோதிகாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, தெரியுமா'? என்றால் என்னவென்று கேட்க லட்சக் கணக்கான காதுகள் காத்திருக்கும் இந்த அபத்தமான சூழ்நிலையில், இந்த தேவையில்லாத செய்தியை எந்த பைத்தியக்கார காதுகள் கேட்க தயாராயிருக்கும்?

இந்த நிகழ்வை கொண்டாட வேண்டும் போல் இருந்தது. புத்தக குவியிலில் இருந்து தேடி அவரின் 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' சிறுகதையை படிக்கவாரம்பித்தேன். இந்தச் சிறுகதையை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டதடவையாவது படித்திருப்பேன். இந்தச் சிறுகதையின் மேல் எனக்கிருக்கும் தனி பிரேமைக்கு காரணமுண்டு. பத்தாவாவது வகுப்பிலோ அல்லது பன்னிரெண்டாவதிலோ இது எனக்கு தமிழ் இரண்டாம் தாளில் பாடமாக வந்திருக்கிறது. மற்ற பாடங்களை மூக்கால் அழுது கொண்டே மனப்பாடம் செய்யும் வேளையில் நானே விருப்பப்பட்டு படித்த சிறுகதை இரண்டினுள் இதுவும் ஒன்று. மற்றது - புதுமைப்பித்தனின் 'ஒரு நாள் கழிந்தது'.

()

எழுத்தாளன் என்பவன் எந்த ஒரு காரணத்திற்காகவும் கூனிக்குறுகாமல் கம்பீரமாக இருக்க வேண்டும் என்கிறதொரு பிம்பம் எனக்குள் எழ காரணமாயிருந்தவர்கள் பாரதியும், ஜெயகாந்தனும். தங்களுடைய கருத்துக்களையும் படைப்புகளையும் சுற்றிவளைத்தோ, வழவழா மற்றும் கொழகொழாவென்றோ சொல்லாமல் (சாருநிவேதிதாவின் மொழியில் சொன்னால், தயிர்வடை Sensibility) கேட்பவனுக்கு சட்டென்று உறைக்கிறாற் போல் ஆணியடித்தாற் போல் சொல்கிற படைப்பாளிகள் தமிழில் சொற்பமே. அவர்களில் முக்கியமானவர் ஜெயகாந்தன்.

ஐந்தாம் வரை மட்டுமே படித்து நாதாரியாய்ச் சுற்றித்திரிந்து கொண்டிருந்த அந்தச் சிறுவனை, காலம் கம்யூனிஸம் என்கிற வெம்மையான நிழலில் கொண்டுவந்து போட்டது. உலக இலக்கியங்களின் அறிமுகமும், மனித மனங்களைப் பற்றின விசாலமான பார்வையும் அவனுக்கு அங்கேதான் ஏற்பட்டது. வெடிமருந்து குடோனில் ஒரு சிறு பொறிபட்டாற் போல் கம்யூனிஸம் அவன் சுயசிந்தனைகளை வளர்த்தது.

ஒரே ஒரு சிறுகதையின் மூலம் ஒரு சமுதாயத்தையே திரும்பி பார்க்க வைக்க முடியும் என்றால், உண்மையாகச் சொல்கிறேன் - அவன் தான் எழுத்தாளன்; எழுத்தை ஆள்பவன். அக்னிப் பிரவேசம் வெளியான காலத்தில் அந்தச் சிறுகதை பல்வேறு வகையான விமர்சனங்களை சந்தித்தது. தண்ணீர் ஊற்றினால் கற்பு (?!) போனது சரியாகி விடுமா என்றும் அவளை சாகடித்திருக்க வேண்டும் என்றும் பிற்போக்குவாதிகள் தங்கள் அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்களை முன்வைத்தார்கள், தங்கள் வீட்டில் அந்த மாதிரியானதொரு அசம்பாவிதம் நடந்தால் எவ்வாறு எதிர்கொள்வோம் என்று யோசிக்காமலேயே அல்லது அவ்வாறு யோசிக்க விரும்பாமலேயே.

விளிம்புநிலை மனிதர்களைப் பற்றின படைப்புகளை படைத்தவர்கள் தமிழில் சொற்பமே. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் என்கிற மிகச்சிறியதொரு பட்டியலது. அதுவரை பெரும்பாலும் பிராமணர்களின் அக்ரகாரத்திலும் சமையலறைகளிலும் சுற்றிக் கொண்டிருந்த தமிழ்ச்சிறுகதையை சேரிக்குள் இழுத்து வந்த துணிச்சல்காரர்களில் ஜெயகாந்தன் முக்கியமானவர். அவர் சிறுகதைகளில் மற்றவர்கள் அணுகத் தயங்குகிற குஷ்டரோகிகளும், பிச்சைக்காரர்களும், விபச்சாரிகளும் மிக யதார்த்தமான உலகில் நடமாடுவார்கள். ஆபாசமாக எழுத்தாளர் என்று விமர்சிப்பவர்களுக்கு அவர் தரும் பதில்: 'நான் இந்தச் சமூகத்தைத்தான் பிரதிபலிக்கிறேன். அது ஆபாசமாகத் தெரிந்தால் அது உங்கள் குறையேயன்றி என் குறையல்ல.'

பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களைப் போல் சிறுகதையில் பிரகாசித்த அளவிற்கு நாவல் வடிவத்தில் ஜெயகாந்தனால் பிரகாசிக்க இயலவில்லை என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். திரைப்படத்துறையை துணிந்து விமர்சிப்பவர் கூட அந்தத் துறையில் நுழைந்து தங்கள் பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்று முன்வருவது குறைவு. தேசிய விருது போட்டிகளில் சத்யஜித்ரேயின் படங்களுடன் போட்டியிடக்கூடிய அளவிற்கு தரமான திரைப்படங்களை தயாரித்தவர் பிற்பாடு என்ன காரணத்தினாலோ அதிலிருந்து விலகி நின்றது
தமிழச் சினிமாவின் துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தில், சினிமாவின் சம்பிரதாயக் காட்சிகளில் இருந்து மிகவும் விலகி நிற்கிற ஒரு காட்சியைக் கண்டு வியந்து போனேன். சாப்பாட்டு மேசையில் - ரசமோ அல்லது தயிர் சாதமோ- சாப்பிட்டு முடிக்கிற லட்சுமி பிற்பாடு தட்டில் எஞ்சியிருக்கிற அந்த நீரையும் சாதத்தையும் தட்டை மேலே தூக்கி வாயில் கவித்துக் குடிப்பார். நம் வீடுகளில் அன்றாடம் காண்கிற இந்த எளிய காட்சியை, அற்பசங்கைக்கு கூட ஒதுங்காமல் மரங்களை சுற்றி ஆடும் நாயக நாயகிகள் நிறைந்த கவர்ச்சி சினிமாவில் அதுவரை நான் பார்த்ததே இல்லை.

()

ஐந்நூறு, ஆயிரம் என்று எழுதிக்குவிக்கிற கதைத் தொழிலாளர்கள் மத்தியில், தன் புகழ்க்கொடி உயரப் பறக்கும் வேளையில் எழுதுவதை நிறுத்திக் கொண்ட கம்பீரம் ஜெயகாந்தனுக்கு மட்டுமே உரியது. அவரின் அரசியல் நிலைப்பாடுகளின் முரண்பாடுகள், சில சமயங்களில் வாசகர்களிடம் காட்டுகிற தேவையில்லாத முரட்டுத்தனங்கள், சில அதிரடியான விமர்சனங்கள், ஞானபீடவிருது பெற்றதற்காக சமீபத்தில் அவர் ஜெயேந்திரரிடம் ஆசி பெற்றது வரையான அனைத்து நெருடல்களையும் தாண்டி அவர் படைப்புகளை அதிலுள்ள ஆழத்திற்காகவும், விசாலமான பார்வைகளுக்காகவும் நான் விரும்புகிறேன். அவரின் தனிப்பட்ட வழக்கங்களைப் பற்றி வருகிற விமர்சனங்கள், புகார்கள் கூட அவரைப் படிப்பதில் எனக்கேதும் இடைஞ்சல் செய்ததில்லை. அவரின் சிறுகதை ஒன்றின் தலைப்பின் மூலம் சொன்னால் - அந்தரங்கம் புனிதமானது.

முதிர்ச்சியற்ற, அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்களால் ஜெயகாந்தன் என்கிற அந்த கம்பீரமான ஆளுமையை யாராலும் சேதப்படுத்தி விடவே முடியாது.

()
என்னை விட மூத்தவர்களை கூட அண்ணா என்றோ சார் என்றோ அழைப்பதை விட அவர்களை பெயர் சொல்லி அழைப்பதையே நான் விரும்புவேன். என்னையும் மற்றவர்கள் அப்படியே அழைப்பதையேயும். (தொழில் முறையில் சில சமயம் இதை பின்பற்ற முடிவதில்லை என்பது யதார்த்தமான உண்மை)
அந்த வகையில்,

வாழ்த்துக்கள் ஜெயகாந்தன்.


suresh kannan